0,00 INR

No products in the cart.

முற்பகல்

சிறுகதை
மலர்மதி
ஓவியம் : தமிழ்

 

ளைஞன் பாஸ்கர் அந்த தெருவுக்கே தாதாவாக விளங்கினான். ‘தாதா’ என்றதும் வேறு மாதிரியாக எண்ணிவிட வேண்டாம். சுறுசுறுப்பான, துடிப்புள்ள, அடாவடித்தனமான இளைஞன்தான் பாஸ்கர்.

தெருவின் மத்தியில் மரக்கடையை ஒட்டினாற்போல் இருந்த குழாயடியில் தெருப் பெண்கள் தண்ணீர் பிடிக்க முண்டியடிப்பார்கள். பாஸ்கர்தான் தலையிட்டு அவர்களை ஒழுங்குப்படுத்துவான். ஆனால், எவ்வளவுத்தான் அவன் தாமதமாக வந்தாலும், அவனுக்கு முதலில் தண்ணீர் பிடிக்க எல்லோரும் விலகி வழிவிடவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

றுபதுகளின் ஆரம்பத்திலிருந்து எழுபதுகளின் ஒரு சில ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தை ஹிந்திப் படங்களின் பொற்காலமெனலாம். திலீப்குமாரிலிருந்து ஆரம்பித்து ஷம்மி கபூர், ராஜேஷ்கன்னா என்று வெவ்வேறு ஹீரோக்கள் ரசிகர்களின் இதயங்களில் ஆட்சிப் புரிந்தக் காலம் அது. இடையில் தேவ்ஆனந்த், தர்மேந்திரா, ஜிதேந்திரா, பிஸ்வஜீத், ஜாய்முகர்ஜி, ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மனோஜ்குமார் போன்ற நடிகர்களும் புகுந்து கலக்கியதுண்டு.

உருது பேசும் மக்கள் அதிகம் என்பதால் குடியாத்தத்தில் ஹிந்திப் படங்கள் அதிகம் திரையிடுவார்கள். அப்போது லக்ஷ்மி, ஜெயலக்ஷ்மி, புவனேஸ்வரி என்ற மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தன. போதாக் குறைக்கு சீவூர் சித்தூர் கேட்டில் பாரதி டாக்கீஸ் என்றொரு டெண்ட் கொட்டாய் இருந்தது. பிற்பாடு சரவணா, முருகன் என்ற இரண்டு புதிய தியேட்டர்களும் முளைத்தன. ஏதாவது ஒரு தியேட்டரில் கண்டிப்பாக ஒரு ஹிந்திப் படம் ஓடிக்கொண்டு இருக்கும். அதிலும் ஷம்மி கபூர் படம் என்றால் கேட்கவே வேண்டாம். குடியாத்தம் நகரமே குலுங்கும். அப்படி ஒரு வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருந்தது.

குடியாத்தத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம். அவர்களுக்கான ஒரே பொழுது போக்கு ஹிந்திப் படங்கள்தான். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது இடையில் அவர்கள் அடிக்கும் பொருத்தமான கமெண்ட்ஸ் தியேட்டரையே குலுங்க வைக்கும். அது ஒரு தனி சுகம்.

ஹிந்திப் படங்களைக் கொண்டு வந்து திரையிடுபவர் யாரென்றால் பாஸ்கருடைய சித்தப்பா தாமோதரன்தான். அப்போதெல்லாம் ஹிந்திப் பட வினியோகஸ்தர்கள் பெங்களூரில்தான் அதிகம் இருந்தார்கள். அதனால் தாமோதரன் அடிக்கடி பெங்களூர் போய் படங்களை புக் பண்ணிவிட்டு வருவார். படப் பெட்டி சரியாக பெங்களூரிலிருந்து ரெயில் வண்டியில் ஏற்றப்பட்டு குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இறக்கப்படும். எப்போதும் படம் வெளியாகும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக பெட்டி வந்து சேர்ந்துவிடும்.

வழக்கம்போல் தாமோதரன் ராஜேஷ்கன்னாவின் ‘துஷ்மன்’ படத்தை புக் பண்ணிவிட்டு பெங்களூரிலிருந்து திரும்பினார்.

படத்தைத் திரையிட தியேட்டரைத் தேடியபோது பாரதி டாக்கீஸ்தான் கிடைத்தது. வசூலில் 40 சவீதம் தாமோதரனுக்கும், 60 சதவீதம் தியேட்டர் ஓனருக்கும் என்று பேசி முடிவாகியது.

