தசரா திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் குலசேகரபட்டினத்தில் உள்ல முத்தாரம்மன் கோவிலில் விமரிசையாக திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு குலசேகரப்பட்டினம் திருவிழாவுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கடலாடி முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் கடந்த 40 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதில் பத்திரகாளி, மயான காளி உள்ளிட்ட காளி, அம்மன், மாடன், விநாயகர், முருகன், ஆஞ்சனேயர், மீனாட்சியம்மன், நாகதேவதை, முனிவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வேடமிட்டு முத்து எடுக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டது.
கடலாடி, சாயல்குடி, எஸ்.தரைக்குடி, மேலச்செல்வனூர், சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பள்ளனேந்தல், பாப்பாகுளம், கடலாடி, புரசங்குளம், மாரந்தை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடாகவீடாக சென்று முத்து எடுத்தும், அருள்வாக்கு கூறியும், உருமி மேளம் முழங்க கிராமங்களை ஊர்வலமாக வலம் வந்தனர்.
உலகநன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கடலாடி முத்தாரம்மன்கோயிலில் நள்ளிரவு மகாகாளி பூஜையும், சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை மற்றும் அக்னிசட்டி ஊர்வலமும் நடந்தது.