தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலக்ஷ்மி :


Posted by-Kalki Teamதமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் தயாரிப்பாளர், முதல் பெண் இயக்குநர் என்று பன்முகத் திறன் காட்டியவர், நாடக ராணி - சினிமா ராணி என்று பெயர் பெற்ற நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி. ராம் ராஜலக்ஷ்மி சிறு வயதிலேயே அழகுடனும் அறிவுடனும் விளங்கியதுடன் நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். அக்காலத்தின் வழக்கப்படி

ராஜலக்ஷ்மிக்கு எட்டு வயதிலேயே திருமணம் நடைபெற்றது. முகத்தில் மீசை அரும்பாத முத்துமணி என்பவரை மணந்தார். ராஜலக்ஷ்மிக்கும் புகுந்த வீட்டாருக்கும் வரதட்சணை பிரச்னையால் ஒத்துப் போகவில்லை. அதனால் வாழாதப் பெண் என்ற வசவைப் பெற்ற ராஜலக்ஷ்மி கணவரிடமிருந்து விடுதலை பெற்றார்.

கணவனிடமிருந்து விடுதலை பெற்ற மகளின் நிலைமையினால் மனமுடைந்த அவரது தந்தையார் பூவுலகிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டார். ராஜலக்ஷ்மியின் பத்தாவது வயதில் அவரின் தந்தை காலமாகி விட்டார். தாரமாக வாழ முடியாமலும், தந்தை இறந்து விட்ட நிலையிலும், பிழைப்புத் தேடி தனது தாயுடன் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார் ராஜலக்ஷ்மி. அப்பொழுது திருச்சிராப்பள்ளியில் சாமண்ணா என்பவர் நாடக கம்பெனி நடத்தி வந்தார். அந்தக் கம்பெனியில் நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் சாகித்யம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்கத் தயங்கிக் கொண்டிருந்த வேளையில், ராஜலக்ஷ்மி இந்த நாடக கம்பெனிக்கு சென்று வய்ப்பு கேட்டார்.

ராஜலக்ஷ்மிக்கு வாய்ப்பளிக்க சாமண்ணா தயங்கினாலும், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ராஜலக்ஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார். கம்பெனியில் சேர்ந்த ஒரே

மாதத்தில் கதாநாயகியாகிவிட்டார் டி.பி.ஆர். ஒரு பவுன் 13 ரூபாய் விற்ற அக்காலத்தில் ராஜலக்ஷ்மியின் சம்பளம் 30 ரூபாய் ஆகும். அக்கால கலைஞர்களுக்கே உரிய, பாட்டு பாடி நடிக்கும் திறமை கொண்டிருந்த ராஜலக்ஷ்மி, சி.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாயபு, கன்னையா நாயுடு போன்றவர்களின் பிரபல நாடக கம்பெனிகளில் நடித்துப் புகழ் பெற்றார். கன்னையா கம்பெனியில் ராஜலக்ஷ்மிக்கு ஜோடியாக நடித்தவர் கிட்டப்பா. எம்.கே.தியாகராஜ பாகவதருடனும் சேர்ந்து

நாடகங்களில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி. இவர் நாடகத்தில் நடித்ததுடன் நில்லாமல் பேசாத மௌனப் படங்களிலும் நடித்தார். கோவலன் (1930) படத்தில் மாதவியாகவும், உஷா செüந்த(1931) படத்தில் சித்திரலேகாவாகவும், ராஜேஸ்வ(1931) படத்தில் ராஜேஸ்வரியாகவும் நடித்தார். தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் திரையிடப் பட்ட 1931 இல் பேசாத படங்களும் திரையிடப் பட்டன என்பது இங்கு நினைவு கொள்ளத் தக்கது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான காளிதாஸ்

படத்தில் நடித்த டி.பி.ராஜலக்ஷ்மி, 1931 முதல் 1950 வரையிலான 20 ஆண்டுகளில் 22 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 22 படங்களில் 7 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். அந்த 7 வேடங்களில் 6 வேடங்கள் தாய் வேடங்களாக உள்ளன. 7 இல் 6 போக மீதி 1 துணை வேடம்

