0,00 INR

No products in the cart.

ரெண்டு பேர்,  ஒரு சண்டை

– எஸ். சந்திரமெளலி 

2001ஆம் ஆண்டு இசை விழா சீசன். மியூசிக் அகாதமியில் காலை நேர லெக்சர் டெமான்ஸ்டிரேஷன் நடந்துகொண்டிருந்தது. ’கும்பகோணம் ராஜப்பா’ என்ற மிருதங்க வித்வான் மிருதங்கம் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு மியூசிக் அகாதமியின் ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருது கும்பகோணம் ராஜப்பாவுக்குத்தான் வழங்கப்பட்டிருந்தது. தன்னுடைய உரையில் ’காசி விஸ்வநாத ஐயர்’ என்ற வித்வான் மிருதங்க வாசிப்புக்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளதாகவும், விஸ்வநாத ஐயரின் மகன் தன்னுடைய தகப்பனாரிடமிருந்து  நிறையக் கலைவளம் பெற்றிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

மியூசிக் அகாதமியின் அந்த வருடத்துக்கான சங்கீத கலாநிதி விருது மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அரங்கத்தில் அந்த வருடத்து இசை விழாவின் தலைவர் என்ற முறையில் அவரும் அமர்ந்திருந்தார். கும்பகோணம் ராஜப்பாவின் லெக்சர் டெமான்ஸ்டிரேஷன் முடிந்தவுடன், உமையாள்புரம் உரையாற்றினார்.

அவர் தமது உரையில்,  “இங்கே கும்பகோணம் ராஜப்பா குறிப்பிட்ட மிருதங்க வித்வான் காசி விஸ்வனாத ஐயர் என்னுடைய தகப்பனார்தான். இங்கேயே நான் உட்கார்ந்திருப்பது தெரிந்தும்கூட, என்னுடைய பெயரைக் குறிப்பிடாமல், விஸ்வநாத ஐயரின் மகன் தன் தந்தையாரிடமிருந்து நிறையக் கலைவளம் பெற்றிருக்கிறார் என்று என்னைப் பற்றிச் சொல்லி என்னை அவமானப்படுத்திவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

மறுநாள் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உமையாள்புரம் சிவராமன், மியூசிக் அகாதமியில் கும்பகோணம் ராஜப்பா தன்னை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, அதற்குச் சில காரணங்களையும் கற்பித்தார். உடனே பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு மூத்த சங்கீத வித்வான் ‘தனிப்பட்ட பிரச்னைகளை இதுபோல சபையில் பேசுவது சரியல்ல’ என்று கருத்துத் தெரிவித்தார். இது சங்கீத வட்டாரத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.

2002ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் வாரம் கல்கி இதழ் “குறும்பு ஸ்பெஷல்” என முடிவானதும், அந்தச் சங்கீத சலசலப்பை மையமாக வைத்து ஒரு ஆக்கப்பூர்வமான குறும்பு செய்யலாம் என ஐடியா கொடுத்தார் கல்கி ஆசிரியர் சீதா ரவி. அதனைச் செயல்படுத்தி, கட்டுரையாக எழுதும் பொறுப்பு எனக்கும், என் சக பத்திரிகையாளரான ப்ரியனுக்கும் வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளன்று காலை ஏழு மணிக்கு நானும் ப்ரியனும் ஆளுக்கு ஒரு பொக்கேவை வாங்கிக்கொண்டோம். நான் மைலாப்பூரில் ரங்காச்சாரி சாலையில் உள்ள உமையாள்புரம் சிவராமன் வீட்டுக்குச் சென்றேன். ப்ரியன் கும்பகோணம் ராஜப்பாவின் வீட்டுக்குச் சென்றார்.

உமையாள்புரத்தின் வீட்டின் ஹாலில் கையில் பொக்கேயுடன் காத்திருந்தபோது அவர் வந்தார். அவரது பார்வையிலேயே ஏகப்பட்ட கேள்விகள். “கும்பகோணம் ராஜப்பா ஐயர் வீட்டிலிருந்து வருகிறேன்; அவர் இந்த பொக்கேவை உங்களிடம் நேரில் சென்று கொடுத்துவிட்டு வரும்படிச் சொன்னார்” என்றதும், “நீங்க அவர் கிட்டே மிருதங்கம் கத்துக்கறீங்களா?” என்று கேட்டார்.

