– எஸ். சந்திரமௌலி
நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள். எந்தக் கட்சியும் 172 இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறவில்லை. 155 இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் தாரீக் ஈ இன்சாஃப் கட்சி, இன்னும் சில உதிரிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. இம்ரான் பிரதமர் ஆனார். ஆரம்பம் முதலே அவருக்கு பலவிதமான சவால்கள். அவற்றை சமாளிக்க அவர் திணறினார். ஓராண்டுக்கு முன், தானே முன்வந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவந்து, தன் மெஜாரிடியை நிரூபித்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். ஐந்தாண்டுகள் முழுமையாக அவர் ஆட்சி செய்திருந்திருப்பாரேயானால், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குப் பின்னரே பாக். நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் நடந்திருக்கும். ஆனால், கடந்த ஒரு வருடத்தில் நிலைமை அவரது கை மீறிப்போனது. இப்போது, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்கத் திராணி இன்றி, “இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது” என்று சொல்லி நிராகரித்துவிட்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு சிபாரிசு செய்துவிட்டார். பாகிஸ்தான் அதிபரும் தேர்தலுக்கு உத்தரவு இட்டுவிட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் இம்ரான் கானின் ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை அறிந்திருந்தபோதிலும் அவரது அமைச்சரவை சகாக்கள், கிரிக்கெட் ஸ்டைலில், “இம்ரான் கடைசி பந்து வரை அசராமல் விளையாடுவார்! ஜெயித்துக் காட்டுவார்!” என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கடந்த கால சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமா?
இந்தியாவைப் போலவே 1947ல் சுதந்திரம் பெற்றது பாகிஸ்தான். நாம் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டினை கோலாகலமாக நாடு முழுக்கக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசியலில் மக்களின் ஒரு விரல் புரட்சியால் பல அரசியல் மாற்றங்கள் நிகந்துள்ளன. ஆனால், பாகிஸ்தானில் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை? என்கிற நிலைமைதான். கடந்த 75 ஆண்டுகளில், பாகிஸ்தானின் பிரதமர்கள் யாரும் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தது இல்லை. “ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருப்போம்” என்று நம்பினார் இம்ரான். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாபஸ், சொந்தக் கட்சி எம்.பி.க்களின் கட்சித்தாவல் போன்ற சிக்கல்கள் காரணமாக அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டது.
இம்ரான் ஆட்சியை இழந்ததற்கு என்னக் காரணம்?
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யத் தவறியதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. வெங்காயம் மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த விலையைவிட இன்று மூன்று மடங்காய் விலை ஏறிவிட்டது. எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக ஏறிவிட்டன. ஆனால், மக்களின் வருவாயும், வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. சாமானிய மக்கள் விலைவாசி உயர்வினைப் பற்றி எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது இம்ரான் கான், “நான் வெங்காயம், உருளைக்கிழங்கி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் ஆகவில்லை” என்று கோபப்பட்டது மக்களை இன்னமும் எரிச்சலூட்டியது.
எதிர்க்கட்சிகள், “நீங்கள் வெங்காயத்தின் விலையைக் குறைக்க வேண்டாம்! பொருளாதாரத்தை சீர் செய்யுங்கள்! பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்!” வெங்காயத்தின் விலை தானாகக் குறையும்” என்று பதிலடி கொடுத்தனர்.
அண்மையில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் பெரும்பான்மையான மக்கள் கூறிய மிக முக்கியமான பிரச்னை பணவீக்கமும், விலைவாசி ஏற்றமும்தான். “எக்காரணம் கொண்டும் உலக வங்கியிடம் கை ஏந்த மாட்டோம்” என்று முழங்கிக் கொண்டிருந்த இம்ரான், வேறு வழி இல்லாமல், பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க உலக வங்கியிடம் ஆறு லட்சம் கோடி டாலர் கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடன் மூலமாக ஏற்படும் பணப்புழக்கம், நாட்டில் பணவீக்கமும், அதன் காரணமாக விலைவாசியும் உயர்வதற்கே வழி செய்யும் என நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது, ‘ஊழலை ஒழிப்போம்! பொருளாதாரத்தை பலப்படுத்துவோம்!” என்று சொல்லி வாக்கு கேட்டார் இம்ரான் கான். ஆனால், ஆட்சியைப் பிடித்தவுடன், அவற்றை செயல்படுத்த அவரால் முடியவில்லை. பதவிக்கு வந்த பிறகு, கடந்த மூன்றாண்டுகள் எட்டு மாதங்களில் நாடெங்கும் மக்களைத் திரட்டி, பேரணிகளை நடத்தி, “மக்கள் ஆதரவு எனக்குத்தான்!” என்று காட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டார். மக்கள் எதிர்ப்பினை சமாதானப்படுத்தும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு, மின்சார கட்டணக் குறைப்பு என இவர் எடுத்த சில நடவடிக்கைகள் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை. அவரது கட்சிக்காரர்களும், அவருடைய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த சாமானிய மக்களும் இப்போது, “இம்ரான்கான் தேர்தலில் வெற்றி பெற்றபோது, பாகிஸ்தானிய மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், இன்று வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழைகளுடன் இருப்பதாக கூறினார். ஆனால், எங்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று வெறுத்துப் போய் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மக்களின் உணர்வினைப் புரிந்துக்கொண்ட கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டன. சில சொந்தக் கட்சி எம்.பி.க்களும் “நாங்கள் எங்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்கிறோம்” என்று சொல்லிவிட்டு, கட்சியிலிருந்து வெளியேறினார்கள். ஆட்சி ஆட்டம் கண்டது. இப்போது கவிழ்ந்துவிட்டது.
