0,00 INR

No products in the cart.

பசி

சிறுகதை

– கே. ஆனந்தன்                                             ஓவியம்: தமிழ்

 

வெள்ளிக்கிழமை…பஸ்ஸை விட்டு இறங்கிய நான், எங்கள் குல தெய்வமான அதிகாரப்பட்டி பூங்காவனத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்தேன். எங்கள் குல தெய்வம் அவள்.

உள்ளே அம்மனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த குருக்கள் என்னைப் பார்த்து ஸ்நேகத்துடன் புன்னகைத்தார். நான் வாங்கிக் கொண்டு போயிருந்த தேங்காய், பழம், பூ தட்டை வாங்கிக் கொண்டு கருவறைக்குப் போக, நான் அம்மனை நமஸ்கரிக்க ஆரம்பித்தேன்..

அன்று அம்மன் பச்சைப் புடைவையில் காட்சி தந்து கொண்டிருந்தாள்… கனிவான சிரிப்பு…தெய்வீகமான தோற்றம்… உடல் முழுவதும் நகை… அற்புதமான, மனதை மயக்கி நம்மை ஆட்கொண்டு விடும்படியான தோற்றம். ‘நான் இருக்கும்போது எதற்கப்பா உன் மனதில் கலக்கம்? எல்லாவற்றையும் என்னிடம் விட்டவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லும்படியான புன்னகை… தன்னை காண வருபவர்கள் அவர்களை மறந்து தன்னிடம் ஒப்புவித்துக்கொள்ள செய்யும் தோற்றம்.

மனம் உறுகி என்னை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, என் பிரார்த்தனைகளை எல்லாம் வேண்டிக் கொண்டு நின்றேன்.

குருக்கள் பூஜையை முடித்துவிட்டு தீபாராதனை தட்டுடன் முன்னால் நின்றிருந்தார். கற்பூர தீபத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு, குங்குமம், சந்தனம் எடுத்துக்கொண்டு, ஒரு ஐம்பது ரூபாய் தாளை தட்டில் போட்டுவிட்டு, அவர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன்.

மாதாமாதம் நான்காவது வெள்ளிக்கிழமை தவறினாலும் நான் அம்மன் கோயிலுக்குப் போவது தவறாது. என்னமோ தெரியவில்லை… அம்மன் கோயிலுக்கு போய், அம்மனை தரிசித்தால்தான் அந்த நாளே நிறைவுறும் எனக்கு. அப்படி நானும், அம்மனும் ஒன்றாய் சங்கமித்திருந்தோம். வெள்ளிக்கிழமை ஆனால் அம்மன் எனக்காக காத்திருப்பது போல தோன்றும்.

எங்கள் குடும்பத்துக்கு, ஏன்… எங்கள் வாழ்க்கைக்கே எல்லாமே இந்த அம்மாதான். எங்கள் குடும்பத்தில் நல்லது, கெட்டது எதுவுமே அவள் ஆசியோ, அருளோ, அனுமதியோ இல்லாமல் நடந்தது இல்லை. காலம்காலமாக நடந்து வருவது அது. ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்திக்கொண்டிருக்கிறோம்.

கல்யாணம் போன்ற எந்த நல்ல காரியத்துக்கும் இந்த கோயிலுக்கு வந்து அம்மாவின் முன் ஜாதகம் வைத்து அவள் அனுமதி கிடைத்தால்தான் மேற்கொண்டு பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கும்.

அதேபோல பத்திரிக்கை அடித்ததும் முதல் பத்திரிக்கை கோயிலுக்கு கொண்டு வந்து அம்மாவின் மடியில் வைத்து பூஜை செய்வோம். அம்மாவுக்கு அழைப்பு அது.

என் அப்பா காலத்திலிருந்து பின்பற்றக்கூடிய பழக்கம் இது. அப்போது மாதாமாதம் அப்பா வருவார். இப்போது நான்.

பிறந்த நாள், என் மனைவியின் பிறந்த நாள், எங்கள் கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்த நாள்,பு து வருடம், மற்ற விசேஷ நாட்களில் நாங்கள் குடும்பத்தோடு கோயிலுக்கு வருவோம்.

அதுதவிர, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தோடு வந்து அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு வழிபட்டுச் செல்வது உண்டு. மற்றபடி மாதாமாதம் நான் மட்டும் தனியாக வந்து சாமி கும்பிட்டுவிட்டு செல்வேன்.

