0,00 INR

No products in the cart.

வித்தியாசம்

சிறுகதை

ஓவியம் : தமிழ்

 

கிரிஜா ராகவன்

 

றடி உயரத்திற்கு ஆஜானுபாகுவான தேகம். பளீரென்ற மயில்கண் வேட்டி, வெளீரென்ற பூணூல், நெற்றியில் மூன்று பட்டையாய் விபூதிக் கோடுகள், நடுவில் வட்டமாய் குங்குமப்பொட்டு!  எங்கேயோ கல்யாணத்திற்குக் கிளம்புகிறார் போல் ஜம்மென்று கண்மூடி கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தார் விஸ்வநாதன். படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு லைட்டை அணைக்க மறந்த நீலாவை ஏகத்துக்கும் சத்தம்போட்டு, ராஜு ஓடிவந்து அப்பாவை சமாதானப்படுத்த, கண்களில் நீருடன் வந்து படுத்த மாமியாரை உஷா அமைதிப்படுத்தி போர்த்திவிட, முனகிக்கொண்டே தூங்கிய விஸ்வநாதன் காலையில் கண் விழிக்கவில்லை.

நாலு மணிக்கே எழுந்து லைட்டைப்  போட்டு அமர்க்களப்படுத்துபவர், ஆறு மணி வரை சப்தமில்லாமல் தூங்குவதைப் பார்த்து நீலாதான் ராஜுவை எழுப்பி பார்க்கச் சொன்னாள்.

என்ன எழுப்பியும் அவரிடமிருந்து பதில் வராமல் போகவே கீழ் பிளாட்டில் இருந்த டாக்டர் சோம சேகர் வந்துதான் கிழவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

இதோ மணி 11.  ராஜுவின் அலுவலக நண்பர்கள்… அக்கம் பக்கத்தவர் என்று பலரும் உதவ, மடமடவென்று ஏற்பாடுகள் நடந்து… இதோ பெரியவர் விஸ்வநாதன் நடு ஹாலில் இறுதி யாத்திரைக்கு தயாராக சயனித்திருக்கிறார்.

காலையில் இருந்து நீலா மாமி அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. கண்மூடிப்படுத்திருந்தவள் அழவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை.

நீலா மாமிக்கு காலையில் கண்  விழித்து பல் தேய்த்ததும் ஸ்ட்ராங்காக காபி வேண்டும்.  ஆனால் மாமா காப்பி சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிட வேண்டும். மாமாவின் பல சட்ட திட்டங்களில் அதுவும் ஒன்று.

உஷா மாமியாரை எழுப்பி சூடாக காபி குடிக்க வைத்தாள். தவிக்கும் பறவையாய் நடுங்கும் மாமியாரின் உடலை ஆதரவாகத் தடவி விட்டாள்.

மூத்த பெண் ஜம்பகமும் அவள் கணவர் கணேசனும் செய்தி கேட்டு உடனே ஓலா பிடித்து வந்து விட்டனர். அடுத்த பெண் கற்பகம் சேலத்திலிருந்தும்  மூன்றாவது பெண் கீர்த்தி பெங்களூரில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்யாண சாவு. ஜே ஜே என்று சொந்தங்களும் தெரிந்தவர்களும் வந்து போய்க்கொண்டிருந்தனர். ராஜு கடைசி பையன். ஒரே பையன். சொந்தக்காரர்கள் பலருக்கும் தகவல் சொல்ல ஜம்பகத்திடம்  கேட்டு கேட்டு ராஜு எல்லோருக்கும் போன் செய்து கொண்டிருந்தான்.

விஸ்வநாதனுக்கு பூர்வீகம் கோமல். அவருடைய தாத்தா அப்பா எல்லோருமே மிராசுதாரர்கள். எக்கச்சக்க நிலம், சொத்து. அவர்கள் பேச்சே பெரிய ஜபர்தஸ்த் ஆகத்தான் இருக்கும்.

