0,00 INR

No products in the cart.

அமெரிக்கா செல்லும் ஆசை மெல்லத் துளிர்க்க ஆரம்பித்தது.

உலகக் குடிமகன் – 2

 

நா.கண்ணன்

 

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்த ஜூலை 16, 1969 அன்று அமெரிக்க
முதல் மகன் கென்னடி சொன்னார், “இது மானுடத்தின் மிகப்பெரிய தாவல்” என்று! அதே வருடம்தான் நான் என் பள்ளி இறுதித் தேர்வை எழுதினேன். பள்ளி முதல் மாணவனாகத் தேர்வுற்றேன். ஆனால் இருந்து பார்த்து மகிழ என் அன்னை அப்போது இல்லை. ஒன்று மாற்றி ஒன்றென சாவு அந்த வீட்டில் விழுந்தது. முதலில் என் தந்தை சர்க்கரை வியாதி தரும் கோமாவில் போனார். இப்போதுள்ள அளவிற்கு நீரழிவு நோய் பற்றிய தெளிவு அப்போது இல்லை. அதற்கான மருத்துவ வசதிகளும் இல்லை. அவர் இறந்தது குடும்பத்திற்கு பேரிடி. சம்பாத்தியம் சட்டென நின்று போனது. இன்னும் மூன்று சகோதரிகளுக்கு திருமணம் ஆக வேண்டிய பெரும் பொறுப்பும், கணவனின் இழப்பும் என் அன்னையை வெகுவாக பாதிக்க, அவர் அடுத்த வருடம் இறந்தார். வீட்டில் இப்படி முக்கியமானோர் போய்விட வயதான பெரியவராக என் தாத்தா இருந்தது ஊர் பழியை அவருக்கு வாங்கித் தந்தது. அது தாங்காமல் அவரும் போய் சேர்ந்தார். அவருக்குப் பின் குடும்பப் பொறுப்பில் இருந்த என் சிறிய தந்தையும் சர்க்கரை வியாதியில் போய்விட, குடும்பம் நிர்கதியாகியது.

சரியாக இத்தருணத்தில் மூன்றாவது அக்காவிற்கு ஆசிரியை வேலை கிடைத்தது. குடும்பம் பிழைத்தது. மேற்படிப்பு ஆசை இருந்தும் இளங்கலை அறிவியலோடு தன் படிப்பை முடித்துக்கொண்டு நான்காவது அக்கா பாத்திமா கல்லூரியில் பௌதீகத்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். கொஞ்சம் குடும்பம் நிலை பெற்றது. அவர்கள் செய்த தியாகம் என்னை முழுமையாய் படிக்க விட்டது. இத்தனை சோகத்திலும் நான் படித்துத் தேறியது அதிசயம்.

நாங்கள் படித்த காலத்தில் முதன் முறையாக சிறப்புப் பாடமெனும் ஒரு திட்டத்தை அமுல்படுத்தினர். அதன்படி கணிதம், அறிவியல் பாடங்களில் ஏதாவதொன்றைத் தேர்வு செய்து சிறப்புப் பாடமாக பயில வேண்டும். பள்ளி கணக்கு வாத்தியார் கணிதமே அறிவியல் மொழி. எனவே கணிதம் படி என்றார். கணிதப்பாட வகுப்பில் அமர்ந்தேன். இரசாயன வாத்தியார், வேதியியலே எதிர்காலக் கல்வி. எனவே, ’வேதிமக் கல்வி கொள்’ என்றார். சரியென்று மாறி அவ்வகுப்பிற்குத் தாவினேன். எல்லா வாத்தியாருக்கும் தத்தம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க ஆர்வமாயிருந்தனர். ஒருவகையில் அன்றைய என் தேர்வாகிய வேதிமவியல் என் வாழ்வின் போக்கையே பின்னால் மாற்றுமென அன்றறியேன்.

