0,00 INR

No products in the cart.

அங்கு மக்கள் அரசாங்கம் செய்யும் என்று காத்திருப்பதில்லை.

 

உலகக் குடிமகன் – 14

 

– நா.கண்ணன்

நான் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துள் நுழைந்தபோது வ.செ.குழந்தைசாமி துணை வேந்தராக இருந்தார். அப்போதுதான் முதல் பத்தாண்டில் காலடி வைக்கிறது பல்கலைக்கழகம். பெரிய விழாவாக எடுத்தார்கள். வ.செ.கு. அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளுத்து வாங்கியது எனக்கு ஆதர்சமாகப்பட்டது. நாமும் இதுபோல் இருமொழிப் புலமை பெற வேண்டுமென ஆசைப்பட்டேன். வாழ்வு எனக்கு இருமொழிப் புலமைக்கு மேல் நிஹோங்கோ (ஜப்பானிய மொழி), டாய்ச்சு (ஜெர்மன் மொழி), ஹங்குல் (கொரிய மொழி) போன்ற மொழிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்தது.

அந்த விழாவில் கண்ணதாசன் வந்து பேசினார். எப்போதும் கம்பீரமாக நின்று கொண்டு பேசும் கண்ணதாசன் அன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசினார். “உங்கள் எல்லோருக்கும் அதிசயமாக இருக்கும், நான் ஏன் இப்படி அமர்ந்துகொண்டு பேசுகிறேன் என்று? ஒரு கதை சொல்கிறேன், கேளுங்கள். எங்களூரில் ஒரு சோதிடர் இருந்தார். அவரிடம் வாழ்வில் மிகவும் கடின தசையில் இருக்கும் ஒருவர் வந்து சோசியம் பார்த்தார். சோசியம் என்பது ஒரு உளவியல் உத்தி. ஏதாவது ஆறுதல் கிடைக்குமா? என்பது அவரின் எதிர்பார்ப்பு. சோசியர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, “அடடா! கிரக சேர்க்கைகள் சரியில்லையே! நீ இப்ப நாய் படாத பாடு படுவியே?” என்று கேட்டிருக்கிறார். வந்தவருக்கு அதைக் கண்டுபிடித்ததே அதிசயமாகப்பட்டது. “அதையேன் கேட்கறீங்க, தினம் நாய்ப்பொழப்புதான்” என்று சொல்லியிருக்கிறார் சோசியர், “இப்ப உனக்கு ஏழரை நாட்டுச் சனியன். ஏழரை வருஷம் இதே நாய்ப்பொழப்புதான்! என்ன செய்ய?” என்றிருக்கிறார். பாவம்! சோசியம் பார்க்க வந்தவர், “ஆமா சாமி. ஏழரை வருசத்துக்கு அப்புறம் என்னாகும்ன்னு சொல்லுங்க” என்றிருக்கிறார். அதற்கு சோசியர், “வேறு என்ன? உனக்கு நாய்ப்பொழப்பே பழகிவிடும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இதைச் சொன்னவுடன் கூட்டத்தில் ஒரே சிரிப்பு. நான் நின்று கொண்டு பேசுபவன்தான். இப்படி உட்கார்ந்து பேசப் பழகிவிட்டது. அதுவே சௌகர்யமாக இருக்கிறது என்றார். மீண்டும் சிரிப்பு.

அன்று கண்ணதாசன் சொன்னது ஜோக் அல்ல. நிதர்சனம். அயலகத்தில் வாழ்ந்து அனுபவித்த பிறகு இந்தியா வரும் போதெல்லாம், “ஏன் இவர்கள் இப்படிக் கஷ்டப்படுகிறார்கள். எளிதாக மாற்றிக் கொள்ளலாமே” என்று இருக்கும்? உதாரணமாக சென்னையில் இருக்கும் கூவம் ஆறு. அதன் தோற்றுவாயில் அது இன்றும் ஓர் நன்னீர் ஆறுதான். ஆங்கிலேயர் காலத்தில் அதில் ஓடமெல்லாம் போயிருக்கிறது! மக்கள் குளித்து இருக்கிறார்கள். இன்று அதுவோர் சாக்கடை. கழிவு என்பது முறையாக பராமரிக்கப்பட வேண்டியது. நகர வாழ்வு என்பது மிகுந்த யோசனையோடு திட்டமிடப் பட வேண்டியது. ஐரோப்பாவில் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே வளரும் ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு நகரைத் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்தத் திட்டமிடுதலும் இன்றி நகரங்கள் வளர்கின்றன. ஒதுக்குப் புறத்தில் இருக்கும் கண்மாய்களெல்லாம் பிளாட்டு போட்டு விற்கப்படுகின்றன. ஏரிகள், ஆறுகள் அடைபடும்போது, ஆக்கிரமிக்கப்படும்போது, வெள்ளப் பெருக்கை வழி நடத்த அவை இல்லாததால் நகரத்துள் நீர் புகுந்து பேரிடர்கள் நடக்கின்றன. பேரிடர் காலத்தில் எல்லோரும் பேசுகின்றனர். பின்னர் மறந்து விடுகின்றனர். அசௌகர்யங்களுக்குப் பழகிக்கொள்கின்றனர். இல்லையெனில் பன்றிகளின் வாழ்வு போன்றதோர் வாழ்வை மும்பாய் சேரிகளும், கூவம் கரைகளிலும் இந்தியன் வாழ வேண்டிய அவசியமென்ன? அரசாங்கத்தைக் குறை சொல்வர். ஆனால் மக்களாட்சியில் அரசு என்பது மக்களின் பிரதிநிதியே. எனவே, மக்கள் பொது ஊடகங்களில் பேச ஆரம்பித்தால் மாற்றம் வரும்.

