தொடர்கதை ஓவியம் : தமிழ்
கே.பாரதி
நவீனிடமிருந்து ஃபோன். தயக்கத்துடன் பேசினாள் இனியா.
“என்னை அம்மாகிட்டே போட்டுக் கொடுத்திட்டீங்க போலிருக்கே? இது நியாயமா?” எடுத்த எடுப்பில் குற்றம் சாட்டினான்.
“நான் என்னதான் செய்யட்டும்? வீட்டை விட்டுப் போக காரணம் கேட்டா சொல்லித்தானே ஆகணும்? நானும் எப்படியோ சமாளிச்சுப் பார்த்தேன். மேடம் நம்பலை. அவங்களை ஏமாத்துறதும் சுலபமில்லை. ஸாரி நவீன்.”
“அம்மா என்கிட்டே கோபமா இருக்காங்க. முன்னே மாதிரி கலகலப்பா பேசறதில்லை.”
“நீங்க செய்யறது மட்டும் நியாயமா? அவங்களைப்போய் ‘கல்யாணம் செஞ்சிக்க’ன்னு சொன்னா கோபம் வராதா? என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை.”
“அது உங்க தப்பு இல்லை இனியா. ஒவ்வொருத்தரையும் கட்டம் கட்டிப் பார்க்க மட்டுமே நாம பழகியிருக்கோம். மேடம்னா இப்படித்தான்னு உங்களுக்கு ஒரு பிம்பம் இருக்கு. அதை தாண்டி அவங்களை மனுஷியா பார்க்க நீங்க தயாரா இல்லை.”
இனியா மௌனமானாள். அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
“நினைச்சு பாருங்க. எங்க அப்பா இறக்கும்போது அம்மாவுக்கு முப்பது வயசு. நிறையப் பேருக்கு இந்த வயசுக்கு மேலதான் கல்யாணமே ஆகுது. ஆனா எங்கம்மாவுக்கு எல்லாமே முடிஞ்சு போச்சு.”
“அதுக்குன்னு? ஒரு வளர்ந்த மகன் இருக்கும்போது எந்த அம்மா கல்யாணம் செஞ்சுப்பாங்க. மகனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு பேரனையோ பேத்தியையோ பார்க்கத்தானே ஆசைப்படுவாங்க?“
“மகனும் மகளும் கூடவே வாழற காலமெல்லாம் மாறிகிட்டிருக்கு. நீங்க இன்னும் உங்க கிராமத்திலேயே இருக்காதீங்க. வெளியே என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க.”
“பரவாயில்லை. நான் கிராமமாவே இருந்துட்டுப் போறேன்.” ரோஷத்துடன் சொன்னாள் இனியா.
“நீங்க இந்தத் தலைமுறை மாடர்ன் கேர்ள்னு நினைச்சேன். எங்கேயோ பாட்டி காலத்துல இருக்கீங்க. உங்களைக் கன்வின்ஸ் பண்றதுக்குள்ளே எனக்கு போதும் போதும்னு ஆயிடும் போலிருக்கு.”
இனியாவுக்கு உண்மையில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் இல்லை. அதிலிருந்த நியாயம் அவளை யோசிக்க வைத்தது.
“தன்னால்தான் தன்னுடைய அம்மா ஒரு நீண்ட தனிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுவிட்டாள்” என்ற எண்ணம் அவனை விரட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு பரிகாரம் தேட நினைக்கிறான்.
“மேடத்துக்கு இப்படி ஒரு மகனா” என்று முன்பு தான் நினைத்ததை அவள் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. எப்படிப்பட்ட மகன் இந்த நவீன்! கிரேட்! என்று மனதுக்குள் வியந்தாள்.
•••••••••••••••••
மனோகரி மகிழ்ச்சியில் இருந்தாள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரம்யாவுக்கு கைடு கிடைத்துவிட்டார்.
“என்னுடைய நீண்ட நாள் கனவு மேடம். உங்கள் உதவியை மறக்கவே முடியாது” என்று நெகிழ்ந்தாள் ரம்யா.
பார்த்தால் நல்ல பெண்ணாகத்தான் தெரிகிறாள். ஆனால் மாதவி மேடத்துக்குதான் இவள் மீது எவ்வளவு குறை?
“கல்யாணம் ஆன பிறகு என் ஆசையை மோகன்கிட்டே சொன்னேன். அப்பவே ரிசர்ச் செஞ்சிருந்தா இந்நேரம் டாக்டரேட் வாங்கியிருப்பேன். துபாய்க்குப் போய்விட்டதால முடியாம போயிடுச்சு.”
“உன் மாமியார் காலேஜுல எல்லோரையும் ரிசர்ச் பண்ண சொல்லி என்கரேஜ் பண்ணுவாங்க. எனக்கு அவங்க பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க மருமகளுக்கு உதவ முடிஞ்சதுல எனக்கும் சந்தோஷம்தான்.”
