0,00 INR

No products in the cart.

தனுஷுக்கு ஒரு கதை

 ஒரு நிருபரின் டைரி – 4

 

– எஸ். சந்திரமெளலி

 

ல்கியின் பொன்விழா சிறப்பிதழில் இடம்பெற்றிருந்த டைரக்டர் ஸ்ரீதரின் பேட்டியில் தன்னுடைய சில சுவையான திரையுலக அனுபவங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கல்கியில், ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் ஸ்ரீதரின் வாழ்க்கை அனுபவங்களைத் தொடராக வெளியிட முடிவு செய்தார் கல்கி ராஜேந்திரன். அந்தத் தொடரை எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டரான டைரக்டர் ஸ்ரீதர், பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தபோதிலும், 1991-ல், ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற படத்தை எடுத்து கையைச் சுட்டுக்கொண்ட காலகட்டம். (அதில் அறிமுகமானவர்தான் நடிகர் விக்ரம்.) அப்போதைக்கு அவருக்கு அடுத்த படம் எடுக்கும் எண்ணமில்லை. அந்த நேரத்தில்தான் கல்கி தொடருக்காக அவரை அணுகினேன். சம்மதம் தெரிவித்தார். எனக்கு இதுபோல அனுபவத் தொடர் எழுதிப் பழக்கமில்லை. ஸ்ரீதர் டேப்பில் சொல்வதை அப்படியே எழுதிக் கொடுப்பேன். அவற்றை கல்கி ராஜேந்திரன் செப்பனிட்டு, விறுவிறுப்பாக்குவார். நாலைந்து வாரங்களுக்கு நான் எப்படி எழுதிக் கொடுக்கிறேன், அதை எப்படி கல்கி ராஜேந்திரன் திருத்தி எழுதுகிறார் என்பதைக் கூர்ந்து கவனித்தேன். அந்த ஸ்டைல் எனக்குப் பிடிபட்டது. காலப்போக்கில் அதில் நன்றாகவே தேறிவிட்டேன். வாழ்க்கை அனுபவத் தொடர் எழுதுவது என்பது இன்றைக்கு திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது மாதிரி ஆகிவிட்டது.

’கல்யாணப் பரிசு’ படத்தின் கதையை அவர் எப்படி உருவாக்கினார் என்று அவர் விளக்கியதை என்னால் மறக்கவே முடியாது. “ஒரு காதல் கதை வேணும். லவ் ஸ்டோரி என்றால் வழக்கமாக எப்படி இருக்கும்? ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பார். அப்படி இல்லாமல் ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலித்தால்? ஆனால் இரண்டு பெண்கள் ஒரே ஆணைக் காதலித்தாலும், கடைசியில் அவர்களுள் ஒரு பெண் அந்தக் காதலனைக் கல்யாணம் செய்துகொள்வதாகத்தானே முடிக்க முடியும்? ஒரு பெண்ணின் காதல் ஜெயித்து, இன்னொரு பெண்ணின் காதல் தோல்வி கண்டால் சுவாரசியம் அதிகமில்லையே? எனவே, இரண்டு பெண்களில் ஒரு பெண், இன்னொருவருக்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய முன்வந்தால்? ஆனால் அதற்கு என்ன அவசியம்? அந்த இருவரும் அக்கா-தங்கைகளாக இருந்தால்? இப்படித்தான் படிப்படியாகக் கேள்விகள் கேட்டு கல்யாணப் பரிசு கதையை உருவாக்கினேன்” என்று குறிப்பிட்டார்.

நான் தி. நகர் வெங்கட்ராமன் தெருவில் இருந்த அவரது வீட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சனிக்கிழமை பிற்பகலில் டேப் ரெகார்டர் சகிதம் செல்வேன். அவரது அறையில் ஒரு கட்டிலில் ஒரு தலையணையை மடியில் வைத்துக் கொண்டு பழைய கதைகளை அசை போடுவார். டேப்பை ஆன் பண்ணினால் நான்-ஸ்டாப் ஆக அரை மணி நேரம் பேசுவார். பழைய விஷயங்கள், பெயர்களை எல்லாம் எப்படி இவ்வளவு கச்சிதமாக நினைவில் வைத்துக்கொண்டு தங்கு தடையின்றிச் சொல்கிறார் என்று ஆச்சரியப்படுவேன். அபூர்வமாகச் சில சமயங்களில் ஏதாவது சந்தேகம் வந்தால், உடனே சித்ராலயா கோபுவுக்கு போன் செய்து, தகவலை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு சொல்லுவார்.

