0,00 INR

No products in the cart.

நான் விதியை நம்புகிறேன்!

ஒரு நிருபரின் டைரி – 11

– எஸ். சந்திரமெளலி

 “தான் வேறு; தான் வகிக்கும் பதவி வேறு என்பதைத் தன்னுடைய பதவிக்காலம் முழுவதிலும் கடைப்பிடித்தார். வீட்டுக்கு வரும்போது, பதவியையும், அதற்குரிய தோரணைகளையும் வாசலிலேயே கழற்றி வைத்துவிட்டு, புன்னகையுடன் உள்ளே வந்து, மிக இனிமையாகப் பழகுவார்” என்று  எழுத்தாளர் சுஜாதா தனது நண்பர் ஒருவரைப் பற்றி எழுதினார். அவர்தான்  முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர், ராஜிவ் காந்தி படுகொலையைத் துப்புத் துலக்குவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் டி.ஆர். கார்த்திகேயன் எனும்  தேவராயபுரம் ராமசாமி கார்த்திகேயன்.  சுருக்கமாக டி.ஆர்.கே. சுஜாதா பெங்களூரு பெல் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவர், கர்நாடக காவல் துறையில் இருந்தார். அந்த கொங்கு நாட்டுக்காரரும், இந்த ஸ்ரீரங்கத்துக்காரரும் செமை தோஸ்த்.

சுஜாதா பல சந்தர்ப்பங்களில் கார்த்திகேயனைப் பற்றி எழுதி இருக்கிறார். அதன் காரணமாக, நேரில் சந்திக்காமலேயே அவர் மீது ஒருவித மதிப்பும், மரியாதையும் எனக்கு ஏற்பட்டது. ராஜிவ் காந்தி படுகொலைப் புலனாய்வு தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம், புலனாய்வுக் குழுவின் தலைமையகமான மல்லிகையில் பிசியாக இருந்த அவருக்கு போன் செய்து, “புலனாய்வு பற்றி எதுவும் எனக்கு வேண்டாம்; முழுக்க முழுக்க பர்சனல் இன்டர்வியூ” என்று சொல்லியும், பேட்டிக்கு அன்புடன் மறுத்துவிட்டார்.

புலனாய்வு, விசாரணை, வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட் தீர்ப்பு எல்லாம் முடிந்த பிறகு சென்னை வந்திருந்த அவரது மனைவி கலா கார்த்திகேயனை பேட்டி கண்டேன். பரபரப்பான பணியை மேற்கொண்டிருந்த அந்த அதிகாரிக்குப் பின்னால் இருந்த அமைதியான பெண்மணி. அவரோடு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தாலே, ஏதோ ஆண்டுக்கணக்காக அறிமுகமானது போன்ற ஒரு அன்பும், தோழமையும் காட்டும் அவரது பண்பு ஆச்சரியப்படுத்தியது. எடுத்தவுடன் அவர் சொன்ன வார்த்தைகள், “கடந்த ஆறரை வருடங்களாக தலைமேல் இருந்த கண்ணுக்குத் தெரியாத ராட்சச சுமையை இறக்கிவைக்கப்பட்டுவிட்டது போல உணர்கிறேன்” என்பதுதான்.

“புலனாய்வுக் காலக்கட்டத்தில் பொது மக்களும், நண்பர்களும் அளித்த ஆன்மீக, தார்மீக பலம் மதிப்பில்லாதது. எங்கிருந்தெல்லாமோ, ‘தைரியமாக உங்கள் கடமையை செய்யுங்கள்; ஆண்டவன் துணை இருப்பான்’ என்று சொல்லி கோயில்களில் ஸ்பெஷலாக இவர் பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரசாதங்களை அனுப்பி வைப்பார்கள்.  “ஒரு பழைய ஹைதராபாத் நண்பரது வயதான தாய் அடிக்கடி போன் செய்து, “நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; உங்களுக்காக நான் தினமும் அல்லாவைத் தொழுகிறேன்” என்று நா தழுதழுக்கச் சொல்லுவார்” என்றார்.

கார்த்திகேயன் மல்லிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட சமயம் அவரது மகனும், மகளும் ஹைதராபாதில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தனித்தனியாக ஹாஸ்டல்களில் சேர்க்கும்படியானது.

