0,00 INR

No products in the cart.

யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை

உலகக் குடிமகன் – 12

 

– நா.கண்ணன்

ன்று உயிரியல் துறை ஓர் அயலக ஆய்வகம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆய்விற்கு நிதியை அள்ளி வாரிக் கொண்டிருந்தது. அதை முதலில் மிகச்சரியாகப் பயன்படுத்தியவர் கே.ஜே. அவர் பெற்ற நிதியை வைத்து ஒரு அமெரிக்க ஆய்வகம் எப்படி இயங்குமோ அதே தரத்தில் உருவாக்கியிருந்தார். அமெரிக்காவிலிருந்து எங்கள் ஆய்வகத்திற்கு விருந்தினராக வந்த ஓர் அமெரிக்க இந்திய விஞ்ஞானி இதை என்னிடம் சொன்னார். தம் ஆய்வகத்தில் கூட இத்தகைய நவீன பரிசோதனை இயந்திரங்கள் இல்லையென்று! இது கே.ஜே மீது எனக்கிருந்த மதிப்பைக் கூட்டியது. “ஏன் மாணவர்கள் வந்து அவரிடம் குவிகிறார்கள்“ என்று எனக்கு விளங்கியது. அது மட்டுமில்லாது அவர் பிரெஞ்சு, அமெரிக்க நிதியையும் பெற்று வந்தார். அந்தக் காலத்தில் இதுவெல்லாம் புதிது. என்னதான் கே.ஜேயோடு பனிப்போர் இருந்தாலும் அவர் கொண்டு வரும் நிதி உபரியாக நிர்வாக வேலை வாய்ப்பைக் கூட்டியது. அதனால் நிர்வாகம் அவரிடம் ரொம்பவும் உரசுவதில்லை. அவரது துறை மூலக்கூறு உயிரியல் என அழைக்கப்பட்டது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்த செல் உயிரியல் இன்னும் ஆழமாக மூலக்கூறு அளவில் ஆய்வு செய்யப்பட்டு வந்ததையறிந்த் ஆச்சர்யமாக இருந்தது. நாம் கண்ணால் பார்க்க முடியாத மூலக்கூற்றின் செயல்பாட்டை எவ்வகையில் அறிந்து கொள்வது என அறிவியலர் கண்டு சொன்ன உத்திகள் ஏதோ மந்திரம் போல் இருந்தது. அதை புரிந்து கொள்ளவே நிறையப் படிக்க வேண்டியிருந்தது. இந்த அறிவியல் அணுகுமுறை ஆகப்புதிதாக எனக்குப் பட்டது.

விலங்கியல், தாவரவியல் எனப் படித்த பாடங்கள் கண்ணால் காணக்கூடிய உலகைப் பற்றிய பாடங்கள். இன்னும் சில தசாப்தங்களில் அத்துறைகள் முழுக்க முழுக்க உயிர் வேதியியல், மூலக்கூற்றுவியலின் ஆற்றுப்படுத்தலில் இயங்கும் என்று அன்று என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை. ஆனால் கே.ஜே, ஜெ.ஜே இருவருக்கும் அதன் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்திருந்தது. காரணம் அவர்கள் இருவரும் பெங்களூரில் இருக்கும் அறிவியல் கழக மாணவர்கள். அங்கு முனைவர் பட்டம் பெற்றுவிட்டு அமெரிக்காவிற்கு முதுபட்ட ஆய்விற்குப் போனவர்கள். திரும்பியவுடன் அதே வேகத்தில் இந்தியாவில் இயங்கினர்.