18 வயதில் சென்னைக்கு வேலை தேடிக் கொண்டு வந்த விஸ்வநாதனும் அப்படித்தான். கணீரென்ற பேச்சு. ஆணையிடுகிறார் போலத்தான் இருக்கும். பெண்கள் என்றால் அதிலும் மனைவி  நீலாயதாக்ஷி மேல் ரொம்பவே இளக்காரம். அதிகாரம் செலுத்துவார். மூன்று பெண்களும் கடைசியாக ராஜுவும் பிறந்த பின்னாலும் சாது நீலா மாமிக்கு கணவரின் கருத்துக்கு மாற்று சொல் கூறி பழக்கமில்லை.|

“ரொம்ப ஷாக்கா இருக்கு மாமி. நேத்தி கூட ராத்திரி பேசிண்டிருந்தாராமே”

இது மூத்த சம்பந்தி மீனாட்சி. அடுத்தடுத்து மாற்றி மாற்றி பல பெண்கள் வந்து மாமியின் கைபிடித்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். மாமி யாரிடமும் பேசவில்லை. அரைக்கண் திறந்து பார்த்து திரும்ப கண்களை மூடிக் கொள்வாள்.

வந்தவர்களிடம் ஜம்பகம்தான் பேசிக்கொண்டிருந்தாள்.

“அம்மாதான் பாவம், இந்த வயசிலும் அப்பாவுக்கு சிசுருஷை செஞ்சுண்டிருந்தா. அப்படி அப்பாவுக்கு அம்மா இல்லாம முடியாது.”

காதில் விழுந்த ஜம்கத்தின் குரல் தன் நினைவுகளை கிளறியதை நீலா மாமியால் கட்டுப்படுத்த முடியவில்லை. மாமாவின் குரல் கேட்கிறார் போலவே இருந்தது.

“ஒண்ணுக்கு வருது, அந்த  மூத்திர ஜக்கை எடுன்னா எவ்வளவு நேரம்? மூதேவி…. அசைண்டு வரையா?”

எண்பத்தி எட்டு வயது மாமி தட்டுத்தடுமாறி அந்த மூத்திர ஜக்கை எடுத்துக்கொண்டு மாமாவின் வேட்டியை விலக்கி சரியாக பிடிப்பதற்குள் காலால் ஒரு தட்டு கையில் ஒரு கிள்ளு எல்லாம் விழும்.

உஷாவின் அம்மாவின் பேச்சு குரல் கேட்டது. “இந்த ஒரு பத்து நாள் மாமிக்கு தினமும் மல்லிப்பூ வாங்கி வை. அப்புறம்தான் அந்த கண்றாவி எல்லாம் இருக்கே.”

நீலா மாமிக்கு மனதிற்குள் சிரிப்பு வந்தது. நாலு வருஷத்துக்கு முன்னால் கற்பகத்தின் பெண் கல்யாணத்தில் மாமியாருக்கு கொண்டை போட்டு சுற்றி பூ வைத்து விட்டாள் உஷா.  ரிசப்ஷன் ஹாலுக்கு  வந்து மாமாவின் அருகில் உட்கார்ந்தாள். நிமிர்ந்து அவளைப் பார்த்த விஸ்வனாதனுக்கு வந்ததே கோபம் ! அவளின் காதருகே குனிந்து  “பேத்தி கல்யாணத்துல இதென்ன தேவிடியாத்தனம்? பூவும் கொண்டையுமா அலங்காரம் மினுக்கிண்டு? வெக்கமா இல்ல?”

யாருக்கும் தெரியாமல் பூவையும் கொண்டையையும் கழட்டி வைக்க என்ன பாடுபட்டாள் என்பது அவளுக்குத்தான் தெரியும். அதற்குப் பிறகு நீலா மாமிக்கு தலையை வாரிக் கொள்வதில் கூட வெறுப்பு வந்துவிட்டது.