“என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டபோதே என் தாயாரிடம் இவர்,
“எனக்கு கடமை மிக முக்கியம்; போலிஸ் வேலைக்கு நேரம், காலம் கிடையாது; எனவே, ஒரு சராசரிப் பெண் தன் கணவரிடம் எதிர்பார்க்கிற அனைத்தையும் என்னால் தர முடியாது. அதே சமயம், அவள் விரும்பிய சமயத்தில் உறவினர்களை சந்திக்கப் போவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை; ஆனால் நான் கூட வர வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது” என்று தெளிவாக சொல்லிவிட்டார்” என்றார் திருமதி கலா.

பெங்களூரில் கார்த்திகேயன் பணியாற்றிய காலத்தில் சமூக விரோதிகள் மீதான இவரது சில அதிரடியான நடவடிக்கைகளையடுத்து, “உங்க கணவருக்கு உங்க மீதும், குழந்தைகள் மீதும் அக்கறை கிடையாதா? இத்தனை சுறுசுறுப்பு ரொம்ப ஆபத்து; ஜாக்கிரதை” என்று மிரட்டல் போன்கள் வருமாம். ராஜிவ் படுகொலை புலனாய்வின் போது “மல்லிகையை வெடி வைத்துத் தகர்க்கப்போகிறோம்” என்று கூட மிரட்டல்கள் வந்ததாம்.

கர்நாடக மாநிலம் பெல்காமில் கார்த்திகேயன் எஸ்.பி.யாக இருந்தபோது தேர்தல் முடிவுகள் வெளியான டென்ஷனான நேரம். கன்னடம் பேசுகிறவர்களுக்கும், மராத்தி பேசுகிறவர்களுக்கும் அரசியல் மோதலில் நடந்த வன்முறையில் ஒரு பையனுக்கு தலையில் பலமான அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தான். பையன் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால், ஊரையே துவம்சம் செய்ய ஒரு கும்பல் காத்துக் கொண்டிருந்தது. பையனைப் பரிசோதித்த டாக்டர்கள், “அடி பலமாக இருக்கிறது; பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையின் டாக்டர் வர்மாவை உடனடியாக வரவழைத்தால் பையனை காப்பாற்றலாம்” என்று சொல்லிவிட்டார். அப்போது கர்னாடகாவில் கவர்னர் ஆட்சி. கார்த்திகேயன் நிமான்சுக்கு நேரடியாகவும், ராஜ்பவன் மூலமும் பேசி டாக்டர் வர்மா, பெல்காம் வர ஒப்புதல் பெற்றார். ஆனால் பெங்களூர்-பெல்காம் இடையிலான ஒரே ஃபிளைட்டில் இடம் இல்லை. ஸ்பெஷல் அனுமதி பெற்று விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து பயணம் செய்து பெல்காம் வந்து சேர்ந்தார் டாக்டர் வர்மா. உடனடியாக ஆபரேஷன் செய்து பையனைக் காப்பாற்றிவிட்டார். அப்போது வர்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றியுடன் கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகள் : “நீங்கள் ஒரு பையனின் உயிரைக் காப்பாற்றவில்லை; ஒரு மாவட்டத்தையே வன்முறை மற்றும் உயிர்ச் சேதத்திலிருந்து காப்பாற்றி விட்டீர்கள்” என்றாராம்.

கலா கார்த்திகேயனுடனான சந்திப்புக்குச் சில நாட்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக் குழு தலைமையகமான மல்லிகையிலிருந்து ஒரு போன் வந்தது. “முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஜோகிந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வேண்டும் என்று கேட்டீருந்தீர்களாமே! சார் அனுப்பி வைத்திருக்கிறார்” என்றது ஒரு குரல். அடுத்த அரை மணியில் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது.

ஜோகிந்தர் சிங்கின் அந்தப் புத்தகத்தை டெல்லியில் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தியைப் பத்திரிகையில் படித்துவிட்டு, சென்னையில் அதன் பிரதியைத் தேடியபோது, கிடைக்கவில்லை. எனவே, திருமதி. கலா கார்த்திகேயனை சந்தித்தபோது “அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தால், படித்துவிட்டுக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லி இருந்தேன். ஜோகிந்தர் சர்தார்ஜியின் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததன் பின்னணி இதுதான்.

