0,00 INR

No products in the cart.

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

உலகக் குடிமகன் –  21

– நா.கண்ணன்

நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம் சர்வதேச விமான நிலையம், பெரியது. ஆனால் மட்சுயாமா ஓர் தீவின் தலைநகர் விமான நிலையம், சிறியது. ஜப்பான் நான்கு பெரும் தீவுகளைக் கொண்டது. வடக்கிருந்து, ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோகூ, கியூஷு என்பன அவை. அதில் ஷிகோகூ தீவின் தலைநகர்தான் மட்சுயாமா. இறங்கிய கையோடு கொண்டு வந்திருந்த பெட்டிகள் எல்லாம் எடுக்கக் கூடிய நிலையில் சுழன்று கொண்டிருந்தன. சுற்றும், முற்றும் பார்த்தேன்! இறுதியாக ஏழாண்டுப் போராட்டம் முடிவிற்கு வந்திருக்கிறது. நான் ஜப்பானில் நிற்கிறேன். என் கனவு நினைவேறி விட்டது.

தூரத்தே யாரோ கையாட்டுவது தெரிந்தது. மகிழ்ச்சியோடு போய் கை குலுக்கினேன். அது, ஏ.என்.சுப்ரமணியன். என்னை அழைத்துப் போக வந்திருந்தார். “நீ வருவியோ வரமாட்டேயோ எனக் கவலையில் இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக ஒத்தைத் தமிழனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். பேச்சுத்துணைக்குக் கூட ஆளில்லை” என்றார் ஏ.என்.எஸ் (நாங்கள்தான் யாரையும் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லையே). அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஏங்கிப் போயிருந்தார். தனாபே சான் உன்னை அழைத்துவர அனுப்பினார். அவர் ஆய்வகத்தில் இருக்கிறார் என்றார். எனக்குக் கொஞ்சம் குழப்பம். இரவு எட்டு மணிக்கு ஆய்வகத்திலா? அதுவும் துறைத்தலைவர்? நான் சரியாகக் கேட்டிருக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டு பெட்டிகளை டிராலியில் வைத்து இழுத்து கொண்டு புறப்பட்டேன்.

“நாம வெளியே போய் பஸ் பிடித்து ஹாஸ்டலுக்குப் போவோம். அதிக தூரமில்லை” என்றார் ஏ.என்.எஸ். ஒரு கார் வந்து ராஜ மரியாதையோடு அழைக்கும் என எதிர்பார்க்கவில்லைதான். நான் ஏணியின் கீழே நிற்கும் மாணவன். வெளியே வந்தேன், சுத்தமான காற்று. லேசாக சில்லென்று இருந்தது. தூசு துப்பட்டா இல்லை. மோட்டர்பைக், ஆட்டோ சத்தமில்லை. காட்டுக்கூச்சல் போடும் ஜன சம்பந்தமில்லை. ஜப்பானியர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ஏதோ அந்தக்காலத்து பேசும்படம் அதாவது பேசாத படம் போல் இருந்தது. மெதுவாகக் கேட்டேன், “இங்க எப்பவுமே இப்படித்தான் நிசப்தமாக இருக்குமா? இல்லை இரவு என்பதாலா?” “அட! நீ ஒண்ணு! இந்த நாடே ஒரு பூத் பங்களா போல நிசப்தமாதான் இருக்கும். பயந்திராதே” என்று சொல்லிவிட்டு அவரே சிரித்துக் கொண்டார். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

பஸ் தடங்கள் முறையாக வகுக்கப்பட்டுக் கிடந்தன. பஸ் ஸ்டாண்ட் என்றால் நாலு பஸ் குறுக்கே மறுக்கே போய், ஆட்டோ ஊடே பாய்ந்து, ஸ்கூட்டர் சந்தில் புகுந்து…ஊம்..அப்படியொன்றும் இல்லை. பஸ் வருவதற்கான தடயமே இல்லை. என்ன ஏ.என்.எஸ் ஒரு பஸ்ஸையும் காணோம். நாம லேட்டோ? என்றேன். எட்டு பதினாலுன்னு போட்டிருக்கு இப்ப எட்டு பத்துதானே ஆகுது. சரியா வரும். இங்கே உக்காந்துக்கோ என்றார். சீட்டைப் பார்த்தேன். கையில் கர்சீப் இருந்தது, தூசு தட்ட. ஆனால் அதற்குத் தேவையில்லாமல் அது சுத்தமாக இருந்தது. எங்கிருந்தோ இனம் தெரியாத வாசனை மூக்கைத் தீண்டியது. என்னவென்று பின்னால் கண்டு பிடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டு. கொஞ்சம் கண் அயர்ந்தேன்.

