‘பொன்னியின் புதல்வர்’: ஆங்கிலத்தில் அமரர் கல்கி வரலாறு!

‘பொன்னியின் புதல்வர்’: ஆங்கிலத்தில் அமரர் கல்கி வரலாறு!

-ஜி.எஸ்.எஸ்.

'பொன்னியின் செல்வன்' என்றால் யாருக்குதான் தெரியாது?  அது தலைமுறைகளைத் தாண்டியும் ஆதரவு பெற்றுள்ள அமரர் கல்கியின் சாதனை வரலாறுப் புதினம்.  அவரது வாழ்க்கை வரலாறு என்று கூறத்தக்க சுந்தாவின் 'பொன்னியின் புதல்வர்' நூலைப் படித்து இன்புறவும் இளம் தலைமுறையினர் தயார்தான்.  ஆனால் கூடவே ' இது இங்கிலீஷிலே வந்திருக்கா'?' என்று அவர்கள் கேட்க வாய்ப்பு அதிகம்!

அவர்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. கல்கியின் வாழ்வு மற்றும் அணுகுமுறைகள் பற்றி தமிழில் படித்து அறிய முடியாதவர்கள் கூட அறிந்து கொள்ளும் வகையில், சுந்தா எனப்படும் எம்.ஆர்.எம்.சுந்தரம் தமிழில் எழுதிய நூலை,  Kalki  Krishnamurthy : His Life & Times என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் கௌரி ராம் நாராயண்.  சென்னை கோட்​டூரில் உள்ள 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' வளாகத்தில் நடந்த இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த சிலரது உரைகளிலிருந்து குறிப்பிடத்தக்க பகுதிகள் இதோ.

நீதியரசர் சந்துரு (ஓய்வு)

'இந்த இடம் தொடர்பான ஒரு நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை.  பதினோரு வருடங்களுக்கு முன் தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது.  அருகிலுள்ள  பிரம்மாண்ட நூலகமும் இப்போது இந்த நிகழ்வு நடக்கும் இடமும் இடிக்கப்பட்டு இங்கே குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்றது அந்த ஆணை.  இந்த வளாகத்துக்கு உரிமையாளர்களான அண்ணா பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்களில் ஒருவர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது எந்தப் பத்திரிகையாளரும் கூட இதைக் கடுமையாக எதிர்க்கவில்லை.  கடைசியில் நீதிமன்றம் தலையிட்டு இதைத் தடுத்தது.  கல்கி உயிரோடு இருந்திருந்தால் அவர் நிச்சயம் இந்த ஆணையை எதிர்த்திருப்பார்.  சொல்லப்போனால் அவர் வாழ்ந்த காலகட்டம் மேலும் அதிக அடக்குமுறை நிலவிய ஒன்று.  சுதந்திரப் போராட்ட காலகட்டம் அது.

அவரது வாழ்க்கை வரலாறுக்கு பொன்னியின் புதல்வர் என்று பெயர் வைத்தது மிகப் பொருத்தமானது.  அவர் மண்ணின் மைந்தராக விளங்கினார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினார்.  அவரது வாழ்க்கை வரலாறு வெறும் தேதிவாரியான நிகழ்ச்சிகளின் கோவை மட்டுமல்ல.  சென்ற நூற்றாண்டின் வரலாறை உணர்த்தும் முயற்சியும் கூட.  சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்றது பொன்னியின் செல்வன்தான்.  அடுத்த புத்தகக் கண்காட்சியில் அமரர் கல்கியின் ஆங்கில வடிவமாக இன்று வெளியாகும் அவரது வாழ்க்கை வரலாறு மிக அதிகமாக விற்க எனது வாழ்த்துக்கள்'.

