0,00 INR

No products in the cart.

“அந்த நாலு வரிகள்…”

                                                                        ஓவியம் : தமிழ்

– பூபதி பெரியசாமி

நேற்றுதான் வேலையில் சேர்ந்த மாதிரியிருக்கு. நாளைக்குப் பணி ஓய்வு. காலம்தான் எவ்வளவு வேகமாப் போகுது…’ நினைத்தபடியே கவலையில் புரண்டு புரண்டு படுத்த ரங்கன், அதிகாலைக் கோழி கூவியதும், கூடத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

மணி 5.00… பொன்னொளியின் மெல்லிய வெளிச்சம், புவியில் லேசாகப் பரவிக்கொண்டிருந்தது.

ஏதோ, சத்தம் கேட்டு வந்த கற்பகம், “ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதானே. நல்லா ஓய்வெடுக்காம, அதிகாலையும் அதுவுமா, ஷெல்புல என்ன தேடறீங்க?” என்றாள்.

“எல்லா டைரியும் இருக்கு. ஆனா, இந்த புது டைரியை மட்டும் காணல…”

“ஆமா… தினமும் நாலு வரி அதுல கிறுக்க வேண்டியது. அப்பப்போ எடுத்துப் படிக்க வேண்டியது. வீட்டைச் சுத்தம் செய்யும்போது, நான்தான் அதைக் கலைச்சிப் போட்டிருப்பேன். நல்லாத் தேடிப்பாருங்க…” அலட்சியமாய்ச் சொல்லிவிட்டு அடுக்களைக்குச் சென்றாள் கற்பகம்.

“ஊர்ல இருக்கற குப்பையை எல்லாம் அள்ளிச் சுத்தம் செய்யறீங்க. ஆனா, வீட்டு அலமாரியில மட்டும் தேவையில்லாத குப்பையையெல்லாம், ‘ஏதோ புதையல்’ மாதிரி சேர்த்து வச்சிருக்கீங்க…” கற்பகம் முணுமுணுத்தது ரங்கன் காதில் விழுந்தது.

ற்றுநேர தேடுதலுக்குப் பலன் கிடைத்தது. டைரி கிடைத்ததும், ரங்கன் முகத்தில் ஒரே மகிழ்ச்சி.

“அப்படி அதுல என்னதான் இருக்கோ…” மீண்டும் முணுமுணுத்த கற்பகம், கையில் தேநீர்க் குவளையோடு கணவன் அருகே வந்தமர்ந்தாள்.

“என்னங்க… நாளைக்கு ரிட்டயர்டு ஆகப்போறீங்க. கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. பிள்ளைகளுக்குச் செய்தியைச் சொல்லணுமா…” என்றாள் இழுத்தபடி.

“வேணாம் கற்பகம்… குப்பை அள்ளற வேலை செய்துதான் அவங்களை வளர்த்துப் படிக்க வச்சேன். நல்ல இடத்துல கல்யாணமும் செய்து கொடுத்தேன். ஆனா இப்போ, கவுரவம் பாக்கறாங்க. பணத்தேவைக்கு மட்டும்தான் நாம வேணும். பரிவு பாசம் இல்லாதவங்களுக்கு எதுக்குச் சொல்லணும்…” கறாராய்ச் சொன்னார் ரங்கன்.

குழப்பத்திலும், வீண் வாதத்திலும் அன்றையப் பொழுது இருவருக்கும் நீண்டிருந்தது. இரவு முழுக்கச் சிந்தனைகள் பல வந்து போனது. சரியான உறக்கமில்லை.

ருவழியாகப் பொழுது விடிந்தது…. மனப்பதற்றத்துடன் இருந்த ரங்கன், விரைவாய் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.

“என்னங்க… அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா? இந்த நீராகாரத்தையாவது கொஞ்சம் குடிச்சிட்டுப் போங்க…”

“வேணாம்” எனத் தலையை ஆட்டிவிட்டு, சைக்கிளை மிதித்த ரங்கன், அடுத்த முப்பது நிமிடத்தில் ஏரியாவில் இருந்தார்.

 ணி 7.00 … இரு சக்கர வாகனத்தில் மேஸ்திரி வருவதைப் பார்த்த ரங்கன், ஓடிச்சென்று அவருக்கு வணக்கம் சொன்னார்.

