0,00 INR

No products in the cart.

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

 

ஒரு நிருபரின் டைரி – 20

– எஸ். சந்திரமெளலி

 

. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்

 திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த சமயம். குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சில குழந்தைகள் வந்திருந்தார்கள்.  அவர்களில் பளிச்சென்று பட்டுப்பாவாடை உடுத்தி இருந்த ஒரு சிறுமி, நடராஜனின் கவனத்தை ஈர்க்க, அவளிடம், “பாப்பா! உன் பட்டுபாவாடை ரொம்ப நல்லா இருக்கே? எங்கே வாங்கினது?” என்று ஏ.என். கேட்க, அந்தாச் சிறுமி, “இது என் அப்பாவோட பொன்னாடை!” என்று பதில் சொன்னாள். “அப்படியா? யார் உன் அப்பா?” என்று இவர் கேட்க, கலங்கிய கண்களோடு “காருக்குறிச்சி அருணாசலம்” என்று சொன்னபோது, ஏ.என். அவர்களின் கண்களும் கலங்கிவிட்டது. காரணம்,. காருக்குறிச்சி மீது அபாரமான மதிப்பும், மரியாதையும் கொண்டவர் ஏ.என். தொடர்ந்து, தனது திருமணத்துக்கு காருக்குறிச்சி நாதசுரம் வாசித்தது, ‘நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் மாப்பிள்ளை’ என்ற முறையில் காருக்குறிச்சி, ஏ.என்.மீது காட்டிய அன்பு, அகில இந்திய வானொலியோடு கொள்கை அளவில் கருத்து மாறுபாடு காரணமாக, “வானொலிக்கு வாசிப்பதில்லை” என்ற முடிவு எடுத்திருந்த காலகட்டத்திலும் கூட, ஒரு முறை திருச்சிக்கு வந்தபோது வானொலி நிலையத்துக்கு வந்து ஏ.என்.னிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனது, அந்த  சந்திப்பின்போது, “கொள்கையைத் தளர்த்திக்கொண்டு, வானொலிக்கு வாசிக்க வேண்டும் என்று ஏ.என். அவரிடம் வேண்டுகோள் விடுத்தது, அவரும் அதை பரிசீலிப்பதாக வாக்கு கொடுத்தது, அடுத்த சில நாட்களிலேயே, சற்றும் எதிர்பாராமல் காருக்குறிச்சியின் மறைவு நிகழ்ந்தது எல்லாம் ஏ.என்.னின் மனதில் தோன்றி, அவரை சென்டிமென்டலாக மிகவும் பாதித்தது.

திருச்சி வானொலி நிலையத்தில் அந்தச் சிறுமியை சந்தித்து, சுமார் பத்தாண்டுகள் கழித்து, கல்கி பேட்டி ஒன்றில் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ஏ.என். அடுத்த சில நாட்களில், சென்னை வானொலி நிலையத்துக்கு ஒரு பெண்ணும், அவரது கணவரும் வந்து அவரை சந்தித்தார்கள். “சார்! கல்கியில் உங்க பேட்டியை படிச்சேன்! திருச்சி வானொலி நிலையத்தில் நீங்க பார்த்த பட்டுப் பாவடை சிறுமி நான்தான்” என்று தன்னையும், உடன் வந்திருந்த தனது கணவரையும் அறிமுகம் செய்தார். ஏ.என். மீண்டும் ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டார்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்ச்சியை நேரில் பார்த்து எழுதுவதற்காக சென்னையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். சென்னை சாஸ்திரி பவனில் இருக்கும் மத்திய அரசின் பத்திரிகை தகவல்  அலுவலகத்திலிருந்து, பத்திரிகையாளர்களுக்கான பேருந்தில் ஏறுவதற்காக நான் சென்று கொண்டிருந்தபோது,   என்னை யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தேன். சற்று தூரத்தில் அன்றைய சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரான திரு.ஏ.என். நின்று கொண்டிருந்தார். “ஸ்ரீஹரிகோட்டாவுக்குத்தானே! நானும் அங்கேதான் வரேன். என் கூட கார்ல வாங்களேன்!” என்றார். அன்று சென்னையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்று, செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்த பிரஸ் மீட் முடிந்து அவருடன் சென்னை திரும்பும் வரை ஏ.என். நிறைய விஷயங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அதிலே ஒரு சாம்பிள்தான் இந்த காருக்குறிச்சி சம்பவம்.