இப்படி எத்தனையோ! வார்த்தைக் கத்திகள். பல சமயங்களில் காரணமே இல்லாத  வன்மச் சண்டைகள். அடி உதை. இந்த  தாம்பத்தியம் 60 வருடங்களைத் தாண்டி ஓடியதில் நீலா மாமிக்கு ரணங்களைத் தவிர என்ன தான் மிஞ்சியது!!

தின்மூன்றாம் நாள் சுப ஸ்வீகாரம் முடிந்து பெண்கள், மாப்பிள்ளைகள், இந்தியாவில் இருந்ததால் வர முடிந்த பேரக்குழந்தைகள், சொந்தபந்தங்கள் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வீடு பழைய நிலைக்குத் திரும்பியது. மகனுடனேயே தங்கிவிட நீலா மாமி முடிவு செய்ததில் ஜம்பகத்துக்கும் கற்பகம் கீர்த்திக்கும் ஏக வருத்தம்.

“எங்களை எல்லாம் விட உஷாதாம்மா உனக்கு பொண்ணு மாதிரி” கிளம்புவதற்கு முன் கீர்த்தி சொல்லியே விட்டாள்.

அது உண்மைதான் என்று நீலாவுக்கு தெரிந்துதான் மனமார ராஜுவுடனேயே தங்கிவிட முடிவு செய்தாள்.

இரண்டு நாள் வேலையாக ராஜு நேற்று இரவு மதுரை கிளம்பிப் போய் வீட்டில் உஷாவும் மாமியும்தான். மாமனார் இறந்ததில் இருந்து உஷாதான் ராத்திரியில் மாமி பக்கத்தில் படுத்துக்கொள்கிறாள்.

பொதுவாக ராத்திரியில் ’முட்டி வலி, மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது’ என்று எப்போதுமே தூக்கம் வராமல் தவிக்கும் மாமியார் இந்த 13 நாட்களாக குறட்டை விட்டு தூங்குவதை உஷா கவனித்தாள்.

குளித்துவிட்டு பச்சைக் கலர் புடைவையும் ரவிக்கையுமாக அறையிலிருந்து வெளியே வந்த நீலா மாமியை பார்க்கும்போது உஷாவிற்கு அந்த வித்தியாசம் தெரிந்தது. உஷாவை பார்த்து மெல்லியதாக சிரித்த நீலா மாமி “எண்ணெயும் சீப்பும் கொண்டாயேன் உஷா” என்றாள்.

உஷா கொண்டு வந்து கொடுத்த தேங்காய் எண்ணெயை தலையில் சீராக தடவிக் கொண்டாள். ஹால் வாஷ்பேசின் கண்ணாடியைப் பார்த்தபடி சீப்பால்  நேராக வகிடு எடுத்துக்கொண்டு தலையை வாரிக் கொண்டே உஷாவை பார்த்தாள். சிரித்தபடி  “ உஷா கார்ல போகும் போது ராஜு பாட்டு போடுவானே, அந்த எம்.ஜி.ஆர். பாட்டு. அந்த சிடி போடு, கேக்கலாம்” என்றபடி தலையைப் பின்னி கொண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள் நீலா மாமி.

நீலா மாமியிடம் தெரிந்த அந்த விடுதலை வித்தியாசம் உஷாவுக்கு இப்போது நன்றாகவே புரிந்தது. அருகில் வந்து மாமியாரை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் உஷாவின் கண்களில் மட்டும்!!

2 COMMENTS

  1. வித்தியாசம் சிறுகதையில் நீலாமாமி 88 வயதிற்கு பிறகு தான் வாழ்க்கையை வாழ
    நினைத்திருப்பாள் போல.கதை வித்தியாசமாக தான் இருக்கிறது

  2. ஆணாதிக்கம் அழியும் நாளே உண்மையான விடுதலை நாள் என்பதை மாமி சொல்லாமல் சொல்லி விட்டாள்! சபாஷ்!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...