
இன்று முதல் நான் பணக்காரன் என்று முடிவு எடுத்தான் ஜூவான் ரிவாஸ். அதைத் தன் இரு நண்பர்களிடம் அறிவிக்கவும் செய்தான்.
“என்ன உளறுகிறாய் ரிவாஸ்? நீ பணக்காரன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?”
இன்னொருவன் ரிவாஸின் சட்டைப் பையில் கையை விட்டுப் பார்த்தான். “ஓ, பணக்காரரே! உன்னிடம் இப்போது எவ்வளவு காசுகள் இருக்கின்றன என்று சொல்வாயா?”
ரிவாஸ் புல்தரையில் இருந்து எழுந்துகொண்டான்.
“முட்டாள்களே, கையில் காசு இருந்தால்தான் பணக்காரன் என்று யார் உங்களுக்குச் சொன்னது?”
“பிறகு?”
“நீ எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே மாறிப்போவாய். நீ பணக்காரனா, ஏழையா என்பதை முடிவு செய்யவேண்டியவன் நீ.”
“கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் நம்பவேண்டுமே?”
“நம்பும்படி செய்யவேண்டும். அதுதான் சாமர்த்தியம்” என்றான் ரிவாஸ். “புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி எப்படிப் பணம் சம்பாதிப்பது என்று உங்களுக்கு நான் கற்றுத்தருகிறேன், என்னுடன் வாருங்கள்.”
மறுவார்த்தை பேசாமல் ஜூவான் ரிவாஸை நண்பர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள். அந்தச் சுற்றுவட்டாரத்தில் ரிவாஸைவிட ஏழை யாரும் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை ரிவாஸை விட புத்திசாலி யாரும் இல்லை என்பதும்.
அவர்கள் பண்ணையாரின் வீட்டை நெருங்கினார்கள். இங்கே ஒளிந்துகொள்ளுங்கள் என்ற ரிவாஸ், வேலியைத்தாண்டி குதித்தான். சில நிமிடங்களில் வெளியே வந்தான். இப்போது அவன் கையில் ஓர் ஆட்டுக் குட்டி இருந்தது. நண்பர்களை நெருங்கினான்.
“நண்பர்களே, இது எனது இன்றைய பரிசு. இந்த ஆட்டுக்குட்டியைச் சந்தையில் விற்றுவிட்டால் இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம் பணக்காரர்களாக இருப்போம்.”
“சரி வா, இங்கிருந்து ஓடிவிடலாம்.”
“என்னது ஓடுவதா? பணக்காரன் ஆனால் போதுமா? புத்திசாலி ஆகவேண்டாமா? இன்னும் நாடகம் மிச்சமிருக்கிறது. நான் வருகிறேன்.”
ரிவாஸ் துள்ளி குதித்து மீண்டும் வேலிக்குள் சென்று மறைந்தான். சிறிது நேரம் கழித்து பண்ணையார் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். அவர் பின்னால் ஆடுகள் வரிசையாக வரத் தொடங்கின. நண்பர்கள் தவித்தனர். இந்த ரிவாஸ் ஏன் மீண்டும் அங்கே செல்ல வேண்டும்? இன்னோர் ஆட்டையும் கொண்டு வரப் போகிறானா? பண்ணையார் கண்டுபிடித்துவிட்டால் என்னாகும்? அவன் மட்டும் மாட்டுவானா அல்லது நாமும் சேர்ந்தா? திருடப்பட்ட ஆடும் நம் கைகளில்...
அப்போது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வரிசையாக ஆடுகள் சென்றுகொண்டிருக்க, வரிசையின் கடைசியில் ரிவாஸ் சென்றுகொண்டிருந்தான். அதுவும் எப்படி? இரு கைகளையும் தரையில் ஊன்றி, ஆடு போல் நடந்து சென்றுகொண்டிருந்தான்.
பண்ணையார் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்று தன் பின்னால் வரும் ஆடுகளை இப்போது அவர் எண்ண ஆரம்பித்தார். நண்பர்கள் நடுங்கினர். ஆடும் போச்சு, நாமும் சிக்கிக்கொண்டோம்!
அதற்குள் ரிவாஸை நெருங்கிவிட்ட பண்ணையார்
ஆ என்று வாய் பிளந்து நின்றார்.
“நீ... யார்? எங்கே என் இருபத்தைந்தாவது ஆடு?”
ரிவாஸ் ஆடு போலவே நடந்துகொண்டிருந்தான்.
“ஏய், நான் சொல்வது உன் காதில் விழவில்லையா? யார் நீ?”