கோயிலில் இருந்து நான் வசிக்கும் தர்மபுரிக்கு அறுபது, எழுபது கிலோமீட்டர் இருக்கும். பத்து மணிக்கு கிளம்பினால் கோயிலுக்கு வர பன்னிரெண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். தர்மபுரியில் இருந்து பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வந்து அங்கிருந்து அரூர் போகும் டவுன் பஸ்ஸோ, அல்லது மினி பஸ்ஸோ பிடித்து கோயிலுக்கு வர மணி பன்னிரெண்டரை ஆகிவிடும்.

வெளியில் வந்த நான் அங்கிருந்த அரசமரத்தடியில் அமர்ந்தேன். மதிய நேரம்… வீசிய குளிர்ந்த காற்று முகத்தில் அடித்தது. மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்தது.

“என்ன சார்… சாமி கும்பிட்டுட்டீங்களா?..”குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்… தேங்காய் விற்பவர்… நான் எப்போது கோயிலுக்கு வந்தாலும் அவரிடம்தான் தேங்காய், பழம் வாங்குவேன். நியாயமான விலை… பொருளும் தரமாக இருக்கும்… எப்போதும் கொஞ்ச நேரம் அவரிடம் பேசிவிட்டுதான் செல்வேன்.

பக்கத்திலேயே இரண்டு பூ கடைகள். சாமந்தி, மல்லி, எலுமிச்சை, சந்தனம், குங்குமம் விற்கும் கடைகளும் இருந்தன. அதற்கு பக்கத்தில் பொரி கடை. அதற்கடுத்து பலகாரம், இனிப்புகள் விற்கும் கடையும் இருந்தன. எல்லாம் அந்த மரத்தை சுற்றியே இருந்நது.

“ஆச்சுங்க… இன்னிக்கு நிறைவான, கண்குளிர அம்மன் தரிசனம். மனசுக்கு நிறைவா, இதமா இருக்கு.. இன்னிக்கு வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் போலவே?…” கேட்டேன்.

“ஆமாங்க… இன்னிக்கு விசேஷ நாள்… அதான் கூட்டமும் அதிகம். வழக்கமா வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகமா இருக்கும். இன்னிக்கு வழக்கத்தவிட அதிகம்தான். பாருங்க… புதுசா வாங்கின வண்டிகளுக்கு கூட பூஜ போடறாங்க…”

உண்மைதான். நிறைய கார்களும், புது பைக்குகளும் கோயில் வாசல் முன்பு நிற்க வைத்து பூஜை போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

பூ கடைகளிலும், மற்ற கடைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது.

“வியாபாரம் பரவாயில்லையாங்க?..”

“இன்னிக்கு அமோகம் சார்… எதிர்பார்த்ததை விட அதிகம்…”

அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே நான்கு பேர் வந்து தேங்காய் கேட்க வியாபாரத்தில் மும்முரமானான்.

நான் கோயிலுக்கு வருபவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு இளஞ்ஜோடிகள் வந்தார்கள். அதற்கு பிறகு வயதானவர்கள் இருவர். ஒரு இளம்பெண்…கல்லூரி மாணவி… ஒரு நடுத்தர வயது பெண்… அதன்பின் ஒரு கணவன், மனைவி ஜோடி.

பசி வயிற்றை கிள்ள ஆரம்பிக்க மணியைப் பார்த்தேன். ஒன்றரை ஆகி இருந்தது.

கையோடு எடுத்து வந்திருந்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரிக்க ஆரம்பித்தேன். ஓட்டலில் சாப்பிடுவது எனக்கு ஒத்து வராது.

புளி சாதம் வாசனை பசியை தூண்ட, பொட்டலத்தைப் பிரித்து எதிரில் வைத்தேன். இரண்டரை மணிக்கு கோயிலில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி போக டவுன் பஸ் வரும். அதற்குள் சாப்பிட்டுவிட்டு தயாராகிவிட வேண்டும்.

“நீங்க சாப்டீங்களா?..” தேங்காய் கடைக்காரரை கேட்டேன்..

“இன்னும் லேட்டாகும் சார்… நீங்க சாப்பிடுங்க..” அவர் சொன்னதும் கையை கழுவிக்கொண்டு, சோற்றை அள்ளி வாயில் போடப் போகும்போதுதான் அந்த குரல் கேட்டது.

“ஐயா சாமி பிச்சை போடுங்க”

என்னிடம் கேட்ட அந்த பிச்சைக்காரனுக்கு அறுபது வயது இருக்கும்… கிழட்டு தோற்றம்… ஒல்லியான உருவம்…

பரட்டை தலை, அழுக்கான, கிழிந்த உடை. முகம் சுருங்கியது எனக்கு.

