0,00 INR

No products in the cart.

ஆனால்… அவர் மாறவில்லை

சிறுகதை

ஓவியம் : தமிழ் 

                                                                       
தெலுங்கில் : ப்னிம்                                             தமிழில்: ராஜி ரகுநாதன்  

 

“மொதலாளீ! என்ன சொல்றீங்கய்யா?”

“மொதலாளி இல்லடா…! சம்பந்தீன்னு சொல்லு. என் பெண்ணை உன் மகனுக்கு கல்யாணம் செய்யலாம்னு கேட்க வந்திருக்கேன். இனிமேல் இந்த சங்கோஜம் எல்லாம் தேவையில்லை.”

“என்னடா மவனே…! இது உண்மையா? சௌத்ரி ஐயா மகளை நீ காதலித்தாயா? நம்ம நிலைமை என்ன? அவுங்க அந்தஸ்து என்ன? புரிஞ்சுதான் இந்த மாதிரி செய்தாயா?”

“நானாகப் போய் அந்தப் பொண்ணுட்ட காதலிக்கிறேன்னு சொல்லல நயினா. அதுவே வந்து சும்மா சும்மா என்ட்ட சொல்லிச்சு. மொதல்ல பயமாயிருந்துச்சு. அது வந்து பேசப் பேச எனக்கும் புடிச்சிப் போச்சு. நானும் சொல்லிப் பார்த்தேன். அது கேக்கல. காதல்னுச்சு… கல்யாணம்னுச்சு…”

மகன் பேசுவதைக் கேட்டு சிலையாகிப் போனான் கோட்டய்யா.

“பெரியவங்களோடு விவகாரம் வெச்சிக்கக் கூடாதுடா மவனே!” கோட்டய்யாவுக்கு குழப்பம் தீரவில்லை.

“உண்மைதான் நயினா. பெரியவங்களுடைய உறவைவிட அவுங்க கோபம் ஆபத்தானது. நான் ஒருவேளை அந்தப் பெண்ணை கடினமா மறுத்துப் பேசினால் என் மேல் பாலியல் வன்முறை செய்ததாக திருப்பிச் சொல்லிடுமோன்னு பயமா இருந்திச்சு. அதனாலதான் உங்கப்பாவோடு பேசிப்பாருன்னு சொல்லி தப்பிச்சுக்கிட்டேன். அந்தப் புள்ள அதையும் சாதிச்சிடும்னு நான் எதிர்பார்க்கல” என்றான் கிருஷ்ணா..

“நீங்க கோட்டய்யா வீட்டுக்குப் போனீங்களா?” கோபத்தோடு கேட்டாள் சௌத்ரி மனைவி கனகரத்தினம்.

“ஆமாம்!”

“என்னிடம் ஏன் முன்கூட்டியே சொல்லல?”

“உன்னோடு கலந்து பேசணுமா? உன்னிடம் எல்லாம் சொல்லணுமா?”.

“என் மகள் வாழ்க்கை விஷயம் பற்றி என்னிடம் கலந்து பேச வேணும்னு எதிர்பார்ப்பதில் என்ன தப்பு?”

சௌத்ரிக்கு கோபம் பொங்கியது. வேறொரு சமயமாயிருந்தால் மனைவியின் கன்னம் வீங்கியிருக்கும்.. ஆனால் இப்போது ஏனோ கோபத்தை அடக்கிக் கொண்டார்.

“கோட்டய்யாவையோ அவனுடைய மகனையோ நம் வீட்டு வராண்டாவைத் தாண்டி வீட்டிற்குள்ளே வர விட்டதில்லை நாம. அவன் பால் கறந்து கொடுத்தால் அதில் மஞ்சள் பொடி தெளித்து எடுத்துக்குவோம். அவனுக்கு ஏதாவது கொடுக்க நினைச்சால், மாட்டுக் கொட்டகையில் இலை போட்டு சாப்பாடு கொடுப்போம்… அப்படிப்பட்டவனை சம்பந்தியாக்கிக் கொள்வதற்கு நீங்க எப்படி ஒத்துகிட்டீங்க? இதுதான் என் கேள்வி. ஆனால் நீங்க…” அழுதுகொண்டே உள்ளே சென்றாள் கனகரத்தினம்.

சௌத்ரி புன்னகை பூத்தார். “மஹிமா!” என்று மகளை அழைத்தார்.

“கிருஷ்ணாவோடு உன் கல்யாணம் செட்டில் செய்யப் போகிறேன். நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்” என்றார்.

மஹிமாவால் நம்ப முடியவில்லை. வெயிலில் பூத்த வெண்ணிலாவாக குளுமையை நிரப்பிய செய்தி அது. ஆனந்தத்தில் அவள் கண்கள் பனித்தன. கற்பனையிலும் கனவிலும் மட்டுமே பார்த்து மகிழ்ந்த வாழ்க்கை கைக்குக் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்… தந்தையின் காலில் விழுந்து நன்றி கூறினாள்.