ஒரு நாள் முன்னதாக வரும் படப்பெட்டி ஏனோ அன்று வரவில்லை. உடனே தாமோதரன் பெங்களூருக்கு ட்ரங்கால் புக் பண்ணி வினியோகஸ்தரிடம் பேசினார். வேறு தியேட்டரிலிருந்து வரவேண்டியப் பெட்டி தாமதமாகிவிட்டதால் அனுப்பமுடியவில்லையென்றும் நாளை காலை கண்டிப்பாக பெட்டி வந்து சேர்ந்துவிடுமென்றும் பதில் கிடைத்தது. திரையிடப்படுவது டூரிங் டாக்கீஸ் என்பதால் முதல் காட்சி மாலை ஆறு மணிக்குத்தானே என்று சற்றே ஆறுதல் அடைந்தாலும் உள்ளூர ஒரு கிலி தொற்றிக்கொண்டது தாமோதரனுக்கு.

கவலையுடன் உட்கார்ந்திருந்தவரை நெருங்கினான் பாஸ்கர்.

“என்ன சித்தப்பு… ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?”

“இல்லேப்பா…” என்றவர் விஷயத்தைச் சொன்னார்.

“அதுக்கு ஏன் இப்படி இடிஞ்சுப் போயிட்டீங்க? நான் எதுக்கு இருக்கேன்? நான் போய் பொட்டிய கொண்டாந்துடறேன்.”

“நீயா? நீ எப்படிப் போவே?”

“என்ன சித்தப்பு நீங்க? இன்னைக்கு நைட் 12.30 க்கு குடியாத்தம் பஸ் ஸ்டேண்டிலிருந்து கெளம்பற பெங்களூர் பஸ்ல ஏறினா நாளைக்கு காலைல பெங்களூர்ல இருப்பேன். உடனே பொட்டிய வாங்கிட்டுத் திரும்பிடமாட்டேன்?”

பாஸ்கருடைய அசாத்திய துணிச்சலைக் கண்டு மலைத்துப்போனார் தாமோதரன். இவன் அசகாய சூரன்தான்… செஞ்சாலும் செய்வான்.

வினியோகஸ்தருக்கு ஒரு கடிதம் எழுதி பாஸ்கரிடம் கொடுத்து போதிய பணமும் அவன் கையில் திணித்து அவனை பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பியபோதுதான் சற்று நிம்மதியாக இருந்தது தாமோதரனுக்கு.

று நாள்.

நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி, மாட்டு வண்டியில் பேனர்கள் கட்டி தெருத் தெருவாக நோட்டீஸ்கள் வினியோகித்து விளம்பரப்படுத்தினார்கள்.

நேரம் ‘மள மள’வென ஓடியது.

காலையில் பெட்டியை வாங்கிக்கொண்டுக் கிளம்பினாலும், எப்படியாவது மதியம் மூன்று அல்லது நான்கு மணிக்குள் வந்துவிடவேண்டும். நேரம் இப்போது நாலரை. பயலைக் காணோமே?

தாமோதரன் டென்ஷனானார்.

மாலை சரியாக ஐந்தரை மணிக்கு டிக்கெட் கொடுத்து முதல் காட்சியை ஆறு மணிக்கு ஆரம்பிப்பது வழக்கம்.

ஐந்து மணிவாக்கில் தியேட்டருக்குப் போனார்.

ஐந்தரை ஆகியும் பாஸ்கரை காணோம்.

ரசிகர் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.

“என்ன தாமோதரா, பொட்டியக் காணோம்?” என்று தியேட்டர் ஓனர் கேட்க, “வந்துடும். கவலைப்படாதீங்க” என்றார் தாமோதரன். வெளிக்குத்தான் அவ்வாறு சொன்னாரே தவிர உள்ளூர ஒரு உதறல் இருக்கத்தான் செய்தது.

அந்தக் காலத்தில் செல்ஃபோன் போன்ற சாதனங்கள் கிடையாது. பாஸ்கரிடம் எப்படி தொடர்பு கொண்டு பேசுவது என்று புரியாமல் தவிக்க ஆரம்பித்துவிட்டார் தாமோதரன்.

தியேட்டர் ஓனர் வேறு அடிக்கடி வெளியே டிக்கெட் வாங்க நெருக்கித் தள்ளும் கூட்டத்தைப் பார்ப்பதும் தாமோதரனிடம் வந்து கேட்பதுமாக இருந்தார். தாமோதரனும் மெயின் ரோடுக்கும், தியேட்டருக்குமாய் அலைந்துக்கொண்டிருந்தார்.

மாலை 5.45.

