0,00 INR

No products in the cart.

அந்த சந்திப்பு – குரு தரிசனம்

நூல் அறிமுகம்

 

– சுப்பாராவ்

(வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு)

 

புத்தகக் கண்காட்சிகளில் எல்லா ஸ்டால்களிலும் புகுந்து விடவேண்டும். ஸ்டாலின் இண்டு இடுக்கு எதையும் விடாமல் எல்லா இடத்திலும் பார்வையை ஓட்ட வேண்டும். அப்போதுதான், நாம் வாங்க வேண்டும் என்று பட்டியலிட்ட புத்தகங்களுக்கு அப்பால், இப்படியும் ஒரு புத்தகம் வந்திருக்கிறதா? என்று நாம் வியக்கும் வண்ணம் அபூர்வமான புத்தகம் ஏதேனும் கண்ணில் படும். கழுகு போல் அதை லபக்கென்று கொத்திக் கொண்டு வந்துவிடவேண்டும். இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் நான் அப்படி கொத்திய ஒரு அபூர்வ புத்தகம்தான் பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டவரான ரா.கனகலிங்கத்தின்  ‘என் குருநாதர் பாரதியார்’ என்ற பொக்கிஷம்.

கனகலிங்கம்  பாரதியாருடனான தனது பழக்கம் பற்றி எழுதியிருக்கும் இந்த சிறு நூல் 1947 வாக்கில் வந்திருப்பதாகத் தெரிகிறது. முதல் பதிப்பு பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. முன்னுரை எழுதி இருக்கும் எஸ்.வையாபுரிப் பிள்ளையும், பி.ஸ்ரீ.யும்  தத்தம் முன்னுரைகளில் முறையே 25.09.1947,  05.10.1947 என்று தேதியிட்டிருப்பதை வைத்து இதை அறிய முடிகிறது. நான் வாங்கியிருப்பது இரண்டாவது பதிப்பு. இந்த நூலைப் பார்த்த யாரோ ஒருவர் ‘இது மறுபதிப்பு வரவேண்டும்’ என்று ஆசைப்பட்டு, பாரதி  தேசியப் பேரவையின் தலைவரான ஜி.ஆர்.மூப்பனாரிடம் தர, அவர் படித்துவிட்டு, அவரது முயற்சி காரணமாக அகரம் வெளியீடாக  2019ல் வந்துள்ளது. இந்தப் பதிப்பிற்கான முன்னுரையில் ஜி.ஆர்.மூப்பனார் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

வையாபுரிப் பிள்ளையும், பி.ஸ்.ரீயும் பாரதியாரை நேரில் பார்த்தவர்கள். பிள்ளையவர்கள் பாரதியாரைச் சந்தித்தபோது, அவரது வேண்டுகோளுக்கிணங்க, பாரதியார் சின்னஞ் சிறு கிளியேவையும், ஊழிக்கூத்தையும் பாடியிருக்கிறாராம். பி.ஸ்ரீ.யும் பாரதியுடன் நெருங்கிப் பழகியவர். இருவரின் முன்னுரைகளும் அற்புதம்.

1907ல் சுமார் பதினேழு வயதில் கனகலிங்கத்திற்கு பாரதியின் அறிமுகம் கிடைக்கிறது. கனகலிங்கத்தின் நண்பர்  ராயல் ரெட்டி என்பவர் இந்தியா பத்திரிகை வாங்குவார். அவரிடமிருந்து இந்தியாவை வாங்கிப் படித்த கனகலிங்கம் பாரதியின் ரசிகராகிவிட்டார்.  நண்பர்களுடன் மாலையில் பாரதியார் வீட்டுக்குச் செல்வார். அவர் நண்பர்களோடு பேசுவதைக் கேட்டுக் கொண்டு நிற்பார். ஆனால் பேசியதில்லை. அந்த வாய்ப்பும் ஒரு நாள் வந்தது.

