0,00 INR

No products in the cart.

பனை மரத்தின் உதவி

– சுஜாதா தேசிகன்

 

சில வருடங்களுக்கு முன் ஒரு சித்திரை மாதம் மேல்கோட்டையில்(மைசூர் அருகில் ) சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையத்துக்கு (Academy of Sanskrit Research) விஜயம் செய்த போது முதல் முறையாகப் பல ஓலைச் சுவடிகளைக் கையில் தொட்டுப் பார்த்தேன்.

ரயில், பேருந்துப் பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை ஓலை வாசனையுடன் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது ‘கேரி பேக்’ பைகளில் பண முடிப்புகள் போல கொடுக்கிறார்கள்.

பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இருக்கிறது. மடல் இலக்கியத்தில் மடல் ஏறுவோர் பனை ஓலையின் கிளையைக் கொண்டு குதிரை போன்ற உருவம் செய்து அதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதை மடல் என்பர். இதைச் செய்தால் தலைவன் படும் துன்பம் தலைவிக்குத் தெரியவரும். இந்த நூற்றாண்டில் டி.ராஜேந்தர் போலத் தாடி வைத்துக்கொண்டு இருந்தவர்கள் இன்று DPல் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.

நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம்பழங்கள் விழு, வாளை மீன்கள் அவற்றை நீர்க் காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும்  ‘திருக்குறுங்குடி’ என்ற ஊரை வர்ணிக்கிறார் திருமழிசை ஆழ்வார்.

இன்று இதுபோல சங்க இலக்கியத்தைப் படிப்பதற்குக் காரணம் இந்தப் பனை ஓலைகள்தான். ஆரம்பத்தில் மேல்கோட்டையில் பார்த்த ஓலைச் சுவடிகளைக் கூறியிருந்தேன் அல்லவா? அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு ஓலைச்சுவடிகளைப் பார்க்க உள்ளே சென்றேன்.

1.75லட்சம் மஹாபாரத ஸ்லோகங்கள் அடங்கிய வாழைமட்டை அளவு ஒரு கட்டு ஓலைச்சுவடிகளைப்  பார்த்து வியந்துகொண்டு இருக்கும்போது இன்னொரு கட்டில் ராமாயணம் முழுவதும் அடங்கிய ஓலைச்சுவடிகளைக்  காண்பித்தார்கள். ஓர் ஓலைச்சுவடியில் 24 வரிகள் எழுதியிருந்தார்கள். இதைவிட ஆச்சரியம், இரண்டு பக்கத்திலும் எழுதியிருந்தார்கள்! இன்னொரு கட்டில்  400 வருடம் பழமையான நம்மாழ்வார் திருவாய்மொழி ஓவியங்களுடன்.

இப்படி எழுதப்பட்ட பனை ஓலைகள்  சுமார் நூறு வருடம் தாக்குப்பிடிக்கும். குளிர் பிரதேசங்களில், நேபாளம், இமயமலை போன்ற இடங்களில் மேலும் சில வருஷம் இருக்கலாம். அதில் எழுதப்பட விஷயங்கள் இலக்கியச் சுவையுடன் இருக்க பல ஓலைகளைக் கரையான் சாப்பிட்டது!

அங்கே ஒருவர் ஒவ்வொரு ஓலைச்சுவடியாக எடுத்து, அதன் மீது தைலம் ஒன்றைப் பொறுமையாகத் தடவிக் கொண்டு இருந்தார். அந்த இடமே நீலகிரி, பச்சைக் கற்பூரம், ஓடோமாஸ் கலந்த வாசனை அடித்தது. கேட்டேன்.

“இது ஒருவிதமான தைலம், எலுமிச்சை புல் கலந்த கற்பூர எண்ணெய்,  ஓலையின் நெகிழ்வுத் தன்மைக்காகத் தடவுகிறோம். சிட்ரொனெல்லா( cit-ro-nella) எண்ணெய் பூச்சி வராமல் பாதுகாக்க” (இந்த எண்ணெய் தான் ஓடோமாஸில் உபயோகிக்கிறார்கள்)

அங்கே இருந்த எழுத்தாணியை கையில் எடுத்து “எழுதிப் பார்க்க முடியுமா ?” என்றேன்.

