0,00 INR

No products in the cart.

நாடாளுமன்றத்தை நடத்தும் முறை இதுவல்ல

தலையங்கம்

 

டந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். “குளிர்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது” என்று தடை விதித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலங்களவை அலுவல் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தலைமையிலான எட்டு எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெங்கையா நாயுடுவைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது, “தவறு செய்த எம்.பி.க்கள் தங்கள் மோசமான நடத்தைக்குக் கடும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தைத் திரும்பப்பெற முடியாது” என்று கூறியிருக்கிறார்.

முந்தைய கூட்டத் தொடரின் இறுதி நாளில் 12 மாநிலங்களவை  உறுப்பினர்களின் செயல்பாடுகள் “அவையின் கண்ணியத்துக்கு ஏற்புடையதாக இல்லை” என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே நேரத்தில் அவைத் தலைவரின் பிடிவாதமான போக்கும் நியாயமற்றது.  “உறுப்பினர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்ற அவைத் தலைவரின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம். ஆனால் அவைத் தலைவரின் முடிவை நியாயமானதாக பார்க்க முடியவில்லை.

சென்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற அமளிக்கு இந்தக் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்வதின் மூலம் சபாநாயகர் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறார். வருங்காலங்களில் இது எதிர்கட்சிகளை அடக்க ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. ஆளும் கட்சி பல மசோதாக்களை விவாதம் இல்லாமலேயே நிறைவேற்ற வழிவகுக்கும். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும்.

நாடாளுமன்ற கூட்டங்களில் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் வரிப்பணம் 2.5 லட்சம் செலவாகிறது. அந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி இப்படி நேரத்தை வீணடிப்பது தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உறுப்பினர்கள் செய்யும் துரோகம்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று எதிர்கட்சியாக இருப்பவர்கள் நாளை ஆளும் கட்சியாகலாம். ஆனால் எந்தக் கட்சியிலிருந்தாலும் நாடாளுமன்ற மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பு இரு சாராருக்கும் இருக்கிறது.

“உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனப் பெருமிதம் கொள்ளும் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் அடிப்படை விதிகள் மதிக்கப்படுவதில்லை” என்ற அவலத்தை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

2 COMMENTS

 1. ‘ நாடாளுமன்றத்தை நடத்தும் முறை இதுவல்ல ‘
  தலையங்கம் அருமை. இனி வரும் காலத்தில் ஆளும் கட்சி விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்ற வழி வகுத்து விடக்கூடாது ‘ என்ற ஜனநாயகத்தின் மீதான அக்கறையை மையப்படுத்தி எழுதியிருந்தது சிறப்பு. ‘முந்தைய கூட்டத் தொடரின் இறுதி நாளில் 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடு அவையின் கண்ணியத்துக்கு ஏற்புடையதாக இல்லை ‘ என்பதை
  அழுத்தம் திருத்தமாக மேற்கோளிட்டு சுட்டிக் காட்டத் தவறாத கல்கியின் நெற்றிக்கண் நேர்மைத் திறனுக்கும் சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

  நெல்லை குரலோன்
  பொட்டல்புதூர்

 2. நாடாளும் அரசியல் தலைவர்களுக்கு பாலப் பாடம் எடுக்க வேண்டி உள்ளதே!
  காலத்தின் கோலம் என்பதா? நம் துர்பாக்கியம் என்பதா?
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

உங்கள் இல்லத்திலும் பட்டொளி வீசிப் பறக்கட்டும்

2
தலையங்கம்   இந்த ஆண்டு சுதந்திர தினம்  இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டின் பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் ஒன்றிய அரசு  "ஹர் கர் திரங்கா", அதாவது "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி" என்ற பெருமிதமான முன்னெடுப்பை  எடுத்திருக்கிறது....

சபாஷ்  தம்பி

1
தலையங்கம்    95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை. கொரோனா காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இம்முறை...

களையெடுக்கப்பட வேண்டிய காவல்துறை

1
தலையங்கம்   “காலத்தே பயிர்செய்வது மட்டுமில்லை. காலத்தே பயிர்களுனூடே வளரும் களைகளையும் நீக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும், தவறினால் பருவம் முழுவதும் உழைத்த உழைப்புக்குப் பயன் இல்லை” என்பதும்  ஒரு நல்ல விவசாயிக்குத் தெரியும்.  அதுபோல்...

அடுத்த வீட்டில் எழுந்த அலறலும் அமைதியும்  

0
தலையங்கம்   நமக்கு மிக அருகிலிருக்கும் இலங்கை 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட தீவு தேசம். அங்கு  வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய...

புதியதோர் உலகம் செய்வோம்

0
தலையங்கம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பற்றி அதிகம் பேசிவருக்கிறார். பல திட்டங்கள்,  ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டை ‘78...