‘காக்காப்பிடி வச்சேன்; கனுப்பிடி வச்சேன்!’

‘காக்காப்பிடி வச்சேன்; கனுப்பிடி வச்சேன்!’

ரேவதி பாலு.

தை பிறந்தாலே பண்டிகைகள், குதூகலக் கொண்டாட்டங்கள்தான்! தை முதல் நாளை தைப் பொங்கலாகக் கொண்டாடும் நாம், அடுத்த நாளை உழவு மாடுகளைப் போற்றும் மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். உழவர் திருநாளான இதை கிராமப்புறங்களில், 'பெரும் பொங்கல்' என்று சொல்லி, வெட்டவெளியில் மூன்று கல் அடுப்பு ஏற்றி புதுப்பானையில் பொங்கல் பொங்கி வட்டமாக உட்கார்ந்து எல்லோரும் சாப்பிடுவார்கள்.

மூன்றாவது நாளை, 'காணும் பொங்கல்' என்று கூறுகிறோம். ஒரு காலத்தில் குடும்பப் பெரியவர்களைத் தேடிப்போய் கண்டு வணங்கும் நாளாக இந்த நாள் இருந்தது. நாளாவட்டத்தில் வெளியே சென்று, 'காணும்' அதாவது கடற்கரை, சினிமா தியேட்டர், பூங்கா போன்ற இடங்களுக்கு, 'கேளிக்கை சுற்றுலா காணும்' பொங்கலாக மாறி விட்டது.

பொங்கலுக்கு அடுத்த நாள், 'கனுப் பொங்கல்' என்று தமிழ்நாட்டில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உடன் பிறந்த சகோதரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டிக்கொண்டு சகோதரிகள் கனுப்பிடி வைப்பார்கள். பெற்றோர் வீடோ, சகோதரர் வீடோ அருகாமையில் இருந்தால் கனுப்பொங்கலன்று அவர்கள் வீட்டுக்கே போய் கனுப்பிடி வைப்பார்கள். இல்லாவிட்டால் பெண்கள் அவரவர்கள் வீட்டிலேயே கனுப்பிடி வைத்து சகோதரர்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டிக் கொள்வார்கள்.

பொங்கலுக்கு வைத்து பூஜை செய்யும் மஞ்சள் கொத்திலிருந்து பச்சை மஞ்சளை எடுத்து அதை வீட்டிலுள்ள மூத்த பெண்கள் கையில் கொடுத்து தங்கள் நெற்றியில் தீற்றச் சொல்வார்கள். இதை எல்லா வயதுப் பெண்களும் செய்து கொள்வார்கள். பிறகு பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். தங்களுக்கு மேல் பெரியவர்கள் இல்லையென்றால் அந்தப் பெண்கள் தாங்களே தங்கள் நெற்றியில் மஞ்சளால் தீற்றிக் கொள்வார்கள். மஞ்சள் தீற்றும்போது பெரியவர்கள் ஆசி கூறும் சில நல்வாக்கியங்கள்:

'தாயோடும் தந்தையோடும்

சீரோடும் சிறப்போடும்

பேரோடும் புகழோடும்

பெருமையோடும் கீர்த்தியோடும்

பிறந்தகத்தோர் பெருமை விளங்க

புக்ககத்தார் மனம் மகிழ

உற்றார் உறவினரோடு

என்றென்றும் நல் ஆரோக்யத்துடனும்

சந்தோஷமாகவும் வாழணும்'

என்று வாழ்த்துவார்கள். பிறகு மொட்டை மாடியில் ஒரு இடத்தை சுத்தம் செய்து எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை கோலங்கள் சின்னச் சின்னதாகப் போடுவார்கள். அந்தக் கோலத்தின் மேல் மஞ்சள் கொத்தின் இலைகளை வரிசையாகப் பரப்பி வைப்பார்கள்.

