0,00 INR

No products in the cart.

அண்ணாமலையைச் சுற்றி வந்தால் போதும், பல புத்தங்களைப் படித்துவிடலாம்.

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

மைக்ரோ புத்தகங்கள்

 

நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள்.
பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம்யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம். நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம்தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது
– எழுத்தாளர் சுஜாதா.

 

என் வீட்டுக்கு வருபவர்கள் என் அறை முழுவதும் அடுக்கியிருக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டுக் கேட்கும் முதல் கேள்வி  “இவ்வளவையும்  படித்திருக்கிறீர்களா ?”

பதில் கூறாமல் சமாளித்து விடுவேன்…(நாலாம் கிளாஸ் படிக்கும் போது என் அம்மாவிடம் “பொய் சொல்ல மட்டேன்” என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன்)

ஆனால் நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு தவம் போல சுஜாதாவின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். முதலில் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்து, பிறகு வலிமையில் அஜித் பைக் ஓட்டுவது போல சகட்டுமேனிக்கு ஓட்டியிருக்கிறேன், சாரி படித்திருக்கிறேன். புத்தகம் படிக்க லீவு கூட எடுத்திருக்கிறேன்.

கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை. தேசியப் பங்குச் சந்தைக்கு  புராஜெக்ட் செய்துகொண்டு இருந்தோம். அதனால், அடிக்கடி பாம்பே போக வேண்டியிருந்தது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் என்னைப் போன்றவர்கள் ஃபிளைட்டில் போவதற்குப் பூர்வ ஜென்மத்தில் தெருநாய்க்கு ’பார்லே-ஜி’ போட்டிருக்க வேண்டும்.

விமானப் பயணங்கள் அலுத்த போது, ஒரு யோசனை வந்தது.

“அடுத்த முறை விமானத்தில் போகிறேன். ஆனால் திரும்ப வரும் போது ரயிலில் வருகிறேனே” என்று என் மேலாளரிடம் சொன்னேன்.

நடிகர் திலகம் சிவாஜி போல நா தழுதழுக்க என்னைப் பார்த்து “கம்பெனியின் செலவு குறைப்புக்கு நீயே உதாரணம்” என்று ஏதேதோ சொன்னார், ஆனால் என் உள் மனது திட்டம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பாம்பேயிலிருந்து சென்னை வருவதற்குக் கிட்டத்தட்ட ஒன்றை நாள் ஆகும்.  ரயிலில் பயணம் செய்தால் அடுத்த நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். நான் செய்வது இது தான், ரயில் ஏசியில் நிம்மதியாக படுத்துக்கொண்டு போக வர வரும் பூரி மசாலை சாப்பிட்டுக்கொண்டு சுஜாதா புத்தகங்களைப் படித்துக்கொண்டு சென்னை வருவேன். வரும் ரயில் பெரும்பாலும் தாமதமாகதான் வரும்… பிறகு என்ன கவலை? கூடுதலாக இன்னொரு புத்தகம் படிக்கலாம். இம்மாதிரி ரயில் பயணத்தில் சுலபமாக 10 புத்தகங்களை முடித்துவிடுவேன். வந்த சேர்ந்த மறுநாள் விடுப்பில் மீண்டும் புத்தகங்கள்.

இன்று யாரும் பயணங்களில் படிப்பதில்லை. விருது வாங்க வந்த நடிகை தலை அடிக்கடி கோதுவது போல,  செல்பேசியைத் தடவிக்கொண்டு இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் நண்பர் பாம்பே கண்ணன் அவர்கள் கல்கியின் பொன்னியில் செல்வனை ‘ஆடியோ’ புத்தகமாக கொண்டு வந்தார். காலை நடையின் போதும், காரில் அலுவலகம் என்று  ஒரு வாரத்தில் மொத்தத்தையும் கேட்டு முடித்தேன்.(பெங்களூர் டிராப்பிக்!).  உட்கார்ந்து படித்திருந்தால் தொந்தரவு இல்லாமல் இதே வேகத்தில் முடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

தலையணை அளவு புத்தகங்களை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. படிக்கலாம் என்று நினைத்துக்கொள்ளவே இப்புத்தகங்கள். கையடக்கப் புத்தகங்களைப் பார்க்கும் இத்தலைமுறையினர் ”சரிதாம்பா இப்ப என்னதான் சொல்ல வர?” என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே காப்ஸ்யூல் போல் சுலபமாக விழுங்க வேண்டும். இன்று இதற்குப் பல ‘ஆப்’ வந்துவிட்டது. உதாரணமாக பிளிங்கிஸ்ட் (Blinkist) என்ற செயலியில் பல புத்தகங்களின் சாராம்சத்தைக் கொடுக்கிறார்கள். தினமும் புதுப் புத்தகங்களைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்களுக்கு விருப்பமான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தவுடன் ’எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ’ என்று ரஜினி பாடுவது போல ஒரு புத்தகத்தை எட்டாக பிரித்து ஒவ்வொரு பகுதியையும் மூன்று நிமிஷ மைக்ரோ புத்தகங்களாக  எழுத்து மற்றும் ஆடியோ வடிவத்தில் கொடுக்கிறார்கள்.

முருகன் போல உலகைச் சுற்ற வேண்டாம், பிள்ளையார் போல் புத்திசாலியாக அண்ணாமலையைச் சுற்றி வந்தால் போதும், பல புத்தங்களைப் படித்துவிடலாம்.

 

1 COMMENT

  1. புத்தகம் படிப்பதே ஒரு தனி கலைதான்.
    ஆனால் இப்போது எல்லாமே மொபைலிலே
    படிக்க முடியும் என்பதால் புத்தகத்தை யாரும்
    கையில் எடுப்பதையே பார்க்க முடிய வில்லையே.உதாரணத்திற்கு ‘கல்கி’கூட புத்தகம் மூலம் படிக்க முடியவில்லையே.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...