0,00 INR

No products in the cart.

“முகத்தைப் பார்த்து மதத்தையும், மதத்தைப் பார்த்து குணத்தையும் எடைபோடக்கூடாது”

FIR விமர்சனம்

– லதானந்த்

 

ஐ.ஐ.டி.யில் வேதியியல் – பொறியியல் படித்துத் தங்கப் பதக்கம் பெற்றவர் விஷ்ணு விஷால். படத்தில் இவர் ஓர் இஸ்லாமியர். பெயர் இர்ஃபான் அஹமட். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் இவர், ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேண்டாவெறுப்பாகப் பணியாற்றுகிறார். சந்தர்ப்பவசத்தால் அவர் மீது ‘ISI தீவிரவாதி’ என்ற முத்திரை விழ, அதை எதிர்த்து அவர் போராடுவதுதான் கதை.

விஷ்ணு விஷாலே தயாரித்து, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வழியாக வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

‘FIR என்றால் முதல் தகவல் அறிக்கை’ என்று நினைத்திருப்போம். கட்டக் கடைசியில் கௌதம் மேனன் அதன் அர்த்தத்தை விலாவரி செய்கிறார்.

படத்தின் முற்பகுதியில் மரண தண்டனைக்கு ஆளாவதற்கு முன்னர் ஒரு தீவிரவாதக் கைதி, “உயிர்த்தெழுதலை எதிர்நோக்கி ராவணன் தலையில் எட்டுக் கல்யாணம்” எனச் சொல்லிவிட்டுச் செத்துப்போகிறான். அவன் சொன்ன வாரத்தைகளை  ‘டீகோட்’ செய்யும் தேசியப் பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, ‘ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டுக் குண்டுகள் வெடிக்கும்’ என்பதைக் கண்டுபிடிக்கிறார். இப்படிப் படம் மிக விறுவிறுப்பாக முற்பகுதியில் பாய்கிறது.

இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு ஒன்றையே குறியாகக் கொண்டதால் திரைக்கதையில் பல குழப்பங்கள் தலையைக் கிறுகிறுக்க வைக்கின்றன.

ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷால் திவிரவாதிதானோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு திசைதிருப்பும் காட்சிகளும் உண்டு!

விஷ்ணு விஷாலைப் பல இடங்களிலும், “Are you religious?” என்ற கேள்வி துரத்திப் பாடாய்ப் படுத்துகிறது. அப்போது அவர் விரக்தி முகபாவத்தை அச்சு அசலாய்க் காண்பிக்கிறார். ‘அபுபக்கர் அப்துல்லா’ என்ற தீவிரவாதி அவர்தான் என நினைத்துத் துன்புறுத்தப்படும்போது அவர் வெளிப்படுத்தும் அச்சப் பார்வைகள் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சபாஷ் வி.விஷால்!

படத்தில் பாத்திரங்கள் கொஞ்சம் அதிகம்தான். அதிலும் சில பாத்திரங்கள் இல்லாமல் இருந்திருந்தால்கூட படத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. குறிப்பாக மஞ்சிமா மோகன் பாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை. அதைப் போலவே ஒரு பாடலின் மூலமே சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணு விஷாலின் காதல் ‘கதை’யும் படத்தோடு ஒட்டவில்லை.

மஞ்சிமா மோகன் சற்றுப் பூசினாற்போலவும், முகத்தில் லேசான முதிர்ச்சியோடும் தொலைக்காட்சி நெடுந்தொடர் ‘அண்ணி’ போன்ற தோற்றத்தில் சில காட்சிகளில் தென்படுகிறார்.

படத்துக்கே உயிர்நாடியாகப் பின்னணி இசை பட்டையைக் கிளப்புகிறது.

NIA வின் உயர் அதிகாரியாக வரும் கௌதம் மேனன் செம ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார். அவரது உதவியாளர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

படத்தில் பிரதமராக வருபவரது வேடப் பொருத்தம் மிகச் சிறப்பு.

பாதுகாப்பு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கூடம், இரசாயனத் தொழிற்சாலை ஆகிய பின்புலங்கள் படத்தின் தேவைக்கேற்ப மிகச் சரியாகப் படத்தோடு பொருந்துகின்றன. ஹைட்ரஜன் பெராக்ஸைடு, ஸரீன் வாயு, இணைய ஹேக்கிங் என படத்துக்குத் தேவையான ஹைடெக் சமாசாரங்களையும் குழைத்துத் தந்திருக்கிறார்கள்.

பிரதமருக்கே தெரியாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாற்றுத் திட்டம் வகுப்பது போன்ற லாஜிக் மீறல்களும் உண்டு.

‘இஸ்லாமியர்கள்மீது வீண்பழி சுமத்துவது தவறு’ என்பதையும், ‘நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்யும் இஸ்லாமியர்கள் உண்டு’ என்பதையும் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்!

“முகத்தைப் பார்த்து மதத்தையும், மதத்தைப் பார்த்து குணத்தையும் எடைபோடக்கூடாது” என்று வரும் வரிகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கன.

மொத்தத்தில், முற்பாதி போலவே பிற்பாதியும் இருந்திருந்தால் –  First Class!

 

 

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

“முயலும் ஜெயிக்கும்; ஆமையும் ஜெயிக்கும்; முயலாமைதான் ஜெயிக்காது”

0
டான் சினிமா விமர்சனம் - லதானந்த்   முற்பாதியில் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பெற்றோர்களுக்கும், பிற்பாதியில் பெற்றோர்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பிள்ளைகளுக்கும் பாடம் எடுப்பதுதான் கதை. ‘டான்’ என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ கேங்க்ஸ்டர் படம்...

அழுத்தமான கிளைமேக்ஸ்

0
விசித்திரன் பட விமர்சனம்  லதானந்த்   விருப்ப ஓய்வுபெற்றுப் பணியில் இருந்து விலகி, தனியே குடியும் புகையுமாக இருக்கும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் வாழ்வில், பணியில் இருக்கும்போதும் விருப்ப ஓய்வுக்குப் பின்னும் நடக்கும் விபரீதங்களை அவர் நண்பர்கள்...

லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!

0
காத்துவாக்குல ரெண்டு காதல்  விமர்சனம் லதானந்த்   இரண்டு காதலிகளுக்கிடையிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ராம்போ என்னும் பாத்திரமேற்றிருக்கும் விஜய் சேதுபதி யாரைத் திருமணம் செய்துகொள்கிறார் – அல்லது யாரையாவது திருமணம் செய்துகொள்கிறாரா -  என்பதுதான் கதை. ராம்போ என்னும்...

எப்போதாவதுதான் இது போலக் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன

0
‘ஓ மை டாக்’ சினிமா விமர்சனம் லதானந்த்   இந்தப் படத்தை ஒரு குடும்பப் படம் என்று சொல்லலாம். சூர்யா – ஜோதிகா குடும்பம் தயாரித்திருக்கிறது; விஜயகுமார் அவரது மகன் அருண் விஜய் மற்றும் பேரன் அர்னவ்...

‘வெற்றிபெறுவது கடினம்; பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம்

0
KGF  2 –  திரை விமர்சனம் - லதானந்த்   ‘வெற்றிபெறுவது கடினம்; பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது அதைவிடக் கடினம்’ என்பார்கள். உண்மைதான். KGF முதல் பாகத்தில் வெற்றிபெற்றவர்கள், KGF இரண்டாம் பாகத்தில் அதைக் கடினப்பட்டுத் தக்கவைத்தும்...