பாண்டிச்சேரியிலிருந்த ’ப்ரொக்ரெஸிவ் யூனியன் கிரிக்கெட் கிளப்’ என்ற சங்கத்தின் ஆண்டுவிழாவில் ’பாரதியாரைப் பேச அழைப்பது’ என்று முடிவு செய்கிறார்கள்.  சங்கத் தலைவரான அடைக்கலநாதன் அர்லோக், ஜேம்ஸ் ஸாமுவேல், அந்துவேன் அர்லோப், கனகலிங்கம் ஆகியோர் பாரதியார் வீடு சென்று அவரை பேச அழைக்கிறார்கள்.  இந்த ஜேம்ஸ் சாமுவேல் பின்னாளில் பாரதியார் பாடும்போது பிடில் வாசித்தவர். அந்துவேன் அர்லோக் பாரதியாரின் பிரெஞ்சு வாத்தியாராகி பிரெஞ்சு சுதந்திர கீதத்தை பாரதிக்கு கற்றுத் தந்தவர். அந்த முதல் சந்திப்பை – கனகலிங்கம் குரு தரிசனம் என்கிறார் – கனகலிங்கம் வர்ணிக்கும் கட்டுரை அற்புதம் என்றால் அற்புதம். அத்தனை அற்புதம். படித்துத்தான் இன்புற வேண்டும்! வீட்டில் எங்கு பார்த்தாலும், புத்தகங்ளும் துண்டுக் காகிதங்களும். ஒரு மூலையில் குயில் பாட்டில் வர்ணிக்காத கறுப்புச் சட்டையும், ஒரு வீணையும் இருந்தன. ’எதைப் பற்றி நான் உபந்யாசம் செய்ய வேண்டும்?’ என்கிறார் பாரதி.  ’ஜாதி வேற்றுமைகள் பற்றி’ என்கிறார்கள். ’நல்லது, நல்லது, என் எண்ணம் போலவே இருக்கிறது உங்கள் விருப்பமும்,’ என்கிறார் பாரதி. ஜாதி வித்தியாசம் என்று மிக அற்புதமாக பாரதி உரையாற்றினாராம். போலீஸ் உளவாளிகள் முழுவதுமாக சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டார்களாம். யாராவது அதை பதிப்பித்தால் நல்லது. இந்த கூட்டத்தை நடத்தியதற்காக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. சிறுபிள்ளைகள், எப்படி அபராதம் கட்டப் போகிறீர்கள்? என்று பாரதி வருத்தப்பட்டாராம்.

பாரதி கனகலிங்கத்திற்கு உபநயனம் செய்து வைத்தது பற்றி ஒரு கட்டுரை. 1913 என்றுதான் இருக்கிறதேயன்றி அதில் தேதி இல்லை. வ.வே.சு ஐயர், குவளைக் கண்ணன் உள்ளிட்ட பல பெரியோர்களை அழைத்து, படு அமர்க்களமாக உபநயனம் செய்து வைக்கிறார் பாரதியார்.  சில நாட்கள் கழித்து, இதைக் கேள்விப்பட்ட புதுவையின் தேசமுத்துமாரி கோவிலின் பூசாரி நாகலிங்கப் பண்டாரம் என்பவர் பாரதியாரிடம் சொல்லி, ’எனக்கும் பூணூல் போட்டு விடு’ என்று வேண்டுகிறார்.  கனகலிங்கம் பாரதியாரிடம் அவரை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து அவரது ஆசையைச் சொல்கிறார். வாரும் குருக்களே, வாரும் என்று பாரதியார் அவருக்கும்  பூணூல் போட்டுவிட்டு, பிரும்மோபதேசம் செய்து வைக்கிறார்.

இந்த பண்டாரம் பாரதிக்கு நல்ல நண்பர். ஒரு நாள் அவர் பாரதி வீட்டுக்குப் போனபோது, பாரதியார், மகள் தங்கம்மாளை ஹார்மோனியத்தை எடுத்து வரச் சொல்லி,  ஹார்மோனியத்தில் சுருதி வைத்துக் கொண்டே, பண்டாரத்திடம், உன் அண்ணன் மீது ஒரு பாட்டுப் பாடியிருக்கிறேன்.
நீ அதற்கு என்ன பரிசு தருவாய்? என்று கேட்டுவிட்டு, தேடி உன்னைச் சரணடைந்தேன் பாடலைப் பாடினாராம். பின்னர் பண்டாரத்திற்கு அந்தப் பாட்டைச் சொல்லிக் கொடுத்து அவரைப் பாடச் சொல்லி கேட்டு ரசிப்பாராம்.

