0,00 INR

No products in the cart.

என் காதல் ஒரு கள்ள நாணயம்

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 3

தமிழில் கே.வி.ஷைலஜா

 

நானும் பருவ காலத்தில் காதலித்திருக்கிறேன். இரண்டு நாட்கள் பார்ப்பதும், மூன்றாம் நாள் பேசிவிடத் துடிப்பதும் சாதாரண காதல்தான். “ஷக்கூர்பாவா என்ற உன்னத மனிதர்தான் அதெல்லாம் காதல் இல்லை” என்று எனக்குப் புரிய வைத்தார்.

கோயம்புத்தூரில் பழனியப்பா கவுண்டர் மிக பிரபலமானவர்.  ஆறரை அடி உயரத்துடன் குண்டாக, கருப்பு நிற தேக சௌந்தரியத்துடன் கம்பீரமாக இருப்பார்.  தென்னந்தோப்பும் நெல் வயலும் முந்திரித்தோப்பும் குன்றுகளும் சொந்தமாக வைத்திருந்த கவுண்டருக்கு சொந்த ஆறுகூட இருந்தது. அதாவது சிறுவாணி ஆற்றின் பயணம் கவுண்டரின் நிலத்தின் வழியாகத்தான் அமைந்திருந்தது. அரசியல்மீதும், சினிமாவின்மீதும் கவுண்டருக்கு ஆர்வம் இருந்தது. கடைசியில் சினிமா பிடிபட்டு மிகப்பெரிய தயாரிப்பாளரானார். சினிமா ஒரு அவசரம் சார்ந்த உலகம். அதில் கவுண்டரை எல்லாவகையிலும் கவனித்துக் கொள்ளவும் கூடவே இருக்கவும் ஒரு ஆள் தேவைப்பட்டது. அச்சூழலில்தான்  வேலை ஏதும் இல்லாத ஷக்கூர்பாவா கவுண்டரிடம் அடைக்கலம் தேடிவந்தார்.

மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே கவுண்டரின் எல்லாமுமாக ஷக்கூர்பாவா மாறியிருந்தார். நிழலென்று சொன்னால் அதுகூட விட்டு விலகியே இருந்திருக்கும். ஆனால் பாவா அதைவிடவும் அதிக நெருக்கம். கவுண்டருடன் அவர்  குடும்பமும் சென்னைக்கு வந்துவிட்டது. அவருடைய மனைவி மிகவும் நல்ல பெண். பணத்தின் பெருமையையோ, தலைக்கனத்தையோ ஏற்றுக்கொள்ளாத குடும்பப் பெண்.

சென்னையில் குடியேறிய கவுண்டரின் மனைவிக்கும்  இதேபோல் ஒரு உதவியாள் ஒருத்தி கிடைத்தாள். பதினாறு வயதில் திருமணமாகி, ஒரு வருடத்திலேயே விதவையான அவள் தன் ஒரு வயது பெண் குழந்தையுடன் இங்கே வந்து சேர்ந்தாள்.  கவுண்டரின் வீட்டு சமையலறையின் பொறுப்பினை அவள் ஏற்றுக்கொண்டாள். அப்போது பாவாவுக்குப் பதினெட்டு வயதிருக்கும்.

