– ஹர்ஷா
கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் மூலம் பரிவர்த்தனை, முதலீடுகள் ஆகியவை மிகப்பெரும் டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுத்துள்ள சூழலில், இந்தியாவுக்கென தனியாக டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கியே இந்த ஆண்டு முதல் வெளியிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் டிஜிட்டல் ரூபாய் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியபோது, “சிபிடிசி (CBDC) எனப்படும், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும். டிஜிட்டல் ரூபாய் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மைக்கு வழிவகுக்கும்.
“பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி 2022ஆம் ஆண்டில் டிஜிட்டல் ரூபாயை வெளியிடும்” என கூறியிருக்கிறார். இதன் மூலம் “இணைய பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்” என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கிரிப்டோகரன்சி – டிஜிட்டல் ரூபாய்: என்ன வித்தியாசம்?
கிரிப்டோகரன்சி அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் ஒரு தன்மை உள்ளது. அதன் மதிப்பு வேகமாக மாறக்கூடியதாக உள்ளது. தசம எண்களில் கிரிப்டோகரன்சி மதிப்பிடப்படுகிறது. அதன் மதிப்பு உயர உயர ஒரு கிரிப்டோகரன்சியில் 4-5 தசம எண்கள் கூட வரும்.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘டிஜிட்டல் ரூபாய்’க்கு, இந்திய ரூபாயின் மதிப்பே இருக்கும்.
இம்மாதிரி அரசே வெளியிடும் டிஜிட்டல் பணம் மற்ற நாடுகளில் இருக்கிறதா?
பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடான சீனா, ஆர்.எம்.பி. என அழைக்கப்படும் டிஜிட்டல் பணத்தை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 25 அன்று சிபிடிசி-ஐ அறிமுகப்படுத்திய முதல் ஆப்ரிக்க நாடு நைஜீரியா. அந்த நாடு, ‘இ-நைரா’ எனப்படும் டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தியது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, ஃபாண்டம் அறக்கட்டளையுடன் டிஜிட்டல் பணத்தை உருவாக்குவதாக தஜிகிஸ்தான் அறிவித்தது. பஹாமாஸ் நாட்டிலும் டிஜிட்டல் பணம் நடைமுறையில் உள்ளது. முன்னணி உலக நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படவில்லை.
டிஜிட்டல் பணம் – ஏன்?
பணப் பரிமாற்றத்தை எளிதாகவும், மலிவாகவும் மேற்கொள்ளவே கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. “பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவை நடைபெறாமல் தடுப்பதற்காகத்தான் இந்திய அரசு இந்த முயற்சியை எடுத்திருக்கிறது” என்கிறார்கள் வல்லுனரகள்.
முன்னதாக, கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக வரன்முறையை ஏற்படுத்த கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாடு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.
டிஜிட்டல் ரூபாய் குறித்த அரசின் அறிவிப்பு குறித்து ‘பஸ்தூரா’ என்ற FINTECH நிறுவனத்தின் நிறுவனரும் நிதி ஆலோசகருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“பொருளாதார ரீதியாக டிஜிட்டல் ரூபாய் என்பது எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் ஒரு தன்மை உள்ளது. உதாரணமாக, ‘பிட்காயினை பொறுத்தவரை 10 மில்லியன்தான் வைத்திருக்க முடியும்’ என்ற வரையறை உள்ளது. சில கிரிப்டோகரன்சிகளில் அதன் மதிப்பு கூடுதலாகும். கிரிப்டோகரன்சி ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தும்போது அதன் தன்மையை விளக்க வேண்டும். ஆனால், அரசு விளக்கவில்லை.
இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி
வெளிநாடுகளில் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் சாத்தியமா?
“இந்தியா கொண்டு வரும் டிஜிட்டல் பணத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டால்தான், அது வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் வகையில், அதன் மதிப்பை உயர்த்துவதும், சந்தைப்படுத்துவதற்கும் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.