” சே… தூரம் போப்பா… ஒண்ணும் இல்லை… இந்த பிச்சைக்காரங்க  தொல்லை தாங்க முடியறதில்லை. கோயிலுக்கு வந்தா நிம்மதியா, சாமி கும்பிட முடியறதில்லை…”

“காலைல இருந்து சாப்பிடலை சாமி… பசி உயிர் போகுது…”

“எதுவும் இல்லை போப்பா…”

“அப்படி சொல்லாதீங்க சாமி… கையில இருக்கறத குடுங்க…”

“அதான் சில்லறை இல்லைனு சொல்றேன்ல?..”

“தயவு பண்ணுங்க சாமி… பசி மயக்கம் நிக்க கூட முடியலை..”

விடாமல் கெஞ்சிய அவனை அருவருப்பாக பார்த்துவிட்டு, அவனின் குரலை நிராகரித்து விட்டு சற்று தள்ளி திரும்பி உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன்..

கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு, ‘இவனிடம் ஒன்றும் தேறாது’ என்று முடிவு கட்டியவன் தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு கையை கழுவிக்கொண்டு அதே இடத்தில் வந்து உட்கார்ந்த  நான் அந்த பிச்சைக்காரனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சற்று நேரத்திற்கு பிறகு இருவர் வந்தார்கள். அவர்களிடமும் அவன் பிச்சை கேட்க, அவனை கண்டுகொள்ளாமல் போனார்கள். அதற்கு பிறகு ஒருவர் வந்தார். அவரிடம் அவன் கேட்க, ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துப் போட்டார். அதன் பிறகு வந்த இரண்டு பேர் எதுவும் போடாமல் போக, மூன்றாவதாக வந்த நபர் ஒரு பத்து ரூபாய் தாளை  போட்டார். அதன் பிறகு வந்த இருவர் ஆளுக்கு ஒரு பத்து ரூபாய் தாளை போட்டார்கள்.

பிச்சைக்காரனின் முகம் மலர்ந்தது. தட்டில் இருந்த பணத்தை எடுத்து எண்ணினான். ஐம்பது ரூபாய் இருக்கும்போல. எழுந்தான். முன்னால் ஒரு தள்ளு வண்டி கடை இருந்தது.

அந்த கடையை நோக்கி நடந்தான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு வந்தவனின் கையில் இரண்டு பொட்டலங்கள். அதை பிரித்தான். உள்ளே சாம்பார் சாதம் இருந்தது.

ஒரு பொட்டலத்தை தனக்காக வைத்துக்கொண்டவன்,   இன்னொரு பொட்டலத்தை எடுத்து பிரித்து  பக்கத்தில் இருந்த கல் மீது வைத்தான்.

வைத்தவன் அருகில் இருந்த பூக்கடைக்காரரிடம் சொன்னான்…

“என்னப்பா பார்க்கறே?..தினம் ரெண்டு காக்கைங்க வரும்… நான் சாப்பாடு வைப்பேன்னு  நம்பி… இன்னைக்கும் வரும்… இந்த சாப்பாடு  அதுங்களுக்கு தான். பசி எல்லா உயிருக்கும் பொதுவான விஷயம் தானே? ஒரு உயிர் பசியோடு இருக்கறப்ப நாம எப்படி சாப்பிடறது?..”

அவன் சொன்ன அத்தனையும் சாப்பிட்டு முடித்து இருந்த என் காதில் விழுந்தது. அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் அப்படியே அசந்து போய் உட்கார்ந்து விட்டேன். என்னவென்று புரியாத, ஒரு குற்ற உணர்ச்சி என் மனம் முழுதும் வியாபிக்க ஆரம்பித்தது. எதுவும் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று மணியை பார்த்தேன். மணி இரண்டு.

எழுந்து நடக்க ஆரம்பிக்க அந்த கேள்வி என்னுள் எழுந்தது… ‘இன்று நான் சாப்பிட்ட சாப்பாடு செரிக்குமா?..’ சட்டென்று நின்றேன்… திரும்பி கோயிலை நோக்கி நடந்தவன்… அவன் அருகில் போய் நின்றேன்… பாக்கெட்டில் இருந்து  ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்ட, அவன் நம்ப முடியாமல் பார்த்தான்…

“இத வச்சிக்க… நாளைக்கு முழுசும் நீயும், உன் காக்கைங்களும் நிம்மதியா வயிறாற சாப்பிடுங்க… “சொன்னவன், அவன் அந்த பணத்தை அவன் கையில் திணித்துவிட்டு குற்ற உணர்ச்சி நீங்கியவனாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நிம்மதியாக நடக்க ஆரம்பித்தேன்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...