திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது


Posted by-Kalki Teamதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வருகிற 28-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் முதல் நாளான 28-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 9.30 மணி அளவில் கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கும் காப்புக்கட்டுதல் நடக்கிறது.

இதனையடுத்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. பக்தர்கள் தங்களது நேர்த்தியான ஒரு வேளைக்கு பால், மிளகு, துளசி ஆகியவை மட்டும் உண்டு கடும் விரதம் கடைபிடிக்க உள்ளனர். கடும் விரதமிருக்கும் பக்தர்கள் 6 நாட்கள் கோவிலிலேயே தங்கி இருந்து காலையிலும், மாலையிலுமாக இருவேளை சரவண பொய்கையில் நீராடி உடலில் ஈர துணியை கட்டியபடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

விழாவையொட்டி கோவிலுக்குள் தினமும் காலை 11 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். இதேபோல் தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மறுநாள் 2-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் சன்னதி தெருவில் ெசாக்கநாதர் கோவில் முன்பு சூரசம்கார லீலையும் நடைபெறும்.

3-ந்தேதி கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பாக அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவித்தல் மற்றும் கற்பக விநாயகர், சத்தியகிரீசுவரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக்கவசமும் அணிவிக்கப்படுகிறது. மேலும் விழாவையொட்டி தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவும் மற்றும் கந்தன் கருணை, வருவான் வடிவேலன், யாமிருக்க பயம் ஏன்?, தெய்வம் உள்பட பக்தி சினிமா படமும் காண்பிக்கப்படுகிறது.


Post Comment

Post Comment