”அதற்கு என்ன” என்று என்னிடம் ஒரு வெற்று காகிதத்தை மன்னிக்கவும் ஓலைச்சுவடியைக் கொடுத்தார்கள்.

பாலசந்தர் படத்தில் ஆரம்பத்தில் வரும் திருவள்ளுவர் போல “அகர முதல எழுத்தெல்லாம்” என்று எழுத ஆரம்பித்தேன். ‘அ’ ஓலைச்சுவடியில் ஓட்டையாக விழுந்தது.

ஓலைச்சுவடிகள் எழுதுவது சுலபம் இல்லை என்பதைவிட, ’எழுதவே முடியாது’ என்ற உண்மையை அறிந்துக்கொண்டு “ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் எப்படிக் கருப்பாக இருக்கிறது ?” என்றேன்.

”இப்போது நீங்கள் எழுதினீர்களே அதுபோல எழுதிவிட்டு அதில் விளக்கு கரியுடன் பழ-காய்கறிச் சாறு அல்லது எண்ணெய்யுடன் கலந்து அதன் மீது தடவ வேண்டும்” என்றார்கள்.

இன்னொரு இடத்தில் ஓலைச்சுவடிகள் மீது  ஆந்திராவில் கிடைக்கும் பூத்தரேக்குலு இனிப்பு போல ஒன்று இருந்தது. நான் கேட்கும் முன் அவர்களே, “ஓ இதுவா,  பூச்சி வராமல் இருக்கப் பாம்பு உரித்துப் போட்ட சட்டையை நாங்கள் போர்த்துவோம். இந்த கட்டிடம் சுற்றி நிறையக் கிடைக்கும்!”  என்றவுடனேயே கிளம்பினேன்.

அடுத்த முறை பேருந்திலோ, ரயிலிலோ போகும்போது பனை மரத்தைப் பார்த்தால் சாதாரணமாக நினைக்காதீர்கள். நமக்குப் பல பொக்கிஷங்களை அது தந்திருக்கிறது.

பனை எனும் சொல் அளவின் பெருக்கத்தைக் குறிக்கும் சொல்லாக திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

சிறு தினையளவு நன்மை செய்தாலும் அதனால் உண்டாகும் பயனை உணர்ந்தவர்கள்  அந்நன்மையைப் பெரும் பனை மரம் அளவாக மதிப்பார்கள்.

பனை மரத்தின் உதவியே பனை மரம் போல உயர்ந்து நிற்கிறது!

 

2 COMMENTS

 1. ஓலை சுவடிகள் எழுதுவதை பற்றியும் அதை பாதுகாப்பது பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள வைத்தார் ‘சுஞாதா தேசிகன்’
  எழுதி விட்டு அதில் விளக்கு கரியுடன் பழக்
  காய்கறி சாறு எழுத்தின் மீது தடவினால் தான் எழுத்து தெரியும் என்பது எவ்வளவு
  கஷ்டமான செயல்
  வி.கலைமதிசிவகுரு,
  நாகர்கோவில்.

 2. பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய என பள்ளியில் பாடியதும் ஏன்டா பனைமரமே என அப்பா திட்டியதும் நினைவில் வருகிறதே!
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

1968ல் வந்த கல்கி தீபாவளி மலர் மூவாயிரம் ரூபாய் !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சில மாதங்கள் முன் பழைய புத்தகம் ஒன்றைத் தேடிய போது ஒருவர் ‘பழைய புத்தகங்களுக்கு என்றே ஒரு வாட்ஸ் ஆப்’ குழு இருக்கிறது, அதில் முயற்சி செய்யுங்களேன்” என்றார்....

பத்து விஷயம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் என் பள்ளி நண்பர்கள் சிலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து தினமும் சினிமா, நகைச்சுவை என்று சிறுவயதில் பேசிக்கொள்வது போலப் பேசிக்கொண்டு இருப்போம். சென்ற வாரம் ராக்கெட்டரி படமும், ராக்கெட்...

ராக்கெட்ரி சமாசாரம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தைப் பார்க்க நானும் என் பையனும் சென்றோம். எப்படிப்பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன்...