– எஸ். சந்திரமௌலி
நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் மிக முக்கியமானதாகக் கவனிக்கப்படுவது உத்தரப்பிரதேச தேர்தல்தான். இந்தத் தேர்தல் முடிவுகள், ’அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்’ என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மோடியின் பாபுலாரிடியை மட்டுமே முன்னிறுத்தி, பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளில் ஜெயித்து ஆட்சி அமைத்தால் ’யார் முதலமைச்சர்’ என்று சொல்லாமலேயே களம் கண்டது பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தவுடன், கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான யோகி ஆதித்யநாத்தை மாநில அரசியலுக்குக் கொண்டு வந்து, முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தது. அவர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், உ.பி.யின் மேலவை உறுப்பினரானார். இந்த ஆண்டு ஜூலையில் அவரது சட்டமன்ற மேலவை பதவிக் காலம் முடிவடைகிறது. ஆனால், அதற்கு முன்பாக, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவர் தமது சொந்தத் தொகுதியான கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதைப் பற்றி சமாஜ்வாதிக் கட்சியின் அகிலேஷ் யாதவ் அடித்த கமெண்ட்: ”மக்கள் யோகியை வீட்டுக்கு அனுப்பும் முன்பாக பா.ஜ.க.வே அவரை அனுப்பிவிட்டது!”
சரி! ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கும் உ.பி.யில் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வரலாமா?
403 இடங்கள் கொண்டது உ.பி.சட்டமன்றம். மெஜாரிடிக்கு 202 இடங்கள் தேவை. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களில் தேர்தல் நடக்கிறது. சராசரியாக ஒவ்வொரு கட்டத்திலும் 50 முதல் 60 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
உ.பி.யைப் பொறுத்தவரை நான்கு பிரதான கட்சிகள். ஆளும் பா.ஜ.க. கடந்த முறை ஆட்சி இழந்தாலும், உற்சாகமாக ஆட்சியைப் பிடிக்க முயலும் சமாஜ்வாதி கட்சி. அடுத்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. நான்காவதாக காங்கிரஸ். ஊரில் உள்ள உதிரிக் கட்சிகளை எல்லாம் இந்தக் கட்சிகள் தங்கள் சௌகரியப்படி வளைத்துப் போட்டு, கூட்டணி அமைந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அது உ.பி.யில் பிரியங்கா காந்தியையே நம்பி உள்ளது. இந்திராகாந்தி போன்ற அவரது இமேஜ் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் என்று இன்னமும் அந்தக் கட்சி நம்புகிறது என்பதுதான் இந்தத் தேர்தலின் மிகப் பெரிய ஜோக். கடந்த தேர்தலில் சுமார் 6% வாக்குகள் வாங்கி ஏழு இடங்களில் மட்டுமே ஜெயித்தது காங்கிரஸ் கட்சி. ஆனாலும், பிரியங்காவின் முடிவின்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 40% பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி, பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்ணின் தாய், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, ஜெயிலுக்குச் சென்ற பெண் போராளி போன்றவர்களைத் தமது வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு இன்னமும் நடைமுறைபடுத்தப்படாத நிலையில், பிரியங்காவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
ஆனால், மொத்த வாக்காளர்களில் 40% பெண்கள் என்றாலும், இது காங்கரசின் வெற்றிவாய்ப்பினை அதிகரிக்குமா என்பது கேள்விக்குறிதான். பிரியங்கா பார்த்துக் கொள்கிறார் என்பதால், வயதாகி விட்ட, சோனியா காந்தி தீவிரப் பிரசாரத்துக்கு வரவில்லை. ராகுல் காந்தியோ, மோடியுடனான டிவிட்டர் விமர்சனமே தமது தேர்தல் பிரசாரம் என நினைத்துக் கொண்டுவிட்டார் போலும். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அது ஆச்சர்யம்தான்! கடனே என்று களமிறங்கி இருக்கிறது காங்கிரஸ் என்பதே உ.பி. அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
அடுத்தாக பகுஜன் சமாஜ் கட்சி. கடந்த தேர்தலில் சுமார் 22% வாக்குகள் பெற்று, 19 இடங்களில் வென்றது அக்கட்சி. ஆனால், மாயாவதி, இந்தத் தேர்தலை வெகு சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. காரணம், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தானும் வேட்பாளராகக் களமிறங்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ராவும் போட்டியிடவில்லை. ஆனால் மாயாவதி உ.பி, பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கட்சி அறிவித்துள்ளது. சமீபகாலமாக, பல முக்கியஸ்தர்கள் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில், மாயாவதி மீதான ஊழல் புகார்கள், சொத்துக் குவிப்பு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவரை மறைமுகமாக பிரஷர் கொடுத்து, டம்மியாக்கிவிட்டது பா.ஜ.க. என்று விஷயமறிந்த வட்டாரம் சொல்கிறது.