“இல்லை; அவருக்கு வேண்டியவன் என்பதால், என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்.”

“எதுக்கு இதெல்லாம்?”

“உங்களுக்கும், அவருக்கும் இந்த வருஷம் அகாதமியில அவார்டு கிடைச்சிருக்கு. ஆனா துரதிருஷ்டவசமா இரண்டு பேருக்கும் இடையில மனஸ்தாபம். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிச்சு, அதைச் சரிசெய்யத்தான் என்னை ராஜப்பா அனுப்பி வெச்சார். உங்க கையில இந்த பொக்கேவை கொடுத்திட்டு வரச்சொன்னார்.”

“நான் இதை வாங்கிக்கொள்ள மாட்டேன்.”

“இல்லை; நீங்க மறுக்காமல், கண்டிப்பா வாங்கிக்கணும்.”

“நான் வாங்கிக்கொள்ள மாட்டேன்; வேணும்னா இதோ இப்படி வெச்சிட்டுப் போங்க” என்று சுவரோரம் கையைக் காட்டினார்.

கையில் வைத்திருந்த பொக்கேயை அந்த ஹாலில் சுவர் ஓரமாக கீழே வைத்துவிட்டு, நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். “இதெல்லாம் வேண்டாத வேலை; எதற்காக இதுபோல எல்லாம் பண்ணறீங்க? ” மனுஷர் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார்.

“மன்னிக்கவும்; வித்வான்களிடையே சுமூக உறவு வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் செய்தோம்.”

“எனகென்னவோ இது பிடிக்கவில்லை.”

“உங்களைப் புண்படுத்தணும்கிறது எங்க நோக்கமில்லை” என்றதும், கொஞ்சம் கூல் ஆனார். ஆனாலும், வீட்டுக்கு வெளியில் காத்துக் கொண்டிருந்த போட்டோகிராபரை உள்ளே அழைத்து, “பொக்கே கொடுப்பதை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டபோது, “அதை நான் கையில் வாங்கிக்கொள்ள மாட்டேன்; வேணும்னா நீங்களே கையில வைத்துக் கொண்டு, என் பக்கத்தில் நின்னு போட்டோ எடுத்துக்கோங்க” என்றார். போட்டோ எடுத்துக்கொண்டு, மறுபடியும் பொக்கேவை சுவர் ஓரமாக வைத்துவிட்டு, விடைபெற்றேன்.

சரி! உமையாள்புரம் அனுப்பி வைத்ததாக, கோடம்பாக்கம் ராம் தியேட்டர் எதிரே கங்கை அம்மன் காலனியில் வசித்த கும்பகோணம் ராஜப்பா வீட்டுக்கு பொக்கேயுடன் ப்ரியன் போனாரே! அங்கே என்ன நடந்தது? அவரே சொல்கிறார்:

“கும்பகோணம் ராஜப்பா இருக்காரா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தபோது, நாலு முழ வேட்டி, அரைக் கை கதர் சட்டையணிந்திருந்த ஒரு முதியவர், “நான்தான் ராஜப்பா. நீங்க…?” என்று கேட்டபடியே வந்தார்.

“உள்ளே போய் பேசலாமே?” என்று சொன்னதும், என்னை அழைத்துக் கொண்டு அஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட மிருதங்க வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டு போனார். தரையில் பாய் விரித்து, உட்காரச் சொன்னதும், “இந்த மலர்க்கொத்தை அன்பின் அடையாளமாக உமையாள்புரம் சிவராமன் அனுப்பி இருக்கிறார்” என்றதும், அவர் ஆச்சர்யத்துடன், “என்ன?… என்ன?” என்று கேட்டார்.

“முதலில் இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றதும், மிகுந்த தயக்கத்துடன் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டு, சில வினாடிகள் மௌனமாக இருந்தார். அந்தச் சமயம் பார்த்து உமையாள்புரம் வீட்டிலிருந்து குறும்பு வேலை முடிந்து புறப்பட்டுவிட்ட நிருபரிடமிருந்து (அதாவது என்னிடமிருந்து) மொபைலில் கால் வர, ராஜப்பா ரொம்ப எமோஷனலாக, “யார்?… யார்? சிவராமனா பேசறது?” என்று ஆர்வம் பொங்கக் கேட்டார்.

