0,00 INR

No products in the cart.

தேவமனோகரி – 3

தொடர்கதை

ஓவியம் : தெய்வா

 

பாரதி

திருவான்மியூரில் மிக அழகான அடுக்குமாடி குடியிருப்பு அது. டாக்டர் தேவமனோகரி என்று  வீட்டு வாசலில் பெயர் எழுதப்பட்டிருந்தது. முகப்பில் டெரக்கோட்டாவில் செய்யப்பட்ட கல்கத்தா காளி உருவம் வரவேற்றது.

ஜன்னல், பால்கனி என்று எங்கு பார்த்தாலும் பசுமைதான். வெளியில் இருந்த மரங்களும் உள்ளே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளும் பசுமையை அள்ளி நிரப்பியிருந்தன. வீட்டுக்குள் இயற்கையாக ஒரு குளிர்ச்சி இருந்தது.           எளிமையான மூங்கில் சோபாவும் திவானுமாக வித்தியாசமான ரசனையில் இருந்தது அந்த வீடு.  பிரமிப்புடன் கண்களை சுழலவிட்டாள் இனியா.

”இனியா, நீ அந்த அறையில் தங்கிக் கொள். அது நவீனின் அறை. உனக்கு வசதியாக இருக்கும்”

இரண்டு செட் உடைகள் அடங்கிய தனது பையை தூக்கிக் கொண்டு அந்த அறைக்குப் போனாள் இனியா. அங்கே சுவரில் சில புகைப்படங்கள்.              மனோகரி மேடத்தின் கையில் குழந்தையாய் தவழ்ந்து கொண்டிருந்த நவீன் முதல் இளம் வாலிபன் நவீன் வரை கொலாஜ் செய்யப்பட்டிருந்தது.              மற்றொரு புகைப்படத்தில் அப்பா அம்மாவுக்கு நடுவில் நான்கு வயது சிறுவன் நவீன்.

‘ஓ இவர்தான் மேடத்தின் ஹஸ்பண்டா? வாட்டசாட்டமாய் நல்லாதான் இருக்காரு’  குறுகுறுவென்று ஆராய்ந்தது இனியாவின் கண்கள்.

மேடம் அவளைக் கூப்பிட்டு ”இன்று என்னுடன் வீட்டுக்கு வந்து தங்க முடியுமா இனியா? இரண்டு நாட்கள் தங்குவது போல் தயாராக வா” என்று அழைத்தபோது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

மேடம் தைரியசாலிதான். ஆனால் ஏனோ சுந்தர் விஷயத்தில் அவர் மிகையான பதட்டத்துடன் இருப்பதாக இனியாவுக்குத் தோன்றியது.

இன்று காலையில் ஆரம்பித்த பிரச்சினை மதியம் வரை உட்காரவிடாமல் செய்துவிட்டது. சுந்தரின் அப்பாவை அழைத்துக் கொண்டு தலைமைப் பேராசிரியர் கணேசமூர்த்தியின் முன்பு நின்றாள் மனோகரி.

” முதலில் டிபார்ட்மெண்ட் மீட்டிங் போடுங்க சார். அந்த மாணவன் சுந்தர் ஒரு ரெகுலர் ஸ்டூடண்ட். அவனை உடனே விடுவிக்க வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் அனுப்பணும். நாம் எல்லோரும் அதில் கையெழுத்து போட்டால் அதற்கு ஒரு மரியாதை இருக்கும்” என்று நயமாக கேட்டுப் பார்த்தாள்.

பத்மாவதியும், ரத்னசாமியும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

”அதெப்படி? கல் வீசிய இடத்தில் தான் நின்று கொண்டிருந்ததாக அவனே ஒப்புக் கொண்டிருக்கிறான். தவிர,  ரௌடித்தனம் செய்த சில மாணவர்களை போலீசார் மடக்கி அடையாள எண்ணைக் கேட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் இவன் நெம்பர் தெளிவாக இருக்கிறது. அதை வைத்துக் கொண்டுதான் காலேஜ் ஆபீஸில் அவன் அட்ரஸை தெரிந்து கொண்டு வீட்டுக்குப் போய் அரெஸ்ட் பண்ணியிருக்கிறார்கள்” “

”பிடிபட்ட ஸ்டூடண்ட் ஒருவன் தன்னுடைய அடையாள எண்ணுக்கு பதில் வேறொருவரின் அடையாள எண்ணையும் கொடுத்திருக்கலாமே? அந்த சாத்தியம் இருக்கிறதே” என்று வாதிட்டார் மேடம்.

”கல் எறிகிற இடத்தில் இவனுக்கு என்ன வேலை? அவ்வளவு ஒழுங்கான பையனாக இருந்தால் வகுப்பு முடிந்ததும் நேராக வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?”  என்று கேட்ட பத்மாவதியை ஒரு கணம் திரும்பி நிதானமாகப் பார்த்தாள் மனோகரி.

