அனல் பறக்கும் அக்னி பாதை!

அனல் பறக்கும் அக்னி பாதை!

-ராஜ்மோகன் சுப்ரமண்யன்

ந்திய ராணுவத்துக்கு வலு சேர்க்கும் திட்டம் என்ற வகையில் 'அக்னிபாத்' என்ற புதிய திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு வட மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து, 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து வட மாநிலங்களுக்கான ரயில் சேவைகள் மற்ற பகுதிகளிலிருந்து வெகுவாகக் குறைக்கப்பட்டன. இன்னும் பல ஊர்களில் பதட்டம் நீடிக்கிறது.

அக்னிபாத் திட்டம் என்பது என்ன.. அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?!  

இதுவரையில் இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளிலும் ஆள் சேர்ப்பு என்பது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் வரை பணிபுரியும் வகையில், பணி நிரந்தர உறுதி தன்மையுடன் நடந்து வந்தது. மேலும் பணிக்காலத்துக்குப் பிறகு பென்ஷனும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ராணுவத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டதுதான் அக்னி பாத் திட்டம். அதாவது, ராணுவத்துக்கான வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் வெறும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தி பின்னர் விடுவிக்கப் படுவர். 

இத்திட்டத்தின்கீழ்  17.5 வயது முதல் 21 வயது வரையிலான இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். ராணுவ ஆள் சேர்ப்புக்கான வழக்கமான விதிமுறைகள்படியே இது நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தொடர்ந்து  மூன்றரை ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். பின்னர் ஒப்பந்தம் முடிந்து பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இதனுடன் சேர்த்து இதர படிகளும் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.வீரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான பங்களிப்பு தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும்.

4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரா்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பணிக் காலத்தில் பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்படி 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றி, வெளியில் வரும்போது சுமார்  25 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் எனப்படுகிறது.

மேலோட்டமாக பார்த்தால் இதுவொரு அற்புதமான திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 4 ஆண்டுகள் சேவை முடித்து வரும் போது இளைஞர்களிடம் ஒழுக்கம், தேசப்பற்று, 25 லட்சம் வரை பணம் மற்றும் திறன்பயிற்சி என்றெல்லாம் கிடைக்கும். பிறகு ஏன் இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு ?

''இராணுவ சேவை என்பது தேசபற்றுமிக்க சேவை. இப்பணியில் வறுமையின் காரணமாக யாரும் சேருவதில்லை. தேசத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை துச்சமாக மதித்து நாட்டிற்காக உயிரை கொடுக்கும் துணிச்சலுடன் தான் ராணுவத்தில் சேருகின்றனர். இந்த தேசபக்தியைகேள்விக்குள்ளாக்குகிறது இந்த திட்டம்'' என்கிறார் ரிடையர்டு மேஜர் ஒருவர். அவர் சொன்னதாவது:

நான்காண்டுகள் சேவையாற்றி வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இவர்களுக்கு துணை ராணுவப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாஜக ஆளும் சில மாநில அரசுகள் தங்கள் மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்கின்றன.ஆனால் இவை எதுவும் அதிகாரபூர்வமான அறிவிப்பல்ல.. 

எல்லாவற்றிற்கும் மேலாக இது தற்காலிகமான பணி திட்டம் என்பதால், இதில் சேரும் இளைஞர்களின் மனோநிலை எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. நான்காண்டுகள் தானே பணி என்ற அசட்டு எண்ணம் பெருகினால் தேசத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும். ஏன் எனில் ராணுவப்பணி என்பது  மன உறுதியின் அடிப்படையிலானது மேலும் இதில் தீவிரவாத எண்ணம் கொண்ட குழுக்கள் எளிதில் நுழைந்துவிடலாம். நான்காண்டுகள் கழித்து வெளியே வந்து தேசத்திற்கு எதிராக போராடலாம்'' என்றார் அந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர்.

ஆனால் இன்னொரு தரப்பில் உலகெங்கும் பல நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி என்பது இளம் பருவத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்கால இந்தியாவின் நலன் கருதி அவ்வகையில் இதுவும் ஒரு திட்டம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. உண்மைதான் சிங்கப்பூர், கொரியா, ஐரோப்பா, போன்ற பகுதிகளில்  இது செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் அங்கு பொருந்தும் விஷயம் இங்கே பொருந்துமா ?

இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தாலும் தனிநாடு கோரிக்கைகள், மாநில நலன் கருதி பிரிவினைவாத போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய குழுக்கள் இந்த தற்காலிக திட்டத்தினுள் ஊடுருவினால் நாட்டின் ஒற்றுமை என்னவாகும் ?