“டிக்கெட் கொடுத்துடுங்க. அப்பவாவது ஜனங்க கொஞ்சம் அடங்கி இருப்பாங்க” என்றார் தாமோதரன்

“ஒரு வேளை பொட்டி வரலைன்னு வை. ஆத்திரத்துல ஜனங்க ஸ்கிரீனைக் கிழிச்சிடுவாங்க, தெரிஞ்சுக்க…” என்று பயமுறுத்தினார் ஓனர்.

“அப்படி ஒண்ணும் ஆகாது. நான் பார்த்துக்கறேன். நீங்க டிக்கெட் கொடுங்க.”

“நீ கியாரண்டி தர்றதனால கொடுக்கிறேன். நீதான் பொறுப்பு.”

சொன்னவர் டிக்கெட் கொடுக்க மணி அடித்தார்.

ரசிகர்களிடமிருந்து அப்போதே விசில் சத்தம் கிளம்பியது.

டப்பெட்டியை வாங்கிக்கொண்டு பெங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறினான் பாஸ்கர். இதை விட்டால் வேறு வண்டி கிடையாது. இதில் சிக்கல் என்னவென்றால், பெங்களூர் எக்ஸ்பிரஸ் குடியாத்தம் ஸ்டேஷனில் நிற்காது. அடுத்த ஸ்டேஷன் காட்பாடிதான்.

காட்பாடியிலிருந்து குடியாத்தம் வர எப்படியும் ஒரு மணி நேரம் பயணிக்கவேண்டும். அப்படிப் பார்த்தால் இரவு எட்டாகிவிடும். முதல் காட்சியை எப்படி ஓட்டுவது?

தீவிரமாக யோசித்த பாஸ்கரின் மூளையில் ஒரு ஐடியா உதயமாயிற்று. நடப்பது நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று துணிந்துவிட்டான்.

ரயில் குடியாத்தம் ஸ்டேஷனைக் கடக்க பத்து நிமிடங்கள் இருக்கும்போது படப் பெட்டியைத் தள்ளி படியருகே வைத்துவிட்டு நிமிர்ந்தான். நல்ல வேளை அவன் ஏறிய பெட்டியில் அவ்வளவாக ஆட்கள் இல்லை.

ஸ்டேஷன் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு ‘சரக்’கென செயினைப் பிடித்து இழுத்தான்.

வேகமாகப் போய்க்கொண்டிருந்த வண்டி வேகம் குறைந்து கிரீச்சிட்டு நின்றது.

அவ்வளவுத்தான்.

பாஸ்கர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. பெட்டியைத் தூக்கி வீசிவிட்டு குதித்தான். பெட்டியை அருகில் இருந்த செடிகளில் மறைத்துவிட்டு ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த சைக்கிள் கடையில் வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தான். படப் பெட்டியைத் தூக்கி சைக்கிள் பின்னாடி வைத்துக்கொண்டு ‘மாங்கு,மாங்கு’ வென மிதிக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டியாகப் பார்த்துக்கொண்டே வருவதைக் கண்டு உள்ளூர சிரித்தவாறே சைக்கிளின் வேகத்தைக் கூட்டினான்.

மாலை சரியாக ஆறு மணிக்கு தியேட்டரை அடைந்துவிட்டான் பாஸ்கர்.

அவனைப் பெட்டியுடன் பார்த்த தாமோதரனுக்கு தெம்பு வந்தது.

“பாஸ்கரா, கொக்கா?” என்றார் பெருமையுடன்.

ஒரு வழியாக 06.30 க்கு படம் ஆரம்பமானது.

முடியாது’, ‘இல்லை’, ‘கஷ்டம்’ போன்ற வார்த்தைகளே கிடையாது பாஸ்கரின் அகராதியில். எந்த விஷயத்திலும் தாமதிக்கமாட்டான். நினைத்தால் உடனே காரியத்தில் இறங்குவதுதான் அவன் பாலிஸி.

பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் முடித்த அவனுக்கு உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை. துபாய்க்கு போனால் நிறைய சம்பாதிக்கலாம் என்று நண்பர்கள் சிலர் உசுப்பேற்ற அதையும்தான் பார்த்துவிடலாமே என்று இறங்கிவிட்டான் பாஸ்கர்.

ஏஜெண்ட் மூலம் பணத்தைச் செலுத்தி, எல்லா சான்றிதழ்களையும், பாஸ்போர்ட்டையும் சமர்ப்பித்தான்.