“ஏம்பா ரங்கா… நம்ம ஆணையர் இன்னக்கி சாயங்காலம், மனைவியோட உன்னை ஆபீசுக்கு வரச்சொல்லியிருக்காருப்பா…” காதில் வாங்கியபடியே தெருக் குப்பைகளை நிதானமாகக் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார் ரங்கன்.

“கடைசி நாள்கூட, கடமையோட வேலை செய்யறவன் இவனாத்தான் இருப்பான்…” மேஸ்திரி முணுமுணுத்தார்.

வேலை முடித்து, வீடு வந்தடைந்த ரங்கனுக்கு மதியச் சாப்பாடு சாப்பிடப் பிடிக்கவில்லை. அடுத்த மூணு மணி நேரம் ஆழந்த சிந்தனையிலேயே கழிந்தது.

மாலை ஐந்து மணி…

மனைவியோடு நகராட்சி அலுவலகம் வந்த ரங்கனின் கையில் பென்சன் தாளைக் கொடுத்த ஆணையர், “விடிஞ்சதும், மறதியா ஏரியா பக்கம் போயிடப் போறீங்க ரங்கன். வீட்டுல நிம்மதியா ஓய்வெடுங்க…” என்றார் சிரித்தபடி. கைகூப்பி அனைவருக்கும் நன்றி சொல்லி, வேலையிலிருந்து விடைபெற்றார் ரங்கன்.

வீடு வந்தடைந்த இருவருக்கும், எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மகனும் மகளும் குடும்பத்தோடு வாசலில் காத்திருந்தனர்.

“எனக்குச் சுத்தி வளைச்சியெல்லாம் பேசத் தெரியாது மாமா. வாங்கற சம்பளம் போதல. பிள்ளைங்க படிப்புச் செலவு, துணிமணி, வைத்தியச் செலவு… இப்படி எதுக்கும் கட்டுப்படியாகல. நீங்க எங்களோடவே வந்துட்டீங்கன்னா ஒத்தாசையா இருக்கும். செலவும் ஒரே செலவாப் போகும்…” என்றார் மருமகன்.

உடனே, மருமகள், “எங்க ஏரியாவுல, புதுசா பிளாட் போட்டிருக்காங்க. ஒரு மனைய வாங்கி வீடு கட்டிப் போடுங்க. நாம எல்லோரும் ஒண்ணா சேர்ந்து நிம்மதியா இருக்கலாம். வயசான காலத்துல ரெண்டு பேரும் தனியாக் கிடந்து ஏன் கஷ்டப்படணும் என்றாள்.

அமைதியாய்க் கேட்ட ரங்கன், “இதுவரைக்கும் என் கற்பகத்துக்குன்னு நான் எதுவும் செய்ததில்ல. எனக்கு இந்த வீடும் மனைவியும்தான் முக்கியம். எங்கும் வர விருப்பமில்லை…” வேகமாய்ச் சத்தமிட்டுவிட்டு, சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டார். கணவன் இவ்வளவு கோபப்பட்டுப் பேசுவதை முதன் முறையாகப் பார்த்தாள் கற்பகம்.

“வயசாயிட்டாலே பைத்தியக்காரத்தனமா எதையாவது பேசத் தோணும்போல. உங்க நல்லதுக்குத்தான் சொன்னோம். எக்கேடாவது கெட்டுப் போங்க…” புலம்பிவிட்டு நால்வரும் கோபமாய்ப் புறப்பட்டனர். உடனே, டைரியின் அன்றையத் தேதியில், மறக்காமல் அதையும் நாலு வரிகளில் எழுதி வைத்தார்.

ங்கன் ஒய்வுபெற்று 24 மணி நேரம் கடந்து விட்டது.  அன்று புதன்கிழமை… வங்கிக் கணக்கை ஒருமுறை சரிபார்த்துட்டு வரலாமென நினைத்த ரங்கன், கற்பகத்தை அழைத்தார்.

“ஏம்மா கற்பகம்… பேங்க் வரைக்கும் போயிட்டு வரேன்…” குரல் கேட்டு அறைக்குள் சென்றவள், அலமாரியிலிருந்த ஒரு புதுச் சட்டையை எடுத்து வந்தாள்.

“இனிமேலாவது, நல்ல சட்டையாப் போடுங்க. அலமாரியில பல வருஷமா நல்ல வேட்டிச் சட்டையெல்லாம் தூங்குது…”

கற்பகம் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு புன்சிரிப்புடன், மிதிவண்டியைச் செலுத்த ஆரம்பித்தார் ரங்கன்.

