0,00 INR

No products in the cart.

பகல் வேஷம்

சுஜாதா தேசிகன்                                               

 

“கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற அந்தக் கால சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுக்கவில்லை” என்று போன வாரம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். யூடியூப்பில் ஏதோ பார்த்துக்கொண்டு இருந்த போது கே.பி. இயக்கிய ’எதிரொலி’ படத்தில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார் என்று அறிந்து அதைத் தேடிக் கண்டுகளித்தேன்.

அதில் சிவாஜி மிக நேர்மையானவர். தன் குழந்தை பிறந்த நாள் பரிசாக ஆத்திச்சூடி போல ஏழு கட்டளைகள் அடங்கிய படத்தைக் கொடுப்பார். அதில் பொய் சொல்லாதே, திருடாதே… என்று ஒரு பட்டியல்.

சந்தர்ப்பச் சூழ்நிலைக் காரணமாக சிவாஜி ஒரு தப்பு செய்ய, அதை மறைக்க பல பொய்கள் என்று முன்பு அவர் கொடுத்த அறிவுரை ஒவ்வொன்றாக மீறிக்கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் வீட்டைச் சோதனை போட வேண்டும் என்று காவலர்கள் வந்து நிற்பார்கள். சிவாஜி கதிகலங்கிகலங்கிகலங்கிய (அவர் நடிப்பு அப்படி) நேரம் அந்தக் காவலர்கள் “சாமி நாங்கள் பகல் வேஷக்காரர்கள். நேற்று சாமியார் வேஷம் போட்டோம், இன்று போலீஸ் வேஷம்… ஏதாவது இனாம் கொடுங்க” என்று வாங்கிக்கொண்டு போவார்கள்.

‘பகல்வேஷம்’ என்பது ‘நல்லவர் போல் நடித்தல்’ என்ற பொருளில் மட்டுமே இன்று உபயோகப்படுத்தப்படுகிறது. ‘பகல் வேஷம்’  ஒரு கலையாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது.  புராண இதிகாச கதாபாத்திரங்களாக வேடம் தரித்து பகலில் தெருத்தெருவாகச் சென்று பாடிக்கொண்டு, கொடுக்கும் பொருளை வாங்கிக்கொண்டு செல்வார்கள். மன்னர்கள் இவர்களை ஒற்றர்களாக பயன்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள். இதை நன்றாக ஆராய்ந்தால் ஒரு சரித்திர நாவல் கூட எழுதலாம். தெருக்கூத்து இரவில் விடிய விடிய ஒரே இடத்தில் தியேட்டரில் சினிமா போல நடைபெறும், பகல் வேஷம் இன்றைய ’ஓடிடி’ போன்று வீட்டு வாசலுக்கே  வந்துவிடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு நாள் காலை ராம கானம் கேட்டது. ’அனுமாரைத் தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும்’ என்று வாசலுக்கு வந்து பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார்.

உற்று நோக்கினேன் காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, மினுக்கி காகிதம், கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை சாயம்… அனுமார் பாடி முடித்து,  கொடுத்த காசை வாங்கிக்கொண்டு சென்றார்.

அவர் அடுத்த வீட்டுக்குச் சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. குரல் வந்த திசையை நோக்கிச் சென்றேன். ஒரு தெருவில் ’கண்டேன் ஆஞ்சநேயரை’ என்று கண்டுபிடித்து அவரிடம் பேசினேன்.

உங்கள் சொந்த ஊர் எது?
“சொந்த ஊர் கர்நாடகா.”

பிறகு சென்னையில்?
“ஒவ்வொரு வருஷம் ஓர் ஊர். இந்த முறை சென்னை, சென்னையைச் சுற்றிப் பல ஊர்கள், பிறகு மதுரை, திருநெல்வேலி இப்படி…”

எந்தெந்த ஊருக்கெல்லாம் போயிருக்கீங்க?
“எல்லா ஊர்களுக்கும் போயிருக்கிறேன். ஆந்திரா, மதுரா, குஜராத் ஏன் காஷ்மீருக்குக் கூடப் போயிருக்கிறேன்.”

 குரல் நல்லா இருக்கு… பாட்டு எங்கே கத்துக்கிட்டீங்க?
“கொஞ்சம் வெட்கப்பட்டு… எங்க அப்பாகிட்ட.”

இந்த வேஷம்?
“இது எங்க குலத்தொழில். ‘பகல் வேஷம்’ என்பார்கள். குலத் தொழில் என்பதால் விடாமல் செய்கிறேன்.”

வருமானம்?
“எங்களுக்கு விவசாயம். ஊரில் வீடு, 80 ஏக்கர் நிலம் இருக்கு. ஒன்றும் கஷ்டம் இல்லை.”

அவர் செல்லும் இடங்கள் எல்லாம் நாய்கள் அவரை சூழ்ந்து குலைக்கிறது. நாம் இவர்களைப் பார்க்கும் போது ஏதோ பிச்சை எடுக்க வருபவர்கள் போல துரத்திவிடுகிறோம்.

இது அவர்களின் குலத் தொழில்!

1 COMMENT

  1. ஆம்! நான் இவர்களைப் பார்க்கும் போது என்னையறியாமல் கையெடுத்துக் கும்பிடுவேன் ஆஞ்சநேயராக வணங்கி!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

1968ல் வந்த கல்கி தீபாவளி மலர் மூவாயிரம் ரூபாய் !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சில மாதங்கள் முன் பழைய புத்தகம் ஒன்றைத் தேடிய போது ஒருவர் ‘பழைய புத்தகங்களுக்கு என்றே ஒரு வாட்ஸ் ஆப்’ குழு இருக்கிறது, அதில் முயற்சி செய்யுங்களேன்” என்றார்....

பத்து விஷயம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் என் பள்ளி நண்பர்கள் சிலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து தினமும் சினிமா, நகைச்சுவை என்று சிறுவயதில் பேசிக்கொள்வது போலப் பேசிக்கொண்டு இருப்போம். சென்ற வாரம் ராக்கெட்டரி படமும், ராக்கெட்...

ராக்கெட்ரி சமாசாரம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தைப் பார்க்க நானும் என் பையனும் சென்றோம். எப்படிப்பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன்...