0,00 INR

No products in the cart.

அது எங்களுக்கு இன்றைக்கும் பொக்கிஷம்.!!

ஒரு நிருபரின் டைரி – 19

– எஸ். சந்திரமெளலி

 கல்கி பாட்டி

அமரர் கல்கியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் சாவி பத்திரிகையின் ஆசிரியரான சாவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அமரர் கல்கி பற்றிய நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நான், “நானும் என் மனைவியும் அவ்வப்போது கல்கி ராஜேந்திரன் சார் வீட்டுக்குப் போய் திருமதி கல்கியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். இப்போது எண்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டாலும் கூட, கல்கி, ராஜாஜி, டி.கே.சி. பற்றி எல்லாம் நிறைய விஷயங்களைச் சொல்லுவார். அவை எல்லாம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்” என்றேன்.

“அவங்களை ஒரு இன்டர்வியூ பண்ணிக்கிட்டு வாங்களேன்” என்றார் சாவி.

1980ல் துவங்கியது கல்கி பத்திரிகையுடனான எனது எழுத்துப் பயணம். கல்கிக்கான தலையங்கம் எழுதும் செவ்வாய் கிழமை மட்டும் தவிர்த்து மற்ற நாட்களில் காலை வேலைகளில் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வசித்து வந்த கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் வீட்டுக்குப் போய் அவருடன் கட்டுரைகளுக்கான ஐடியாக்கள் டிஸ்கஸ் செய்வதை, எழுதிய மேட்டர்களை கொடுப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவருடைய வீட்டிற்கு போகிறபோதெல்லாம் திருமதி கல்கியை நான் பார்த்ததுண்டு என்றாலும், ஒரு தருணம் முக்கியமானது.

எனக்குத்  திருமணமானபோது, என்னையும், என் மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்து ஒரு டின்னர் கொடுத்தார் கல்கி ராஜேந்திரன். அப்போதுதான் திருமதி கல்கியுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரை வணங்கி,  விடைபெற்றபோது, சில நிமிடங்களுக்கு அழகான தமிழில் சரளமான நடையில் எங்களை வாழ்த்திவிட்டு, “ரெண்டுபேரும் அடிக்கடி வந்து போங்கள்” என்றார்.

அதன் பிறகு நாங்கள் அவ்வப்போது மாலை நேரங்களில் சென்று கல்கி பாட்டியோடு (அப்படித்தான் நாங்கள் குறிப்பிடுவோம். அவருடைய பெயர்: ருக்மிணி) பேசிக்கொண்டு இருந்துவிட்டு வருவோம். “வயசாயிடுத்தில்லையா? எல்லாம் மறந்து போயிடுத்து” என்று அடிக்கடி சொன்னாலும், அவர் சொன்ன மலரும் நினைவுகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம். எங்களிடம் பேசும்போது
அமரர் கல்கியை அவர் ‘கல்கி மாமா’ என்றே குறிப்பிடுவார்.

மாயவரத்திலிருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள ‘தலையூர்’ என்ற கிராமத்தில் பிறந்த ருக்மிணிக்கு மூல நட்சத்திரம் என்பதால் பெற்றோர் அவருக்கு ஜாதகமே எழுதவில்லை. பின்னாளில் ஜாதகம் கேட்டவர்களுக்கு, “இவளோட ஜாதகம் எழுதாம விட்டுப் போச்சு” என்று சொல்லி மூல நட்சத்திர நெகடிவ் பாயிண்டை சமாளித்தார்கள். பெண்ணை பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பவில்லை. “பள்ளிக்கூடமே போகாத நான், தமிழின் தலைசிறந்த எழுத்தாளருக்கு மனைவியானது என்ன ஒரு விசித்திரம்!” என்று சொல்லி சிரிப்பார்.

“திருமணமாகி, சென்னை மாம்பலத்தில் கல்கி மாமாவோடு தனிக்குடித்தனம் நடத்த வந்தபோதுதான், அவருக்கு இந்த விஷயமே தெரியும். ஆனாலும், அவர் கோபித்துக் கொள்ளவில்லை. “அதனாலென்ன? இனிமேல் கத்துண்டா போச்சு!” என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் தாளவில்லை. அதன் பிறகே நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்” என்று கல்கி பாட்டி கூறினார்.

கல்கி பாட்டி தன் திருமணம் பற்றி சொன்னது கல்கியின் கதை போலவே படு சுவாரசியம்.