ன்று, வங்கியில் கூட்டம் ஓரளவே இருந்தது. சிலர் மட்டுமே வரிசையில் நின்றிருந்தனர். திடீரென, அருகே வந்த ஒரு இளைஞன், “ஐயா…நீங்க ரங்கன்தானே…” என்றான்.

“ஆமாம்பா… நீங்க…”

“என்னை அடையாளம் தெரியலையா? முருகேசன் மகன் சிவா. எங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கூட நீங்க வந்தீங்க. எனக்கு நல்லாவே நினைவிருக்கு…”

“ஓ… முருகேசன் மகனா. அவரும் நானும் ஒரே ஏரியாவுல பல வருஷம் வேலை பார்த்தோம். ரிட்டயர்டான பிறகு, அவரைப் பார்க்கவே முடியல. ஆமா, அப்பா எப்படி இருக்கார்…” ஆவலுடன் கேட்ட ரங்கனுக்கு, அதிர்ச்சியாய்ப் பதில் கிடைத்தது.

“ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான், அப்பா மாரடைப்பால் இறந்துட்டார். வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு பெரிய இடி. யாருக்கும் சொல்லக்கூட முடியல…” சிவா சொன்னதும், ரங்கனின் மனம் கனத்தது. பேச வாய் வார்த்தை வராமல் கண்கள் கலங்கின.

அங்கிருந்து, உடனே விடைபெற மனம் மறுத்தது. சற்று நேரம் அவனிடம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, விடைபெற்று மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தார்.

யிறு பசியை உணர்த்தியதும், கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி…1.30. முருகேசனின் நினைவோடு பிரதான சாலையைக் கடக்கும் போது, மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று… ரங்கனை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

சற்று நேரத்தில் மக்கள் கூட்டம் கூடியது. அடுத்த சில நிமிடத்தில், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்தடைந்தது. விபத்துச் செய்தியறிந்த கற்பகம், வீட்டு வேலைகளை அப்படியே உதறிவிட்டு, தகவல் வந்த மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.

வசரச் சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டிருந்த, ‘ரங்கனின் தேகம் முழுக்கச் சிராய்ப்புகள்… தாறுமாறாய்க் கிழிந்திருந்த புதுச்சட்டை… தலையில் ஒழுகிக் கொண்டிருந்த ரத்தம்…’ இவையெல்லாம் விபத்தின் தன்மையை உணர்த்தியதால், கற்பகத்துக்குப் பயம் அதிகமானது. உடனே, மகனுக்கும் மகளுக்கும் தகவல் சொல்லிவிட்டுப் பதற்றமாய் வெளியே காத்திருந்தாள்.

பரிசோதித்து முடித்த வெளியே வந்த மருத்துவர்… “தலையில நல்லா அடிபட்டிருக்கும்மா. ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். மூளையில ரத்தம் கட்டியிருக்கு. ஊசிபோட்டு கரைக்க முயற்சி செய்யறோம். இல்லைன்னா அறுவைச் சிகிச்சைதான் செய்யணும். உடனே, ஐம்பதாயிரம் பணத்தைக் கட்டிடுங்க…”

‘படபட’வெனச் செல்லி முடித்து, வேகமாய் உள்ளே சென்றார் மருத்துவர். குழப்பத்தில் இருந்த கற்பகம், பிள்ளைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

மாலை ஏழு மணி… ஐந்து மணி நேரமாய் அழுது அழுது, கற்பகத்தின் கண்கள் வீங்கியிருந்தது. ஒருவழியாய் மகனும் மகளும் நிதானமாய் வந்து சேர்ந்தனர்.

இருவரையும் பார்த்ததும், கற்பகத்துக்கு ஓரளவு தெம்பும் தைரியம் வந்தது. மருத்துவர் சொன்னதைப் பதறியபடி பிள்ளைகளிடம் எடுத்துச் சொன்னாள்.

“ஏம்மா… வயசான காலத்துல அடங்கி ஒடுங்கி வீட்டுல கிடக்காம. ரிட்டயர்டாகி ரெண்டாவது நாள்லயே இப்படியா…”

“இவ்வளவு பணத்துக்கு, உடனே நாங்க எங்க போறது. எங்களுக்கே மாதச் செலவு ஒன்னப்புடி என்னப்புடின்னு இருக்கு…”

பெத்த பிள்ளைகள் மாறி மாறி வழுக்கலாய்ப் பேசியதும், நம்பிக்கை இழந்தாள் கற்பகம். மீண்டும் பயம் வந்தது. பணத்தேவையை நினைத்து நினைத்துக் குழப்பத்திலேயே, அடுத்த இரண்டு மணி நேரம் கடந்தது.