நான் ஜப்பானில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பியபோது தூர்தர்ஷன் என்னைப் பேட்டி கண்டது. தமிழர்கள் மனிதக் கழிவை வாய்க்கால், வரப்பு, ஏரிக்கரை எனும் இடங்களில் பொதுவாக கழிப்பர். இரயில்வே வந்த பிறகு தண்டவாளத்தின் இரு மருங்கிலும் கழிக்கத் தொடங்கினர். நான் இதற்கொரு மாற்றுச் சொன்னேன். மனிதக் கழிவு என்பதும் கோபார் வாயு போல் சக்தி தரக்கூடியதே. எனவே, ஊரெங்கும் இலவசக் கழிப்பறைகள் கட்டி மீத்தேன் எடுத்து வியாபாரம் செய்யுங்கள் என்று. இதில் கச்சாப்பொருள் இலவசம். சிறு முதலீடுதான். நாடும் சுத்தமாய் இருக்கும். சக்தியும் கிடைத்தால் போலிருக்குமென்று. 1989ல் சொன்னது. இன்றுவரை அது தமிழன் காதில் விழவில்லை. இங்கு எல்லாம் பழகிவிடுகிறது, கண்ணதாசன் சொன்னது போல்!

இந்தப் பழகிவிடுதல் ஒரு கூர்தலறப் பண்பு என்று தெரிகிறது. நாயை வைத்து ஒரு பரிசோதனை செய்தனர். அதைக் கொஞ்ச நாள் சாதாரணக் கூட்டில் அடைத்து வைத்த பின் மின்சாரம் பாயக்கூடிய ஒரு கூண்டில் வைத்து அடைத்தனர். முதல் சில மணி நேரங்கள், சில நாட்கள் நாய் தன் அசௌகர்யத்தைக் காட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு அதுவே பழகிவிட்டது! பரிசோதனைக் காலம் முடிந்தவுடன் நாயை வெளியே விட்டால் அது மீண்டும் மின்சாரக் கூண்டிற்குள் போகவே விருப்பப்படுவதைக் கண்டனர். கண்ணதாசன் நகைச்சுவையாகச் சொன்னாலும், அதில் பொருள் உள்ளது.

முதல் உலகிற்கும், மூன்றாம் உலகிற்குமுள்ள வேற்றுமை நாம் எவ்வளவு தூரம் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு, பழகிக்கொண்டு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. வெளி நாடுகளில் அசௌகர்யத்திற்குப் பழகுவதில்லை. கஷ்டத்தை புத்தி கொண்டு மாற்றி விடுகின்றனர். இஸ்ரேல் ஒரு வளமும் இல்லாத நாடு. ஆனால், பாலைத் திணையையும் மருதமாக மாற்ற முயன்று வெற்றி கண்டுள்ளனர். சொட்டு நீர்ப்பாசானம் அவர்கள் கண்டு பிடித்ததுதான். பாலைவனத்திலிருந்து பழங்களை ஏற்றுமதி செய்கின்றனர். எப்படி? பாலை வாழ்வு அசௌகர்யமானது. தமிழனாக இருந்தால் அச்சூழலுக்குப் பழகிக் கொண்டு சும்மா இருப்பான். ஆனால் இஸ்ரேலியன் அப்படி அல்ல. தனக்கு வரும் இடர்களையெல்லாம் லாபமாக மாற்றுகிறான். அங்கு மக்கள் அரசாங்கம் செய்யும் என்று காத்திருப்பதில்லை.