இதற்கு மேலும் இந்தப் பெரியவரோடு விளையாடுவது முறையல்ல என்று விஷயத்தைச் சொல்லிவிட்டேன். “உமையாள்புரம் சிவராமனிடமிருந்து பொக்கே வரவில்லை” என்று அறிந்தவுடன் அவருக்குச் சற்றே ஏமாற்றம். “இந்த பொக்கேவை நான் கொடுத்ததாக அவருக்கே கொண்டு போய் கொடுங்களேன்” என்றார்.

“அவருக்கும், ஒரு பொக்கே போயிருக்கிறது; சங்கீத சீசனில் இரண்டு மூத்த வித்வான்களிடையே நல்லுறவு மலர நாங்கள் எடுத்த குறும்புத்தனமான முயற்சி இது” என்று சொல்லி, பொக்கேவை அவர் கையில் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டோம்.

அடுத்து கல்கி பத்திரிகை பற்றியும், இசைத்துறைக்கு அதன் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு பற்றியும் சிலாகித்துப் பேசினார்.

“எங்கே பேசினாலும், ‘எனக்கு ஐந்து குரு’ என்று என்னையும் சேர்த்துச் சொல்லி வந்த சிவராமன், சமீப காலமாக என்னை அவமானப்படுத்தும் விதமாக, என்னை விட்டுவிட்டு, நாலு குரு என்று சொல்கிறார். அந்த மனவருத்தத்தில்தான் அகாதமியில் பேசும்போது சிவராமன் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்று விளக்கம் அளித்தார் கும்பகோணம் ராஜப்பா.

“சரி! சிவராமன் பத்தி உங்க அபிப்ராயம்?” என்று கேட்டதும்,

“அசுர சாதகம் செய்வார்; அதற்கு அவருக்கு நல்ல கௌரவம் கிடைச்சிருக்கு; நன்னா இருக்கட்டும்” என்று வாழ்த்தினார். விடைபெற்றேன்”

இந்தக் குறும்பு எபிசோடு ஒரு பக்கம் என்றால் அந்த வார கல்கி அட்டையில் இடம்பெற்றது நானும், ப்ரியனும்தான். அட்டைக்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, நாங்கள் இருவரும் முகமூடி அணிந்துகொண்டு, கையில் பொக்கேவுடன் நிற்கும்படி போட்டோ எடுத்து, அட்டையில் போடுவது என முடிவானது. அந்த அட்டைப்படக் கட்டுரைக்குத் தலைப்பு: இரண்டு பேர்; இரண்டு பொக்கே; ஒரு குறும்பு.

உமையாள்புரத்துடனான இந்தக் குறும்பு  நடந்து ஏழெட்டு வருடங்கள் கழித்து, உமையாள்புரம் சிவராமனுக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்தபோது, அமுதசுரபிக்காக அவரைச் சந்திக்கச் சென்றேன். அவரது வீட்டுக்குள் நுழைந்தபோது எனக்குக் குறும்பு ஸ்பெஷல் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் என்னை அவருக்கு நினைவில்லை. தன் மிருதங்க வாழ்க்கைக் குறித்து மிகவும் உற்சாகமாகப் பேசினார்.

“இந்த விருது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்பதைவிட தெய்வீகமான இந்த வாத்தியத்துக்குக் கொடுக்கப்பட்ட கௌரவமாகவே நான் நினைக்கிறேன். மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கு ஒப்ப எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நான் மிகக் கடுமையாக உழைத்தேன். அவற்றை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டவன் எனக்குத் தேவையான அனைத்தையும் அளித்துக்கொண்டிருக்கிறான். தானத்தில் சிறந்தது வித்யாதானம்தான். என் குருநாதர்களிடமிருந்தும், எனக்கு வாசிக்க வாய்ப்பளித்த இசை மேதைகளிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டவற்றை வித்யாதானமாக எனது அனைத்து சிஷ்யர்களுக்கும் நான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த மேதைகளிடமிருந்து நான் இசையை மட்டுமில்லாமல், பப்ளிக் ரிலேஷன்ஸ், நேர நிர்வாகம் என பல முக்கியமான விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். எனக்கு உழைப்பதற்குத் தேவையான உற்சாகத்தை என்றென்றும் அபரிமிதமாக அளித்துக்கொண்டிருப்பவர்கள் எனது ரசிகப் பெருமக்கள் ” என்றார்.

