0,00 INR

No products in the cart.

பிரதமர் வருகையால் தமிழ் நாட்டிற்கு என்ன  பயன்?

? பிரதமர் வருகையால் தமிழ் நாட்டிற்கு என்ன  பயன்?
– ஜோஷ், அயன்புரம்

! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி ஜெயலலிதாவால் கிடப்பில் போடப்பட்ட மதுராந்தகம் துறைமுகம் சாலை திட்டம் உயிர் பெற்றிருக்கிறது.  எப்போது முடியுமோ? இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகளை விழுங்கப் போகிறதோ தெரியாது.

போதிய நிதி ஒதுக்காததால் 12 ஆண்டுகளில் “வேகமாக” (ஓர் ஆண்டுக்கு 6 கி.மீ.,) முடிக்கப்பட்ட  75 கி.மீ., மீட்டர் கேஜ் ரயில்பாதை பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.  பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமல் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும்விட தமிழக  பா.ஜ.க.விற்கு தன் தொண்டர் பலத்தையும் அதைக் காட்ட செலவழிக்க பணமிருப்பதையும் காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ளும்  வாய்ப்பும்,   ஆளும்கட்சி  தி.மு.க.விற்கு  கடிதங்களிலும்  மனுக்களிலும் ஒன்றிய அரசுக்கு சொன்ன விஷயங்களை மக்கள் முன்னிலையில் பிரதமரிடம் சொல்லும் வாய்ப்பும்தான்  கிடைத்த மிகப்பெரிய பயன்கள்.

? தன்னம்பிக்கைக்கு  எடுத்துக்காட்டாக யாரைச் சொல்லுவீர்கள்?
– கலைச்செல்வி, விருதுநகர்

! இந்தப் படத்திலிருக்கும் நபரைத்தான்.

? திராவிட மாடல் என்றால் என்ன?
– கண்ணன், பாளையங்கோட்டை

‘மாடல்‘ என்ற  ஆங்கிலச் சொல்லுக்கு பலவிதமான பொருள் உண்டு. அதில் ஒன்று முன் மாதிரி.  தி.மு.க. சொல்லும் திராவிட மாடலுக்கு முன் மாதிரிகள் எதையும் அவர்கள் காட்டவில்லை.  இவர்களே அதை உருவாக்கி கொண்டிருப்பதாக புரிந்துகொண்டால் அதற்கான விளக்க குறிப்பை கட்சி வெளியிட வேண்டும்.  ஏனென்றால் ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் வெவ்வேறு விளக்கங்களைச் சொல்லுகிறார்கள். இப்போதைக்கு நமக்கு புரிந்ததெல்லாம்  இது பா.ஜ.க.விற்கு அலர்ஜியான ஒரு வார்த்தை.

? சென்னையில், தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் நடவடிக்கையை மாநகராட்சி துவங்கியுள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
– இரா. அருண்குமார், வாணரப்பேட்டை, புதுச்சேரி

! தெரு பெயரில் ஜாதியை ஒழிப்பதன் மூலம் எதையுமே சாதிக்க முடியாது. மேலும் சில வருஷங்களுக்கு முன் நடத்தபட்ட செயல் இது.
இது. டி. டி. கிருஷ்ணமாச்சாரி ரோடு கிருஷ்ணமா சாலை ஆனது மாதிரி காமெடிகள்தான் அரங்கேறினவே ஒழிய அத்தோடு ஜாதி ஒழிந்து விடவில்லை.

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் எந்தத் தொகுதியில் எந்த ஜாதிக்காரர்கள் அதிகமோ அந்த ஜாதி வேட்பாளர்களை நிறுத்துவதை ஒழிக்க வேண்டும். ஜாதிச் சங்கங்கள், ஜாதி கட்சிகள் தடை செய்யப் படவேண்டும். அடுத்து ஜாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை விலக்கிக் கொள்ள வேண்டும். இதையும் எந்தக் கட்சி வந்தாலும் செய்யாது. செய்யவும் முடியாது. என்ற நிலையில் தெருப்பெயர் எழுதிய போர்டுகளை மட்டும் மாற்றி என்ன பயன்?

? பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய இலங்கையை வசதியான நாடுகள் தத்தெடுத்துக்கொள்ள முன் வந்தால் ?
– ஆர். ஹரிகோபி, புது டெல்லி

! பொருளாதாரத்தில்  நலிந்த  நாடுகளை வசதியான நாடுகள் தத்தெடுக்கும் முறை அனுமதிக்கப்படுமானால்  வல்லரசுகள் வல்லூறுகளாக மாறி உலக நாடுகளை பங்கு போட்டுக்கொண்டுவிடும்.

