0,00 INR

No products in the cart.

ஜெய் – சூர்யா!

கவர் ஸ்டோரி
– வினோத்

 

டந்த வார முழுவதும் சமூக  ஊடகங்கள், நாளிதழ்கள், சினிமா வட்டாரங்கள் என எல்லா இடங்களிலும்  பரவலாக பேசப்பட்ட விஷயம் சூர்யாவின் நடிப்பில் OTTதளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ என்ற படம்தான்.

“ஜெய் பீம் பார்க்காவிட்டாலும், அதைப்பற்றி நாலு வரி விமர்சனம் எழுதாவிட்டாலும் முகநூலில் இருப்பதற்கு அர்த்தமில்லை போலிருக்கிறது” என்ற அளவுக்கு அத்திரைப்படம் சமுக வலைத்தளங்களில் டிரெண்ட்  ஆகியிருக்கிறது.

இப்போதைய OTT காலகட்டத்தைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருப்பவர் சூர்யா. இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் இப்போது OTT யில் பெற்றிருக்கும் வெற்றியை பெறாமல் போயிருக்கக்கூடும்.

அது அப்படி என்ன படம்?

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதியில் மூவரை..போலீசார் அநியாயமாக கைது செய்து சித்ரவதை செய்ய… அவர்கள் காணாமல் போய் விட… அதில் ‘ராஜாக்கண்ணு’ எனும் கைதியின் மனைவி  ‘செங்கேணி’, யாரிடம் சென்று நியாயம் கேட்பது எனத் தெரியாமல் தவித்து நிற்கிறார். அப்போது ஒரு கூட்டத்துக்காக வந்த வழக்கறிஞர் சந்துருவிடம் அந்த பெண் விஷயத்தைச் சொல்கிறார். அந்த வழக்கை சந்துரு கையில் எடுத்து உயர் நீதிமன்றத்தில் ஒன்றரை வருடங்கள் வாதாடி வெற்றி பெறுகிறார்.

செங்கேணி வக்கீல் சந்துருவின் உதவியுடன் தன் கணவனைத் தேடி உண்மையை அறியும் வரை  நடக்கும் போராட்டமே கதைக்களம்.

நம் நாட்டின் ஒரு அடிப்படை அவலத்தை சுட்டிக்காட்டிய திரைப்படம், ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையையும் அவர்களுக்கு அந்த அடிப்படை உரிமைகள் கூடக் கிடைக்காமல் இருக்கும் அவலத்தையும் எடுத்துச் சொல்லும் திரைப்படம், “அவர்களுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது” என்பதை தைரியமாக எடுத்துச் சொன்ன; அதற்கு  ஒரு நல்ல தீர்வையும் தைரியமாக எடுத்துச் சொன்ன திரைப்படம் “ஜெய்பீம்”.

அந்த வகையில் தகுதியான ஒரு படம் தகுதியான வரவேற்பை பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. நிச்சயமாக இதை அனைத்துத் தரப்புக்கும் கொண்டு சேர்த்ததில் “சூர்யா” என்ற வெகுஜனக் கலைஞனின் பங்கு மிக அதிகம்.

சூர்யா நடித்த சூப்பரான படம். அமேசான் பிரைமில் இதைப் பார்த்து கண்ணீர் வடிக்காதவர்கள்… வருந்தாதவர்கள்  இல்லை. ஏழைகளின் வாழ்க்கைக் கொடூரங்கள் பற்றி அறியாதவர்களைப் பதறவைக்கும் காட்சிகள்.

படத்தின் பெயர் ஏன் ‘ஜெய் பீம்?’

சட்டத்தின் மூலமாகவே இந்தியாவின் துயருற்ற மனிதர்களின் துன்பங்களுக்கு நிலையான தீர்வு காண வேண்டுமென்று இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் அம்பேத்கர்.