தமது சினிமா அனுபவங்களையும் உமையாள்புரம் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நடிகர் திலகம் சிவாஜி நடித்த மிருதங்கச் சக்ரவர்த்தி படத்தில் சிவாஜிக்காக மிருதங்கம் வாசித்ததை தனக்குக் கிடைத்த ஒரு அரிய அனுபவமாக நினைக்கிறார். சிவாஜி அவரை “வாத்தியார் சார்!” என்றுதான் மரியாதையோடு அழைப்பாராம். ஒவ்வொரு காட்சியிலும், விரல் அசைவுகள் சரியா? என்று உமையாள்புரத்திடம் கேட்டு, அவர் ஓகே என்று சொன்னால் மட்டுமே திருப்தி அடைவாராம். “அந்தப் படம் 100 நாள் ஓடி, மிருதங்கத்துக்கும், எனக்கும் பெருமைசேர்த்தது. மிருதங்கச் சக்ரவர்த்தி படத்துக்குப் பிறகு, கர்நாடக இசை என்ற வட்டத்துக்கு வெளியில் இருந்த பல ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நான் பிரபலமானேன். பிரபல விமர்சகர் சுப்புடு, “மிருதங்கத்துக்கு என்றைக்கும் நீர்தான் சக்ரவர்த்தி!” என்று சொல்லிப் பாராட்டினார்” என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

எம்,ஜி.ஆர். உமையாள்புரம் சிவராமனின் பரம ரசிகர். ஒருமுறை எம்.ஜி.ஆர். தன் டெலிபோன் எண்னை அவரிடம் கொடுத்து, ” எப்போது வேண்டுமானாலும் என்னுடன் நீங்கள் பேசலாம்” என்று சொன்னாராம். “அவர் முதலமைச்சரான சமயத்தில், நான் அவருக்கு போன் செய்து, ” உங்களுக்கு ஒரு மாலை போட வேண்டும் போல் இருக்கு” என்று சொன்னபோது அவர், “இங்கே (ராமாவரம் தோட்டத்தில்) ஒரே ஜன நெரிசல். இங்கே நீங்கள் வந்து சிரமப்பட வேண்டாம். இப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகளே எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. இந்த நிமிடமே நீங்கள் என் கழுத்தில் மாலை அணிவித்து விட்டது போல நான் உணர்கிறேன்” என்று சொன்னது எனக்கு ஆயுசுக்கும் மறக்காது. அது மட்டுமில்லாமல், என்னை ஆறு வருடங்கள் அரசவைக் கலைஞராகவும் நியமனம் செய்தார். எம்.ஜி.ஆர். ஒரு அபூர்வமான மனிதர்” என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சொன்னபோது அவர் குரல் தழுதழுத்தது.

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பேசும் சித்திரங்கள்

தனுஜா ஜெயராமன்   அண்மையில்  புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாரதியார் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு மாலதி செல்வம் அவர்களின் பாரதியார் ஓவியத்தை கண்டு வெகுவாக ரசித்து பாராட்டினார். தனது ஓவியக்கலை பணிகளுக்காக...

அதென்ன பெயர் 3.6.9 ?

நேர்காணல் ஜான்சன்   21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம்...

சிஎம் செல் அறிவிப்பு:  சீரியசா? ஸ்டன்ட்டா?

1
- எஸ். சந்திரமௌலி   அண்மையில் சிஎம் செல் என குறிப்பிடப்படும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகத்திலிருந்து பின்வரும்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி,  “பொது மக்கள் வீடு கட்டும்போது அதற்கான பிளான் ஒப்புதல்...

டிஜிட்டல் மோசடிகள்

0
வினோத்    இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில்  ரிசர் வங்கி  20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது.  இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது. ஃபிஷிங் இணைப்புகள் இந்த முறையில்,...

நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு

0
 - ஜான்ஸன்   அண்மையில்  லயோலா பொறியியில்   நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே. நீண்ட நாட்களுக்குப்...