இப்போது முதல் நாள் செய்த சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல், இத்துடன் கூட குங்குமம் கலந்து செய்யப்படும் சிவப்புப் பொங்கல், மஞ்சள் பொடி கலந்து செய்யப்படும் மஞ்சள் சாதம், தயிர் சாதம், முதல் நாள் ஒற்றைப்படையில் பலவகை காய்கள் போட்டு செய்த கூட்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். கரும்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்வார்கள்.

எல்லா பெண்களும் ஆளுக்கொரு கோலத்தின் எதிரே நின்றவுடன் எல்லோருடைய கையிலும் முதலில் சக்கரைப் பொங்கல் தரப்படும். அதை,'காக்காப்பிடி வைத்தேன், கனுப்பிடி வைத்தேன். காக்காய்க்கெல்லாம் கல்யாணம்; குருவிக்கெல்லாம் கொண்டாட்டம். காக்காய் கூட்டம் கலைந்தாலும் எங்கள் கூட்டம் கலையாது' என்று

சொல்லிக்கொண்டே சிறு சிறு உருண்டைகளாக வைக்க வேண்டும். அப்படியே வரிசையாக வெண்பொங்கல் மற்ற சாத வகைகள், இறுதியாக கரும்புத் துண்டங்கள் வைத்து முடிக்க வேண்டும். பிறகு வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நிவேதனமாக அளிக்க வேண்டும். கற்பூரம் ஏற்றி எல்லோர் கையிலும் கொடுத்து பிரத்யட்ச தெய்வமான சூர்ய பகவானுக்குக் காட்டி எல்லோரும் நலமாக வாழ வேண்டிக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

அந்தக் காலத்தில் குளக்கரை அல்லது ஆற்றங்கரையில் அதிகாலையில் கனுப்பிடி வைப்பது வழக்கம். கனுப்பிடி வைத்து விட்டு, அப்படியே குளித்து விட்டு வருவார்கள். இந்த வழக்கத்தையொட்டியே கும்பகோணத்தில் உறையும் தெய்வங்களான, கோமளவல்லி தாயார், விஜயவல்லி தாயார் போன்றோரும் இன்றும் கனுப் பொங்கலன்று பொற்றாமரை குளக்கரையில் கனுப்பிடி வைப்பது வழக்கமாக இருக்கிறது. தெய்வங்களின் சார்பில் அர்ச்சகர்கள் அதை நிறைவேற்றுவர்.

கனுப் பொங்கல் அன்று சமையல் கதம்ப சாதமாக தேங்காய்சாதம், புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் வெல்லசாதம் அல்லது பாயசம் என்று செய்யப்படும். பிறந்த வீட்டுக்கு வந்து கனுப்பிடி வைக்கும் பெண்கள் கனுப்பிடி வைத்துவிட்டு ஸ்னானம் செய்துவிட்டு அங்கேயே பிறந்த வீட்டு பழைய சாதம் சாப்பிடுவதும் பழக்கம். சகோதரர் வீட்டிற்குச் சென்று கனுப்பிடி வைத்தால் அவர்கள் மனைவிமார்கள் வெற்றிலைப் பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் என்று மங்கலப் பொருட்கள் தாம்பூலமாகக் கொடுத்து தங்கள் நாத்தனார்களை வழியனுப்பி வைப்பார்கள்.

இந்தப் பண்டிகைகள் பழக்க வழக்கங்கள் எல்லாமே சகோதர உறவு பலப்பட வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது. பிறந்த வீட்டில் பெண்களும், பிள்ளைகளும் ஒன்றாக வளர்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் புகுந்த வீடு சென்றுவிட, அவர்களிடையே போக்குவரத்து இருக்க வேண்டும், அவர்கள் உறவு பலப்பட்டு தழைக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர் ஏற்படுத்திய வழிகள்தான் இவை. இந்த வருடம் கனுப்பொங்கல் ஜனவரி 16-ம் தேதியன்று வருகிறது. அன்று, 'கனுப்பிடி' வைத்து குடும்ப உறவுகள் பலப்பட்டு தழைத்தோங்கி இனிதாய் விளங்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com