“பீம்” என்பது டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயர். பீம்ராவ் அம்பேத்கர் எனும் பெயரின் சுருக்கமான “பீம் வாழ்க” எனும் அரசியல் கோஷம்தான் “ஜெய் பீம்”. ஒருவர் இன்னொருவரைப் பார்த்து “ஜெய் பீம்” என்று சொன்னால் நாம் இருவரும் சமூக விடுதலைக்குப் போராடும் ஒற்றுமையான தோழர்கள் என்பதை உணர்த்தும் கோஷம்.

இப்படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், லிஜோமோள் ஜோஸ், கே.மணிகண்டன் ஆகியோர் நடிப்பு என்பதைத்தாண்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அசகாய சூரத்தனங்கள் காட்டாத அம்பேத்கரைப் பின்பற்றும் ஒரு தீவிர வழக்கறிஞராக ரகளையாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. பாம்பு பிடித்து வாழும் ஒரு அப்பாவி ஆதிவாசியைக் காவல் நிலையத்தில் கொன்றுவிடுவதைப் பற்றி நீதிமன்றத்தில் அம்பலப்படுத்திய “சந்துரு” எனும் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் நிஜக்கதைதான் இது.

நடிகர்களின் வட்டார மொழி, உடல் மொழி அனைத்தும் மிக இயல்பாகயிருக்கிறது. நடித்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் இதைச் சாதிக்கமுக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் அந்த மலைக்கிராமத்தில் சில மாதங்கள் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையை  உணர்ந்திருக்கிறார்கள்.  அந்த அளவு  இயக்குநரும் அவருடைய குழுவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் பெரிய நடிகர்களை விட, மிகவும் சாதாரண எளியவர்கள் மிக அற்புதமாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணாக கடைசிவரையில் வரும் கதாநாயகி நடிப்பால் மிரட்டுகிறார்.

கமல்ஹாசன் அவர் நடிக்கும் படங்களுக்கு  ஒப்பனைக்காக ஹாலிவுட் கலைஞர்களை அழைப்பார்.  இந்தப் படத்தில்  நடிகர்களின் ஒப்பனை அதைவிடத் தரமானதாக இருக்கிறது. கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் அந்த மண்ணின் நிறம் மட்டுமில்லை. முக, உடல் அமைப்புகள் கூட மிக தத்ரூபமாயிருக்கிறது. படம் முழுக்க அந்தப் பொண்ண எப்பப் பார்த்தாலும், “கவலப்படாதம்மா… நிச்சயமா நீதி வெல்லும்… நாங்க இருக்கோம்… வக்கீல் சந்துரு நீதி வாங்கித் தந்துருவாருன்”னு சொல்லத் தோணுது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி செதுக்கியிருக்கிறார்.

நல்ல கதை, நல்ல கதைக்களம் அமைந்தாலொழிய ஒரு இயக்குநரால் தன் திறமையை வெளிப்படுத்த முடியாது.  “ஒரு நல்ல சிற்பியின் கையில் கிடைக்கும் போதுதான் கல்லும் சிற்பமாகிறது” என்பதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம்.

இது இயக்குநர் ஞானவேலுவின்  இரண்டாவது படமாம். பல படங்களில்  பணிபுரிந்த அனுபவம்மிக்க இயக்குநரின் படம் மாதிரி இருக்கிறது.

இவரைப் போன்ற இயக்குநர்கள் மிளிர்ந்தால் தமிழ் சினிமா மிகப் பெரிய உயரம் தொடும். அவர் மேநாள் பத்திரிகையாளர். (ஆனந்த விகடன்)  இந்தக் களம் குறித்து ஆய்வு செய்து எழுதியிருப்பவர் என்பதால் இத்திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது.

“அடுத்து என்ன நடக்குமோ” என்ற பதைப்பதைப்பில் இரண்டரை மணி நேரமும் நம்மை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நாலு வருட இடைவெளியாம். அத்தனை உழைப்பையும் படம் நெடுக பார்க்க முடிகிறது.