அவருக்குப் பன்னிரெண்டு வயதானபோது வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். யாராவது நல்ல மனிதராகக் கிடைத்தால் ‘இரண்டாம் தாரமாகக் கொடுக்கலாம்’ என்று கூட ஒரு எண்ணம் இருந்தது. காரணம், அந்தக் காலத்தில் இரண்டாம்தாரம் கல்யாணம் செய்துகொள்கிறவர்கள் தன் இளம் மனைவியை அன்போடும், ஆசையோடும் வைத்துக் கொள்வார்கள்; நகை நட்டு வாங்கிப் போடுவார்கள் என்ற அபிப்ராயம் நிலவியது. உள்ளூர் நபர் ஒருவருக்கு மூன்றாம் தாரமாக ருக்மிணியைக் கேட்டபோது, அவரது பாட்டி, “உள்ளூர் சம்பந்தம் உள்ளங்கை புண் மாதிரி” என்று சொல்லி தடுத்துவிட்டார்.

கல்கிக்கு 25 வயதானபோது, அவர் தேசத்தொண்டு, சத்தியாகிரகம் என்று பிசியாக இருந்தார். கல்கியின் உறவினர்கள், ருக்மிணியை பெண் பார்க்க வந்தார்கள். வந்திருந்த பெரியவர்களுக்கு அவர் நமஸ்காரம் செய்தபோது ஊர் கோயிலில் அதிர்வேட்டு சப்தம் கேட்டது. உடனே எல்லோரும், “நல்ல சகுனம்; சுவாமி அனுகிரகம் கிடைச்சாச்சு!” என்றார்கள். சிறிது நேரத்தில் இன்னொரு அதிர்வேட்டு சப்தம் கேட்டதும், “ஜாதகம் கூட பார்க்கணும்னு அவசியமில்லை; ஒண்ணுக்கு, ரெண்டு தடவையா தெய்வ அனுக்கிரகம் கிடைச்சுடுத்து! அது போதும்” என்று சொல்லிவிட்டார்கள்.
“கிருஷ்ணமூர்த்தி – ருக்மணி” என்ன பெயர் பொருத்தம்! என்று வந்திருந்தவர்களில் சிலர் சிலாகித்தார்கள். திருமணத்தை இரு தரப்புப் பெரியவர்களும் நிச்சயம் செய்தார்கள். இந்த பெண் பார்க்கும் படலத்தில் கல்கி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்த கல்கி கடிதம் மூலம் தகவல் அறிந்ததும், “நான் பெண்ணைப் பார்க்காமல் நீங்களாக எப்படி நிச்சயதார்த்தம் செய்வீர்கள்? இந்தக் கல்யாணத்தில் எனக்கு சம்மதமில்லை” என்று பதில் கடிதம் எழுதிவிட, கல்கியை சமாதானப்படுத்த அவரது அண்ணன் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.

“என் மரியாதைக்குரிய திரு.வி.க.விடம் போய் நியாயம் கேட்கலாம்” என்றார் கல்கி. விஷயத்தை கேட்ட திரு.வி.க., “பெரியவர்கள் உன் நல்லதுக்குத்தான் எதையும் செய்வார்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்ல, கல்கி தன் திருமணத்துக்கு சம்மதித்தார். மணமகன் தரப்பில் இப்படி ஒரு கலாட்டா என்றால், பெண் வீட்டாரிடம் சிலர், “காந்திக் கட்சியில் சேர்ந்து ஜெயிலுக்குப் போன வரனுக்கு பெண் கொடுக்கிறாயே! நன்றாக யோசித்துத்தான் முடிவை எடுத்தீர்களா?” என்று கேட்டார்கள்.

“அந்தக் காலத்தில் கதர் வேஷ்டி கட்டிக்கொண்டு, கதர் சட்டை அணிந்து ஜானவாச ஊர்வலம் சென்ற முதல் மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார். முகூர்த்ததுக்குக் கூட முரட்டுக் கதர் வேஷ்டிதான் கட்டிக்கொண்டிருந்தார்” என்று சொல்லுவார் பாட்டி.

திருமணமாகி ஒரு வருடம் வரை கல்கி பாட்டி பிறந்த வீட்டிலேயே இருந்தார். அதன் பின் கல்கி சென்னையில் மாம்பலத்தில் ஒரு வீடு பார்த்து, மனைவியை அழைத்துக் கொண்டு போனார்.