“இதோ பாருங்க… வருகிற ஆறாந்தேதி சென்னையில் சம்பந்தப்பட்ட கம்பெனியின் அதிகாரிகள் இன்டர்வியூவுக்காக வரப்போறாங்க. அப்போது ஒரிஜினல் சர்டிஃபிகேட்களோடு சரியான நேரத்துக்கு நாங்க சொல்ற இடத்துக்கு ஆஜராகிடணும். தாமதித்தால் அவ்வளவுத்தான். அவங்க யாருக்காகவும் காத்திருக்கமாட்டாங்க. வந்தவர்களில் சிலரை செலெக்ட் செய்து அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரைக் கொடுத்துவிட்டுப் போயிட்டே இருப்பாங்க. அதனால, சொன்ன நேரத்துக்கு முன்பாக ஆஜராகி இன்டர்வியூவை அட்டண்டு பண்ணுங்க. தவறவிட்டால், நாங்க பொறுப்பு இல்லை. அதோடு நீங்க கொடுத்த அட்வான்ஸ் பணமும் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்காது. நல்லா புரிஞ்சிக்குங்க.” என்று கறாராகச் சொல்லிவிட்டார் ஏஜெண்ட்.

தேதி ஆறு.

விடியற்காலை ஐந்து மணி பஸ்ஸைப் பிடித்து காட்பாடி ஜங்ஷனில் இறங்கிக்கொண்டால் போதும், அங்கிருந்து எக்ஸ்பிரஸில் சென்னையை அடைந்து இன்டர்வியூ நடக்கும் ஹோட்டலுக்குப் போய் சேர சரியாக இருக்கும்.

திட்டமிட்டபடி அதிகாலை எழுந்து எல்லா தஸ்தாவேஜுகளையும் ஒரு சின்ன ப்ரீஃப்கேஸில் வைத்துக்கொண்டுப் புறப்பட்டான் பாஸ்கர்.

காட்பாடி ஜங்ஷனில் இறங்கியவன் டீக்கடையில் வடை ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு, டீ ஒன்றையும் குடித்துவிட்டுக் கிளம்பினான்.

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு காத்திருந்தான்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

அவசரமாய் ஏறிக்கொண்டான்.

அவன் ஏறிய பெட்டியில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.

ஜன்னலோர இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டான்.

ஒருவழியாக எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வேகமெடுத்தது.

அன்வர்திகான் பேட்டை என்ற இடத்தைக் கடந்துக்கொண்டிருக்கும்போது ரெயில் திடீரென வேகம் குறைந்து ‘கிரீச்’சிட்டு நின்றது.

“ஐயையோ… என்ன இது? பொட்டல் காடாய் இருக்கு. இங்கே ஏன் வண்டி      நின்னுடுச்சு?” என்று ஒருவர் கேட்க, “ஸிக்னல் ப்ராப்ளமா இருக்கும். கெளம்பிடும்” என்றார் இன்னொருவர்.

நீண்ட நேரமாகியும் ரெயில் கிளம்பாததால் டென்ஷனானான் பாஸ்கர்.

நேரம் பார்த்தான்.

‘இப்ப கிளம்பலைன்னா இன்டர்வியூ அட்டண்டு பண்றது கஷ்டம்தான்.’ – முதல் முறையாக பீதியடைந்தான்.

அரை மணி நேரமாகியும் ரயில் புறப்படும் அறிகுறி தெரியவில்லை.

சிலர் கீழே இறங்கி சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்.

மற்றும் சிலர் இஞ்சின் வரை சென்று டிரைவரிடம் பேசிவிட்டு வந்தனர்.

அவர்களிடம் விசாரித்தான் பாஸ்கர்.

“என்ன சார் ப்ராப்ளம்? வண்டி எப்ப கிளம்பும்?”

“சார்… யாரோ ஒருத்தன் செயின் பிடித்து இழுத்துட்டு இறங்கி ஓடிவிட்டிருக்கான். இனி மேலதிகாரிகள் வந்து பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்தால்தான் வண்டி நகரும். எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரமாகலாம்னு இஞ்சின் டிரைவர் சொல்றாரு.”

வாழ்க்கையில் முதல் முறையாக அடிபட்டவன்போல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் பாஸ்கர்.

 

2 COMMENTS

  1. வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்;
    முற்பகலில் செய்தது பிற்பகலில் விளைந்தது பாஸ்
    கரனுக்கு.

  2. சுவரில் எறியும் பந்து எறிந்த இடத்திற்கு மீள வந்து சேரும் . இத்தகைய நிலையை அறிவுறுத்திய க தை “முற்பகல்”
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

2
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...