“சமீபத்துல அவங்களை சந்திச்சீங்களா? அப்படி சந்திச்சிருந்தா என்னைப் பற்றி குறை சொல்லியிருப்பாங்களே?”
ஆமோதிப்பது போல் மௌனம் காத்தாள் மனோகரி.
“எனக்குத் தெரியும் மேடம். ஆனா பிரச்னைக்கு நான் காரணம் இல்லை. மோகனுக்கு அவங்க அப்பாவோட ஒத்துவரலை. சின்ன வயசுல அவரு கண்டிச்சதையெல்லாம் மனசுல வெச்சிருக்காரு.”
“எனக்குப் புரியுது ரம்யா. நீ மனசு விட்டு பேசியதால நானும் ஒரு விஷயத்தை சொல்லட்டுமா?”
“சொல்லுங்க மேடம்”
“எங்க குடும்பத்துல அதிர்ச்சிகரமான சம்பவம் ஒண்ணு நடந்தது. அதுக்கப்புறம் குடும்பமே சிதறிப்போச்சு. அது நடந்து இருபத்தஞ்சு வருஷம் ஆயிடுச்சு.”
ரம்யா தீவிரமாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இத்தனை வருஷத்துக்கப்புறம் யோசிச்சுப் பார்த்தா எனக்கு வருத்தத்தை விட குற்ற உணர்ச்சிதான் அதிகமா இருக்கு. அது என்னைத் தூங்க விடாம துரத்துது.”
தொண்டையை செருமிக் கொண்டாள் மனோகரி.
“இன்னிக்கு பெத்தவங்ககிட்டேயிருந்து விலகி நிற்க நமக்கு எத்தனையோ காரணம் இருக்கும். பின்னாளில் அது குற்ற உணர்ச்சியா மாறிவிடாம இருக்கணும்.”
“எனக்கு நல்லாப் புரியுது மேடம். மோகனுக்கும் புரிய வைக்க நான் முயற்சி செய்யறேன்.”
“தேங்க்யூ ரம்யா ஃபார் அன்டர்ஸ்டாண்டிங்”
ரம்யாவுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
“நீங்க கிளம்புங்க மேடம். நான் இருந்து வேலையை முடிச்சுக்கிட்டு வர்றேன்.”
வீட்டுக்கு வந்த பிறகும் ரம்யாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள் மனோகரி.
மாதவி மேடம் இந்தப் பெண்ணை முற்றிலும் வேறு விதமாக புரிந்து வைத்திருக்கிறாரே?
சில எளிய புரிதல்களில் மனிதர்களை அடக்கிவிடுவதில் ஏதோ ஒரு வசதி இருக்கிறது. உண்மையை எதிர்கொள்ளாமல் தப்பிக்கும் வசதி!
•••••••••••••••••
தியஸாஃபிகல் சொஸைட்டி நூலகத்தில் இனியாவுக்கும் மாரிமுத்துவுக்கும் வேலை இருந்தது. அனுமதி கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை.
தானே நேரில் வந்து அவர்களை அறிமுகம் செய்துவிட்டு வெளியில் வந்தாள் மனோகரி.
மெல்ல நடந்து பரந்து விரிந்த ஆலமரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த பிரும்மாண்ட ஆலமரத்தின் மூலம் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது. விழுதுகள் மட்டுமே தாங்கிக் கொண்டிருக்கிறது.
“ஹலோ தேவா!” என்ற குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சற்று தூரத்தில் சிவநேசன்.
இந்த சந்திப்பை அவள் எதிர்பார்க்கவில்லை.
“எங்கே இந்தப் பக்கம்?”
“என் ஸ்டூடன்ட் இனியாவை அழைத்து வந்திருந்தேன். அவள் லைப்ரரியில் இருக்கிறாள். நீங்கள்?”
“ஜெர்மனியிலிருந்து என் நண்பர் ஒருவர் இங்கே வந்து தங்கியிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக வந்தேன்.”
“சாதாரணமாக இங்கே டிசம்பர் மாதம்தான் வெளிநாட்டிலிருந்து நிறைய பேர் வந்து தங்குவார்கள்.”
“ஆமாம். கன்வென்ஷனுக்கு வருவார்கள். இவர் வேறு ஏதோ வேலையாக வந்திருக்கிறார்.”
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் ஆலமரத்தை ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள் மனோகரி. செந்நிறப் பழங்களை பெருமையாக சுமந்து கொண்டிருந்தது.
“உங்கள் வீடு எங்கே?”
“பக்கத்தில்தான். திருவான்மியூர்.”
“விடுமுறைக்கு எங்கேயாவது போவதாக இருக்கீங்களா?”
“இன்னும் எதுவும் திட்டமிடவில்லை.”
“எங்க யுனிவர்சிட்டியில் தத்துவத் துறையும், ஆங்கிலத் துறையும் சேர்ந்து ஒரு மாநாடு நடத்தப்போறோம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அதுல கலந்துக்கலாம்.”