அதன் பிறகு, கார்த்திகேயனுடன் நான் e-mail தொடர்பில் இருந்ததால், சென்னை வரும்போது தவறாமல் தகவல் வரும். ஒரு சில முறைகள் பேட்டிக்காகவும், மற்ற சமயங்களில் மரியாதைக்காகவும் சந்திப்பேன். அப்போதுதான் அவர் ராஜிவ் காந்தி புலனாய்வு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் வெளியானது. உடனே அதை வாங்கிப் படித்துவிட்டு, டெலிபோன் செய்து பாராட்டினேன். “தமிழில் அந்தப் புத்தகம் கண்டிப்பாக மொழி பெயர்க்கப்படவேண்டும்” என்று ஆர்வமாக இருந்தார் டி.ஆர்.கே.  பின்னர் அந்த வாய்ப்பு எனக்கே கிடைத்தது.

ஆர்வத்துடன் மொழி பெயர்க்க ஒப்புக்கொண்டுவிட்டேனே தவிர, அந்தப்பணி அத்தனை சுலபமாக இல்லை. சில சட்ட சொற்களுக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்காமல் திணறினேன். பொறுமையாகப் பல மாதங்கள் எடுத்துக் கொண்டு அந்தப் பணியை முடித்து, கலைஞன் பதிப்பகம் நந்தா தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.

வாய்மையின் வெற்றி : ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு என்ற அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அப்போது புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டரில் உள்ள லேண்ட் மார்க் புக் ஷாப்பில் நடந்தது. ஜார்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் கற்பகவினாயகம் புத்தகத்தை வெளியிட, திருமதி சௌந்தரா கைலாசம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தம்பதி சமேதராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் சுஜாதா, கார்த்திகேயனுடனான தன் நெடு நாளைய நட்பை நினைவு கூர்ந்து, புத்தகத்தையும் அறிமுகம் செய்துவைத்தபோது ஆங்கிலம், தமிழ் பொழிபெயர்ப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கோடிட்டுக் காட்டினார். கார்த்திகேயன், சுஜாதா இருவரது நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தார். மனித வெடிகுண்டுக்கு ராஜிவ் காந்தி பலியான பகுதியை அவர் தனக்கே உரிய மாடுலேஷனுடன் படித்தபோது, இந்தப் புத்தகத்தை ஒரு ஒலிப்புத்தகமாகக் கூட வெளியிடலாமோ எனத் தோன்றியது.

கார்த்திகேயன் சென்னை வரும்போது பெரும்பாலான சமயங்களில் ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பிரத்யேகமாக அவருக்காக புதுப்படம் ஏதாவது திரையிடப்படும். அப்போது தனியாகப் படம் பார்க்காமல், சென்னையில் சில நண்பர்களுக்கு தன்னுடன் படம் பார்க்க குடும்பத்துடன் வருமாறு மெயிலில் முன்கூட்டியே அழைப்பு அனுப்பி விடுவார். அப்படி நாங்கள் பல படங்கள் பார்த்திருக்கிறோம்.

ஒரு முறை நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோது அவருக்கு போன் செய்தேன். “மனைவி, குழந்தைகள் எல்லோரும் அழைத்துக் கொண்டு காலை சிற்றுண்டிக்கு வீட்டுக்கு வாருங்கள்” என்றார். சிற்றுண்டி முடித்து, உரையாடிக்கொண்டிருந்தோம். என் மகன் கௌதம், “ராஜிவ் படுகொலையை விசாரிக்க உங்களை நியமித்தபோது, உங்களுக்கு அந்த ரிஸ்கான வேலைக்கு ஓ.கே. சொல்ல தயக்கமாக இல்லையா?” என்று கேட்டான்.

என் மகனது கேள்விக்கு கார்த்தி சார் அளித்த பதிலின் சுருக்கம் இது:

“விதிவசமாக இரண்டு மகன்களை அவர்களுடைய இளமைக் காலத்திலேயே சோகமான சூழ்நிலையில் பறிகொடுத்துவிட்டவர் என் தாயார். எனவே, அவர், “அபாயமான இந்த மிகக் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமே!” என்றார். நான் அவருக்கு திரும்பத் திரும்ப சொன்ன ஒரே பதில்: “நான் என் தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமை இது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் விதியை நம்புகிறவன். அதற்கான காலம் வரும்போது யாராலும் என்னை இந்த உலகத்தில் நிறுத்தி வைக்க முடியாது; அதேபோல என்னுடைய முடிவு காலம் வரும் வரையில் என்னை இந்த உலகத்திலிருந்து யாராலும் அனுப்பி வைக்க முடியாது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் சாகத்தானே வேண்டும்? இம்மாதிரியான ஆபத்தான பணியை ஏற்றுக் கொண்டதால், நான் மரணத்துக்கான இன்னொரு வழியையும் சேர்த்துக் கொண்டேன். அவ்வளவுதான்.”