“கண்ணா! வா! வண்டி வந்திருச்சு என்றார் ஏ.என்.ஏஸ். வண்டி வந்த சப்தமே இல்லை. மோட்டார் ஓடுகிறதா? என்ன! அப்படி, இப்படியென்று ரெண்டு பெட்டிகளை உள்ளே தூக்கி வைத்தோம். பஸ் சின்னதாக இருந்தது. நம்ம பல்லவன் போக்குவரத்துப் போல இல்லை. கண்டக்டரைத் தேடினேன். ஏ.என்.எஸ் சிரித்துக் கொண்டு. அதெல்லாம் இங்கே கிடையாது. நாம போக வேண்டிய இடத்திற்கான தொகையை இந்தப் பெட்டிக்குள் போட்டுவிட வேண்டும். நான் சரியாகக் கணக்கிட்டு காசு கொண்டு வந்திருக்கிறேன். பயப்படாதே! என்றார். இல்லை, கண்டக்டர், டிக்கெட் பரிசோதகர் இப்படி… என்று இழுத்தேன். ஒன்றும் கிடையாது. இங்கு எல்லோரும் நாணயமாக நடந்து கொள்வார்கள். ஏமாத்துக்கு இங்கு இடமில்லை. நாமும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பார் பட்டுக்கோட்டையார். திருட்டு இருந்தால் அல்லவோ காவல் வேண்டும்? இச்சமூகம் திருடனை வளர்ப்பதில்லை. நாணயமானவர்களை வளர்க்கிறது என்று புரிந்துக்கொண்டேன். எனவே, இங்கு திருந்துவதற்கு வேலை இல்லை. ஆனால், நாணயமாக நடந்து கொள்ள குழந்தையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனப் புரிந்தது.

எனக்காக ரசம் வைத்திருந்தார் ஏ.என்.எஸ். சிப்ஸ் வைத்து சாப்பிட்டு அவர் அறையில் எங்கு சாய எனப் பார்த்தேன். சென்னை, கொல்கத்தா, ஓசாகா, மட்டுசுயாமா எனப் பயணம். பிசினஸ் கிளாஸ்தான் என்றாலும் முதல் முறை பயணப்படும் துடிப்பு, எதுவும் தவறாகப் போகக்கூடாதே என்ற பதற்றம் அதற்கு மேல் பயண அலுப்பு. என் கண் சொருகுவதைப் பார்த்தவுடன், எங்கே தூங்கிவிடுவேனோ எனப் பயந்து, ஏ.என்.எஸ், “கண்ணா தூங்கி விடாதே. இன்னும் கொஞ்ச நேரத்திலே லேப் செமினார் இருக்கு!” என்றாரே பார்க்கலாம். தூக்கி வாரிப்போட்டது!

“ஏன்.என்.எஸ் இப்போது ஒன்பதாகப் போகிறது. இந்த நேரத்திலா செமினார்?” என்றேன்.

“வேற நேரமில்லை தம்பி! சனிக்கிழமை நம்ம குழு செமினார். நாள் முழுவதும் நடக்கும். மிச்ச நாட்களில் நாம் இரவு பத்தரை வரை வேலை செய்வோம். அறிவியல் உலகில் நம் துறைசார் புதுமை என்னவென்று வியாழன் இரவு படித்தால்தான் உண்டு” என்றார். ஒரு பெரிய உண்மை புரிந்தது. இந்தியாவில் நாமெல்லாம் அவரவர் படிப்பை அவரவரே கவனித்துக் கொள்வோம். இங்கு படிப்பு என்பதும் கூட்டுப் படிப்புதான். குழு உணர்வு முக்கியம் என்பது போகப்போக புரிந்தது!