பிறகு கவுண்டர் பல வெற்றிப்படங்களின் தயாரிப்பாளரானார். அரசியல், சினிமா, என எல்லா மட்டத்திலும் நட்பை வளர்த்துக் கொண்டார். காலம் கருணையற்றுச் சடசடத்துப் போய்க்கொண்டிருந்த நாட்களின் ஒரு விடியலில் அவருடைய மரணம் பெரும் அதிர்வாய் நிகழ, புகழின் உச்சியில் ஐந்து முகம் காட்டி பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. தத்தளித்துப்போன அவருடைய மனைவி பிள்ளைகளுடன் வெளிநாட்டில் போய் தங்கிவிட்டார். சென்னையிலிருந்த பெரிய வீடு இழுத்து பூட்டப்பட்டு அதைப் பாதுகாக்க ஆள் போடப்பட்டது. கோயம்புத்தூரில் பரம்பரை வீட்டின் ஆளுமை சொந்தக்காரர்களின்  கைவசமாயிற்று. இருபத்தைந்து வருடம் கூடவே வாழ்ந்த ஷக்கூர்பாவா மட்டும் உருவமற்று அரூபமான அனாதையானார். அவர் வேறு வேலைகள் தேடி அலைந்தார். பல இடங்களில் தினக்கூலிக்கும் ஒரு வேளை சாப்பாட்டிற்குமாய்ப் போராட வேண்டி வாழ்க்கை அவரை விரட்டியது. ஒரு நாள் ஷக்கூர்பாவா காணாமல் போனார். அதற்குப் பிறகான நாளில் அவ்வீட்டின் வேலைக் காரியாயிருந்த அந்தப் பெண்ணும் காணாமல் போயிருந்தாள்.

பல நாட்களின் உதய அஸ்தமனங்களுக்குப் பிறகு வேறு மாநிலத்தில், மண் குழைத்துத் தட்டிக் கொட்டி உருவாக்கியதொரு சிறிய வீட்டில் ஷக்கூர்பாவாவைப் பார்த்தேன். அவருடன் அந்தப் பெண்ணுமிருந்தாள். இருபத்தைந்து வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள்.  நாற்பது வயதுக்குமேல் ஒன்றாய் வாழத் தொடங்கியிருந்தார்கள். கால் நூற்றாண்டுகளாய் வளர்த்துக் கொண்ட பிரியத்தை இப்போதும் பெரிதாக வெளியில் சொல்லாமல் இருவரும் பொத்தி வைத்துக் கொள்வதாய் பாவா என்னிடம் சொன்னார். கவுண்டரின் வீட்டிலிருக்கும் போது அவர்கள் பேசிக் கொண்டதுகூட இல்லை. அவர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் வந்தபோது எங்குப் போவது என்று தெரியாத இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாய் வாழத் தீர்மானித்திருந்தார்கள்.

முதன்முதலில் சந்தித்த நாட்களில் அவர்கள் இருவருமே  இளமையின் வசந்த வாசலில் பூங்கொத்துகளோடு நின்றிருந்தவர்கள் என்பதை நாம் நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும். ஆனாலும் அவர்கள்  ஆசையையும், தவிப்பையும், காமத்தையும் அடக்கி வாழ்ந்திருக்கிறார்கள். பரஸ்பரம்  ஸ்பரிசிக்காமல், பார்க்காமல், பேசாமல் அன்புவயப்பட்டவர்கள். இப்போது ஷக்கூர்பாவா கட்டாயப்படுத்தாமலேயே அவள் முஸ்லீமாக மாறியிருக்கிறாள். ஆனால் பாவா இப்போதும் அவளுடைய இந்துப் பேரை வைத்தே அழைக்கிறார். இரண்டு பேரும் நிறைவாக வாழ்கிறார்கள்.

இவர்களின் சந்திப்பிற்கு முன் பிறந்த அவளுடைய மகளின் திருமணத்தை பாவா இந்து முறைப்படி நடத்தி வைத்திருக்கிறார். பேரக்குழந்தைகளைக் கோவிலுக்கு உள்ளே அனுப்பி விட்டு வெளியே காத்திருக்கும் பாவாவை நான் பார்த்திருக்கிறேன். மதமும், ஜாதியும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் இவர்களுடைய வாழ்வில் கரைந்து இல்லாமல் போயிருந்தது. மோகமென்ற அக்னி பர்வதத்தின் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் எப்படி இவர்களால் வெறும் பார்வையை மட்டும் பகிர்ந்துக்கொண்டு வாழ முடிந்தது? தெய்வீகக் காதல் என்பது இதுதானோ? காமத்தின் நுனி தன்னிலிருந்து சிந்திப்போகாமலிருக்க உள்ளங்கை நெல்லிக் கனிபோல மனதை நடத்திச் செல்ல ஷக்கூர்பாவாவால் முடிந்ததென்றால் அது அவர்களுடைய காதலின் மேன்மையாய்த்தானிருக்கும்.