”நேரத்துக்கு நாம் கிளாசுக்குப் போயிருந்தால் அவன் ஏன் வேடிக்கை பார்க்க அங்கே போக வேண்டும்? என்று சடாரென்று ஒரு கேள்வி அவளை மீறிக் கொண்டு வெளிப்பட்டது. சாதாரணமாக யாரையும் குற்றம் சாட்டிப் பேசக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருப்பாள் மனோகரி. ஆனால் இன்று அந்த எச்சரிக்கை உணர்வு காற்றில் பறந்து விட்டது.

அடுத்த கணம் ஒரே களேபரமாயிற்று. தலைக்குத் தலை குரலெடுத்துப் பேசி ஒருவரை மற்றவர் குறை சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினார்கள்.

மனோகரி விடுவதாக இல்லை. பிரின்சிபாலைப் போய் பார்த்து சுந்தரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டாள்.

” நான்கைந்து மாணவர்கள் பிடிபட்டிருக்கும்போது இவன் ஒருவனுக்கு மட்டும் நாம் சலுகை கேட்பது சரியாக இருக்குமா மேடம்?”  அவரது தயக்கம் மனோகரிக்கு எரிச்சலூட்டியது.

துறைக்கு திரும்பி வந்தபோது மனோகரியின் முகம் வாடியிருப்பதை  கவனித்தாள் இனியா.  கேன்டீனிலிருந்து தேநீர் தருவித்தாள்.

துறையில் அப்போது ஒருவரும் இல்லை. ஆராய்ச்சி மாணவர்களான மணிகண்டனும், மாரிமுத்துவும்,  நிர்மலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் ப்ளாஸ்க்கிலிருந்து டீயை ஊற்றிக் கொடுத்தான் மணிகண்டன்.  டீயைக் குடித்தவாறு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

சிநேகிதி ஒருத்தியின் கணவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அவர் மூலமாக கமிஷனரை நேரில் போய் பார்த்து விஷயத்தை விளக்கினாள் மனோகரி. அன்று மாலைக்குள் சுந்தர் வீடு வந்து சேர்ந்த செய்தி கிடைத்ததும்தான் நிம்மதியானாள்.

அப்போதுதான் இனியாவை அழைத்து தன் வீட்டுக்கு வந்து தங்கச் சொன்னாள். ஹாஸ்டலுக்குப் போய் உடைகளை எடுத்துக் கொண்டு காரில் இவளுடன் இணைந்து கொண்டாள் இனியா.

*******

இந்த வீட்டில் மேடம் பெரும்பாலும் தனியாகத்தான் இருக்கிறார் போலும்.  உதவிக்கு வரும் பொன்னம்மா சமையல் செய்துவிட்டு வீட்டையும் சுத்தம் செய்துவிட்டு மாலையில் கிளம்பி விடுகிறாள்.

இரண்டு நாள் தங்கியதில் இனியாவுக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறார் மேடம். பிறகு யோகா. அதேபோல் மாலையில் எதிலிருக்கும் பூங்காவில் கொஞ்சம் நடைப்பயிற்சி.

வயது ஐம்பத்து மூன்று என்று எவரும் சொல்ல முடியாது. உடம்பையும் மனசையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். புடவை கட்டுவதிலும் ஒரு நேர்த்தி இருக்கும். அநேகமாக காட்டன் புடவைதான். அதற்கு மேட்சாக கண்ணாடி வளையல்கள் அணிந்திருப்பார். கழுத்தில் ஒரு மெல்லிய செயின்.  அவ்வளவுதான்.

கல்லூரியில் எத்தனையோ பேராசிரியர்கள் இருந்தாலும் கூட தனியாக தெரியக்கூடிய ஏதோ ஒரு அம்சம் அவரிடம் இருந்தது. உயரமும் கம்பீரமும் சேர்ந்த ஒரு அம்சம்.

அன்று இரவு பழைய போட்டோ ஆல்பம் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள் மனோகரி.   தொலைவிலிருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்தாள் இனியா.

”ஏன் அங்கேயே நிக்கறே? வந்து இந்த போட்டோவைப் பார்”

கருப்பு வெள்ளை புகைப்படம் அது. பதினைந்து வயது பெண்ணாக மேடம் அதில் இருந்தார். கூடவே வேறு சிலரும்.

”வெரி நைஸ் மேடம். பாவாடை தாவணியில அழகா இருக்கீங்க. இவங்கள்ளாம் யாரு? உங்க பேஃமிலியா?”

”ஆமாம். இது எங்க அண்ணனும் அண்ணியும். இவன் என் தம்பி கோபால்” மனோகரியின் கண்கள் தம்பியின் படத்தை உற்று நோக்கின. தொண்டையை அடைத்த உணர்வை விழுங்கிக் கொண்டாள்.