எழுத்தாளர் மாலன்

'கல்கியின் வாழ்க்கை வரலாறை எழுதுவது மிகக் கடினம்.  அதற்கு வரலாறு குறித்த ஞானம் வேண்டும்.  அதற்கு நிறைய தகவல்களை திரட்ட வேண்டும்.  அதற்கு பலவித ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  முக்கியமாக கல்கி என்ற ஆளுமை குறித்த புரிதல் வேண்டும்.  அந்த விதத்தில் மிகச் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார் சுந்தா.  கல்கியை ஒரு வழக்கமான பத்திரிகையாளர் மற்றும் ஜனரஞ்சக எழுத்தாளர் என்று மட்டுமே வர்ணிப்பது போதாது.  அவர் ஒரு சமூகப் போராளி. ஆனந்த விகடனின் ஆசிரியர் பதவியை விட்டு நீங்கி சிறைக்குப் போவதை ஒருவர் தேர்ந்தெடுத்தார் என்றால் அந்தச் செயல் கல்கியால் மட்டும்தான் முடியும்.  பின்னர் கல்கி இதழை உலகப்போர் நடந்து கொண்டிருந்த பின்னணியில் தொடங்கினார்.  அச்சுத் தாள் கிடைப்பதே அரிதாக இருந்த காலகட்டம் அது.  கல்கிக்கு நெருக்கமான ராஜாஜி, டி கே சி போன்றவர்கள் கூட புது இதழைத் தொடங்க வேண்டாம் என்றனர்.  என்றாலும் பிடிவாதமாகத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தினார் அமரர் கல்கி.

கௌரி ராமநாராயணின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்தேன்.  சுந்தாவின் எழுத்து வன்மைக்கு ஈடுகொடுத்திருக்கிறார் கௌரி.  மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைகளை மொழிபெயர்த்தல் அல்ல.  கல்கி தென்னிந்தியாவின் கலாச்சாரத்தில் மூழ்கியவர்.  அந்த உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர வேண்டும்.  அது நடந்திருக்கிறது.  இந்த ஆங்கில மொழியாக்கம் காரணமாக கல்கியின் வாழ்க்கை வரலாறு வேறு பல மொழிகளிலும் கூட வெளியாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது'.

கௌரி ராம்நாராயண் (பத்திரிகையாளர் மற்றும் கல்கியின் வாழ்க்கை வரலாறை ஆங்கில வடிவம் ஆக்கியவர்)

'அமரர் கல்கியின் தேசபக்தி என்பது ஏதோ வெற்று வீராவேச முழக்கம் அல்ல.  ஆத்மார்த்தமான அணுகுமுறை.  அவருடைய வாழ்க்கை வரலாறை சுந்தா எழுதியது எங்கள் அதிர்ஷ்டம்.   அமரர் கல்கியின் மேற்கோள்கள், உரைகள், விமர்சனங்கள் போன்றவற்றின் மூலமே அவரது வாழ்க்கை இதில் கொண்டுசெல்லப்படுகிறது.  அவரது நேர்முகங்கள் உட்பட உண்மைத் தகவல்களிலேயே இந்த வாழ்க்கை வரலாறு கவனம் செலுத்துகிறது.  சுந்தாவின் எழுத்து மிக நேர்மையானது.  அவர் கல்கி குறித்து பெரிதும் வியக்கிறார்.  அதேசமயம் கண்ணை மூடிக்கொண்டு அவரை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் பண்பாட்டில் ஊறியவர் என்றாலும் தேசிய சிந்தனைக்கு முன்னுரிமை அளித்தவர் கல்கி.  நமது பண்பாட்டை அவரது எழுத்துக்களின் மூலம் நான் நன்கு அறிய முடிந்தது.  ஒரு இந்தியக் குடிமகனாக எனது பொறுப்பு என்ன என்பதை தன் எழுத்துக்கள் மூலம் அவர் உணர வைத்திருக்கிறார்.  அநீதி, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக போரிட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.             ஒரு இந்திய எழுத்தாளரின் ஆங்கில எழுத்து நடையில்தான் நான் இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறேன்' என்றார் கெளரி ராம்நாராயண்.

அன்று வெளியான ஆங்கில நூலின் சில பகுதிகளை தங்கள் வசீகரமான குரலில் அற்புதமாகப் படித்துக் காட்டினார்கள் நாடக நடிகர்களாகவும்          ப​லகலை​ வித்தகர்களாகவும்  விளங்கும் யோஹன் சாக்கோ மற்றும் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர்.  அமரர் கல்கி எழுதிய பாடலை சிக்கில் குருசரண் இசை அமைத்துப் பாடியபோது அதில் ஆத்மார்த்தமான உணர்வு புலப்பட்டது.