சூர்யா  “நல்ல நடிகர்”தான். இப்போது அவர் ஒரு “அருமையான நடிகர்” என்று மீண்டும் ஒரு முறை இத்திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார், நிச்சயமாக இனியேனும் சூர்யா
“ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்ரா”ன்னு கத்தாமல் இப்படிப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.

படத்தின் மற்றொரு பலம் அதன் வசனங்கள்.  மிக சின்ன வாக்கியங்கள். ஆனால், ஊசிமுனைபோல் குத்தும் வார்த்தைகள்.

குடும்பமே நடத்தும் எலி வேட்டையில் “அது குஞ்செலி மாமா, அந்தக் கொழந்தையத் துண்ணுதான் நம்ம பெருவயிறு நிறையப் போகுதா?”

“பாம்பு கடிச்சுருச்சுன்னு ஒருத்தங்க வர்றாங்க… பணம் இல்லைனு நீங்க சும்மா விட்ருவீங்களாணு” செங்கேணிகிட்ட சூர்யா கேக்குறப்போ…

“காசும், உசுரும் ஒண்ணா சார், அந்தப் போலீஸ்காரங்க வந்தாக்கூட நா சரிபண்ணித்தான் அனுப்புவேன்”

கடைசியாக பணத்தால் வாங்க முயலும்  காவலதிகாரி ஜெயப்பிராகாஷ்கிட்ட, “வயித்திலிருக்குற எம்புள்ள பொறந்து நாளைக்குக் கேட்டா உங்கப்பன கொன்னவங்க குடுத்த பணத்துலதான் நாம சாப்பிடறோம்”னு சொல்லணுமா சார் ?

படம் முழுவதும் இம்மாதிரி வசனங்களால் பாத்திரங்கள் மெருகேற்றபட்டிருக்கின்றன.

“திருடங்க இல்லாத ஜாதியே இல்லங்க நடராஜ்”

“போலீஸ்காரங்க அடிக்குற வலி கொஞ்சம் நாள்ல சரியாயிடும்… ஆனா திருட்டுப் பட்டம்?” போன்ற காரம் நிறைந்த  பொடியும் படத்தில்  பல இடங்களில்  தூவப்பட்டிருக்கிறது.

பல பிரிவுகளில், பல விருதுகளை அள்ளப்போகிறது இந்தப்படம். குறிப்பாக லிஜிமோல் ஜோஸுக்கு நிச்சயமாக சிலபல விருதுகள் காத்திருக்கின்றன. சூர்யா ’கதாநாயகன்’ என்ற மேல் பூச்சு இல்லாமல்  கதையின் பலம் உணர்ந்து ’வக்கீல் சந்துரு’ பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால், உண்மையாகவே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் அவார்ட், “திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு  எங்கெல்லாம் இப்படியான அநீதிகள் நிகழ்கிறதோ அங்கு குரல் எழுப்பவும், அந்த மக்களுக்காகத் துணை நிற்கும் தைரியமும்  பொதுச் சமூகத்திற்கு
வரவேண்டும்” என்ற எண்ணத்தை எழுப்பியிருப்பது தான்.

வெல் டன்  ! ஜெய்=சூர்யா

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

எது தமிழகத்தின் எதிர்கட்சி ?

2
கவர் ஸ்டோரி - ஆதித்யா   தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க....

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

0
 நேர்காணல் - ஆதித்யா   “தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி” என்ற  எண்ணம் எப்படி எழுந்தது? ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப்...

“அந்தப் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது.”

                           தமிழக  நாடகக் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் திருமதி. லாவண்யா வேணுகோபால்.  இவர் அடிப்படையில்...

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

1
கவர் ஸ்டோரி ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்? - எஸ். சந்திரமௌலி   1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா? “சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு...

ரன் அவுட் ஆன இம்ரான் கான்!

1
- எஸ். சந்திரமௌலி   நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம்  342...