பார்த்த இரண்டாவது நாளில் இன்டர்நெட் சென்டருக்கும், ஐஸ்க்ரீம் பார்லருக்கும் படர்ந்து உயரும் புதிய காதலின் காலமிது. அதெல்லாம் காதலா? மனதின் மற்ற மோகங்களையெல்லாம் காதலென்று அர்த்தப்படுத்திவிட முடியுமா? சொத்து, சௌந்தர்யம், குடும்பத்தின் பாரம்பரியம் என ஆரம்பித்த பலவிஷயங்களின் அடித்தளத்தில்தானே நம்முடைய காதல் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகும் மனைவியை சந்தோஷப்படுத்த கண்முன்னே உடைந்து காணாமல் போகும் பளபளப்பான குமிழ் வார்த்தைகளைப் பேசுகிறோமே. வார்த்தைகள்  வெங்காயச் சருகுபோல உரிந்து உரிந்து காணாமல் போகும்போது நம்முடைய யதார்த்தக் காதல் அதற்குள் எந்தளவிற்கு இருக்கும்?

ஷக்கூர்பாவாவின் காதலில் பரிசுத்தமான அன்பு மட்டுமே நிரம்பி இருந்தது. எனக்கு சில பெண்கள் மீதுதோன்றியிருந்த ஈர்ப்பு, காதல் இல்லை  அது ஒரு கள்ள நாணயம் போல  செல்லாதது என்பதை இப்போது உணர்கிறேன். களங்கமில்லாத தனித்தங்கம் போலிருக்கும் காதல் வேண்டுமென்று தோன்றும் போதெல்லாம் நாம் பாவாவை நினைத்துக் கொள்ளலாம். ஷக்கூர்பாவா போன்றதொரு நண்பர் வாய்த்ததில் நான் சந்தோஷப்படுகிறேன். வாழ்வில் நம்மால் கவனிக்கப்படாமல் போகும் பல மனிதர்களால் புரிதல்களின் கதவு திறந்து கொண்டேயிருக்கிறது. பாவா அவரில் ஒருவர். இப்படித் திறக்கப்படும் சொர்க்க வாசலுக்காய் நாம் காத்திருக்கலாம்.

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கொடியேற்றும் உரிமை… வாங்கிக்கொடுத்தவர் கலைஞர்

0
- ஆர்.முத்துக்குமார்   சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அதற்கான உரிமை...

அமிர்த சுதந்திரத்துக்காகச் சிந்திய கண்ணீர்த்துளிகளில் சில…

0
எஸ். சந்திரமௌலி   இந்தியா தனது விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவினை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆகஸ்ட் 15 : இவர்களும் கொண்டாடுகிறார்கள்! ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

சினிமாவாகவும் வரப்போவதால் பொன்னியின் செல்வனுக்கு கிராக்கி

1
  கா.சு.வேலாயுதன்   கோவை கொடீசியா புத்தகத்திருவிழா காட்சிகள்   ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சிகள் தற்போது தமிழகம் முழுக்க  வியாபித்து வருகிறது. சிற்றூர்களிலும் பெரிதாக நடக்கிறது. அரசே புத்தகத் திருவிழாக்களை ஊக்குவித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுகிறது....

வந்துக்கொண்டிருக்கிறான் வந்தியத்தேவன்

2
  - ஆதித்யா   கல்கி ஆன்லைனில்  விரைவில் தொடங்க இருக்கும் “கல்கியின் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப்பயணம்” என்ற  விடியோத் தொடரின் டீசர்களை வெளியீடும் நிகழ்ச்சிதான் அது. இன்று திரைப்படங்களுக்கு  டீசர்கள் வெளியிடுவது வாடிக்கையாகிப்போன  விஷயம். ஆனால், ஓர் ...