0,00 INR

No products in the cart.

கருப்பு வெள்ளையில் வண்ண வண்ண கனவுகள்

– தனுஜா ஜெயராமன்

 

தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பாகி கொண்டிருந்த அக்காலத்தில் தொலைக்காட்சி பெட்டி வைத்திருப்பது என்பது பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே. அதுவும் கருப்பு , வெள்ளை தொலைக்காட்சிகளே அப்போது அதிகம் இருந்த காலம் . அதற்கு ஷட்டர் என்ற மூடிகள் உண்டு. அதன் நீண்ட ஆன்டெனாக்கள்  கம்பிகளோடு வீட்டின் மொட்டைமாடியில் வைக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் டெலிவிஷன் வைத்திருப்போர் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

டெலிவிஷன் வைத்திருக்கும் வீட்டு மனிதர்கள் பெருமிதத்துடன் பெருமையாக வலம்வருவார்கள். அந்த தெருவின் குழந்தைகள் அந்த வீட்டின் ஐன்னல் வழியாக ஒளிந்து கொண்டெல்லாம் அதனை ஆர்வமாக பார்ப்பர் . சில வீடுகளில் பத்துகாசுகளை வசூல் செய்து தொலைக்காட்சியில் திரைப்படங்களை காண செய்வதும் வழக்கத்தில் உண்டு.

தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருக்கும் வீட்டு பிள்ளைகளை ஸ்நேகம் பிடித்து வைத்துக்கொள்வது என்பது அவ்வப்போது நிகழ்ச்சிகளை ஓசியில் கண்டுகளிக்க பெரிதும் உதவும். பிள்ளைகளுக்குள் ஏதேனும் சண்டை வந்தாலும் “டிவி பார்க்க விடமாட்டேன் போ”…என்பதில் முடிந்துவிடும் பெரும் அபாயங்கள் உண்டு.

தெருப்பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஞாயிறு திரைப்படங்களை காண தொலைக்காட்சி பெட்டி இருக்கும் வீடுகளை தேடியலைவது வழக்கமான ஒன்று. பள்ளி விட்டு வரும் நாட்களில் சில வீடுகளில் புதிதாய் முளைத்த ஆன்டெனாக்களை கண்டு மனம் பரவசமாய் இருக்கும். தினமும் வீட்டு  மாடியில் நின்று கொண்டு கண்ணில் தெரியும் ஆன்டனாக்களை தோழிகளோடு எண்ணிக்கை பார்த்து விளையாடுவதும் உண்டு. நம் வீட்டிலும் என்றாவது இந்த ஆன்டெனா கம்பிகள் வராதா? என்ற ஏக்கம் இல்லாத பிள்ளைகள் குறைவு. அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது புதிய டிவி வாங்கி மாடியில் ஆன்டெனாவை பொருத்தும் போதே தெருப் பிள்ளைகள் ஒன்றுகூடி  “ஓ”வென கத்தி குதுகலிப்பார்கள். ஆன்டெனா பொருத்துவதே மிகப்பெரிய ப்ராபகண்டமாக இருக்கும். அவ்வீட்டு பிள்ளைகளுக்கோ மிகப்பெரிய கௌரவ பெருமிதமாக தோன்றும்.

தொலைக்காட்சி பெட்டியில் கலர் டி.வி.யின் வருகை சில வருடங்களுக்கு பிறகே…மிகப்பெரும் பணக்காரர்களே கலர் தொலைக்காட்சியினை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.  ஆன்டெனா கம்பிகளை வைத்தே அவர்களின் பொருளாதார சூழலை கண்டுபிடித்து விடலாம். ஆன்டெனாவில் நான்கு கம்பிகள் பொருத்தியிருந்தால் அது கருப்பு வெள்ளை தொலைக்காட்சி. அதில் எட்டு பத்து கம்பிகள் பொருத்தியதாக இருந்தால் அது கலர் தொலைக்காட்சி என்பதை ஆகப்பெரும் ஆராய்ச்சிகளுக்கு பிறகே கண்டுபிடித்திருந்தார்கள் அக்காலத்தைய பிள்ளைகள்.  டி.வி. வைத்திருக்கும் வீடுகளில்  திரைபடங்களை காண ஒரு பெருங்கூட்டமொன்று மையம் கொள்ளும்.