“சார்! உங்க கேரியர்ல எத்தனை மாமனிதர்களை சந்தித்துப் பேசி இருக்கீங்க! அவங்களோட எப்பேர்பட்ட அனுபவங்கள் உங்களுக்குக் கிடைச்சிருக்கு! ரிடையர் ஆனதும் உங்க அனுபவத்தை புத்தகமா கட்டாயம் எழுதணும்” என்று சொன்னபோது அதை ஆமோதித்தார்.

வழக்கமாக அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், அந்த பதவியின் செல்வாக்கை தன் சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது சகஜம். ஆனால், திரு.ஏ.என். தன் சொந்த செல்வாக்கை தான் பணிபுரியும் அலுவலகத்தின் நலனுக்காக பயன்படுத்திய சந்தர்பங்கள் உண்டு. அதற்கு உதாரணமாக, ஏ.என். என்னிடம் பகிர்ந்துகொண்ட, தன் புத்தகத்தில் எழுதி இருக்கிற ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை, சென்னை வானொலி நிலையத்துக்கு இசை நிகழ்ச்சி வழங்குவதற்காக வந்த கே.பி. சுந்தராம்பாள், வானொலி நிலைய உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தையின் காரணமாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல், தன் குழுவினரோடு திரும்பிப் போய்விட்டார். அதன்பின் அவர் வானொலி நிலையத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. ஏ.என். திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த மேலதிகாரிகள் “கே.பி.எஸ். அவர்களின் வெண்கலக் குரலை வானொலியில் மீண்டும்  எப்படியாவது ஒலிக்கச் செய்ய வேண்டும்” என்ற பொறுப்பினை ஏ.என்.இடம் அளித்தனர்.

கொடுமுடிக்குப் பயணித்து,  கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றார் ஏ.என். தன்னை வானொலி நிலைய அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். கே.பி.எஸ். கண்டுகொள்ளவில்லை. அன்று அங்கே நடந்ததை ஏ.என். இப்படி நினைவு கூர்ந்தார்:

“உங்க கச்சேரிகளை விரும்பிக் கேட்கிற ரசிகன் நான்! என்று சொல்லிவிட்டு, சில தினங்களுக்கு முன்பு, வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தின்போது கே.பி.எஸ். ஆறு மணி நேரம் செய்த அற்புதமான கச்சேரியைப் பாராட்டினேன். கே.பி.எஸ். முகத்தில் எந்தவிதமான ரியாக்க்ஷனும் இல்லை.  அடுத்து மெதுவாக, “நான் கூட இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்; நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுடைய மாப்பிள்ளை” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.  உடனே அவருடைய முகத்தில் ஒரு திடீர் மலர்ச்சி. வாய் நிறைய, “அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ? உன் கல்யாணத்துக்குக் கூட நான் வந்தேனேப்பா!” என்றவர், தொடர்ந்து பாசம் பொங்க, “உச்சி வெயில்ல வந்திருக்கியே! சாப்பிட்டியா?’ என்று கேட்டார். இல்லையென்றதும், “வா! முதல்ல சாப்பிடு!  என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய், தானே இலை போட்டு, சாப்பாடு பறிமாறினார். அந்த தாயன்பு மறக்கவே முடியாது”

அதன் பின், நிலையத்தில் எப்போதோ நிகழ்ந்துவிட்ட தவறுக்கு மன்னிப்புக் கோரி, “பழசையெல்லாம் மறந்திட்டு, மறுபடியும் ரேடியோல பாடணும்” என்ற ஏ.என்.னுடைய கோரிக்கையை கே.பி.எஸ். ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக தன் சம்மதத்தைத் தெரிவித்தார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ.