இதையெல்லாம் மத்திய அரசு யோசிக்காமல் இருக்குமா? இருந்தும் ஏன் அக்னி பாத் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது? காரணம் சிம்பிள். கடும் நிதி பற்றாகுறையில் இருக்கும் மத்திய அரசு, இத்திட்டம் மூலம் ராணுவ செலவை பெருமளவு குறைக்க முடியும் என்று நம்புகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக மட்டும் ரூ.1,19,696 லட்சம் கோடியை ராணுவம் செலவழிக்கிறது. அதாவது, நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர தொகையை கொண்டே தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ராணுவத்துக்கான பிற செலவுகள் செய்யப்படுகிறது. எனவே, ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத்துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளைச் செய்துவந்தது. அதனடிப்படையில், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்னிபத் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்கிறது மத்திய அரசு. ஒரு  இராணுவத்திற்கு எண்ணிக்கை முக்கியமல்ல. திறன் மட்டுமே முக்கியம். 1962 ல் நிகழ்ந்த இந்திய சீன போரில் ரைபிள் மேன் ராணா ஜஸ்வந்த் சிங் ராவத் எனும் 21 வயதே ஆன ராணுவ வீரன் அப்பொழுது இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற  சீனப்படையை 72 மணிநேரம் தனி ஒருவனாக நின்று தடுத்து நிறுத்தியதோடு சுமார் 300 சீன வீரர்களை சிதறி ஓடவிட்டான். அத்தகைய பெருமை வாய்ந்த வீரர்களை கொண்டது இந்திய ராணுவம். இந்த பெருமிதம் தொடர எண்ணிகையால் மட்டும் முடியாது. ஜஸ்வந் ராணா போன்ற வீரர்களின் மன உறுதியால் மட்டுமே முடியும். அக்னிபத் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கூட்டலாம். ஆனால் பலம் சேர்க்குமா என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. 

முன்னாள் ராணுவ அதிகாரியான மேஜர் நாராயணன் சொன்னார்:

மேஜர் நாராயணன் 

 ''அக்னி பாத் திட்டத்தை அரசு யாரிடமும் திணிக்கவில்லை. இத்திட்டத்தின் கீழ் சேர்பவர்களில் 20% பேருக்கு பணியில் நீடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளணா.. நீங்கள் விரும்பினால், தகுதி இருந்தால் சேர விண்ப்பிக்கலாம். இல்லாவிட்டால் எந்த நிர்பந்தமும் இல்லை இன்று அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட நிறைய இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கின்றனர் அவர்களுக்கு இது ஒரு அரிய வரபிரசாதம். மேலும் படிக்க வாய்ப்பு இல்லாதோர் பணியில் இருந்துகொண்டே படிக்கவும் செய்யலாம்

நான்காண்டு கழித்து வரும் போது ஒரு நல்ல தொகை கிடைக்கும். அதைகொண்டு சுயதொழில் செய்ய முடியும். அடுத்து ஆண்டிற்கு 46000 நபர்கள் என்று எடுத்துகொண்டால் மாநிலத்திற்கு 1000 முதல் 1500 பேர் சேருவார்கள். இவர்கள் வெளியே வரும்போது, இவர்களின் பயிற்சியின் காரணமாகவே காவல்துறை, துணைராணுவம் தீயணைப்பு இன்ன பிற மாநில பாதுகாப்பு துறையில் முன்னுரிமையின் மூலம் வேலை கிடைக்கும். எனவே இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு மற்றும் பயனுள்ள திட்டம்'' என்கிறார்.

இது குறித்து ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வி.மணிமாறனிடம் கேட்டபோது. 

வி.மணிமாறன்

''நான்கு ஆண்டு பணியில் முதல் ஆறுமாதம் பயிற்சி என்கிறார்கள். ஆனால் ஒரு ராணுவ வீரன் வாழ்நாள் முழுவதும் பயிற்சியில் இருக்கவேண்டும் . ஏன் எனில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாறிகொண்டே இருப்பார்கள். அந்த இடத்திற்கு ஏற்ப பயிற்சி தேவை. இவர்கள் பயிற்சி முடித்து ஒரு இடத்தில் பணியில் அமர்ந்து அதை புரிந்துகொள்ளும் முன்னரே பணிவிலக்கு செய்யப்படுவார்கள். அப்படியிருக்க நான்கு ஆண்டுகளில் வலிமையான மாறிவிடுவார்களா என்பது எப்படி சொல்லமுடியும்?!" என்கிறார். 

அதேசமயம் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்து வரும் இளைஞர்களுக்கு தம் நிறுவனங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருப்பதாக பல தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தனது மகிந்திரா குழும நிறுவனகளில் அக்னி வீர்ர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருப்பதாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார். 

எது எப்படியோ.. மொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்த்தால், அக்னி பாத் திட்டம் என்பது இந்திய  ராணுவத்திற்கு வலு சேர்ப்பது என்பதைவிட நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவே இந்த திட்டம் என்று பெரும்பாலோர் கருதுவது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com