முதுகுப் பகுதிக்கு பலன் தரும் சக்கரவாகாசனம் :


Posted by-Kalki Teamமுதுகெலும்பு, கீழ் முதுகு, கழுத்து, முதுகுப் பகுதிகளுக்கு பலம் தரும் ஆசனம் இது. இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை: விரிப்பில் கால் முட்டிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி இருக்கட்டும். முட்டிபோட்டு, உடலை முன்புறமாகக் கொண்டுசென்று, கைகளை நீட்டி, தலையைத் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். வயிறு அமுங்கி இருக்கும். இது தயார் நிலை.

இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மேல் நோக்கி முன்னுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். முதுகு லேசாக வளைந்திருக்கும், பார்வை சற்று மேல்நோக்கி இருக்கும். கைகள் தோள்பட்டை அளவில் நேராக ஊன்றி இருக்கும். வசதியான உணர்வு ஏற்படும்.

அந்த நிலையில் இருந்து, ஓரிரு விநாடிகளுக்குப் பின், தலையை முதலில் தாழ்த்தி மூச்சை வெளியேவிட்டபடி வயிறு அமுங்கிய பழைய நிலைக்கு செல்லவேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பின், முன் பக்கமாக மூச்சை உள்ளிழுத்து வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்த பின்பு, ஓய்வெடுக்கலாம்.

தரையில் முதுகெலும்பு நன்குபடும்படி கால்களை நீட்டி கைகளை உடலுக்கு சற்று வெளியே வைத்துக்கொள்ளவும். இரு கால்களுக்கு இடையிலும் சற்று இடைவெளி இருக்கட்டும். கண்களை மூடி, உடலையும் மூச்சையும் மேலும் அமைதிப்படுத்தலாம். ஓரிரு நிமிடங்கள் ஓய்வுக்காக செலவழிக்கலாம்.

பலன்கள்: முதுகெலும்பு, முதுகுப் பகுதி பலம் பெறும். சுவாசம் அதிகரிக்கும். வயிற்றில் காற்று முழுவதுமாக வெளியேறுவதால், அந்தப் பகுதி மேலும் ஆரோக்கியம் அடைகிறது. கீழ் முதுகு, கழுத்து பகுதி நன்கு வேலை செய்யும்.


Post Comment

Post Comment