ஜெ.ஜே முன்னெடுத்தது உயிரியல் வேதியியல் என்பது. இதுதான் மூலக்கூறுவியலுக்கு அடிப்படை. எனவே ஜெ.ஜேவிடமும் நிறைய மாணவர்கள் இருந்தனர். இதில் எதிலும் ஒட்டாத சூழலியல் நான் மாணவனாக அங்கிருந்தேன். அக்காலக்கட்டத்தில் சூழலியல் ஆய்வை அங்கு யாரும் செய்யவில்லை. எனவே, தனி மரமாக நான் இருந்தேன். ஆனால், அமெரிக்க ஆசையை நிறைவேற்றவேண்டுமெனில் ‘இக்கடுந்தவம் செய்தே ஆக வேண்டும்‘ என்பது என் நிலை. ஒன்றுக்கு ஆசைப்பட்டுவிட்டால் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துத்தான் அதைப் பெற வேண்டும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

எனும் வள்ளுவன் குறள் எனக்காக எழுதப்பட்டது என உணர்ந்தேன் நான். அங்கு முனைவர் பட்டப்படிப்பிற்கு வந்து சேர்ந்த மாணவர்கள் எல்லோருமே கடின உழைப்பாளிகள். இரவு பகல் பார்க்காது உழைப்பவர்கள். அந்தக் காலத்தில் நவீன இயந்திரங்களை இயக்கும் சக்தித்திறன் பல்கலைக் கழகத்திடம் இல்லை. மானுடவியல் துறையினருக்கு நல்ல நூலகம், மாணவர்களுக்கான விசிறியுள்ள அறைகள் இருந்தால் போதும். ஏன் கணிதவியல், வேதியியல் கூட அவ்வாறுதான் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உயிரியல் பள்ளியில் மட்டும் சக்தி கேட்கும் கனரக இயந்திரங்கள் இருந்தன. பகல் நேரங்களில் மின்சக்தி எல்லோராலும் பகிரப்படுவதால் எங்கள் இயந்திரங்களை இயக்கும் வலு மின்சாரத்திற்கு இருக்காது. எனவே, பேயும் உறங்கும் இரவுப் பொழுதில்தான் நாங்கள் இயங்குவோம். அப்போதுதான் வலுவான மின்சக்தி கிடைக்கும். அமெரிக்காவில் கடுங்காப்பிக்குப் பழகியிருந்த ஜெ.ஜெ. அவரது அறையில் ஒரு காப்பி மெஷின் வைத்திருந்தார். எங்களுக்கு அதுவொரு வரப்பிரசாதம். கடுங்காப்பி குடிக்க அப்போதுதான் பழகிக்கொண்டேன். குடித்தால் தூக்கம் போய்விடும்.

பிற துறைகளில் ஆசான்கள் சொல்லே வேதவாக்கு என இருக்கும்போது உயிரியல்துறை ஒன்றில்தான், “சுயமாக சிந்தி, கூர்மையாக செயல்படு, கேள்வி கேள்” என பயிற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் பட்டி தொட்டிகளிலிருந்து மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்களுக்கு இது அளப்பரிய சுதந்திரம் எனப்படும். ஆணும், பெண்ணும் இரவில் தனியாக ஆய்வு செய்வது தமிழக சூழலில் புதிது. பிற துறை மாணவர்களுக்கெல்லாம் எங்கள் மீது கடும் பொறாமை இருந்தது. பிற துறைகள் பத்திலிருந்து ஐந்து எனும் கணக்கில் ஆய்வு செய்து வரும்போது நாங்கள் 24 மணி நேரம் வேலை செய்தோம். வேடிக்கை என்னவெனில், எங்களில் பலருக்கு எவ்வித உதவித் தொகையும் கிடையாது. புராஜெக்டில் இருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். எனக்கு எந்தவொரு புராஜெக்டும் அப்போது இல்லை. முதலில் ஆய்வு மாணவனாகப் பதிவு பெறவே இரண்டு வருடங்கள் ஆயின. வட நாட்டிலிருந்து வரும் மாணவர்கள் எல்லாம் யாரிடம் காசு இருக்கிறதோ அங்கே போய் சேர்ந்து கைநிறைய உதவிப்பணம் பெற்றனர். என்னைப் போன்றோர் திருசங்கு சொர்க்கத்தில் மாட்டிக்கொண்டு வாழ்ந்தோம்.