ஆக, மதுரைப் பல்கலைக் கழக பத்தாண்டு விழா, நகைச்சுவையின் மூலம் நல்லதோர் பாடம் சொன்னது. நான் உயிரியல் துறையில் புகும்போது பேராசிரியர் எஸ்.வி.ஜோப் ஓய்வு பெற்றுக் கிளம்புகிறார். அப்போது பிரிவு உபசார விழாவில் அவர் சொன்ன ஒரு கருத்து தமிழக ஆய்வியலுக்குப் பொருந்தும். அவர் சொன்னார், இரண்டு வகையான ஆய்வுகள் உண்டு. ஒன்று ஆய்வு செய்வதற்கு முன்பே முடிவுகளைத் தீர்மானம் பண்ணிவிட்டு அதற்கேற்றவாறு தரவுகளைப் பின்னால் சேர்ப்பது. ஆனால், உண்மையான ஆய்வு என்பது பரிசோதனை தரும் தரவுகளை நுணுக்கி ஆராய்ந்து அது தரும் பாடங்களை காய்த்தல், உவத்தல் இன்றி வெளிக்கொணர்வது. தமிழகத்தில் ஆய்வு என்றால் என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

உதாரணமாக மரபு ரீதியாக நூற்றாண்டுகளாய் கலந்துவிட்ட தென்னக மக்களை திராவிடர்கள் என்றும், ஆரியர்கள் என்றும் பகுப்பது. இது ஹிட்லர் காலத்திய பகுப்பினவாதம். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூட்சி. ஆனால் நம்மவரே தங்களுக்கு வேண்டாத பிரிவினைகளை உருவாக்கி, அதை அரசியலாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். இதேபோல் சாதி என்பதையும் உயிரியல் பூர்வமாக நிருவ முடியாது. எங்கோ இருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் கூட மரபு ரீதியாக 100% தூய்மையானவர்கள் அல்ல. அப்படி இருக்கும் போது மரபுத் தூய்மை பேசுவது அறிவியலாகாது!

பண்டைய சோவியத் ரஷ்யாவில் லமார்க் என்றொரு விஞ்ஞானி இருந்தார். அவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக ஒரு தியரியை முன் வைத்தார். அதாவது, கம்யூனிசம் தோன்றிய காலத்தில் மக்கள் 10 லிருந்து 20 சதவிகிதம் கம்யூனிஸ்டுகளாக இருப்பர். ஆனால், தலைமுறை தலைமுறையாக கம்யூனிசம் கற்கப்படும் போது மூன்றாவது, நான்காவது தலைமுறையில் 100% கம்யூனிஸ்டுகளே ரஷ்யாவில் இருப்பர் என்பது அவர் கணக்கு. ஒரு வகையில் தமிழ் மண்ணில் நூற்றாண்டுகளாக கல்வி வாய்ப்பை சமூகத்தின் சிலருக்கு அளிக்காமல் ‘அவர்களுக்கு படிப்பு வராது’ என்று சொல்வது போல்தான் இது. ஆங்கிலேயர் காலத்தில் எந்த திருட்டுக் குற்றம் இருந்தாலும் கள்ளர் குடியிலிருந்து ஒருவரைத் தூக்கி உள்ளே போட்டு விடுவார்களாம். தீர விசாரித்தல் என்பதும் ஆய்வுதான். சரியான தண்டனை சரியான ஆளுக்குப் போக நிறைய ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆய்வு அணுகுமுறை வளர வேண்டும். இப்போது ‘டேட்டா’ என்று சொல்லக் கூடிய தரவுகளை நுணுக்கிப் புரிந்துகொள்ள ஏகப்பட்ட அப்ளிக்கேஷன்கள் வந்துவிட்டன. பெரிய தரவு (பிக் டேட்டா) என்பதே பெரிய ஆய்வுப்பொருள் இப்போது. அப்படி இருக்கும்போது முடிவுகளைத் தீர்மானம் செய்துவிட்டு ஆய்வு எனச் செய்ய முயல்வது போலித்தனம். இதைத்தான் பேராசிரியர் ஜோப் சொன்னார். ஆய்வில் நேர்மை வேண்டும், திறந்த மனது வேண்டும், நெஞ்சுக்கு நீதி வேண்டும்.

உண்மையான ஆய்வு என்றால் என்னவென நான் புரிந்து கொள்ள,  வாழ்விற்கு பொருள் புரிய ஆரம்பித்தது. வள்ளுவன் சொல்லும்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்பதுதான் ஆய்வின் சூத்திரம்.

இது எல்லாத்துறைக்கும் பொருந்தும்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...