0,00 INR

No products in the cart.

கல்யாணம் கச்சேரி

                                                                        ஓவியம்: தமிழ் 

– ரா. ஶ்ரீதர்

“என்னடா மாப்ள? எப்போ கல்யாணம்? கல்யாணத் தேதி ஃபிக்ஸ் ஆன உடனே,  ஒரு ட்ரீட் குடு. நேத்துதான் ராஜுவும் நானும் இது பத்திப் பேசிண்டு இருந்தோம்” என்ற பத்ரியைப் பார்த்துத் திகைத்தேன்.

கல்யாணமா? எனக்கா? அடப்பாவிகளா? இது என்ன புதுக் குழப்பம்?

“என்ன பத்ரி உளர்ற ? எனக்குக் கல்யாணம்னு யார் சொன்னா? ஏதாவது கனவு கண்டாயா?” என்றேன் எரிச்சலோடு.

“என்ன ரங்கா இது? அதுதான் ஊரே பேசறதே!!” என்றான்

“இத பாரு பத்ரி, நீ பேசினா அது ஊர் பேசறது ஆயிடுமா? என்னடா குழப்பற?” என்றேன்.

“ரங்கா, அதுதான் உன் வீடு மேல் போர்ஷன்ல        வரதாச்சாரின்னு ஒருத்தரைக் குடி வெச்சிருக்கியே? நீ அவரோட மூணாவது பொண்ணு சீதாவோட  ஊர் சுத்தறது, எல்லோருக்கும் தெரியும். சும்மா நடிக்காத” என்றான் நக்கலாகப் புன்னகைத்தவாறே.

“அடப்பாவி, அது சின்னப் பொண்ணுடா, டெய்லி சாயங்காலம் என்கூட வாக்கிங் வரா. இது பெரிய குத்தமா? அவா அப்பா, சாரி ஸார் கேட்டார்னா ரொம்ப வருத்தப்படுவார்” என்றேன்.

“மாட்டார். ரங்கா, உன்ன மாதிரி பசங்க கிடைக்கிறது கஷ்டம். மதுரை எஸ்.எஸ். காலனி சென்டர்ல பெரிய வீடு, எல்.ஐ.ஸி.ல நல்ல வேலை. ஒரு கெட்டப் பழக்கம் இல்ல. முக்கியமா, அப்பா, அம்மா, உடன் பிறந்தவா யாரும் இல்ல.  தேடினாலும் இந்த மாதிரி அயனான ஜாதகம் கிடைக்காதுடா” என்றான் பத்ரி.

“பத்ரி, கல்யாண புரோக்கர் மாதிரி பேசாத. சும்மா இருக்கியா?” என்றவன் மேசை மேலிருந்த அன்றைய ஹிந்து பேப்பரை  எடுத்துப் பார்வையிடலானான்.

“ரங்கா, வயசாயிண்டே போறது. நானும் நீயும் ஒரே வயசுதான். என்னைப் பாரு, கல்யாணம் ஆயி ரெண்டு குட்டி போட்டாச்சு. காலா காலத்துக்குக் கல்யாணம் பண்ணிக்கோ. சொல்லிட்டேன்” என்று  எழுந்து கிளம்பினான்.

அவனை என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. சின்ன வயதிலிருந்து கல்லூரி வரை சேர்ந்துப் படித்தோம். ஒரே ஏரியா, அவனுடைய தகப்பனார் ராஜாங்கம், என் அப்பாவின் நல்ல நண்பர். என்ன, என் அப்பாவைப் போலச் சம்பாதிக்க அவரால் முடியவில்லை. இன்னமும் வாடகை வீடுதான். என் அப்பா, அம்மா இருவரும் ஒருசேர ஒரு விபத்தில் இறக்கும்போது நான் கல்லூரி முடிக்கும் தருவாயிலிருந்தேன். கல்லூரி முடித்து சில மாதங்களில் எல்.ஐ.ஸி. வேலையும் கிடைத்துவிட்டது.