“டாடீ! கிருஷ்ணாவை நீங்க அக்செப்ட் செய்துட்டீங்களா டாடீ?”

“எல்லாம் உனக்காகத்தாம்மா…! எனக்காகவும் கூட!” என்றார் சௌத்ரி.

சௌத்ரி ஒன்றும் தெரியாதவரல்ல.. இத்தனை காலமாக அடக்கி ஆண்ட குடும்பத்தோடு உறவு கொள்வதற்கு அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. நெருங்கி வரும் தேர்தலில் அவர் வசிக்கும் தொகுதி தலித் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிந்தார். தன் அதிகாரமும் பதவியும் கை நழுவிப் போகாமல் ஒரு தலித் கையில் வைக்க வேண்டுமென்றால்… அந்த தலித் தன் மாப்பிள்ளையே ஆனால்… தன் அதிகாரமே செல்லுபடியாகும். மகள் காதலித்து செய்த தவறுக்கும் பிராயச்சித்தமாகிவிடும்.

வரப் போகும் மாப்பிளையை வீட்டிற்கு அழைத்தார் சௌத்ரி. கிருஷ்ணா நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.

“எலெக்‌ஷனில் போட்டியிடுவதற்கு உன் பெயரை பதிவு செய்யவேண்டும்.
நீ என் மகளைக் காதலித்து அவளுக்கு ஹீரோ ஆனாய். நீ ஹீரோ என்றால் நான் ஹீரோ மேக்கர். தேர்தலுக்கு வேண்டிய செலவெல்லாம் நான் பார்த்துக்கறேன். என் மாப்பிளையாக நீ இந்த எலெக்‌ஷனில் ஜெயித்தால்…” என்று  நிச்சயதார்த்தம் ஆன கையோடு கிருஷ்ணாவிடம் கூறினார் சௌத்ரி.

“அதில்லீங்க மொதலாளி…! அதில்லீங்க மாமா! எனக்கு அரசியலில் விருப்பமில்லீங்க! நான் தேர்தல்ல நிற்க விரும்பலீங்க. திருமணத்திற்குப் பின் நாங்க ரெண்டு பேரும் வேலை தேடிக்கொண்டு வாழ்க்கை நடத்தலாம்னு நினைச்சிருக்கோம்”.

சிதறிய எரிமலை போலானார் சௌத்ரி.

“தங்க சிம்மாசனத்தின் மேல் நாயை உட்கார்த்தி வைத்தாற்போலன்னு…. கவி வேமனா எப்போதோ சொல்லிட்டாரு. போடா வெளியே…! உடனே நட வெளியே! எங்க வீட்டுக்குள்ளே வருவதற்கு என்ன தைரியம் உனக்கு?” என்று தன் சுபாவத்தைக் காட்டி குரலை உயர்த்தினார் சௌத்ரி.

உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த மஹிமா நடுங்கினாள். ’இது எதில் போய் முடியுமோ’ என்று பயந்தாள்.

’அனைவரின் முன்பும் இவன் என் மாப்பிளை’ என்று பெரிய அளவில் நிச்சயதார்த்தம் செய்த சௌத்ரியின் அசுர குணம் மேலெழுந்தது. அதன் பலனாக அந்த முகூர்த்தமே அவனுடைய அவமதிப்புக்கான முகூர்த்தமுமாயிற்று.

கோட்டய்யா இந்த பரிணாமத்தைத் தாங்க முடியாமல் தன் வீட்டு மின் விசிறியையே தூக்குக் கம்பமாக்கிக் கொண்டு தொங்கினான்.

நாட்கள் கடந்தன. ஆண்டுகள் உருண்டன. முகூர்த்தங்களும் மாறின. ஆனால் மாறாமல் இருப்பவர் சௌத்ரி மட்டுமே.

அவர் மகள் மஹிமாவும் கிருஷ்ணாவும் ஓடிப் போய் மணம் புரிந்துகொண்டு கண் காணாத தொலைவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்கள்.

அரசியலில் பணத் திமிரோடு ஒரு மனிதனை பலி வாங்கினாலும் மற்ற இரு உயிர்களை அவரால் பிரிக்க இயலவில்லை. மகளும் மருமகனும் எங்கே இருக்கிறார்கள் என்று சௌத்ரிக்குத் தெரியாது. தெரிந்தால் என்ன விபரீதம் நிகழுமோ…! அவர்களைப் பற்றி நாமும் அவரிடம் சொல்ல வேண்டாம்.

 

1 COMMENT

  1. அரசியல் வாதிகளின் வீட்டில் நடக்கும் சம்பவம் சாதகமாக இல்லைஎனில் துன்பமாகத்தான் சங் காே ஜப்படும் என்ற உணர்வை மனதில் விதை த்த கதை.வாழ்த்துகள்.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

1
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...