பள்ளி முடிக்கும் வரை எந்த அயலகக் கனவும் எனக்கில்லை. எல்லோரும் சொன்னார்கள் நான் டாக்டர் ஆக வேண்டுமென்று. அதையே நானும் ஆசைப்பட்டேன். அதற்கு முதலில் புகுமுக வகுப்பாவது முடித்திருக்க வேண்டும். எனவே மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். துணைக்கு யாரும் இல்லாத சூழல். என்ன படிக்க வேண்டும், எது நல்லது கெட்டது என யோசனை சொல்ல யாருமில்லாத சூழல். நானே ஏதோவொரு தைரியத்தில் அமெரிக்கன் கல்லூரி போனேன். அப்போதெல்லாம், திருப்பூவணத்திலிருந்து இரயிலில் தினம் போய் மதுரைக் கல்லூரியில் எல்லோரும் படிப்பர். காரணம் அது இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருந்தது. ஆனால், நாங்கள் பெரிய அக்காவோடு மதுரை கோசாகுளம் புதூர் போய் விட்டோம். அங்கிருந்து கோரிப்பாளையத்திலிருக்கும் அமெரிக்கன் கல்லூரி அருகில். தினமும் மிதிவண்டியில் படிக்கப்போவேன். ஒரு டிபன் பாக்ஸில் கொஞ்சம் தயிர் சாதம், தொட்டுக்க ஊறுகாய், இதுவே என் கல்லூரி காலத்து நித்திய உணவு.

அமெரிக்கன் கல்லூரி ஒரு கிராமத்து சிறுவனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆங்கிலப் பள்ளியிலிருந்து (கான்வெண்ட்) வந்த மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசினர், படித்தனர். ஆனால், முழுக்க, முழுக்க தமிழிலேயே பள்ளியிறுதிவரை படித்தவன். ஆங்கிலப்பாடம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் கிராமத்துச் சிறுவருக்கில்லை. எனவே, ஆர்வத்தைத் தூண்ட ஆங்கில வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஒரு லட்டு, கொஞ்சம் மிக்சர் ஊக்குவிப்பு உணவாகக் கொடுக்கப்பட்டது. இதனால் கொஞ்சப் பேராவது ஆங்கிலம் கற்க வந்தனர். ஒரு வகையில் மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடி என்று சொல்லலாம். பட்டியல் இன மாணவர்களுக்கு தனியே மாணவர் விடுதி, உணவுடன் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது என் நண்பர்களை சந்திக்க நான் போவேன். அவர்களில் பெரும்பாலோர் என்னைவிட வயதானவர்களாகவே இருந்தனர். இளமையில் பள்ளிக்கு அனுப்பும் ஆர்வம் பெற்றோர்களுக்கு இல்லாததும், வேலை செய்ய வேண்டிய குடும்ப சூழலும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் உணவுடன், தங்கும் வசதி செய்து கொடுத்தது தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் கல்வி ஒளியைப் பாய்ச்சியது.

அமெரிக்கன் கல்லூரிதான் எனக்குள் அயலக ஆசையை முதலில் தூண்டியது. ஏனெனில் எனக்கு ஆங்கிலப்பாடம் எடுத்தவர் ‘டேவிட் பக்’ எனும் ஓர் அமெரிக்கர். அவர் பாடம் எடுக்கும் முறை எளிதாக, சுவாரசியமாக இருந்தது. ஜேம்ஸ் வசந்தன் எனும் ஆசிரியரும் ஆங்கிலப் பாடத்தை ஓர் ஆங்கிலேயர் சொல்லிக் கொடுப்பது போலவே சொல்லிக் கொடுத்தார். நெடுமாறன் எனும் ஆசிரியரும் ஆங்கிலப் பாடம் எடுத்தார். அவர் ஆங்கிலக் கவிதை பற்றிப் பேசும்போது பல்லாயிர வருடப் பழைமைகொண்ட தமிழ்க் கவிதையை தொடாமல் பேசமாட்டார். ஒருவகையில் 70களில் அலைபோல் புகுந்த புதுக்கவிதை இயக்கத்தில் எங்களுக்கு ஆர்வம் ஏற்படும்படி செய்தவர் நெடுமாறன். தமிழ்க் கவிதை மீது எனக்கு இன்றுவரை இருக்கும் ஆர்வத்திற்கு ஓர் ஆங்கில ஆசிரியர் காரணம் என்பதும் ஆச்சர்யமான திருப்பு முனை. இப்படி இவர்கள் கற்றுத் தந்த ஆங்கிலப் பரிட்சயம் மற்ற எல்லா அறிவியல் பாடங்களையும் கற்க உதவியாய் இருந்தது.

