– எஸ். சந்திரமௌலி
அண்மையில் சிஎம் செல் என குறிப்பிடப்படும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகத்திலிருந்து பின்வரும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த அறிவிப்பின்படி, “பொது மக்கள் வீடு கட்டும்போது அதற்கான பிளான் ஒப்புதல் பெறவும், குடிநீர் இணைப்பு விண்ணப்பிக்கும்போதும் லஞ்சம் வாங்குவது, பிளாட்பாரக் கடைகளில் மாமூல் வாங்குவது, கட்டைப்பஞ்சாயத்து, வீடுகளை காலி செய்ய ரௌடிகளை அனுப்புவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள், அரசியல்வாதிகள் அல்லது ரௌடிகள் மாமூல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால், உடனடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவு எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடவே, முதலமைச்சரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்கள், தொலை நகல் எண்கள், மொபைல் போன் எண் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதிரடியாக சிஎம் செல்லில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திறமையானவர்கள் என பெயர் எடுத்த சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிஎம் செல்லுக்குக் கொண்டுவரப்பட்டனர். தமிழக அரசின் இணைய தளம் முதல்வரின் தனிப்பிரிவு பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது:
ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவானது, அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
புதிதாக பொது மக்கள் அனுப்பும் புகார்கள் தவிர, தேர்தலுக்கு முன்பு, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஈ மெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும், நேரிலுமாக சராசரியாக நாளொன்றுக்கு மூவாயிரம் மனுக்கள் வருவதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு, பொது மக்களின் குறைகளுக்கு நிவாரணம் காணும் அமைப்பாக உருவாக்கப்பட்ட சிஎம் செல் பல்வேறு வகையான குற்றச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்கள் மீது சாட்டையை சுழற்றி உள்ளது. இந்த அறிவிப்பு, சிஎம்.செல்லுக்கு வந்த புகார்களின அடிப்படையில் செய்யப்பட்டதா அல்லது ஒரு லஞ்ச, ஊழலை, கட்டைப்பஞ்சாயத்து போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக ஒரு நடவடிக்கையா என்பது தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், தமிழக முதலமைச்சரது தனிப்பிரிவிலிருந்து இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதன் மூலமாக லஞ்ச ஊழல்களும், கட்டை பஞ்சாயத்து மற்றும் ரௌடித்தனங்களும் எந்த அளவுக்குக் கட்டுப்படும்? என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என விமர்சிப்பவர்களும் உண்டு.
முதலில், லஞ்சப்புகார், ரௌடிகள் மிரட்டல் போன்றவை குறித்த புகார்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தால், எந்த மாதிரியான மேல்நடவடிக்கை எடுக்கப்படும்? என்று தெரிந்துகொள்ளலாம். “பொதுவாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகளை அவற்றின் தன்மைக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட துறைக்கோ அல்லது மாவட்ட ஆட்சியருக்கோ அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சரது தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மாதாந்திர ஆய்வுகளும் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் நடத்தப்படும். ஆனால், லஞ்சப் புகார்கள் தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உரிய விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படும். ரௌடியிசம் தொடர்பான புகார்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்” என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை
உயர் அதிகாரி.
அவர் மேலும் கூறுகையில், “இதுபோன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் குறித்து நல்ல இமேஜ் உருவாக ஓரளவுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், லஞ்ச ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு அனுப்பி வைத்தால், உடனடியாக அதிரடியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்துவிட முடியாது. முதலில் அந்தப் புகாரை அனுப்பியவர் தன்னைப் பற்றிய முழு விபரத்தையும் அதில் குறிப்பிட்டால்தான் அதை முறையான புகாராக ஏற்றுக்கொள்ள முடியும். இல்லையெனில், மொட்டை கடிதாசிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. முறையான புகார் என்றாலும், அந்தப் புகாரை விசாரித்து, மேல் நடவடிக்கைக்கு உரிய புகார்தான் என்கிற பட்சத்தில், முதல் தகவல் அறிக்கை பதியவே சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி வேண்டும். பல சமயங்களில், பல்வேறு காரணங்கள் காட்டி, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை; துறை ரீதியாக நாங்களே நடவடிக்கை எடுக்கிறோம்” என்று சொல்லி விடுவார்கள். அதையும் மீறி, லஞ்ச ஒழிப்புத் துறை கேஸ் நடத்தினாலும், சாட்சிகள் தடம் புரண்டுவிடுவார்கள்; ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுப்பது என்பது மிகவும் கடினமான பணிதான்!” என்று குறிப்பிட்டார்.