கே.பி.எஸ். அவர்களின் சம்மதம், வானொலி நேயர்கள் மத்தியிலும், கே.பி.எஸ்.ஸின் ரசிகர்கள் மத்தியிலும் சந்தோஷ அலைகளை ஏற்படுத்தியது. திருச்சி தேவர் ஹாலில், அரங்கம் நிரம்பிய ரசிகர்கள் முன்னிலையில் நடந்த கே.பி.எஸ். கச்சேரியை அந்த வருடத்தின்  பொங்கல்  விருந்தாக  தமிழ் நாட்டுக்கே படைத்தது அகில இந்திய வானொலி.

திரு.ஏ.என். அவர்களை ஒரு நல்ல மனிதராக, மேம்பட்ட கலை ரசிகராகத்தான் எல்லோரும் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு சிறந்த பிசினஸ்மேனும் கூட என்பது அவர் ஒரு முறை பெங்களூரில் வானொலி நிலையத்தில்  வர்த்தக ஒலிபரப்பு பிரிவில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது எனக்குத் தெரியவந்தது. பெங்களூரில், அவர் வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு பிரிவுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, விளம்பர வருமானம் வெகு சொற்பமாகவே இருந்தது.  “விளம்பர வருமானத்தைப் பெருக்க என்ன செய்யலாம்” என்று ஆலோசித்த ஏ.என். ஒரு வழி கண்டுபிடித்தார்.  தினமும் பெங்களூரின் பிரபல ஆங்கில தினசரிகளான இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு இரண்டையும் கூர்ந்து படித்து, அவற்றில் வெளியாகும் விளம்பரங்களை கவனித்து, அந்த விளம்பரதாரர்களுக்கு, தானே நேரடியாகக் கடிதம் எழுதுவார். வானொலியின் வீச்சு, அதன் மூலமாக விளம்பரம் செய்வதன் லாபங்கள், குறைந்த கட்டணம், என்று பல்வேறு முக்கியமான அம்சங்களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுவார். வானொலி கட்டண விபரங்களையும் இணைத்து அனுப்புவார்.  கடிதம் அனுப்புவதோடு கடமை முடிந்துவிட்டது என்று சும்மா இருக்காமல், அடுத்து, தொலைபேசி மூலமாக அவர்களைத் தொடர்பு கொண்டு ஃபாலோ-அப் செய்வார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதன் கிளைமாக்ஸ், வர்த்தக ஒலிபரப்பின் ஆண்டுவிழாவினை பெங்களூர் டவுன் ஹாலில், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடியதுதான்.

“வானொலிதான் மக்களின் பிரதான பொழுது போக்கு” என்று இருந்த காலக்கட்டத்தில், அவர் செய்த புதுமைகள் கணக்கில்லாதவை. தமிழில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியைப் போல, பெங்களூரு ரேடியோவில் பிரபலமான நிகழ்ச்சி “பிருந்தாவனா” அதில் ஒரு  முறை ராஜ்குமாரையும், சரோஜா தேவியையும் பங்கேற்கச் செய்து, அவர்களை டெலிஃபோன் மூலமாக ரசிகர்களோடு நேரிடையாக உரையாட வைத்தார் ஏ.என். இன்று ரேடியோவிலும், டீ.வி.யிலும் செல்ஃபோன் மூலம் புரோகிராம்கள் தண்ணிபட்ட பாடு என்றாலும், ஏ.என். இந்தப் புதுமையை செய்தது 1972ல் என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை வானொலியில்  மிகவும் பிரபலமான காலை நிகழ்ச்சி நகர் வலம். இதில் சென்னை நகரம், மக்கள் பிரச்னைகள், சாதனைகள், சவால்கள் என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி பலரும் எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட்களை வாசிப்பார்கள். இதற்கென்றே தனி ரசிகர்கள் பலருண்டு. இந்த நிகழ்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஏ.என்.தான். “பெங்களூரில் டெக்கான் ஹெரால்டு நாளிதழில் பெங்களூரு வாசிகள் பலரும் பல சுவாரசியமான விஷயங்களை ஆசிரியருக்குக் கடிதம் பகுதி மூலமாக பகிர்ந்துகொள்வார்கள். அதுதான் நகர் வலம் ஐடியாவுக்கு எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்று ஒரு முறை ஏ.என். குறிப்பிட்டார்.