” ஒரு காலத்தில் இன்னிக்கு சுந்தர் மாட்டிக்கிட்ட மாதிரி கோபாலும் போலீஸ் விசாரணையில் மாட்டியிருக்கான்.   எனக்கு ஏனோ இன்னிக்கு இவன் ஞாபகமாகவே இருக்கு. முதல் தடவையாக தனியாக வீட்டுல  இருக்க முடியாதுன்னு தோணுச்சு. அதுதான் உன்னைக் கூப்பிட்டேன்”

இனியா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது ஊகம் சரிதான். சுந்தர் விஷயத்தில் மேடத்தின் பதட்டத்துக்குக் காரணம் இந்த தனிப்பட்ட பாதிப்புதானோ?.

”இவங்கள்ளாம் இப்ப எங்க இருக்காங்க மேடம்?”

”நாக்பூரில் இருக்காங்க.  ஆனா ஒரு தொடர்பும் இல்லை”

ஆல்பத்தை மூடி வைத்து விட்டு தன் அறைக்குப் போய்விட்டார் மேடம். இனியா ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வேப்பமரத்தில் அணில்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன. பறவைகளின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

மேடத்தின் வாழ்க்கையை நினைத்து ஏனோ மனசு கனத்தது. உற்ற மனிதர்கள் இருந்தும் உடன் தங்காத ஒரு ஒற்றை வாழ்க்கையல்லவோ இது! எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் எவரும் இல்லை. ஏன் இப்படியெல்லாம் நேர்கிறது?

மாலை நான்கு மணிக்கு பளிச்சென்று வெளியில் வந்தார் மேடம். சற்று நேரம் தூங்கியிருப்பார் போலும். முகம் தெளிந்திருந்தது.

”கம் ஆன் இனியா, நீ என்னுடன் இருக்கும் இந்த இரண்டு நாளில் உன்னை நான் சந்தோஷமா வெச்சிக்க வேண்டாமா, ஏதாவது சினிமாவுக்குப் போகலாமா? இல்லை பீச்? வாட் டூ யூ லைக்?”

”சினிமா வேண்டாம் மேடம். பீச்சுக்கு வேணும்னா போகலாம்”

அஷ்டலஷ்மி கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் காலார நடந்தார்கள். மாலை நேரத்துக் குளிர்ச்சி இதமாக இருந்தது.

அங்கிருந்து ‘ஹஸ்தகலா’ கண்காட்சிக்குப் போனார்கள். வடஇந்தியாவிலிருந்து நிறைய கலைஞர்கள் அவர்களுடைய கலைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

மதுபனி சித்திரங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த குரல் ஒன்று பரிச்சயமாக இருந்தது.

”சூரியமூர்த்தி சார்!” என்று ஏதோ அதிசயத்தைக் கண்டவள்போல் வியப்பு தெரிவித்தாள் இனியா.

நான்கைந்து ஆராய்ச்சி மாணவர்களை அழைத்து வந்திருக்கிறார் போலிருக்கிறது. நுண்கலை மாணவர்களுக்கான களமாக இருந்தது இந்த இடமும் சூழலும்.

”அவர் பேசறதைக் கேட்கணும் மேடம். வித்தியாசமாக ஏதாவது  சொல்வாரு. நாமளும் போகலாமா?”

”நீ போய்க் கேளு. நான் இங்கே நிறைய பார்க்க வேண்டியிருக்கு.” என்று சொல்லிவிட்டு எதிர் திசையில் நடந்தாள் மனோகரி.

இரவு ஈடன் ஹோட்டலில் இவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு ஆர்டர் செய்தாள் மனோகரி. இனியாவுக்கு ஒவ்வொரு அனுபவமுமே புதிதாக இருந்தது. கிராமத்து சூழலில் வளர்ந்த அவளுக்கு இங்கு எல்லாமே புதுமைதான்.

ஆரம்பத்தில் ஸ்பூன் உபயோகிப்பதிலிருந்து எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போது நிறைய பழகிவிட்டது. இயல்பாக எல்லா இடத்திலும் அவளால் ஒன்ற முடிகிறது. இந்த இடத்தை அவள் எட்டியிருப்பதே ஒரு சாதனைதான்.

பெருமித உணர்வுடன் சாக்லேட் ஐஸ்கிரீமை மெல்ல சுவைத்தாள் இனியா.

வீட்டுக்கு வந்தபிறகு மேடம் வாங்கித்தந்த வார்லி சித்திரங்கள் தீட்டப்பட்ட குர்தா ஒன்றை மேலே போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள் இனியா.

‘ வெரி நைஸ் ‘ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

‘சூரியமூர்த்தி சார் எவ்வளவு நல்லவர். ஏனோ தெரியவில்லை. இந்த மனோகரி மேடம் அவருடன் பேசுவதே இல்லை. என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தபடி உறங்கிப்போனாள் இனியா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...