கிருஷ்ணன் வேடமாகும். மீதி 15 படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இராமாயணம் - பாரதம் என்ற இரு இதிகாசங்களில் வரும் சீதை, திரெüபதை, சுபத்திரை, சத்தியபாமா, யசோதை, கிருஷ்ணன் போன்ற வேடங்களிலும் வள்ளி, சாவித்திபோன்ற புராண வேடங்களிலும் சந்திரவல்லி, திருநங்கை போன்ற வரலாற்று வேடங்களிலும் வித்யாதரி, கண்ணகி போன்ற காவிய (இலக்கிய) வேடங்களிலும் லக்பேஷ்வா, லலிதாங்கி, சீமந்தினி போன்ற ராஜா ராணிக் கதை வேடங்களிலும் கமலா போன்ற சமூக பாத்திரங்களிலும் நடித்துள்ளார். முதல் தமிழ் (பேசும்) படமான காளிதாஸ் 31.10.1931 தீபாவளி அன்று சென்னை கினிமா சென்ட்ரல் தியேட்டரில் (முருகன்) திரையிடப்பட்டது. இப்படத்தில் நாயகி தமிழிலும், நாயகன் தெலுங்கிலும், மற்றவர்கள் இந்தியிலும் பேசினார்கள். ஊமைப் படங்களையே பார்த்து வந்த இரசிகர்களுக்கு, இப்படம் பேசுவதைக் கேட்டதும் அவர்கள் மகிழ்ந்து போனார்கள்.

இப்படம் திரையிடப்பட்ட அன்று மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்ததுடன், மழை வெள்ளத்திலும் மிதந்தார்கள். நடிகர்களின் உதட்டசைவிற்கும் பேச்சுக்கும் ஒத்துப் போகவில்லை. கதைக்கு சம்மந்தமே இல்லாத தியாகையரின் தெலுங்கு கீர்த்தனைகள், ராட்டினமாம் காந்தியின் கை பாணமாம் என்ற தேசபக்திப் படல், குறத்தி நடனம், கெஜட் (அரசு செய்தி) போன்ற அம்சங்களெல்லாம் இப்படத்தில் இடம்பெற்றாலும் மக்கள் அவைகளையெல்லம் குறைகளாகவே

பொருட்படுத்தவில்லை. பேசாத குழந்தை பேசினால் பெற்றோர்கள் அளவில்லாத ஆனந்தம் கொள்வார்களே தவிர, குழந்தை என்ன பேசியது எப்படிப் பேசியது என்று ஆராய்ந்து கொண்டிருக்கமாட்டார்கள். ரசிகர்களும் இதே மனநிலையில்தான் இருந்தார்கள். ராமாயணம் (1932) என்ற படம் கல்கத்தாவிலுள்ள ஈஸ்ட் இண்டியா ஃபிலிம் கம்பெனியால் ஒரே மாதத்தில் தயாரிக்கப் பட்டது.

டி.பி.ராஜலக்ஷ்மி சீதையாகவும், டி.எஸ்.மணி ராமராகவும் நடித்த படமிது. சினிமா கொட்டகை உரிமையாளராகவும்

வினியோகஸ்தராகவும் இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட் வள்ளி திருமணம் (1933) படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். பி.பானுமதி லைலா மஜ்னு படத்தையும், ஜெமினி நிறுவனம் ஞானசெüந்தபடத்தையும் தயாரிப்பதற்கு முன்னோடியாக, கிருத்துவரான சாமிக்கண்ணு வின்சென்ட் முருக கடவுளைப் பற்றிய வள்ளி திருமணம் படத்தை தயாரித்தார்.

இப்படம் சென்னையில் 10 வாரங்களுக்கும், மதுரையில் 6 வாரங்களுக்கும் திரையிடப்பட்டு வெற்றிப் படமாகியது. இப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரத்தை, வள்ளியாக நடித்த டி.பி.ராஜலக்ஷ்மி இரண்டாவது கணவராக மணந்து கொண்டார். இவர்களுக்கு கமலா என்ற மகளும், ராஜன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். கமலாவின் மகன் ராகவன் ஏர் இந்தியாவில் பணிபுரிகிறார்.

டி.பி.ராஜலக்ஷ்மியும் வி.ஏ.செல்லப்பாவும் நடித்த படம் கோவலன் (1934). கல்கத்தாவில் தயாரான படமிது. சிலப்பதிகார காப்பியத்தின் கதையைக் கொண்ட இப்படம் கண்ணகி (1942), பூம்புகார் (1964) என்று மற்றும் இரு தடவை திரையைக் கண்டது.