மக்கள் நீதி மையத்தின் வெ.பொன்ராஜிடம் இது பற்றி கருத்துக் கேட்டபோது,
“இதெல்லாம் வெறும் கண்துடைப்பு! ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் ஆதரவு பெற்றவர்கள்தானே கட்டைப்பஞ்சாயத்து, ரௌடியிசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால், ஆட்சியாளர்கள் பெரிசாய் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? அனைத்து மட்டத்திலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கீழ் மட்டத்தில் லஞ்சம் வாங்குகிறவர்கள் வெளிப்படையாகவே “இந்தப் பணம் எங்களுக்கு இல்லை; மேல் வரைக்கும் போகுது” என்றோ, மாசத்துக்கு இவ்வளவு என்று இலக்கு வைத்திருக்கிறார்கள்; எங்களுக்கு வேறு வழி இல்லை” என்றோ சொல்லித்தானே லஞ்சம் வாங்குகிறார்கள். கிராம அலுவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி சோதனையில் பிடிபடுகிறார்கள் என செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், லஞ்சம் ஒழிந்துவிட்டதா? இல்லை கட்டுப்பட்டிருக்கிறதா? நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதானே போகிறது? கவுன்சிலர்கள் முதல் மந்திரிகள் வரை ஒவ்வொருவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்து எப்படி சம்பாதித்த சொத்து? என்பது அனைவருக்கும் தெரியும்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கபப்டுகிறது? என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லட்டுமா? நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கி நம் நாட்டு தொழில்துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி டாக்டர் கலாம் பெயரில் தமிழ்நாடெங்கும் விற்பனை மையங்கள் திறக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி, அந்த ஆலோசனையை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தார் எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர். அதன் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? சொன்னால் சிரிப்பீர்கள்! அதை அனுப்பிய நண்பர் வசிக்கும் பகுதிக்குரிய காவல் நிலையத்துக்கு அதை அனுப்பி வைத்திருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரி, அந்த நண்பரை அழைத்து, “உங்களுடைய ஆலோசனையை முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் எங்களுக்கு அனுப்பி இருக்கிறார்களே! இதன் பேரில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுப்பது?” என்று கேட்டிருக்கிறார்கள். நண்பர், தனது திட்டம் பற்றி விரிவாக விளக்கிச் சொன்னதும், “மிக அருமையான திட்டம்! ஆனால், காவல்துறை இதில் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு பயனுள்ள ஆலோசனையின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையே இந்த லட்சணம் என்றால், ஊழல் புகாரையும் சம்மந்தப்பட்டவர்களுக்கே அனுப்பி விளக்கம் கேட்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது” என்கிறார் பொன்ராஜ்.
“இந்த மாமூல் வசூல் குற்றங்கள் எல்லாம் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. காலம் காலமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் Horizontal Distribution கடைபிடிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் யாரும் தனித்தனியாக வாங்கக்கூடாது. எல்லாம் கோபாலபுரத்துக்கு மட்டுமே என்பதே இந்த விளம்பரத்தின் உள் அர்த்தம். ஒரே ஒரு புது சேர்க்கை என்னவெனில் நிறைய பெண் கவுன்சிலர்கள் வந்ததால் அவர்களது பினாமியாக கணவன்மார்கள்.. புதிய வியாபாரம்.. புதிய வரவு… புதிய செழிப்பு. அதனால்… விபத்து உண்டாக்கும் அளவு வேகம்… இதை தடுக்கவும், மேலே கொடுக்கவும்தான் இந்த அறிவிப்பு” என்று கூறுகிறார் பா.ஜ.க.வின் எஸ்.ஆர். சேகர்.
“லஞ்சம் கேட்பதைப் பற்றி புகார் சொன்னால், நமக்கு தெரிந்தவரை வாங்கியவனிடம் வசூல் வேட்டை நடக்கும். இந்த விளம்பரம் லஞ்சத்தை எந்த காலத்திலும் நிறுத்தாது. கரைபுரண்டோடும் லஞ்சத்தை கோபாலபுரத்துக்கு மடைமாற்றும் அறிவிப்புதான் இது. முதலமைச்சர் ஜிம்முக்கு போய் உடம்பை “பிட்டாக ” வைத்திருப்பது போல “போஸ்” கொடுக்கிறார் அல்லவா? அதுபோல இந்த அரசு “லஞ்சத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒரு “பாவ்லா” காட்டும் முயற்சி மட்டுமே. கட்டை பஞ்சாயத்த வீடு காலி செய்ய…. என ஒரு வரியும் வருகிறது. இவ்வளவு “துல்லியமாக” கணித்திருப்பது உடன் பிறப்புக்கு எச்சரிக்கை அல்ல; அந்த பணமும் எங்களுக்கே என்கிற ‘எல்லை தாண்டாதே’ என்ற எச்சரிக்கை. மொத்தத்தில் தமிழ் மக்கள் இது மாதிரி “பைசாக்கு ஆவாத” பல அறிவிப்புக்களை பார்த்து பழகிப் போய் இருக்கிறார்கள். இது பழைய கள்ளு – புதிய பாட்டில் அவ்வளவே!” என்பது அவர் தரப்பு கருத்து.
ஏன் அந்த அவநம’பிக்கை?. பொறுத்து இருந்து பார்ப்போமே!
திருவரங்க வெங்கடேசன்