அதற்காக பிறந்த வீட்டிலிருந்து, பாட்டியை கல்கியின் சொந்த ஊரான புத்தமங்கலத்துக்குக் கொண்டு வந்து விட்ட நாளன்று, திடீரென்று கலியாணத்துக்காக பாட்டிக்குப் பிறந்த வீட்டில் போட்ட 16 பவுன் தங்க செயினைக் காணோம். (16 பவுன்! இன்றைய விலை நிலவரப்படி ஆறரை லட்சம் ரூபாய் மதிப்பு) புகுந்த வீட்டாருக்கோ, ‘செயினை உண்மையிலேயே காணோமா, இல்லை பாட்டியின் பிறந்த வீட்டார் செயின் போடாமல் நாடகம் ஆடுகிறார்களோ’ என்று சந்தேகம்.

இது ஒரு பிரச்னையானது. கல்கி, தன் மனைவியைக் கூப்பிட்டு, “சங்கிலி போட்டது உண்மையா?” என்று கேட்டார்.

பாட்டி “ஆமாம்” என பதிலளித்தார்.

அடுத்து, “அது காணாமல் போயிடுத்தா?” என்று கேட்க,

பாட்டி, அதற்கும் ‘‘ஆமாம்” என்று பதில் சொன்னார்.

உடனே கல்கி எல்லோரையும் பார்த்து, “இவள் சொல்வதை நான் நம்பறேன்; இனிமே இதுபத்தி யாரும் வாயைத் திறக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டார். கல்கியும், பாட்டியும் சென்னை வந்த பிறகு, புத்தமங்கலத்திலிருந்து காணாமல் போன செயின் கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது.

கல்கிக்கு ஊஞ்சல் ஆடுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். வீட்டில் நடு ஹாலில் ஊஞ்சலில் அமர்ந்து வீசி ஆடினால் அவருக்குக் கற்பனை ஊற்றெடுக்குமாம். கல்கியும், பாட்டியும் அடிக்கடி பீச்சுக்குப் போவார்களாம். கால்களில் அலைகள் தவழ, வெகுநேரம் நின்றுக் கொண்டே கல்கி கடல் அலைகளையும், மணலில் சாய்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, “அலை ஓசை எத்தனை அற்புதமாக இருக்கு!” என்று சொல்லியும் ரசிப்பாராம்.

சினிமாவிற்கும் போவார்களாம், தமிழ் மட்டுமில்லாமல், ஆங்கிலப் படங்களுக்குக் கூட பாட்டியை அழைத்துக் கொண்டு போவாராம். இங்கிலீஷ் படத்துக்குப் போவதற்கு முன்னால், படத்தின் கதையை ஒரு குழந்தைக்குச் சொல்வது போல சொல்லுவாராம்.

தமிழகத் தலைவர் | தேசமே தெய்வம் | Page 3

ராஜாஜி சொன்னதன் பேரில், கல்கி தம்பதி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு சென்றார்கள். அங்கே எல்லோருக்கும் சமமான சம்பளம். திருமணம் ஆனவர் என்றால் ஐம்பது ரூபாய், பிரம்மச்சாரி என்றால் இருபது ரூபாய். ஆசிரமத்தில் ஓய்வு நேரத்தில் எல்லோரும் நூல் நூற்க வேண்டும். இப்படி நூற்கப்பட்ட நூல் முழுவதும், பிறந்த நாள் பரிசாக காந்திஜிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ராஜாஜி ஒரு கை தேர்ந்த சாப்பாட்டு ரசிகர். அவ்வப்போது சமையல் டிப்ஸ்கள் கூட கொடுப்பார். தேங்காய் சட்னி அரைக்கிறபோது கொஞ்சம் இஞ்சி, வெங்காயம் போடலாம்; ரவா உப்புமா செய்கிறபோது ரவையை லேசாக வறுத்து, வாணலியில் கொதிக்கும் நீரில் ரவையை சேர்ப்பதற்கு  முன்பாக கொஞ்சம் நெய் விட்டால், உப்புமா கெட்டி தட்டாது; ஃபுரூட் சாலட்டில் கொய்யாப் பழம் சேர்க்கக்கூடாது. சேர்த்தால், கொய்யா விதை பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு ஃபுரூட் சாலட் சாப்பிட்ட சந்தோஷத்தையே கெடுத்துவிடும். இவை எல்லாம் கல்கி பாட்டிக்கு ராஜாஜி கொடுத்த டிப்ஸ்.