மேல் போர்ஷனில் இருந்த தட்டுமுட்டு சாமான்களைக் கடாசிவிட்டு, சற்று ரிப்பேர் செய்து வாடகைக்கு விட்டபோது வந்தவர் வரதாச்சாரி.

“எனக்கு 4 பொண்ணுங்க, நானும் என் ஆம்படையாளுமா சேர்ந்து ஆறு பேர். யாரும் வீடு தர மாட்டேங்கிறா” என்று ஒரு நாள் என்னை வந்து பார்க்கையில் புலம்பினார்.

அவரை என்னிடம் அழைத்து வந்த என் நண்பன் சந்தானம், எனக்கு நெருக்கமானவன்.

“ரங்கா, நல்ல வாழ்ந்து கெட்ட குடும்பம்டா.  ஏதோ ஏஜென்ஸி நடத்தி மனுஷன் நிறையப் பணமுடைல இருக்கார். ஆனா, ரொம்ப நல்ல மனசு. உன் வீட்டு மேல் போர்ஷன்தான் பெருசாச்சே. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா” என்றான்.

அப்படி வந்தவர்தான் இந்த வரதாச்சாரி. அந்த வீட்டு வாடகை எனக்கு ஒரு கூடுதல் வருமானம்தான். எனவே எட்டு வருடம் ஆகியும் வாடகையை ஏற்றவும் தோன்றவில்லை.

ஆனால், அவர் மகளைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கு இல்லை. பத்ரி சொல்லிவிட்டு அகன்றவுடன், மெதுவே மேலே சென்றவன், “சார்,” என்று அழைத்தேன். அவர் இல்லை போலும். சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர் மனைவி வத்ஸலா என்னைப் பார்த்துவிட்டுப் புன்னகையுடன், “அவர் இல்லையே. வந்தவுடனே உங்களைப் பார்க்கச் சொல்றேன்” என்றபோது தலையாட்டிவிட்டு கீழே வந்துவிட்டேன்.

*****  *****

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தால், வரதாச்சாரி!!

“வாங்கோ சார், கமின்”  என்றேன்.

உள்ளே நுழைந்து அமர்ந்தவர், “மூத்தவ ஜானகிக்குக் கல்யாணம் ஆயி,  நாலு வருஷமாச்சு. மாப்பிளை வரதன் கொஞ்சம் முன்கோபி. ரெண்டு வருஷமாச்சு, அவாளுக்குள்ள இருக்கிற மனஸ்தாபம் தீரல. அதுதான், ஒரு எட்டு அவா மாமாவைப் போய்ப் பார்த்துட்டு, கொஞ்சம் அந்தப் பிள்ளையாண்டான் வரதனுக்கு எடுத்துச் சொல்லுங்கோன்னுட்டு வரேன். இதோ அடுத்த மாசம் ரெண்டாவது பொண்ணு நீலாவுக்குக் கல்யாணம். வர்ற மாப்பிளை, அவாத்துல எல்லார்கிட்டயும் ஜானகியோட பிரச்னை என்னன்னு தெளிவா சொல்லிட்டேன். வரப்போற மாப்பிளை உப்பிலி ரொம்ப நல்ல மாதிரி. ‘வீட்டுக்கு வீடு இது மாதிரி இருக்கு சார், கவலையை விடுங்கோ சரியாயிடும்’ னார். அவரோட அப்பா, ஒருபடி மேல போயி, ‘நா வேணா  ஜானகியோட மாமனார் / மாமியார்கிட்ட பேசட்டுமா?’ன்னு உதவிக்கு வரார். ஏதோ பகவான் அனுக்கிரகம் செஞ்சா சரி” என்றார்.

‘சார், உங்களைக் குழப்பாம நேரடியா கேக்கறேன். உங்களுக்கு, உங்க மூணாவது பொண்ணு சீதா லக்ஷ்மிக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு ஏதாவது ஐடியா இருக்கா?” என்றேன் பட்டென்று.

