மழை, வெயில் போன்ற இயற்கை மாற்றங்களை கண்டறிய நமக்கு பல கோடி மதிப்புள்ள அறிவியல் சாதனங்கள் தேவைப்படுகிறது. ஆனால் சிலவிலங்குகள் மற்றும் பறவைகள் இயற்கையோடு ஒன்றி இருப்பதால். அவற்றின் நுண்ணறிவிற்கு இயற்கையின் மாறுதல்கள் நன்றாகவே புலப்படுகின்றன. மனிதர்களைப்போலவே மழையை விரும்பும் விலங்குகள் மற்றும் பறவைகளும் உண்டு. அதில் ஒன்று தூக்கணாங்குருவி. பருவமழை துவங்கும் முன் தங்களது கூடுகளை கட்ட ஆரம்பித்து மழை விழும் முன் தங்களது முழு கூட்டையும் கட்டி தன்இணையுடன் சேர்ந்துவிடும்.
பொதுவாக தூக்கணாங்குருவி கூடு கட்டினாலே மழை பொழியும் என்ற நம்பிக்கை உண்டு. தூக்கணாங்குருவி என்பது இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை ஆகும். தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று.
தூக்கணாங்குருவி சுமார் 15 செ.மீ. அளவு கொண்டது. வயல்வெளிகளில் தானியங்களைப் பொறுக்கி உண்ணவும், கதிர்களிலிருந்து கொய்து உண்ணவும் வசதியாக அதன் அலகு சிறியதாகவும் சற்றுத் தடித்தும் கூம்பு வடிவத்தில் இருக்கும். சாதாரணமாக ஆண், பெண் தூக்கணாங்குருவிகள் வெளிர் அடிப்பாகத்துடனும், முதுகுப்பகுதியில் அடர் பழுப்பு நிறக் கோடுகளுடனும் காணப்படும். பருவமழைக் காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். அப்போது ஆண் பறவையின் தலை, கழுத்தின் பின்புறம், மார்பு ஆகிய பகுதிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். கூட்டமாக வாழும் தன்மை கொண்டதால் ஒரே மரத்தில் பல பறவைகள் கூடு கட்டும்.
இனவிருத்தி காலத்தில் நாற்பது முதல் ஐம்பது வரையிலான ஆண் குருவிகள் ஒன்று கூடி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மரங்களைத் தேர்வு செய்து கூடு கட்ட ஆரம்பிக்கும். இத்தகைய கூடுகளை ஒவ்வொரு ஆண் பறவையும் தம் அறிவிற்கும் பொறியியல் ஞானத்திற்கும் ஏற்ப பல்வேறு கவர்ச்சிகரமான மாடல்களில் கட்டுவதற்கு முயற்சி செய்யும். இதன் பிரதான நோக்கம் பெண் பறவைகளை ஈர்க்க வேண்டுமென்பதான்.
கூடு கட்டுவதற்கு நீர் நிலையை ஒட்டிய உயரமான தென்னை, பனை, வேம்பு, முட்கள் நிறைந்த மரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும். பொதுவாக இக்கூட்டில் நீர் நிலையைப் பார்த்த வண்ணம் இருப்பதோடு, சமயத்தில் தண்ணீருக்கு மேலே அந்தரத்தில் குளுகுளு வசதியுடன் தொங்குமாறு கூட கூடுகளை அமைக்கும். கட்டப்பட்ட பிறகு இக்கூடுகள் ஒரு காலனி போல் அருகாமையில் கூட்டமாகத் தொங்கும். தனிப்பட்ட ஒற்றைக் கூடு மிகவும் குறைவாகவே இருக்கும்.
மெல்லிய கிளை நுனிகளில் கட்டப்படும் இந்தக் கூடுகள், சூறாவளிக் காற்றில் நழுவிக் கீழே விழுந்து விடாமலிருக்க, கூடுகட்ட ஆரம்பிக்கும் புதிதில் அஸ்திவாரம் போல் உறுதியான நீண்ட பொருட் களைக் கொண்டு மென் கிளையில் முடிச்சுகள் போடப்படுகின்றன. இந்த முடிச்சை உறுதி செய்ய களிமண்ணைக் கொணர்ந்து அதன்மீது பூசி வைக்கின்றன.
நீளவாக்கில் கீழ்நோக்கித் தொங்கும் இந்தக் கூடுகளின் பால்கனியை எப்போதும் கிழக்குத் திசை நோக்கியே அமைக்கின்றன. இந்த சாதுர்யம் தென்மேற்குப் பருவமழையின் சாரல்களைத் தவிர்ப்பதற்குத்தான். கூடுகளைப் பின்னுவதற்கு மூலப்பொருட்களாக உறுதியான புற்கள், வைக்கோல், நார்கள், பல்வேறு வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் ஒரு அடி நீளத்திற்கு மேற்பட்டவையாகவே இருக்கும். மேலும் கூட்டின் உறுதி கருதி இடையிடையே பனை ஓலையில் இருந்து பிய்த்து வரப்பட்ட கீற்றைப் பயன்படுத்திப் பின்னுகின்றன. இப்படி இந்த ஆண் தூக்கணாங் குருவிகள் 600க்கு மேற்பட்ட தடவைகள் பறந்து சென்று மூலப்பொருட்களைக் கொண்டு வந்து தம் கனவு மாளிகையை உருவாக்கு கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. கூடு கட்ட மொத்தம் 18 நாட்கள் எடுத்துகொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன.
கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும். பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும். பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும். அதற்கு திருப்தி இருந்தால் இணைவிற்கு ஓகே சொல்லிவிடும். பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார்போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள் தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன. சில ஆண் பறவைகள் இரவு வெளிச்சத்திற்காக மின் மினி பூச்சிகளை பயண்படுத்துவதும் உண்டு.