ஒரு தடவை, அவர் பேசி முடித்ததும் வழக்கம்போல ’அவர் பேசியது ஒழுங்காகப் பதிவாகி இருக்கிறதா’ என்று பரிசோதித்துப் பார்த்தபோது, டேப்பில் ஏதோ சிக்கல். ’அவர் சொன்ன எதுவுமே பதிவாகவில்லை’ என்று தெரிந்து டென்ஷன் ஆனேன். ஆனால் அவரோ, “என்ன ஆயிடுச்சுன்னு இப்போ பதற்றப்படறீங்க?” என்று கேட்டுவிட்டு, நான் கொண்டுசென்றிருந்த இன்னொரு டேப்பை போடச் சொல்லி, ஏற்கெனவே சொன்னதைக் கடகடவென்று ஆக்‌ஷன் ரீப்ளே போல மறுபடி கொஞ்சமும் மாற்றமில்லாமல் சொல்லி முடித்தார். அவரது ஞாபக சக்தியைப் பார்த்து அசந்துபோனேன்.

ஸ்ரீதரின் அனுபவங்கள் கல்கியில் 50 வாரங்களுக்குத் தொடர்ந்து வெளியானது. ஆனால் அத்தனை அத்தியாயங்கள் எழுதியும் பல விஷயங்கள் தொடரில் விடுபடவே செய்தன. புத்தகமாக வரும்போது விடுபட்ட விஷயங்களையும் சேர்க்கவேண்டும் என்று சொன்ன கையோடு ஐநூறு ரூபாய்க்கு ஒரு செக்கைக் கொடுத்து, “இது அட்வான்ஸ்” என்றார். மீண்டும் அவரது அனுபவ ஒலிப்பதிவு தொடர்ந்தது. எழுதியதை அவருக்குப் படித்துக் காட்டி ஒப்புதல் பெறுவேன்.

திடீரென்று ஸ்ரீதருக்கு உடல் நிலை சரியில்லாமல் அப்போலோவில் சேர்க்கப்பட்டார். அவரது வலது கை செயலிழந்தது. அவரைப் பார்க்க அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றபோது, திருமதி தேவசேனா ஸ்ரீதர் நான் வந்திருப்பதை ஸ்ரீதரிடம் உரத்த குரலில் சொன்னபோது, அவர் முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லை. கண்கள் எங்கேயோ குத்திட்டு நின்றுக்கொண்டிருந்தன. அதை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், பக்கவாதத்தின் பாதிப்பிலிருந்து மீளவில்லை. தெளிவாகப் பேசமுடியாத நிலை. அந்த நிலையிலும் அவர் மூளையின் சுறுசுறுப்பு அபாரமாக இருந்தது. என்னை மாலை நேரங்களில் வரச்சொல்லி அவர் டிக்டேட் செய்ய, சினிமாவுக்கு கதை, சீன் எழுதச் சொல்லுவார். அதுகூட ஒரு ஸ்ரீதர் ஸ்டைல் முக்கோணக் காதல் கதைதான். “இந்தப் படத்துக்கு அப்பாஸ்தான் ஹீரோ; மியூஸிக்
ஏ. ஆர். ரஹ்மான்” என்று சொல்வார். ஆனால் உடல் நிலையில்தான் முன்னேற்றமில்லை.