புத்தக வெளியீட்டு விழாவுக்குப் பிறகு கௌரி நாராயணுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பகிர்ந்து கொண்ட மேலும் சில நயத்தகு தகவல்கள் மற்றும் உணர்வுகள் இதோ..

'கோவிட் காலத்தில் ஊரடங்கு சட்டம் அமலான நிலையில் 'ஜூம்' சந்திப்பில் சுந்தா எழுதிய என் தாத்தாவின் வாழ்க்கை வரலாறை என் தங்கை ருக்மணிக்கும் தம்பி சங்கருக்கும் படித்துக் காண்பித்தேன்.  அவர்களுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும் அதை சுலபமாக படிக்க முடியாது.  அவர்களுக்கு அதைப் படித்துக் காட்டிய போது எங்கள் மூவருக்குமே ஒரு பிரமிப்பு ஏற்பட்டது.  அப்போது அந்த நூலின் கதாநாயகன் எங்கள் தாத்தா என்பதையே நாங்கள் ​மூவரும் மறந்து விட்டோம்.  பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தன் எழுத்துக்கள் மூலம் போராடிய ஒருவரைத்தான் கண்டோம்.

அமரர் கல்கியின் ' தில்' எங்களை வியக்க வைத்தது.  அவர் தனது வாழ்க்கையை தொழில் முன்னேற்றம், வசதிகள் போன்ற எந்த குறிக்கோளையும் நோக்கிச்  செல்லாதவராக இருந்தார்.  ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்கிற பின்னணியில் இது மேலும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

காந்திஜியின் வழிமுறையை அவர் பின்பற்றியபோது ஆனந்த விகடனின் உரிமையாளரான வாசன், அவரைப்  பதவியை விட்டு நீங்க செல்லவில்லை.  'உங்கள் சத்தியாகிரகத்தை நிறுத்துங்கள்.  எங்கள் வியாபார முன்னேற்றத்தை இழக்க நான் தயாராக இல்லை' என்று மட்டுமே குறிப்பிட்டார்.  ஆனால் அமரர் கல்கி ஆனந்த விகடன் ஆசிரியர் என்ற பதவியைத் துறந்து ராஜாஜி காந்தி ஆசிரமத்தை அடைந்து சிறைக்கும் சென்றார்.

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் வால்டரின் ஒரு மேற்கோளை கல்கி அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பார்.  'உன் எழுத்தை நான் வெறுக்கிறேன்.  ஆனால் நீ தொடர்ந்து எழுத வழி செய்வதற்காக என் உயிரையும் துறப்பேன்' (I detest what you write, but I would give my life to make it possible for you to continue to write).  தனக்கு விருப்பமான இந்தக் கொள்கையை முழுவதுமாகப் பின்பற்றினார் கல்கி.  அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்.  ஆனால் நாத்திகர்களின் உரிமைகளை மதித்தார்.

வன்முறையில் இறங்காதவரை அவர்கள் தங்கள் கருத்துகளை தாராளமாக வெளிப்படுத்தலாம் என்றார்.  எழுத்தாளர் புதுமைப்பித்தன் வரைமுறையின்றி கல்கியை விமர்சித்தார்.  அவர் இறந்தபோது நிதி உதவி கோரி புதுமைப்பித்தனின் மனைவி கல்கியை அணுகியபோது பலவிதங்களில் நிதி திரட்டி அவருக்கு உதவினார் கல்கி. கூறியதையும் எழுதியதையும் செயலில் காட்டியவர் அவர்.

அவரது வாழ்க்கை வரலாறு இலக்கியத் தரமான விதத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தால் அதை ஆங்கில வடிவில் அளிக்க நான் முயற்சி செய்திருக்க மாட்டேன்.  மாறாக அது ஒரு சரித்திரம்.  சென்ற ​நூற்றாண்டின் முதல் பாதி காலகட்டம் அவர் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருந்தது.  தமிழ் நூல்களை (சரளமாக) படிக்க முடியாத தமிழர்களுக்காகத்தான் அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில் கொண்டு வந்தேன்.. இந்த நூலின் இரு பாகங்களும் www.kalkibiography.com என்ற இணைய முகவரியின் மூலம் மட்டுமே கிடைக்கும்.'' என்று தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். திருமதி கெளரி ராம்நாரயண் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com