அருளுரை
இறைவனைத் தந்தையாகவும், மகனாகவும் அண்ணா என்றும், அரும்பொருள் என்றும், தலைவன் என்றும் தோழன் என்றும் பலவிதங்களில் அழைத்து அன்பு செலுத்துவது இந்துக்களின் வழக்கம். இதில் அவனைத் தாய் என்று சொல்லுவதே தலையாயது. ஏனென்றால் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள இணக்கம் ஒப்பற்றது. உலகில் வேறு எதையும் அதற்கு ஒப்பிட்டு சீர்தூக்க முடியாது.
ஆண்டவனிடத்தில் அடிமையானவன் பயபக்தி கொண்டு சற்று எட்ட நிற்கிறான். தந்தையிடத்திலும், தனயன் மிக நெருங்கி உறவாடுவதில்லை. வயது முதிர முதிரத் தள்ளாதத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள வேற்றுமை அதிகரித்து விடுகிறது.
ஆனால், அன்னையின் இயல்பு என்றைக்குமே மாறாதது. பிள்ளையானவன் நன்றே செய்திடினும், தீமையே இழைத்திடினும், தாயின் அன்புக்கு அன்னியன் ஆவதில்லை. தெய்வத்தின் அன்பும் அது போன்றதே. அவன் அன்பு வடிவினன். தங்குதடையின்றி அன்பை அளித்துக் கொண்டிருக்கும் அவன் நமக்குத் தந்தை மட்டும் அல்ல, தாயும் ஆனவன் என்கின்றனர். அவனது அன்பை அறிந்த தபோதனர். இறைவனது திருவருளில் தேங்கித் திளைத்திட்ட தாயுமானவ சுவாமிகள், ‘கன்றினுக்குச் சேதா களிந்திரங்கல் போல, எனக்கென்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே’ என்கிறார். ஆக பக்திப்பிரவாகம் பெருக்கெடுக்கும்போது, கடவுளைத் தாய் என்று அழைத் தல் இயல்பே ஆகும்.
தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது மிக எளிதாகி விடுகிறது. பெற்றவளோடு பிள்ளை நெருங்கிப் பழகுவதற்குச் சட்டதிட்டம் எதுவும் கிடையாது. சாஸ்திர விதிப்படி உபாசனை பண்ணத் தெரியாமல் இருப்பது பற்றி பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை செய் கின்ற வீம்பு, அழும்புகளைத் தாய் பொருட்படுத்து வதில்லை. குழந்தை காலால் உதைப்பதும், அவளுக்கு இன்பமாகவே இருக்கிறது. சிசுவுக்குப் பணிவிடை செய்வதில் பெறும் உழைப்பு அவளுக்குச் சிரமமாகத் தோன்றுவதில்லை. இவ்வளவுக்கும் காரணமாக இருப்பது, தாயும் பிள்ளையும் என்ற இணக்கமேயாகும். இக்கோட் பாட்டின் உட்பொருளை உணர்ந்து அதைக் கடவுள் வழி பாட்டில் கையாளுபவர்கள் பாக்கியவான்களேயாவர். தேவியை வணங்குவது அவருடைய பேராற்றலையும், பேரன்பையும் உள்ளவாறே உணர்ந்து, குழந்தையின் கள்ளமற்ற உள்ளத்துடன் போற்றும் பண்பாடேயாகும்.
தாயின் அன்பும் தெய்வத்தின் அன்பும் ஒன்றே என்ற அருளுரையை எத்தனை முறை படித்தாலும் படித்து கொண்டே இருக்கலாம். அத்தனை அருமை
வி.கலைமதி
நாகர்கோவில்.