எம்.கே.சி. என சுருக்கப்பட்ட எம்.கே.சந்திரசேகர் யாரும் கேள்விப்படாத நடத்தைவியலெனும் துறைக்குத் தலைவராக வந்தார். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்ளும். உதாரணமாக எல்லா உயிரும் பகலில் விழித்து இரவில் தூங்கினால் ஆந்தை, தேள், வௌவால் போன்ற பல விலங்குகள் இரவில் வேட்டையாடி உண்பவையாக இருக்கின்றன. கடலின் மேல் மட்டத்தில் வாழும் உயிர்களின் நடத்தை ஆழ்கடல் உயிர்கள் நடந்து கொள்வதிலிருந்து மாறுபடும். இவைகளுக்கான அறிவியல் காரணங்கள் என்ன என ஆராய்வது நடத்தைவியல்.

எம்.கே.சி. ஜெர்மனியில் வௌவால்களின் நடத்தை பற்றி ஆய்வு செய்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்திருந்தார். அவரது ஆய்விற்கான இயந்திரங்கள் ஜெர்மனியிலிருந்து வந்து சேர்ந்தன. இவரது துறையே புதிது என்பதால் இவரிடம் அதிக மாணவர்கள் இல்லை. ஆனால் வந்து சேர்ந்தவர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்பவர்களாக இருந்தார்கள். சுப்புராஜ் எனும் மாணவர் எம்.கே.சி. வரப்போகிறார் என அறிந்து அதற்காகவே ஒரு வருடம் காத்திருந்தார். வௌவால் இரவு விலங்கு என்பதால் மாணவர்கள் பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு அந்தி சாயும் பொழுதில் குகைகளை நோக்கி நகர ஆரம்பிப்பர். இதில் உமா எனும் பெண் ஆய்வாளரும் ஒருவர். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இதில் சுப்புராஜ் எங்களையெல்லாம் ஆச்சர்யப்படுத்த வேண்டுமென்று பேய்க்கதைகளெல்லாம் சொல்லுவார். ஜோஷி எனும் உத்திரபிரதேச மாணவர் பேயாகவே மாறியிருந்தார்.

இவரது துறையில் சிறப்பு விருந்தினராக ஆப்பிரிக்காவில் சிங்கம் பற்றி ஆய்வு செய்த ஒரு விஞ்ஞானி வந்து சேர்ந்தார். இப்போது எதைத் தொட்டாலும் வனவிலங்கு ஆவணங்கள் நிரம்பக் கிடைக்கின்றன. அன்று அவ்வாறில்லை. ஆப்பிரிக்கா சென்று வனவிலங்கு ஆய்வு செய்தவர்களெல்லாம் தன் உயிரைப் பணயம் வைத்துதான் அங்கு போய் ஆய்வு செய்தனர். வனவிலங்கிற்காக குரல் கொடுக்கும் சில ஆய்வாளர்கள் குறுமதி கொண்ட வனவிலங்குக் கொலையாளிகளால் கொல்லப்படுவதுமுண்டு. கொரில்லா குரங்கு மீது ஆராக்காதல் கொண்ட டயன் பொஃசே (Dian Fossey) இவ்விலங்களுக்குக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டார். நல்ல வேளையாக எம்.கே.சி. வௌவாலில் ஆய்வு செய்தார். அவர் வரவும், அவர் துறையும் உயிரியல் துறைக்கே புது வரவாக இருந்தது. என்னைப் போன்ற விலங்கியல் மாணவருக்கு அது பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. மெல்ல, மெல்ல எனக்கு உயிர் வேதியியலில் சுரத்துக் குறைந்து வௌவால் மேல் காதல் வர ஆரம்பித்தது!

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

1
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...