நிறைய மாணவர்கள் படிக்கும் வகுப்புகள் பெரிய, பெரிய அரங்கில் நடக்கும். கண்ணன் எனும் பெயர் அட்டவணையின் நடுவில் வருவதால் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டியிருக்கும். ஆசிரியர் பேசுவதும், எழுதுவதும் பல நேரங்களில் புரியாது. எனவே சூட்டிகையான மாணவர்கள் முதல் வரிசை மாணவர்களில் யாராவது ஒருவர் வரவில்லை என அறிந்துக்கொண்டு அந்த இடத்தைப் பிடிக்க அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவர். எப்படி இதை அறிகிறார்கள் என்பது எனக்கு வியப்பாகவே இருக்கும். எப்படியோ புகுமுக வகுப்பை நான் முதல் நிலையில் படித்துத் தேர்வுற்றேன். நகர்ப்புற மாணவர்கள் என்னைப் பார்த்து எப்படி இந்த கிராமத்துப் பையன் முதல் வகுப்பில் தேறினான் என ஆச்சர்யப்படுவர். நல்ல வேளையாக நான் தமிழில் படித்த பல விஷயங்களை ஆங்கிலப்படுத்தி அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அது ஒருவகையில் உதவியது.

“மதுரை மருத்துவக் கல்லூரி எனது மதிப்பெண் தேர்விற்குப் போதாது” என்று சொல்லிவிட்டது. முதல் வகுப்புத்தான் என்றாலும் சாதீய இட ஒதுக்கீட்டில் அது தகுதிபெறவில்லை. எனவே டாக்டராகும் என் கனவு ஒத்தி போடப்பட்டது. மற்ற மாணவர்கள் சொன்னார்கள், நீ இளங்கலை உயிரியல் எடுத்துப் படித்தால் ஒவ்வொரு வருடமும் முயற்சி பண்ணலாம் என்றார்கள். அதுவும் நல்ல யோசனைதான் என நான் இளங்கலை விலங்கியல் பாடம் படித்தேன். எங்கள் ஆசிரியர்கள் இந்தியர்களாக இருக்க பௌதீகவியல் மாணவர்களுக்கு மட்டும் அமெரிக்க ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். அதுவொரு ஆசையைக் கிளப்பிவிட்டது. அமெரிக்காவில் எப்படி மாணவர்கள் படிப்பார்கள், அங்குள்ள கல்லூரி, பல்கலைக்கழக வளாகம் எப்படிப் பச்சைப் பசேலென்று இருக்கும் என்றெல்லாம் எங்களுக்கு அவ்வப்போது படம் போட்டுக் காட்டுவார்கள். கல்லூரி வளாகத்துள் மாணவர் பிர்ஸ்பீ எனும் பறக்கும் தட்டு வைத்து விளையாடுவது என்னை ஈர்த்தது. அமெரிக்கா செல்லும் ஆசை மெல்லத் துளிர்க்க ஆரம்பித்தது.

மருத்துவக் கல்லூரி என்னைக் கண்டுகொள்வதாக இல்லை. இட ஒதுக்கீடு என்னை ஓரம் கட்டியது. ஆனால் டாக்டர் ஆக வேண்டுமென்ற கனவு மட்டும் என் எண்ணத்திலிருந்து மறையவில்லை.

(தொடரும்)

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

1
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...