திரு.ஏ.என். சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது எழுத்தாளர் சுஜாதாவை ஒரு கதை எழுத வைத்து, அவரையே வானொலியில் வாசிக்கச் செய்தார். சுஜாதாவின் குரலில் அவரது கதையைக் கேட்ட அவரது ரசிகர்கள் அந்தப் புதிய முயற்சியை பெரிதும் ரசித்தார்கள். அதேபோல,  கதை பிறந்த கதை நிகழ்ச்சி, ஏ.என். நிகழ்த்திய இன்னொரு புது முயற்சி. அந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்று தங்கள் அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்துகொண்டார்கள்.

இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, சுதந்திர தினம் என்று எந்தக் கொண்டாட்டமென்றாலும் “இது இல்லாமல் இருக்கவே முடியாது” என்று சொல்லும் அளவுக்கு ஒரு முக்கியமான அங்கமாகிவிட்ட விஷயம் பட்டிமன்றம். ஆனால், ஒரு காலத்தில், “பட்டிமன்றம் என்பது இலக்கியவாதிகள், பண்டிதர்களுக்கான அரங்கம்” என்ற நிலையே நிலவியது. அந்த கட்டமைப்பை உடைத்து, “பட்டிமன்றம்” என்ற சிந்திக்க வைக்கும், சிரிக்க வைக்கும் பொழுபோக்காக தமிழ் மக்களுக்கு வழங்கிய பெருமை திரு.ஏ.என். அவர்களுக்கும், அவரை  இயக்குனராகப் பெற்ற சென்னை தொலைக்காட்சிக்குமே உரியது. ஆக, பட்டிமன்றங்களை பாமரரும் ரசிக்கும் மக்கள் மன்றமாக்கிய மேஜிக் நிபுணர்
ஏ.என்.என்றால் அது மிகையில்லை.

கல்கியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து “நில் கவனி வெற்றிகொள்” என்ற தலைப்பில் மாதாந்திர நிகழ்ச்சி ஒன்றை ஓராண்டு காலத்துக்கு நடத்தினார்கள். அதில், மாதந்தோறும் தலைப்புகளுக்கு ஏற்ப, பேச்சாளர்களை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியினைத் தொகுத்து கல்கியில் விரிவாக எழுதும் பணி எனக்குத் தரப்பட்டது, அந்த நிகழ்ச்சிகளில் சோ, கிருஷ்ணராஜ் வாணவராயர், கவிப்பேரரசு வைரமுத்து உட்பட  தமிழகத்தின் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்கள். ஒரு மாதத்துக்கான தலைப்பு “கலை நயம்” என்று தீர்மானமானபோது, அது குறித்து பேசுவதற்கு பொறுத்தமானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏ. என். அவர்களும், சுதா ரகுநாதனும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பற்றி நிகிழ்ச்சியோடு பேசியதை அவையினர் மிகவும் ரசித்தனர். மேலும், “நான்  மகாபலிபுரம் செல்லும்போதெல்லாம், எங்கே நின்று கண்ணை மூடினாலும், அங்கே சிவகாமி நடமாடுவது போல எனக்குள்ளே தோன்றும்” என்று அவர் சொன்னது ஏ.என். எத்தகைய ஒரு இலக்கிய, கலா ரசிகர் என்பதற்கு ஒரு உதாரணம்.

தனது வானொலிப் பணிக்கால அனுபவங்களை தினமலர்-வார மலரில் தொடராக எழுதி, பதிவு செய்துவிட்டார். பின்னர் அது புத்தகமாகவும் வெளியானது. ஆனால்,  சென்னை தொலைக்காட்சியில் அவரது இன்னிங்ஸ் அனுபவங்களை பதிவு செய்யமல் அவர் மறைந்துவிட்டது தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஓர் இழப்புதான்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...