ரிவாஸ் அப்பாவி போல் திருதிருவென்று விழித்தபடி கஷ்டப்பட்டு எழுந்து நிற்க முயன்றான். எழுந்ததும் பண்ணையாரின் கைகளைப் பற்றிக்கொண்ட ரிவாஸ், தழு தழுத்த குரலில் கேட்டான்: “ஐயா, நீங்கள் யார்?”
பண்ணையார் குழப்பமடைந்தார். “நான் பண்ணையார். என்னையே பார்த்து யார் நீ என்றா கேட்கிறாய்?”
“மன்னிக்கவேண்டும் ஐயா. நான் இதற்கு முன்னால் உங்களைப் பார்த்ததேயில்லை.”
“அடேய், காட்டைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களும் என்னுடையவை. என்னிடம் இல்லாத ஆடு, மாடுகள் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வீடு இருக்கிறது. இந்த ஆடுகள் விசேஷமானவை. பக்கத்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதனால்தான் நானே இவற்றை ஓட்டிச் செல்கிறேன். இப்போது என் இருபத்தைந்தாவது ஆட்டைக் காணவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டு விடுவேன், இல்லாவிட்டால் தொலைத்துவிடுவேன்.”
மறைந்திருந்த நண்பர்களின் உடல் நடுங்கியது. ஐயோ, இவனைப் போய் புத்திசாலி என்று நினைத்துவிட்டோமோ!
“ஐயா, உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்த ஆடு நான்தான்!”
“என்ன? நீயா?”
“ஆம், உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஓராண்டு காலம் ஆடாக இருக்கும்படி என்னை ஒரு பாதிரியார் சபித்துவிட்டார். சரியாக இன்றோடு சாபம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் மீண்டும் மனிதனாகிவிட்டேன். ஐயா, என் கைகள், கால்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா? நான் இப்போது மனிதன் போல் இருக்கிறேனா?’ ரிவாஸ் பதட்டத்துடன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். “நல்லவேளை, என் வால் கூட மறைந்துவிட்டது!”
அந்தப் பண்ணையாருக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஐயா, இன்னொரு ரகசியத்தையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் பக்கத்து நாட்டின் இளவரசன். நான் ஊருக்குச் சென்று சேர்ந்ததும் உங்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புகிறேன். பாவம், என்னைப் பற்றிய உண்மை தெரியாமல் அதிக விலை கொடுத்து ஆட்டை நீங்கள் வாங்கியிருப்பீர்கள்!”
பண்ணையார் தடுமாறினார். “பரவாயில்லை இளவரசே. சரி நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று இப்படி ஆடாக மாற்றிவிட்டார் அந்தப் பாதிரியார்?”
“ஒரே ஒரு முறை பொய் சொல்லிவிட்டேன்!”
“அடடா, பாவம்தான் நீங்கள். சரி இப்போது எப்படி ஊருக்குச் செல்வீர்கள்? இருங்கள் ஒரு குதிரையும் கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும் தருகிறேன். நீங்கள் அரண்மனைக்குச் சென்ற பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும். அல்லது என்னை அழைத்தாலும் நானே வந்து வாங்கிக்கொள்வேன்.”
“உங்கள் உதவிக்கு மிக்க நன்றி ஐயா.”
வீட்டுக்குச் சென்ற அந்தப் பண்ணையார் சொன்னபடியே ஒரு குதிரையையும் ஒரு பொற்கிழியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ஆடுகளை ஓட்டியபடி சென்றுவிட்டார்.
ரிவாஸ் ஒரு புன்னகையுடன் தன் நண்பர்களை நெருங்கினான். அவர்கள் ரிவாஸைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். “உண்மையிலேயே நீ புத்திசாலிதான் ரிவாஸ்! சுற்றியுள்ள கிராமங்களை எல்லாம் வளைத்துப் போட்டு எல்லா கால்நடைகளையும் அந்தப் பண்ணையார் ஓட்டி வந்துவிட்டான். நீ அவனிடம் இருந்தே ஆட்டையும் குதிரையையும் தங்க காசுகளையும் கொண்டு வந்துவிட்டாயே!”
இரு தினங்கள் கழித்து அந்தக் காட்டில் ஒரு சந்தை நடந்தது. பண்ணையார் அந்தச் சந்தையைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார். ‘மேமமே’ என்றொரு குரல் கேட்டது. பண்ணையார் திடுக்கிட்டுத் திரும்பினார். அதே ஆடு. பண்ணையார் நெருங்கிச்சென்று ஆராய்ந்தார். சந்தேகமில்லை, அதே இருபத்தைந்தாவது ஆடு!
மெல்ல நடந்து அதன் காதருகே சென்று கிசுகிசுத்தார் பண்ணையார்: “இளவரசே, மறுபடியுமா தப்பு செய்துவிட்டீர்கள்?”