பொதுவாகவே, பாகிஸ்தானில் ஜனநாயகம் என்பதே ஒரு கேலிக் கூத்துதான். ஒன்று ராணுவ ஆட்சி நடக்கும்; அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தாலும், பாக். ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் ராணுவத்தை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அண்மைக்காலமாக, இம்ரானுக்கும், ஐ.எஸ்.ஐ. க்கும் இடையிலான உறவு சுமுகமாக இல்லை என்று சொல்கிறார்கள். ஆனாலும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் “பாகிஸ்தானின் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டினை சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்காவின் சதி இது! பாகிஸ்தானிய எதிர்க்கட்சிகள் அமெரிக்கக் கைகூலிகள்!, இம்ரானைக் கொலை செய்ய சதி நடக்கிறது! என்றெல்லாம் இம்ரான் தரப்பு அமைச்சர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தற்போது லண்டனில் இருக்கும் முன்னாள் பாக் பிரதமர் நவாஸ் ஷரீஃப், பாகிஸ்தான் அரசியலில் அண்டர்கிரவுண்டு சதிகளில் ஈடுபட்டு வருகிறார்” என்றும் இம்ரான் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். அதற்குள் என்னென்ன அரசியல் நாடகங்கள் பாகிஸ்தானின் அரசியல் அரங்கில் அரங்கேறும் என உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருகிறது.
இம்ரான் கான் – ஒரு குளோஸ் அப்
69 வயதாகும் இம்ரான் கான் 1952ல், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் லாகூரில் பிறந்தவர். அப்பா இக்ரமுல்லா ஒரு இன்ஜினீயர். அம்மா ஷகத் கானூமின். கூடப் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். வசதியான குடும்பம். ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி பயின்ற இம்ரான் தனது 13வது வயதிலிருந்து கிரிக்கெட் ஆடியவர். 1976ல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, 1982 முதல் 92 வரை பாக். அணியின் கேப்டனாக இருந்தார். 1992ல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றபோது இவர்தான் கேப்டன். அதே ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். அதன்பின் பெரும் நிதி திரட்டி தன் தாயின் நினைவாக ஒரு கேன்சர் மருத்துவமனை ஆரம்பித்தார்.
வாலிப வயதில் இவருக்கு
‘பிளே பாய்” இமேஜ் இருந்தது. இவருடைய நெருங்கிய தோழிகள் என இந்தி நடிகை ஜீனத் உட்பட ஒரு பெரிய பட்டியலையே லண்டன் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது. 1995ல், பிரிட்டனின் மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்டு ஸ்மித் என்பவரை மதம் மாற்றி திருமணம் செய்துக்கொண்டார் இம்ரான். அவர்களுக்கு சுலைமான், காசிம் என இரண்டு மகன்கள். ஒன்பதாண்டுகால
மணவாழ்க்கைக்குப் பின் இவர்களுக்கிடையே
விவாகரத்து நடந்தது. அதன்பின் பிரிட்டனில் வசித்த , பி.பி.சி.யில்
பணிபுரிந்த பாகிஸ்தானிய வம்சாவளியான ரேகம் கானை ரகசியமாக மணந்தார். இந்தத் திருமணமும் ஓராண்டில் முறிந்தது. ரேகம் கான் எழுதிய சுயசரிதையில் இடம்பெற்ற இம்ரானைப் பற்றிய பல செய்திகள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தின. பின்னர் 2008ல் தனது ஆன்மிக குரு என இம்ரான் கூறிக்கொண்டிருந்த (ஐந்து குழந்தைகளுக்கு தாயானவர்) புஷ்ரா வாட்டூ என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டார் இம்ரான்.
தெஹ்ரிக் – ஈ – இன்சாஃப் – அதாவது, ‘நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம்’ என்ற அமைப்பினை இம்ரான் கான் 1996ல் துவக்கினார். முதலில் ஓர் அரசியல், சமூக இயக்கமாக செயல்பட்டு, அதன் பின் 1999ல் ஒரு அரசியல் கட்சியானது. 2002ல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் இம்ரான். இவரது தாலிபான் ஆதரவு கொள்கைக்காக இவருக்கு “தாலிபான் கான்” என்ற செல்லப் பெயரும் உண்டு. 2020ல் இவர் ‘பின் லேடனை ஒரு தியாகி’ என்று வர்ணித்ததும் உலக அளவில் கண்டனத்துகுள்ளானது.
இம்ரானை வச்சி ஆடி சிக்ஸர் தட்டி விட்டார் சந்திர
மெளலி…சபாஷ்!