ரவு மணி 9.30… மீண்டும் கற்பகத்தை அழைத்த டாக்டர், “நல்ல வேளை… சரியான நேரத்துல பணத்தைக் கட்டினீங்க. சிகிச்சை தொடங்கியாச்சு…” தகவல் சொல்லிவிட்டு, அவசரமாய் உள்ளே சென்று விட்டார்.

“இவ்வளவு பணத்தை யார் கட்டியிருப்பா?” விளங்காமல், மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு, மருத்துவரிடமிருந்து நல்ல செய்தி வந்தது.

“அறுவை சிகிச்சை தேவைப்படல. இரத்தக்கட்டை ஊசியாலயே கரைச்சிட்டோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. இப்போ, அவர் நல்லாவே இருக்கார். நாளைக்கு வார்டுக்கு மாத்திடுவோம். ஒரு வாரம் நல்லா ஓய்வெடுக்கணும்…” மருத்துவர் சொன்னதும், கற்பகத்துக்குச் சற்று தெம்பு வந்தது.

றுநாள் காலை 7.00 மணி…

வார்டுக்கு மாற்றப்பட்ட ரங்கன் அருகே நின்றிருந்த மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மயக்கம் தெளிந்து, கண் திறந்து லேசாகப் பேசத் தொடங்கினார்.

அப்போது, பதற்றமாய் வார்டுக்குள் நுழைந்த ஒரு இளைஞன், ரங்கன் படுக்கைக்கு அருகே வந்து நின்றான்.

நிதானமாய் உற்றுப்பார்த்த ரங்கன்… “தம்பி… நீங்க சிவாதானே. என்ன இவ்வளவு தூரம்…” என்றார் மெல்லிய குரலில். உடனிருந்த மூவரும், அறிமுகமில்லா அவனைப் பார்த்து விழித்தனர்.

“மனசு கேக்கலை ஐயா. அதான், காலையிலயே புறப்பட்டு வந்துட்டேன்…” தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கினான் சிவா.

“ஐயா… எங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் அப்பா உங்ககிட்ட வாங்கியிருக்கார். நேத்து பேங்க்ல பார்த்தப்பக்கூட நீங்க அதச்சொல்லவேயில்லயே…”

லேசான புன்னகையுடன்… “அதெப்படி உனக்குத் தெரியும்…” என்பதுபோல சிவாவைப் பார்த்தார் ரங்கன்.

“நேற்று வீட்டைச் சுத்தம் செய்யும்போது, அவரோட பழைய டைரிகளையெல்லாம் ஒழுங்குபண்ணி அடுக்கி வச்சிட்டு, புதுவருஷ டைரியைப் புரட்டினேன். ஒரு பக்கத்தில், உங்களிடம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருப்பதை, நாலு வரியில் எழுதி வைத்திருந்தார். அந்த நேரத்துலதான், நண்பர்கள் மூலமா உங்க விபத்துச் செய்தியைக் கேள்விப்பட்டேன்.

இரவே பணத்தைத் தயார்ப் பண்ணி எடுத்துக்கிட்டு ஓடி வந்தேன். ரிசப்ஷன்ல விசாரிச்சேன். பணத்துக்குக் கஷ்டப்படறீங்கன்னு தெரிஞ்சுது.

உடனே, பணத்தைக் கட்டிட்டு காலையில வந்து பார்த்துக்கலாம்னு வீட்டுக்குப் போயிட்டேன். எல்லோரும், குழப்பதிலிருப்பீங்கன்னு தெரியும். அதான், காலையிலயே ஓடோடி வந்துட்டேன்…” என்றான் பணிவாய்.

“நல்ல வேளை தம்பி. அப்பா இறந்ததும், அந்த டைரியை வெறும் ‘குப்பை’ன்னு தூக்கி எறியல. அவர், எழுதியிருந்த நாலு வரிகளை ஏதோ கிறுக்கல்னு அலட்சியம் செய்யாமப் படிச்சிருக்கியே…” என்ற கற்பகம், சிவாவைக் கையெடுத்து வணங்கினாள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

“கண்ணான கண்ணே!”

4
“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா?...

சூது கவ்வும்

2
திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்... நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த...

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...