மனோகரி சட்டென்று பதில் சொல்லத் தயங்கினாள்.
“உங்களைத் தனியா வரச்சொல்லலை. உங்க ஸ்டூடன்ட்டையும் கூட்டிக்கிட்டு வாங்க.”
“யோசிச்சு சொல்றேன்.”
“எப்படி சொல்வீங்க? உங்ககிட்டே என் ஃபோன் நெம்பர் இருக்கா?”
“இல்லை. இப்ப சொல்லுங்க.”
செல்போனை எடுத்து பதிவு செய்து கொண்டாள்.
பதினோறு மணி வெயில் களைப்பாக உணர வைத்தது.
சிவநேசனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கார் பார்க்கை நோக்கி நடந்தாள் மனோகரி.
“ஒரு நிமிஷம் தேவா! இங்கே பக்கத்தில் ஏதாவது நல்ல ரெஸ்டாரென்ட் இருக்கா?”
“இருக்கு. காந்தி நகர்ல”
“ஒரு காபி சாப்பிட என்னோட வருவீங்களா?”
மனோகரி தயங்கினாள்.
நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தபோது ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.
“சரி, வருகிறேன்.”
இருவருமாக அவரவர் காரில் ஏறி ரெஸ்டாரென்ட்டுக்குப் போனார்கள்.
ஏசியின் குளிர்ச்சி இதமாக இருந்தது.
பின்னணியில் ஒலித்த புல்லாங்குழலின் இசைகூட நன்றாகத்தான் இருந்தது.
காபியும் சாண்ட்விச்சும் ஆர்டர் செய்தார் சிவநேசன்.
இப்படி அதிகம் பழக்கமில்லாத ஒரு நபருடன் தான் ரெஸ்டாரென்ட் வரை வந்திருப்பது மனோகரிக்கு ஒருவித சங்கட உணர்வை ஏற்படுத்தியது.
“இன்னும் உங்களுக்கு எத்தனை வருஷம் சர்வீஸ் இருக்கு?”
“ஐந்து வருஷம். அடுத்த வருஷம் ஹெச்.ஓ.டி ஆகிவிடுவேன் போலிருக்கு.”
“ஓ! நல்ல விஷயம்தான்.”
“இது திடீர்னு நேர்ந்த விஷயம். ஐ ஆம் நாட் மென்ட்டலி ப்ரிபேர்ட்”
“வொய்?”
“எங்கள் காலேஜில் பிரச்னைகள் அதிகம். தவிர, நிர்வாகத்தில் எனக்கு நாட்டமில்லை. யாரோ வலிய என் மீது இதைத் திணிப்பது போல் தோணுது.”
“தன் பிரச்னையைப் பற்றி யாருடனாவது விவாதிக்க வேண்டும்” என்று மனோகரி நினைத்துக் கொண்டிருந்தாள். அதற்கான சரியான நபரைத்தான் இன்றைக்கு சந்தித்திருக்கிறாள்.
“எனக்கு டீச்சிங்கில்தான் அதிக விருப்பம். நிர்வாகத்துக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டால் வகுப்பு எடுக்கும் நேரம் குறைந்து போய்விடும்.”
சிவநேசன் யோசனையுடன் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.
“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுகாதீங்க தேவா. நீங்க உங்க திறமைக்குத் தகுந்த சரியான காலேஜுல வேலை செய்யலைன்னு நான் நினைக்கிறேன்.”
“ஆனா நான் அப்படி நினைக்கலை. எனக்கு இந்த காலேஜுல டீச் பண்ணுவது ரொம்ப பிடிச்சிருக்கு.”
“அங்கே உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? நீங்க படிச்சதை பகிர்ந்துக்கிற அளவுக்கு இன்டலெக்சுவலான ஃப்ரெண்ட்ஸ்?”
“அப்படி யாரும் இல்லை.”
“அதனாலதான் சொல்றேன். நீங்க உங்க திறமையை அங்கே வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நீங்க பல்கலைக்கழகத்துக்கு ஏன் ட்ரை பண்ணக்கூடாது?”
மனோகரி அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“பல்கலைக்கழகத்துல டீச்சிங், ரிசர்ச் இரண்டுக்குமே நல்ல சூழ்நிலை இருக்கும்.”
சாண்ட்விச்சும் காபியும் வந்தது.
“உங்க காலேஜுக்கு ஒருநாள் வந்திருந்தபோதே எனக்கு அதிர்ச்சியா இருந்தது. அந்தக் கூச்சலும் இரைச்சலும் என்னால் தாங்கவே முடியலை. எப்படிதான் அங்கே வேலை செய்யறீங்களோ?”
‘ஸாரி மிஸ்டர் சிவநேசன், உங்கள் கருத்தை என்னால ஏத்துக்க முடியாது’ என்ற வார்த்தைகள் காட்டமாக வர முயன்றது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மனோகரி.
தன்னுள் மெல்லிய படபடப்பை உணர்ந்தாள்.
(தொடரும்)