பாரதியின் பிரெஞ்சு ஆசிரியர் நல்ல இசை ஞானம் உள்ளவர். அவரிடம் பாரதியாரும், மகள் சகுந்தலாவும் மேற்கத்திய இசையும்,  பிரெஞ்சுப் பாடல்களும் கற்றுக் கொண்டனர். பிரெஞ்சு ஆசிரியர் கர்னாடக இசை கற்று ஜலதரங்கம் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். பாரதியார் வீட்டுக்கு அவர் வந்தால் ஒரே பாட்டுதான். பாரதியாருக்கு பிரெஞ்சு தேசிய கீதமான
லா-மார்ஸியேஸ் மிகவும் பிடிக்கும். அதை மிக உருக்கமாகப் பாடுவாராம். அதைக் கேட்டால், ஒரு இந்தியன் பாடுவதுபோல் இருக்காதாம். யாரோ வெள்ளைக்காரன் பாடுவதுபோல் இருக்குமாம். அதன் தாக்கத்தில்தான் ’ஜயமுண்டு பயமில்லை மனமே’ எழுதினாராம். ஒரு நாள் பிரெஞ்சு வாத்தியார் வந்ததும் பாரதியார் அவரிடம் ’ஜலதரங்கத்தில் விடமோ சேயவே’ என்ற கீர்த்தனையை வாசிக்கச் சொல்ல அவரும் வாசித்தாராம். ’ரசித்துக் கேட்ட பாரதியார், கை இன்னும் வேகமாக ஓடவேண்டும்’ என்று அவருக்கு அறிவுரை சொன்னாராம். அப்போது பக்கத்தில் இருந்த கனகலிங்கம் பாரதியாரிடம்,  இத்தனை ஞானம் உள்ள தாங்கள் உங்கள் பாடல்களை மட்டும் கனமான ராகங்களில் எழுதாமல், கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து மாதிரியான மெட்டுகளிலேயே ஏன் பாடுகிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அவர், என் பாட்டு தேசிய கீதம். மூட்டை தூக்குபவனிலிருந்து பாகவதர் வரை எல்லாரும் சுலபமாகப் பாடவேண்டும் என்பதால், என்கிறார். பாரதியின் பொன்வால் நரி போன்ற புத்தகங்களை ரயில் மூலம் பார்சலில் அனுப்பும் சின்னச் சின்ன வேலைகளையெல்லாம் கனகலிங்கம்தான் அவ்வப்போது செய்திருக்கிறார்.

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.

அக்காலத்தின் பாண்டிச்சேரி இளைஞர்கள் அனைவரையும் போல, கனகலிங்கமும், பிரான்ஸ் சென்று வேலை பார்க்கிறார்.  குருநாதரின் ஆசியால் மெஸெபடோமியாவில் ’மார்கில்’ என்ற இடத்தில் ரயில்வே என்ஜினீயரிங் இலாகாவில் பணிசெய்கிறார். ஐரோப்பாவில் ராணுவ சேவை முடிந்து அவர் இந்தியா திரும்பும் போது, பாரதி சென்னை சென்றுவிட்டார்.  கனகலிங்கமும்  சென்னை செல்கிறார். அங்கு திரும்பவும் பாரதியுடன் தொடர்பு. சிஷ்யன் நம்மைத் தேடி வந்துவிட்டான் பாருங்கள், என்று நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிறார் பாரதியார். பிறகு அடிக்கடி  சென்னை செல்லும் போதெல்லாம் சந்திப்பு.

ஆனாலும், பாரதி இறந்த தகவல் கனகலிங்கத்திற்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிவது பெரிய சோகம்.

சின்ன புத்தகம்தான். அந்தக் கால நடையில் எழுதப்பட்டது. பாரதி மீதிருந்த பக்தியால் மிகையான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள். ஆனாலும், அதில் பாரதியை நேரில் கண்டு வியந்த ஒரு சிறுவனின் பக்தியும், வியப்பும், சரியாகவே வெளிப்படுகின்றன.

பாரதி அன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

 ‘என் குருநாதர் பாரதியார்’
ரா.கனகலிங்கம்,
அகரம் வெளியீடு,
விலை: ரூ.80 /- பக்கம் – 104

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

தூக்கு மேடையின்  அமைப்பு எப்படி இருக்கும்?

1
நூல்  அறிமுகம் பொன் விஜி  (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)   தனது சொந்தத் தொழிலான விவசாயி ஒருவனுக்கு, இன்னொரு பரம்பரை பரம்பரையாகச் செய்துவந்த ஒரு தொழிலை, வறுமையின் நிமித்தம் ஏற்றுக் கொள்ள வேண்டிய...

குறுகத் தரித்த உலக சரித்திரம்

நூல் அறிமுகம்   சித்தார்த்தன் சுந்தரம்   வரலாறு என்றாலே அதை ஓர் அசூயையாகப் பார்க்கும் போக்கு நம்மில் பலருக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குத் தந்த மதிப்பை நம்மில் பெரும்பாலோர்...

பாம்புக்கு பயந்த ரசிகர்கள்

0
நூல் அறிமுகம்   - எஸ். சந்திரமௌலி   நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா அண்மையில்  சென்னையில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.  அதனையொட்டி விருதுநகரைச் சேர்ந்த என்.ஏ.எஸ் சிவகுமார் தொகுத்த காருக்குறிச்சி நூற்றாண்டு விழா மலர்...

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”.

0
நூல் அறிமுகம் ‘செம்பருத்தி’ - சாந்தி மாரியப்பன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)   (தி.ஜானகிராமன்) தி.ஜா.வின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை...

இந்நாவல் ஓர் ஆவணம் என்றே சொல்லலாம்.

0
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் -  நூல் அறிமுகம்   உலகில் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும் மிகத் தொன்மை வாய்ந்த மதங்களில் ஒன்றாக (Zoroastrianism) சொராஷ்ட்ரியம் மதமும் கருதப்படுகிறது. கி.மு 50000 - 20000 இடையில் இம்மதத்தின்...