இதற்கிடையில், கலைஞன் பதிப்பகம் நந்தா, ‘திரும்பிப்பார்க்கிறேன்’ என்ற ஸ்ரீதரின் அனுபவத் தொகுப்பைப் புத்தகமாக வெளியிட முன்வந்தார். தொடர் வந்த சமயத்திலேயே, அதைப் படித்து, ரசித்து, என்னைப் பார்க்கும்போதெல்லாம் பாராட்டுவார் வைரமுத்து. எனவே புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வர அவர் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். வீல் சேரில் ஸ்ரீதரை அழைத்துக்கொண்டுவந்து மேடையில் அமர்த்தினோம்.

ஸ்ரீதரின் சம காலத்தவரான டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், அடுத்த தலைமுறை இயக்குனரான பாலு மகேந்திரா, அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வஸந்த், நாலாம் தலைமுறையின் லிங்குசாமி என்று நாலு தலைமுறை இயக்குனர்கள் விழாவில் கலந்துகொண்டு பாராட்டி மகிழ்ந்தார்கள். ஸ்ரீதரது இயக்கத்தில் நடித்த ஜெமினி கணேசன், சச்சு, ஸ்ரீதரின் பள்ளித் தோழர்களான சித்ராலயா கோபு, எழுத்தாளர் கடுகு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட விழாவில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பேசும்போது, மனம் நெகிழ்ந்துபோன ஸ்ரீதரின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். ஸ்ரீதரின் மகன் சஞ்சய், அப்பாவின் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி இருந்தார்.

ஸ்ரீதரது மனைவி தேவசேனாவும் மகன் சஞ்சயும் தி. நகரில் இருந்த ‘சித்ராலயா’ என்ற பெயர்கொண்ட ஐந்து கிரவுண்டு இடத்தில் கட்டப்பட்ட வீட்டை விற்றுவிட்டு, நீலாங்கரையில் அழகாக ஒரு வீடு கட்டிக்கொண்டு இடம் பெயர்ந்தார்கள். அந்த இடத்தை வாங்கிய விஸ்ராந்தி பில்டர்ஸ், ஸ்ரீதருக்கு மரியாதை செய்யும் விதமாக அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்துக்கு ‘சித்ராலயா’ என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

’சித்ராலயா’ என்ற பெயரிலேயே ஸ்ரீதர் ஒரு சினிமா வாரப் பத்திரிகையையும் நடத்தி இருக்கிறார். அதில் ஒவ்வொரு வாரமும் சினிமா உலகம் தொடர்பான ஒரு தலையங்கம் வெளியாகும். பழைய சித்ராலயா இதழ்களின் பைண்டு வால்யூமை புரட்டிப் பார்த்திருக்கிறேன். ஜனரஞ்சக சினிமா போலவே அந்தப் பத்திரிகையும் இருக்கும். அதில் நகை அலங்காரம் என்று ஒரு பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு நடிகை, தான் வைத்திருக்கும் நகைகள் பற்றிச் சொல்லுவார். பக்கத்தில் அந்த நகைகளை அணிந்துகொண்டு நட்சத்திரத்தின் போட்டோ. புதிய வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்த நட்சத்திரங்கள் தங்களுடைய வீடு, இன்டீரியர் டெகரேஷன், வீட்டில் வைத்துள்ள கலைப் பொருட்கள் பற்றி விரிவாகப் பேசுவார்கள். ஆர்ட் டைரக்டர்கள் தாங்கள் போட்ட செட்கள் பற்றி விவரிப்பார்கள். அந்தப் பழைய இதழ்களைப் புரட்டினால் இன்றுகூட சுவாரசியமான ஐடியாக்கள் நிறையக் கிடைக்கும்.

ஈ.ஸி.ஆர்.ல் நீலாங்கரையைக் கடக்கும் சமயங்களில் அவரது வீட்டுக்குச் சென்று அவருடன் சிறிது நேரம் செலவழிப்பது என் வழக்கம். கடைசி முறையாகப் பார்த்தபோது, “நல்ல கதை ஒண்ணு வெச்சிருக்கேன். தனுஷை வெச்சு எடுத்தாப் பெரிய ஹிட் ஆகும்!” என்றார்.

தனுஷுக்கு அதிர்ஷ்டமில்லாமல் போய்விட்டது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

1
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...