இப்போது போல பல நூறு சேனல்கள் இல்லாத காலகட்டத்தில் தூர்தர்ஷனே ஒற்றை ஜாம்பவான்.  ஆலையில்லாத ஊருக்கு எப்போதும் இலுப்பைப்பூவே சர்க்கரையாயிற்றே. தூர்தர்ஷனின் நிகழ்ச்சி நிரல் தொடங்கும்போது வரும் தீம்இசை அக்காலத்தில் மிகப்பிரபலமானவை. தூர்தர்ஷனின் லோகோ இன்றும் நம் நினைவில் காட்சியாய் இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதீத கட்டுப்பாடுகள் கொண்ட காலமது.  அப்போது வரும் ” வயலும் வாழ்வும் ” என்ற நிகழ்ச்சி கிராமங்களில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியே. கிராமங்களில் பஞ்சாயத்துக்கென்று அரசு வழங்கும் டி.வி.யை பொதுவெளியில் வைத்து ஒளிபரப்புவார்கள். கிராமமே ஒன்று கூடி அதிசயமாய் தொலைக்காட்சியை பார்ப்பதே பெரும் காட்சியாக இருக்கும்.

தூர்தர்ஷனின் நிகழ்ச்சிகள் “தடங்கலுக்கு வருந்துகிறோம் ” என்ற வாசகத்தின் நடுவே தான் நிகழ்ச்சிகளே இருக்கும். வெள்ளிக்கிழமை வரும் “ஒலியும் ஒளியும்” நிகழ்ச்சிகளுக்காக பலரும்  காத்துக்கொண்டிருப்பர். அதில் போடும் ஐந்து பாடல்களுக்கே தமது உயிரையும் தந்துவிடுவார்கள். இதை தவிர ஞாயிறு அன்று போடும் திரைப்படத்திற்காக வாரம் முழுவதும் தவம் கிடப்பார்கள். அன்று ஏதேனும் மிகப்பழைய திரைப்படங்களை ஒலிபரப்பிவிட்டால் மனம் மிகவும் ஏமாற்றமடையும். புதிய படங்களை ஒளிபரப்பினால் மனம் சட்டென குதுகலமடையும். மறுநாள் பள்ளியிலோ, கல்லூரியிலோ , அலுவலகத்திலோ ஞாயிறன்று ஒளிபரப்பிய திரைப்படங்கள் குறித்த பேச்சே பேசுபொருளாக இடம்பிடிக்கும்.

அப்போது  பிராந்திய ஒளிபரப்பில் ஞாயிறு மதியம் மாநில மொழி திரைப்படங்களின் வரிசைகள் இடம்பெறும். அதில் எப்போதாவது அத்திபூத்தாற்போல தமிழ்மொழி திரைப்படங்கள் ஒளிபரப்பும் நேரங்கள் மிகவும் அதிஷ்டகரமானவை.  பிள்ளைகளுக்கோ டபுள் டமாக்கா கிடைத்த குஷி,  பெரியவர்களுக்கு ஜாக்பாட் அடித்த சந்தோஷம்.

இன்று போல ஆயிரத்தெட்டு செய்தி சேனல்கள் இருபத்தி நான்கு மணிநேர ஒளிபரப்புகள் மற்றும் ப்ரேக்கிங் நியூஸ்களோ இல்லாத அக்காலத்தில் குறிப்பிட்ட அரைமணி நேரம் மட்டுமே செய்திகள் ஒளிபரப்பாகும். அந்த நேரத்தில் வீட்டு ஆண்கள் மிக சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு செய்திகளை கண்கொட்டாமல் பார்ப்பது வழக்கம்.

ஞாயின்று காலையில் வீட்டு பெரியவர்கள் தொலைக்காட்சி முன்பு தவமாய் தவம் கிடப்பது,  காலை நேரத்தில் ஒளிபரப்பாகும் இராமாயணம்,  மகாபாரதம் என்ற இருபெரும் ப்ரசித்திபெற்ற மெகா மகா இதிகாச நெடுந்தொடர்கள்.  “இது மகாபாரத கதை ” என்று இந்தியிலும், தமிழிலும் கேட்கும் கம்பீரமான குரலில் வரும் பாடல் இடம் பெறாத வீடுகளே கிடையாது எனலாம்.