அப்பா முலாயம்சிங் துவக்கிய சமாஜ்வாதி கட்சி இப்போது அவரது மகன் அகிலேஷ் யாதவின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. அவர் முதலமைச்சராக இருந்ததைவிட ஐந்தாண்டுகால எதிர்க்கட்சி அரசியல் அவரைப் பக்குவப்படுத்தி உள்ளது என்கிறார்கள். இளம் தலைவர் என்ற இமேஜ், அவரது சுறுசுறுப்பு எல்லாம் அவருக்கு பிளஸ் பாயிண்ட்கள்.
ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாத் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பி, பேச்சு வார்த்தை துவக்கினாலும், தொகுதிப் பங்கீட்டில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆம் ஆத்மி இப்போது தனியே களமிறங்கி உள்ளது. பாரம்பரியமாக யாதவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி சமாஜ்வாதி கட்சிக்கு உண்டு. இப்போது உபரியாக ஓ.பி.சி. வோட்டுக்களையும் பிராமண வாக்கு வங்கியையும் கவர முயற்சி செய்கிறார் அகிலேஷ். ஆனால், இவரது ஆதரவு முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மஜ்லிஸ் கட்சி போன்றவற்றால் பிரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்சியில் அகிலேஷ் மட்டுமே ஸ்டார் பிரச்சாரகர். அவருக்கு இணையான வேறு தலைவர்கள் இல்லை என்பது ஒரு குறை. கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தள், ஜாட் இனத்தவர் நிறைந்த மேற்கு உ.பி.பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் போட்டி இடுகிறது. ஆனால், அது, மற்ற பகுதிகளில் சமாஜ்வாதியின் வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகம்தான்.
தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க.வுக்குக் கடுமையானப் போட்டியைத் தரும் நிலையில் உள்ள கட்சி சமாஜ்வாதி கட்சிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமாஜ்வாதி ஆட்சியைப் பிடிக்குமா? அகிலேஷ் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா? என்று இப்போதே உறுதியாகச் சொல்லும் அளவுக்கு நிலைமை அவருக்குச் சாதகமாக இல்லை.
ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டு, மீண்டும் யோகியை முதலமைச்சராக்குவதற்கு முழு மூச்சுடன் களம் இறங்கியுள்ளது மோடி-அமித்ஷா என்ற இரட்டை எஞ்சின் கொண்ட பா.ஜ.க. வெற்றி பெற்றால், அது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கட்டமைக்கப்படும்.
யோகி ஆதித்யநாத் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார். உத்தரப் பிரதேசம், மிகக் குறைந்த மருத்துவ உள்கட்டமைப்பு கொண்டிருந்தாலும், கொரோனா தொற்றை, திறமையாகச் சமாளித்தார் என்ற பெயர் அவருக்கு உள்ளது. மாநிலத்தில் ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டிய தைரியசாலி யோகி என்று மக்கள் மத்தியில் பெயர்பெற்றிருக்கிறார்.
’அயோத்தி ராமர் கோயில், வாரணாசி கோயில் புனரமைப்பு ஆகியவை மூலமாக பா.ஜ.க. இந்துக்களின் வாக்கு வங்கியைத் தன் பிடியில் வைத்திருக்கிறது’ என்று சொல்லப்பட்டபோதிலும், ’உ.பி.யின் உயர்ஜாதி வாக்கு வங்கி பா.ஜ.க.விடமிருந்து கைநழுவிப் போய்விட்டது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கொரோனா காரணமாக வாழ்வாதாரப் பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், விவசாயிகள் போராட்டம், அதன்போது நடந்த மரணங்கள், அவற்றின் பின்விளைவுகள் போன்றவற்றின் தாக்கமும் இருக்கவே செய்யும். அப்னா தள், நிஷாத் கட்சியினருடனான கூட்டணி, பா,ஜ.க. ஆதரவைப் பரவலாக்கி, வெற்றிவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்; பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றாலும், முன்போல அத்தனை சீட்கள் (312) கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான்” என்று சீனியர் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.