உத்தவ கீதை – 24
– டி.வி. ராதாகிருஷ்ணன்
இல்லாத ஒன்று
—————————–
இந்த வார கட்டுரையில் வந்துள்ள நிகழ்வு உண்மையில் உத்தவ கீதையில் கிடையாது.
ஆனாலும் செவிவழி செய்திகளாலும், சில ஊடகங்களில் இந்நிகழ்வும் “உத்தவ கீதை” என்று சொல்லப்பட்டுள்ளதாலேயும் இதையும் இத்தொடரில் உங்களுக்காக எழுதியுள்ளேன்.
நிகழ்வு இருக்கிறதோ… இல்லையோ…செய்திகள் சுவையாய் இருக்கின்றன.
உத்தவர் கண்ணனைக் கேட்டார்…
பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு!
நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.
உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?
நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன்.
“கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று, தருமா! வேண்டாம் இந்த சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. “திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்” என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்டபோது “தான் சென்று, துகில் தந்தேன். திரௌபதி மானம் காத்தேன்” என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையை பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தர்மமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். “உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். “துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளை சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
ஐயோ…. விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி…. ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.
“அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன்” என்றார் உத்தவர்.
கேள் என்றான் கண்ணன்.
“அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? ”
புன்னகைத்தான் கண்ணன்.
“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.
“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? “என்றார் உத்தவர்.
“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.
“எனக்குத் தெரியாமல் சூதாடலாம்” என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறுவிதமாக முடிந்திருக்கும்” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா… எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். மிகவும் எளிமையாக இந்த தத்துவத்தை உத்தவருக்கும் உபதேசித்தான் கண்ணன்.
(முற்றும்)
அற்புதமான தொடர். வாரந்தோறும் அளித்த பரவச ஆனந்த அனுபவம் மறக்க முடியாது. கட்டுரையாளருக்கும், கல்கிக்கும் மிக்க நன்றி!