அவர் நிச்சயம் இந்த நேரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. “சார், என் பொண்ணு கூட என்கூட பேசினா. உங்களுக்கு ஓகேன்னா அவளுக்கும் ஓகேன்னு சொல்லச் சொன்னா” என்றார் சற்று மெதுவாக. எனக்கு எரிச்சல் வந்தது.

“சார், இத பாருங்கோ, எனக்குக் கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி ஐடியா எதுவும், எப்பவும் இல்லை. எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை” என்றேன் தீர்மானமாக.

“அதெப்படி சார், மனுஷனா பொறந்தா கல்யாணம், காட்சி வேண்டாமா? உங்காத்துப் பெரியவா யாரண்ட பேசணும், அவா எங்க இருக்கான்னு சொல்லுங்கோ. நானும்,வத்ஸலாவும் போயி பேசறோம்” என்றவர் சிறிது இடைவெளி விட்டு, “நீங்க எங்க பொண்ணு சீதாவைக் கல்யாணம் செஞ்சுக்கிறதுல எனக்கும் வத்ஸாலாவுக்கும் பூரண சம்மதம்” என்றார்.

எனக்கு ஒரு செகண்ட் பத்ரி சொல்லிச் சென்றது மனதில் ஓடியது. அடப்பாவி, அப்படியே பேசுகிறாரே என்று யோசித்தவன், “இல்லை சார், கல்யாணம் நிச்சயம் வேண்டாம். எனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை” என்றேன் மிகத் தீர்மானமாக.

“உங்களுக்கு என்ன கொறச்சல் சொல்லுங்கோ. நான் உங்களை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. கொஞ்ச காலம் கழிஞ்சு மறுபடி பேசலாம்” என்றார்.

‘அட ராமா, எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் அந்த டைப் இல்ல” என்றேன் எரிச்சலுடன்.

“இல்ல சார், ஏதோ குழப்பத்துல இருக்கேள். அப்பறமா பேசலாம்” என்று எழுந்து கொண்டார்.

*****  *****

ன்றிரவு முழுக்கத் தூக்கம் பறிபோனது.

மறுநாள் காலை எழுந்தவன், வேகமாக வேலைகளை முடித்துக்கொண்டு, என் நண்பன் சுப்ரமணியைப் பார்க்கச் சென்றேன். வடக்கு மாசி வீதியில் நல்ல பிராக்டீஸ். மனநல மருத்துவர் என்று போர்ட் பளபளத்தது. பெல்லை அடித்தவுடன் கதவைத் திறந்தவன், “ரங்கா வாடா, என்ன சர்ப்ரைஸ்?” என்றான் மகிழ்ச்சியோடு.

என்னோடு பள்ளியில் படித்தவன், எம்.பி.பி.எஸ்.,   எம்.டி.,  சைக்கியாட்ரி டிப்ளமோ என கிடுகிடுவென உயர்ந்துவிட்டான்.

‘மணி ஒரு சின்ன ஹெல்ப்” என்றேன் மிக மெதுவாக.

“உக்காருடா” என்றவன், உள்ளே பார்த்து, “மீனா, யாரு பாரு. ரங்கா” என்றான் மகிழ்ச்சி குறையாமல்.

வெளியே வந்த அவன் மனைவி மீனா ஒரு மகப்பேறு நிபுணர். இருவருக்கும் நல்ல பிராக்டீஸ். ஏராளமான வருமானம் என்று அமோகமாக வாழ்கிறார்கள் என்று தெரியும். புன்னகைத்துவிட்டு, “வாங்கோ சொக்கியமா? எப்போ கல்யாணச் சாப்பாடு போடப்போறேள்?” என்றாள்.

எனக்கு ஆயாசமாக இருந்தது. ஒரு சாப்பாடு வேண்டுமென்றால் கல்யாணம்தான் தீர்வா என்ன? என்று மனதில் நினைத்துக் கொண்டவன், “அதுலதான் மீனா பிரச்னையே. அதுக்குத்தான் மணியைப் பார்க்க வந்தேன்” என்றேன்.