கார்த்திகேயன் தம்பதிகளிடமிருந்து விடைபெற்றபோது அவர் “ஊர் சுற்றிப் பார்க்க என் காரை எடுத்துக் கொண்டு போங்கள்! மாலை நாலு மணிக்கு திருப்பி அனுப்பி வைத்தால் போதும்” என்று சொன்னது நாங்கள் சற்றும் எதிர்பாராதது.

டெல்லியில் அவரை சந்தித்தபோது, “சென்னை வரும்போது, அவசியம் எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வரணும்” என்று நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தார். சுமார் இருபது நிமிடங்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, எங்கள் வீட்டு ஹாலில் இருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.நேரமாகிவிட்டது; புறப்படட்டுமா?” என்று கேட்டபோது, என் மனைவி,  “எங்க பசங்களை நேரத்துக்கு ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க, எங்க வீட்டு கடிகாரத்தை கால் மணி நேரம் ஃபாஸ்டா வெச்சிருக்கோம்” என்றார். அடுத்து நான், “சார்! நீங்கள் காவல் துறையில் பல வருடங்கள் பணியாற்றி இருகிறீர்கள்; அதன் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இருந்திருக்கிறீர்கள். மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பேட்டி வேண்டும்; நாளைக்கு ஒரு நேரம் சொன்னால், உங்களை சந்திக்கிறேன்” என்று நான் சொல்ல, அவர் உடனே,  “நாளைக்கு எதுக்கு? எனக்கு அவசரமில்லை; நான் இன்னும் பதினைந்து நிமிடங்கள் இங்கே இருக்கலாம்; உங்கள் பேட்டியை இப்போதே முடித்துவிடுங்கள்” என்றார்.

“சார்! அது மரியாதை இல்லை; நான் உங்களை வந்து சந்திப்பதுதான் முறை” என்று தயங்க, அவர், “நீங்க என்கிட்டே பேசணும்; அதை எங்கே வைத்துப் பேசினால் என்ன?” என்றார். ஓடிப்போய் டேப் ரெகார்டரைக் கொண்டு வந்து மடமடவென்று கேள்விகளை ஆரம்பித்தேன். கார்த்திகேயன் சென்னை வரும் தகவல் அறிந்தவுடன், நான் உட்கார்ந்து மனித உரிமைகள் குறித்து அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை தயார் செய்து எழுதி வைத்திருந்ததால், பிரச்னையில்லாமல் பேட்டி முடிந்தது.

வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டபோது, அந்தப் பணியை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று கார்த்திகேயனை மத்திய அரசு கேட்ட விஷயம் இங்கே பலருக்கும் தெரியாது. அப்போது, அவர் இன்னின்ன கண்டிஷன்களுடன் அந்த சவாலான பணியை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்தத் திட்டம் ஏன் செயல்படுத்தபடவில்லை என்பது அப்போதைய மத்திய அரசுக்கே வெளிச்சம்.

’ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு’ என்ற இமாலயப் பணியை கடமை உணர்வோடு செய்து முடித்த பல வருடங்கள் கழித்து அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அளித்தது.  ஆனால் அது ரொம்ப லேட் என்பது என் கருத்து.

2009ம் வருடம், ஆகஸ்ட் 3ம் தேதி அன்று இரவு திருமதி கலா கார்த்திகேயன் தூக்கத்திலேயே மரணம் அடைந்த செய்தியை ஈ மெயில் மூலம் அறிந்தபோது மிக நெருக்கமான ஒருவரை இழந்த சோகம் ஏற்பட்டது. என் பழைய வால்யூம்களைத் தேடி, கலா கார்த்திகேயனின் பேட்டி வெளியான கல்கி இதழ் பக்கங்களை ஸ்கேன் செய்து கார்த்தி சாருக்கு அனுப்பி வைத்தேன்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...