பசுபதிவுகள்: ரசிகமணி டி.கே. சி. - 2

டி.கே.சி. பற்றி பாட்டி சொன்னது:

“அவரைப் போன்ற ஒரு அன்பான மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவர் சென்னை வருகிறபோது வெறும் கையோடு வரமாட்டார். கூடவே பலாப்பழம், அல்வா, புழுங்கல் அரிசி, வாழைத்தார், உளுந்து என பல ஐட்டங்களோடுதான் வந்து இறங்குவார். குற்றாலம் போனாலும், அவரது விருந்தோம்பலில் திக்குமுக்காட வேண்டியதுதான். டி.கே.சி. வீட்டு இரண்டு சமையல்காரர்களுடைய கைமணமும் அத்தனை உசத்தியானது.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வனும்’, ‘சிவகாமியின் சபதமும்’, ‘பார்த்திபன் கனவும்’ இன்றும் முப்பத்து முக்கோடி தமிழ் பதிப்பாளர்களாலும் பதிப்பிக்கப்பட்டு, சக்கைப் போடு போட்டுக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். திருமதி கல்கியின் புத்தகம் ஒன்று 1998ல் வெளியானது எத்தனைப் பேருக்குத் தெரியும்? திருமதி கல்கி, கோலம் போடுவதில் நிபுணர். அந்தக் காலத்தில் கல்கி வீட்டுக்கு வரும் பலரும் பாட்டியிடம், ‘தெருவில் உங்க வீடு எது என்பதை வாசலில் போட்ட கோலத்தை வைத்தே சொல்லிவிடலாம்” என்பார்களாம்.  அவர் பல்லாண்டுகளாக காகிதங்களில் வரைந்து வைத்திருந்த கோலங்களின் தொகுப்புதான் அந்த ஆங்கிலப் புத்தகம்.

அண்மையில் சுந்தா எழுதிய”பொன்னியின் புதல்வர்” என்ற அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலை, கல்கியின் பேத்தியும், பத்திரிகையாளருமான
கௌரி ராம்நாராயண் ஆங்கிலத்தில் “கல்கி கிருஷ்ணமூர்த்தி: ஹிஸ் லைஃப் அண்டு டைம்ஸ்” என்ற தலைப்பில்  மொழி பெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கிலப் புத்தகத்தில் சுந்தாவின் கல்கி வரலாற்று புத்தகத்தில் இடம் பெறாத ஒரு அத்தியாயத்தை பிரத்யேகமாக எழுதி சேர்த்து இருக்கிறார் கௌரி. அந்த அத்தியாயம் திருமதி கல்கியைப் பற்றியது. கல்கி பாட்டி பற்றிய அத்தியாய சேர்க்கைக்கு
கௌரி ராம்நாராயண் சொன்ன காரணம் என்ன தெரியுமா? 

“எங்கள் பாட்டி, ருக்மிணி (திருமதி கல்கி) ஓர் அற்புதமான பெண்மணி. அமரர் கல்கி போன்ற ஓர் அற்புதமான மனிதர் தனக்கு கணவராக அமைந்ததில், அமரர் கல்கி போன்ற ஒரு மகத்தான மனிதருக்கு தான் மனைவியானதில் அவருக்கு அளவிலா பெருமை… சந்தோஷம்… மனநிறைவு… அவர், தாத்தா கல்கி பற்றிய பல அரிய விஷயங்களை பேரக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு சுமார் 45 வயதிருக்கும்போது, கல்கி மறைந்துவிட்டார். பாட்டி 90 வயது வரை வாழ்ந்தார். தன் தள்ளாத வயதிலும், தினமும் காலையில் குளித்துவிட்டு வந்ததும், தோட்டத்தில் இருந்து பூப்பறித்துக் கொண்டு வந்து
அமரர் கல்கியின் படத்துக்கு சூடுவது அவரது பழக்கம். எனவேதான், தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், பாட்டியைப் பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டு, அந்த அத்தியாயத்தை எழுதி, சேர்த்திருக்கிறேன்.”

என் மகன் கௌதம் பிறந்தபோது பெயர் சூட்டும் நாளன்று பிற்பகலில்
கல்கி பாட்டியை அழைத்துக் கொண்டு, திருமதி விஜயா ராஜேந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். பாட்டி குழந்தையை தன் ஸ்டைலில் அழகுத்தமிழ் வார்த்தைகளில் ஆசிர்வதித்து, நாணயங்களை வைத்து சுற்றி, கொடுத்த சிறிய பட்டுத்துணி எங்களுக்கு இன்றைக்கும் பொக்கிஷம்.!!

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...