0,00 INR

No products in the cart.

“முயலும் ஜெயிக்கும்; ஆமையும் ஜெயிக்கும்; முயலாமைதான் ஜெயிக்காது”

டான் சினிமா விமர்சனம்

– லதானந்த்

 

முற்பாதியில் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பெற்றோர்களுக்கும், பிற்பாதியில் பெற்றோர்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பிள்ளைகளுக்கும் பாடம் எடுப்பதுதான் கதை.

‘டான்’ என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ கேங்க்ஸ்டர் படம் என்று நினைத்துவிடாதீர்கள். கல்லூரி மாணவனான சிவகார்த்திகேயன் அங்கே செய்யும் சேட்டைகளால்  ‘டான்‘ என அழைக்கப்படுகிறார். ‘என்னது?
சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவரா?’ என்று ஆச்சரியப்படுபவர்கள் அதிர்ச்சியடையாவிட்டால் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். அவரைப் பள்ளி மாணவராகவும் காண்பித்திருக்கிறார்கள்! அவரது பள்ளிக் காலக் காதல் குறும்புகளை அவர் வகுப்பிலேயே நிகழ்த்துவதும், மற்ற யாரும் அதைக் கவனிக்காமல் இருப்பதும் அபத்தம்.

படத்தில் பாடல் காட்சிகள் படு இரைச்சல். ரசிகர்கள் பாப் கார்ன் வாங்கவும் இயற்கை உபாதையைக் கழிக்கவுமான சிறப்பு இடைவேளைகள் அவை.

ஏற்கெனவே மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்ல என்ற நிலைமை நாட்டில் இருக்கும்போது இந்தப் படத்திலும் அதே தவறைச் செய்திருக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியர், பேராசியை, கட்டுப்பாட்டு அதிகாரி, முதல்வர், சேர்மன் என அனைவரையும் கோமாளிகளாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் அலட்டிக்கொள்லாமல் ஒரே விதமான முகபாவத்தோடு படம் நெடுகிலும் வருகிறார். கதாநாயகி பிரியங்கா மோஹன் ஒப்புக்குச் சப்பாணி. ‘அழகு’ என்ற பெயரில் வரும் முனீஸ்காந்தும், ‘அறிவு’ என்ற பெயரில் வரும் காளிவெங்கட்டும் சிரிக்கவைக்க பெருமுயற்சி செய்து தோற்கிறார்கள். அட… சூரிகூட இருக்கிறார். அவராலும் சிரிக்கவைக்க முடியவில்லை. மாறாக, சிவகார்த்திகேயன் பேசும் சில நையாண்டி வசனங்களுக்குக் கைதட்டல் அதிர்கிறது. உதாரணத்துக்கு இதைப் பாருங்களேன்… சிவில் எஞ்சினீரிங் மாணவரான அவர், மெக்கானிக்கல் எஞ்சினீரிங் பாடத்தில் சந்தேகம் கேட்பார். காரணம் கேட்கும் ஆசிரியரிடம், “நீங்கதானே சார் படிக்கிற சப்ஜக்டையும் தாண்டி மத்ததையும் தெரிஞ்சுக்கணும்னு சொன்னீங்க” என்பார் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு!

பின்னாளில் தான் என்னவாக வரவேண்டும் என்பதில் நிறையவே குழம்பியிருக்கிறார். விஞ்ஞானி, அரசியல்வாதி, மீம்ஸ் கிரியேட்டர், டாக்டர் எனப் பல கனவுகள் அவருக்கு வந்துபோகின்றன. கட்டக் கடைசியில் தனக்குள் ஒளிந்திருப்பது ஓர் இயக்குநர் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

உள்ளுக்குள் பாசத்தைச் சுமந்துகொண்டு, வெளியே கண்டிப்புக்காரராகக் காட்டிக்கொள்ளும் அப்பா வேடத்தில் சமுத்திரக்கனி கச்சிதமாகப் பொருந்திப்போகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் அமட்டலான நடிப்பு அசத்தல். படத்தில் அதிகம் ஸ்கோர் செய்பவர்களில் இவரும் ஒருவர். அவரது அறிமுகக் காட்சியில் விசிலும் கைதட்டலும் காதைப் பிளக்கின்றன. “திருக்குறளில் கல்வி என்ற அதிகாரம் எண் 40; ஆனால் ஒழுக்கமுடைமை அதிகாரம் அதற்கு முன்னாலேயே 14ஆவதாக வருகிறது” என்று மிடுக்காக அவர் சொல்வது ஜோர்!

‘எஞ்சினீயரிங் படிச்சா 10,000 ரூபாய் சம்பளம்; போண்டா போட்டு விற்றால் 18,000 சம்பளம்’ என்றும், ‘எஞ்சினீயர்னா ஊரே சிரிக்குது’ என்றும் போட்டுத்தாக்குகிறார்கள்.

“முயலும் ஜெயிக்கும்; ஆமையும் ஜெயிக்கும்; முயாலாமைதான் ஜெயிக்காது” என்பன போன்ற, ‘கருத்து கந்தசாமி’ வசனங்களும் நிறைய!

எந்த எஞ்சினியரிங்  கல்லூரியிலும் – அட ஏன் கலைக் கல்லூரிகளில்கூட – மாணவர்களை, ‘வாடா, போடா’ என ஆசிரியர்கள் அழைக்கமாட்டார்கள். இதில் படம் நெடுக அப்படித்தான் அழைக்கிறார்கள்.

மொத்தத்தில்: முற்பாதி மாணவர்களுக்குப் பிடிக்கும்; பிற்பாதி பெற்றோர்களுக்குப் பிடிக்கும்!

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...