இலங்கையை போல நலிந்த நாடுகள்  வீழ்ச்சியிலிருந்த மீண்டிருக்கின்றன. நல்ல திறமையான நிர்வாகமும் கட்டுபாடுகளும் இம்மாதிரி நாடுகள்  காப்பாற்றப்பட்டிருப்பதை வரலாறு நமக்குச்சொல்லுகிறது.

? “நிச்சயமாக மோடியை நேருவுடன் ஒப்பிடமுடியாது; ஏனெனில் நாட்டை வலிமையாக்கியதே மோடி தான்” என்று பசவராஜ் பொம்மை பேசியிருப்பது பற்றி…?
– கி. சோழராஜன், புதுச்சேரி

! 58 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு பிரதமரை இன்றைய பிரதமருடன் ஒப்பிடுவதே அபத்தம். அதைவிட அபத்தம் இன்றைய பிரதமர்  நாட்டை வலிமையாக்கியிருப்பதாக சொல்லுவது.

? “பெரியாரை பின்பற்றுபவர்கள் மட்டும் திராவிடர்கள் அல்ல… அம்பேத்கரும் திராவிடரே” என்று திருமாவளவன் பேசியிருப்பது பற்றி… ?
– எஸ். இராமதாஸ், திருச்சி

மஹாத்மா காந்தியை விட்டுவிட்டாரே !

? “குஜராத் மாடல் வளர்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பார்க்கிறது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக் கிறாரே… ?
– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி – 605001

! உண்மைதான். இந்த குஜராத் மாடல் தானே ஒன்றிய அரசின் GST ஆதார் திட்டங்களை எதிர்த்தது?  “காஸ் மானியத்தை உயர்த்த வேண்டும், எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும்,  மாநிலங்களில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் ஆட்சியில்  குரல் எழுப்பியது…  அதையெல்லாம்  எவ்வளவு எளிதாக மறந்துவிட்டது” என்று தான்  நாடே ஆச்சரியமாகப் பார்க்கிறது.

? “ஊழல் செய்வதில் முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் !” என்று இபிஎஸ் விமர்சித்துள்ளாரே…?
– எம். நிர்மலா, புதுச்சேரி 

! இந்தியாவிலேயே ஊழல்  குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்ற   அவருடைய கட்சி முதல்வரை மறந்துவிட்டாரோ?

? “வீர் சாவர்க்கரைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகவும் பயந்தனர்” என்று யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது பற்றி… ?
– ஜெ. கிருஷ்ணதேவு, மதுரை

! சரித்திரத்தை திருத்தி எழுதுவது என்பது இதுதான். கொஞ்சம் பொறுங்கள் அதனால்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். காங்கிரஸ் கட்சி  ஒன்றும் சுதந்திரத்துக்காக போராட வில்லை என்று சொல்லுவார்கள்.

? சின்னவருக்கு மகுடம் சூட்டும் விழாவில் பா.ம.க. ராமதாஸ், நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கடிந்து கொள்வதை கவனித்தீர்களா?
– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

! மருத்துவர் இதில் மட்டுமில்லை, எல்லா கட்சித்தொண்டர்கள்  கூட்டத்திலும் இப்படி விளாசுவார்.  அவரைப்பொறுத்த வரையில் எல்லா தோல்விகளுக்கும் தொண்டர்கள் மட்டுமே காரணம் தலைவர்கள் இல்லை.

? “தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பற்றி…?
– எம். பானுமதி, மாங்குப்பம்,  கெங்கராம்பாளையம்

! தமிழக ஆளுநர்  ஒன்றிய அரசின் “கல்வி  கொள்கைபரப்புச் செயலாளர்” போல்  எல்லா இடங்களிலும் பேசி வருகிறார்.  அதன் உச்சம் “தமிழக அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் கொள்கை விளக்க குறிப்பைப் படிக்கவே இல்லை” என்ற விமர்சனம்தான். ஒரு விற்பனையாளன் போல இப்போது தயவு செய்து என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.  ஒன்றிய அரசு ஒரு கொள்கையை நாடு தழுவிய அளவில்  கொண்டு வருவதை ஏற்பதும் மறுப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. மக்களை அதை ஏற்கச் செய்ய கெஞ்சுவது  ஆளுநரின் பணியில்லை.

? சிண்டு முடிவதில் முன்னணி ஆண்களா? பெண்களா சார்?
– நெல்லை குரலோன், பொட்டல் புதூர்

! இம்மாதிரி கேள்விகளை கேட்டு  அதைச் செய்பவர்கள்தான் முன்னணியில் இருப்பார்கள்.

? பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்
விஜய் சிங்லா ஊழலில் ஈடுபட்டதாக  கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
– விஜய் கிருஷ்ணன், பெரம்பலூர்

! பாராட்டுக்குரிய செயல்.  இம்மாதிரி செயல்கள்தான் மக்களுக்கு லஞ்சத்தை எதிர்த்துப் போராட துணிவையும் அரசியல்வாதிகளுக்கு பயத்தையும் ஏற்படுத்தும்.

? “தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து, தலைநகரம் கொலைநகரமாக மாறியிருக்கிறது” என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பற்றி….
– எம். நிர்மலா இராமதாஸ், ரங்கநாதபுரம்,

! கடந்த சில ஆண்டுகளைவிட அதிகரித்துக்கொண்டிருப்பது உண்மைதான். பல குற்றங்கள், குடும்ப தகராறு, சொத்துக்கான சண்டை, கடன் விவகாரம் தகாத உறவு போன்றவற்றின்  விளைவாக நிகழ்கிறது.  இம்மாதிரி  தனிநபர்களின் கிரிமினல் குற்றங்களுக்கு அரசை குற்றம் சாட்ட முடியாது. இம்மாதிரி குற்றங்கள் தமிழ் நாட்டிலும் பிறமாநிலங்களிலும் முன்னரும் நடந்திருக்கிறது.  சகிப்புத்தன்மை இல்லாமை, பழி வாங்கும் உணர்வு மக்களிடம் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான் காரணம்.

? “குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை” என்று பிரதமர் மோடி பேசியிருப்பது பற்றி…
– ராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம்,

!  அவருடைய கட்சியில் அவருடைய கட்சியிலிருக்கும்  உறுப்பினர்களின் வாரிசுகளை  கட்சியிலிருந்து விலக்கி இளைஞர்களுக்கு வாய்ப்பு  கொடுக்கட்டுமே?

? எந்த சார்பும் இல்லாத அரசியல் அறிஞர் பெருமக்கள் ஒருங்கிணைந்த அமைப்பு சாத்தியமா?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! அரசியல் அறிஞர்கள் என்கிறீர்கள்!  ஒருங்கிணைந்து என்கிறீர்கள்? முரணாக இருக்கிறதே.  அரசியல் என்றாலே கொள்கையளவில் ஒரு சார்பு நிலைதானே. நீண்ட நாட்களுக்கு முன் இங்கிலாந்தில்  கட்சி சார்பற்ற அறிஞர் குழு ஒன்று இயங்கி வந்தது. பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் நீதிபதிகள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அது. இங்கிலாந்து   நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்யும். தொடக்க காலங்களில் மக்களின் வாவேற்பை பெற்ற இது காலப்போக்கில் காணாமல் போனது. காரணம்.  அரசியல். இதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. அரசியல் என்பது அறிவு ஜீவிகளாலும் புரிந்து கொள்ளமுடியாத விஷயம்.

 

1 COMMENT

 1. கல்கி 3.6.22

  பதினேழு கேள்விகளுக்கும் தராசார் தந்துள்ள பதில்கள் வாசகர்களுக்கு தெளிவை தந்திருப்பதோடு நாட்டின் மீதுள்ள அக்கறையும் பிரதிபலிக்கிறது. தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக யாரை கூறலாம் என்பதற்கு , இருசக்கர வாகனத்தில ஒன்பது பைகளில காய்கறிகளை எடுத்துக்கொண்டு செல்லும் சாமானிய வியாபாரியின் படத்தை போட்டு ‘இவரே’ என்று தராசார் கூறியுள்ளது ‘உழைப்பே உயர்வு’ என்பதை வெளிப்படுத்துகிறது. ‘திராவிடர் என்பதில் மகாத்மா காந்தியையும் விட்டுவிட்டார்களே’ என்பதில் தராசார் நக்கல் வெளுத்துக் கட்டுகிறது. போகிற போக்கில்
  லெனின், காரல் மார்க்ஸ்,
  பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா கூட திராவிடர்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதியை எடுப்பதால் மட்டும் ஜாதிகளை ஒழித்து விட முடியாது.
  ஜாதி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, ஜாதி கட்சிகள். ஜாதி சங்கள், ஜாதி அடிப்படையில் வேலைகள் வழங்குவதில் சலுகை காட்டுவது இத்தனையும் இருக்கும் வரை ஜாதிகளை ஒழிக்க முடியாது என்பதை தராசார் கூறியுள்ளதை இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள, மனிதனை மனிதாக நேசிக்கிற யாரும் மறுக்க முடியாது. பாரதியின் சிந்தனைகள் இங்கே வேர்விட்டு ஒங்கி நிற்பதை தராசார் நிருபிக்கிறார்.

  ஆ.மாடக்கண்ணு
  பாப்பான்குளம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

0
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...