எனது அதிர்ச்சியான முகத்தைப் பார்த்து விட்டு, “என்ன? என் ரசம் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே? மனைவி இல்லாம ரொம்பக் கஷ்டப்படறேன், தம்பி. என்ன செய்ய, கிடைக்கிறத சேமித்தால்தானே நாலு காசு பெயரும்?” என்றார். ஏ.என்.எஸ். அங்கு அவர் இருப்பதற்கும் பி.ஆர்.எஸ். தான் காரணம் (பி.ஆர்.சுப்ரமணியன்). எவ்வாறெனில் அண்ணாமலையில் பி.ஆர்.எஸ். படித்தபோது ஏ.என்.எஸ். அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். பி.ஆர்.எஸ்.ஸுக்கு எப்படியோ ஜப்பானிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கும் மான்புககாக்‌ஷோ (Monbukagakusho) பற்றித் தெரிந்து விண்ணப்பித்து ஒரு வருடம் எகிமே பல்கலைக் கழக விவசாயக்கல்வி வளாகத்தில் இருந்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு பேராசிரியர் ரியோ தட்சுகவா ஆய்வகம் அறிமுகமாகி இருக்கிறது. பி.ஆர்.எஸ்.தான் முதல் தமிழ் இந்திய மாணவன். பி.ஆர்.எஸ். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். நல்ல உழைப்பாளி. எனவே, அந்த ஆய்வகத்திற்கு இந்தியர்கள் மேல் நல்ல மதிப்பு உருவாகி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பி.ஆர்.எஸ். தனது ஆசிரியர் ஒருவரை அனுப்பி வைத்திருக்கிறார். ஏ.என்.எஸ்ஸும் நல்ல உழைப்பாளி. தனியாக இருப்பதால் சதா ஆய்வகத்திலேயே கிடப்பார் போலிருக்கிறது. ஏறக்குறைய ஒரு ஜப்பானிய மாணவன் போல் நடந்து கொள்ளும் ஏ.என்.எஸ். நம்பத்தகுந்த இந்தியராக அங்கு இருந்தார்.

“உனக்கு எப்படி பி.ஆர்.எஸ்.ஸைத் தெரியும்?” என்று கேட்டார் ஏ.என்.எஸ். நாங்கள் இருவரும் அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றாக இளங்கலை விலங்கியல் படித்தோம் என்றேன். பி.ஆர்.எஸ்ஸை மீண்டும் பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் வெளிநாடு சென்று படித்துவரும் மாணவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைக்க ஒரு சிறப்பு ஆய்வகப் பணியை உருவாக்கி நல்ல சம்பளம் கொடுத்து அமைத்திருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதுரைக்காரரான பி.ஆர்.எஸ். மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருக்கிறார். அங்கு நானிருப்பேன் என்று அவருக்குத் தெரியாது, அவர் வருவார் என எனக்குத் தெரியாது. ஆனால், என் தேவைக்கென இறைவன் அனுப்பிய தூதனாக அவர் என் கண்ணில் பட்டார். பி.ஆர்.எஸ். தயக்கத்தோடுதான் என்னிடம் கேட்டார். “நீ ஜப்பான் போவாயா?” என்று. இம்மாதிரி வாய்ப்பிற்குக் காத்திருக்கும் சக்கரவாகப் பறவை நானென்று அவருக்குத் தெரியாது. உடனே ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். என் கேள்வி, நான் இன்னும் முனைவர் பட்டம் பெறவில்லையே, பரவாயில்லையா? என்பது. “பரவாயில்லை, ஆனால், “உனக்கு பூச்சி கொல்லி வேதிமப் பின்புலம் இருக்கிறது. அது போதும்” என்றார். ஏதோ நுகர்வோர் தேர்விற்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு போல் என் தேவைகளுக்காக இருக்கும் அமைப்பாக மான்புககாக்‌ஷோ பட்டது. அத்தோடு மட்டுமல்ல, நான் இங்கு விட்ட முனைவர் பட்டத்தை அங்கே பெறுவதற்கான வாய்ப்பும் இத்தோடு வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

எனவே, ஜப்பான் எனக்காகக் காத்திருப்பது போல் பட்டது. ஏ.என்.எஸ். “சரி செமினாருக்குப் போவோமா? கொஞ்சம் லேட்டுதான். பரவாயில்லை. இன்று நீ அயலகத்திலிருந்து வருகிறாய். இனிமேல் நேரம் என்றால் நேரம் என இருக்க வேண்டும். நேரம் தவறாமை ஜப்பானிய ஒழுங்கு” என்று சொல்லி விட்டு, “வெல்கம் டு ஜப்பான்” என்றார் வெடிச்சிரிப்புடன்.

ஜப்பானின் அயராத சிரிப்பு அது என்று எனக்கு உடனே புரிந்தது!

(தொடரும்)

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...