“தாராளமா. இதோ ஒரு நிமிஷம் தோசை ரெடியாயிடும். சாப்ட்டுண்டே பேசலாம்” என்று உள்ளே சென்றாள்.

சுப்ரமணியிடம்  பத்ரி  பேச்சை, ரங்காச்சாரியுடன் நடந்த உரையாடல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு,

“கல்யாணத்துல எனக்குக் கொஞ்சமும் சம்மதம் இல்ல. நான் கேக்கறது ஹைலி அன்எதிக்கல், இருந்தாலும் எனக்கு மனநிலை சரியில்லைன்னு ஒரு சர்டிஃபிகேட் தர முடியுமா மணி? ப்ளீஸ்?” என்றேன்.

ஒருகணம் என்னைப் பார்த்துத் திகைத்தவன், பெரிதாகச் சிரித்து, “அடப்பாவி, ரங்கா. கல்யாணமே வேண்டாம்னு சொல்றவன் அதிபுத்திசாலிடா,  ஜீனியஸ்… உனக்கு எப்படிடா மனநிலை சரியில்லாம போகும்?” என்று வீடே அதிரும்படி சிரித்தான்.

வெளியே வந்த மீனா அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, “போதுமே, உங்க லட்சணம். கல்யாணம் வேண்டாம்னு தீவிரமா இருக்கிறவர்கிட்ட என்ன ஏதுன்னு ரெண்டு நல்ல வார்த்தையா சொல்லித் திருத்தறத விட்டுட்டு… நல்லாத்தான் சிரிக்கிறேள்” என்று நொடித்துக் கொண்டாள்.

கிச்சனுக்கு அருகே இருந்த அறைக்கதவு திறந்து வெளியே வந்த வரதாச்சாரியையும் அவர் மனைவி வத்ஸலாவையும் பார்த்து அதிர்ந்தேன். இவர்கள் எங்கே இங்கே?

வரதாச்சாரி என்னைப் பார்த்து அசடுவழிய சிரித்துவிட்டு, “என்ன ரங்கா இது? நேத்து ராத்திரி பத்ரி என்னைக் கூப்பிட்டு, உங்க பிடிவாதத்தைச் சொல்லிவிட்டு, எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த பைத்தியக்காரன் வேஷம் கூடப் போடுவேள்ன்னு கிளியரா சொன்னார். இன்னைக்குக் கார்த்தாலே பேப்பர் எடுக்கக் கீழ எறங்கறச்சே நீங்க போன்ல பத்ரிகிட்ட இங்க வந்து சர்டிஃபிகேட் வாங்கறதைப் பத்திப் பேசிண்டு இருந்ததையும் கேட்டேன். அதுதான் உங்களுக்கு முன்னாடியே பத்ரிகிட்ட அட்ரஸ் வாங்கிண்டு இங்க வந்தோம். பின்னாலேயே நீங்க வரேள். கவலைப்படமா கல்யாணம் செஞ்சுக்கோங்கோ. உங்க சுதந்திரம் பறிபோயிடாம இருக்கிற மாதிரி என் பொண்ணு சீதா நடந்துப்பா. என்னோட அஷ்யூரன்ஸ் இது” என்றார்.

நான் தலையைச் சிலிர்த்துக்கொண்டேன். என்னைப் பார்த்து மறுபடியும் புன்னகைத்த சுப்ரமணி, அருகே வந்து, மெதுவாக என் காதில் கிசுகிசுத்தான்.

“அதெப்படிடா நீ மட்டும் தப்பிக்கிறது? மாட்னியா?” என்றான். அவன் குரலில்தான் எவ்வளவு திருப்தி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

“கண்ணான கண்ணே!”

4
“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா?...

சூது கவ்வும்

2
திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்... நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த...

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...