ஏதோ ஒரு சுதந்திரதின நாளில் வெளியான “மிலே சுல் மேரா ஹமாரா” என்ற தேசபக்தி பாடல் இந்தியாவின் அத்துனை மொழி உச்ச நட்சத்திரங்களும் இடம்பெற்ற அந்த பாடல் மிகப்பிரபலமானவை.  பாடலின் கடைசியில் …மி..லே ..சுல் மேரா ஹமாரா…ஹோ….சூர்ருபனே ஹமாரா…என உச்சஸ்தாயில் ஒரு ஏற்று ஏற்றியிருப்பார் லதாமங்கேஷ்கர். அன்று அவர் தன் இனிய குரலில் பாடும் அந்த தேசபக்தி பாடல்  இன்னமும்  நமது நினைவு அடுக்குகளில் இனிமையாக கீறிவிட்டு செல்கிறது எனலாம்.

அக்காலத்தில் எதேனும் தலைவர்கள் மரணமடையும் நாட்களில் குறிப்பிட்ட நாட்கள் தொலைக்காட்சியில் சோககீதம் மட்டுமே ஒளிபரப்பாவது வழக்கம். அந்த நாட்கள் நாடும், வீடும் சோகமயமானதாக மாறிவிடும்.

இன்று லட்சக்கணக்கான விலையில் டெலிவிஷன்கள்  வீட்டு திரையில் நமது வரவேற்பறைகளை அலங்கரிக்கும் காலம் வந்துவிட்டது. ஆனால் அந்த கருப்பு, வெள்ளை நாட்களின் வண்ணமயமான காலங்கள் நம் வாழ்வை வசந்தமாக்கியது எனில் சற்றுமே மிகையில்லை. இன்று பலநூறு சேனல்களின் ஆதிக்கத்தில், பல்வேறு செயலிகளின் பிடியில் உலகம் நமது உள்ளங்கைகளில் வந்துவிட்டாலும் அந்த தூர்தர்ஷன் காலங்களே நம் மனதில் பசுமையாக நிற்கிறது.  தற்போது ஆயிரம் வகையான தொலைக்காட்சி பெட்டிகள் டிஜிட்டல் தரங்களில் வந்திருந்தாலும் நம் மனதை ஆக்ரமித்திருப்பதென்னவோ சாலிடர் மற்றும் டயனோராவின் கருப்பு வெள்ளை நிறங்களே.  அந்த கருப்பு வெள்ளையில் நமது எண்ணங்களோ கலர்கலராய் வண்ணம் விரித்து கிடந்தது என்பதே நிஜம்.. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் நமது அறிவில் புத்தியில் உறைத்தாலுமே இன்னமும் மனதில் தேங்கி கிடப்பது அந்த வண்ண வண்ணக்காலங்களே!!!

1 COMMENT

  1. அட்லாண்டா! தூர்தர்ஷன் ஆரம்ப தீம் இசை தம் செப்டெம்பர் தீமை விஞ்சி செவியில் நிலைக்குமே! கல்கி இரண்டையும் இளைய தலைமுறையினருக்கு யூடியூபில் போட்டு காட்டலாமே!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பேசும் சித்திரங்கள்

தனுஜா ஜெயராமன்   அண்மையில்  புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாரதியார் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு மாலதி செல்வம் அவர்களின் பாரதியார் ஓவியத்தை கண்டு வெகுவாக ரசித்து பாராட்டினார். தனது ஓவியக்கலை பணிகளுக்காக...

அதென்ன பெயர் 3.6.9 ?

நேர்காணல் ஜான்சன்   21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம்...

சிஎம் செல் அறிவிப்பு:  சீரியசா? ஸ்டன்ட்டா?

1
- எஸ். சந்திரமௌலி   அண்மையில் சிஎம் செல் என குறிப்பிடப்படும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகத்திலிருந்து பின்வரும்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி,  “பொது மக்கள் வீடு கட்டும்போது அதற்கான பிளான் ஒப்புதல்...

டிஜிட்டல் மோசடிகள்

0
வினோத்    இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில்  ரிசர் வங்கி  20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது.  இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது. ஃபிஷிங் இணைப்புகள் இந்த முறையில்,...

நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு

0
 - ஜான்ஸன்   அண்மையில்  லயோலா பொறியியில்   நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே. நீண்ட நாட்களுக்குப்...