டி.பி.ராஜலக்ஷ்மி நடித்த குலேபகாவலி (1935) படத்தின் கதையும் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி (1955) படத்தின் கதையும் ஒன்று. 1935 இல் வி.ஏ.செல்லப்பா அய்யர் நடித்த தாசன் முல்க் வேடத்தில்தான், 1955 இல் எம்.ஜி.ஆர். நடித்தார். டி.பி.ராஜலக்ஷ்மி நாயகி லக்பேஷ்வா வேடத்தில் நடித்தார். பறக்கும் குதிரையும் மாயக் கம்பளமும் குலேபகாவலி படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தன. டி.பி.ராஜலக்ஷ்மி நடித்த லலிதாங்கி (1935) படத்தின் கதையும் சிவாஜி கணேசன் நடித்த ராணி லலிதாங்கி (1957) படத்தின் கதையும் ஒன்று. பாமா பரிணயம் (அல்லது) ஸ்யமந்தகமணி (1936) படத்தில்

செருகளத்தூர் சாமா நாயகன் கிருஷ்ணனாகவும், டி.பி.ராஜலக்ஷ்மி நாயகி சத்யபாமாவாகவும் நடித்தனர். பரிணயம் என்றால் திருமணம் என்று பொருள். இப்படத்தின் ஒரு காட்சியை பார்த்தார் நேரு. அந்த ஒரு காட்சியின் வசூல் தொகை நேருவிடம் அன்பளிப்பு நிதியாக அளிக்கப்பட்டது. தேசத்தின் மீதும் தேசத் தந்தை காந்தி மகான் மீதும் பற்று கொண்ட இவர் இந்தியத் தாய் என்ற படத்தை தயாரித்தார். ஆங்கில அரசு செய்த கெடுபிடிகளினால் இந்தியத் தாய் படத்துக்கு விடுதலை கிட்டவில்லை. அதனால்

வெள்ளித்திரைக்கு வரவில்லை. மிஸ்.கமலா (1936) என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகியாக நடித்து, தயாரித்து இயக்கியுள்ளார் டி.பி.ராஜலக்ஷ்மி. இப்படம் தோல்விப் படமாக அமைந்து விட்டது. புணேவில் தயாரான நந்தகுமார் (1938) படம் பிரகதி பிக்சர்ஸ் சார்பில் தமிழ், இந்தி, மராத்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கப் பட்டது. மற்ற மொழிகளில் யசோதையாக நடித்தவர்கள் கச்சை கட்டிக் கொண்டு நடித்தனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியார் மற்ற இரு மொழி படங்களில் யசோதையாக நடித்தவர்களைப் போலவே டி.பி.ராஜலக்ஷ்மியையும் கச்சை கட்டிக் கொண்டு நடிக்க சொன்னார். கச்சை கட்டி

நடிப்பதானால் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு இச்சை இல்லை என்று சொல்லி விட்டார் டி.பி.ஆர். அதனால் தமிழ்ப்பட யசோதை ஜாக்கெட்டுடன்தான்

திரையில் தோன்றினார். யசோதையின் மகன் கிருஷ்ணனாக நடித்த டி.ஆர்.மகாலிங்கத்திற்கு இதுதான் முதல் படம். அதேபோல், இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்த முதல் படம் இது. இதய கீதம் (1950) படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு தாயாக (நாட்டின் அரசியாக) நடித்துள்ளார் டி.பி.ராஜலக்ஷ்மி. நந்தகுமார் படத்தில் டி.பி.ராஜலக்ஷ்மிக்கு மகனாக நடித்த டி.ஆர்.மகாலிங்கம் இதய கீதம் படத்தில் மருமகனாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி, தயாரித்து, இயக்கி, அரங்க நிர்மானமும் செய்துள்ளார் சிட்டாடல் ஃபிலிம்ஸ் அதிபரான ஜோசப் தளியத். சென்னை கினிமா சென்ட்ரல் (முருகன்) அரங்கத்தில் கல்கி அவர்கள் காளிதாஸ் படம்

பார்த்துள்ளார். சம்பூர்ண கோவலன் படம் பற்றி கல்கி அவர்களின் விமர்சனம்: ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி நடிப்பில்

முன்னேற்றம் அடைந்துள்ளார். இதுவரையில் தமிழ் டாக்கியில் நடித்திருக்கும் நடிகைகளுக்குள் உருவத் தோற்றம், நடிப்புத் திறன், தெளிவான பேச்சு, இனிமையான பாட்டு இவைகளில் இவர் சிறந்து விளங்குகிறார் என்றே சொல்லலாம். சிறந்த கதாநாயகிகளை கண்டறியும் பொருட்டு, சென்னை நகரத்திலுள்ள தியேட்டர்களில் ரசிகர்களின்

எண்ணத்தை வாக்கெடுப்பு செய்தது ஃபிலிம் லீக் என்ற பத்திரிகை. வாக்கெடுப்பு தந்த நாயகிகளின் வரிசை 1. டி.பி.ராஜலக்ஷ்மி, 2. உமாதேவி, 3. ரத்னாபாய். ஐந்து ஆறுகள் பாயும் திருவையாறில் பிறந்தவர், நடிகை, பாடகி, கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற ஐந்து திறன் கொண்டவராக விளங்கினார்.


Post Comment

Post Comment