0,00 INR

No products in the cart.

விலையைக் கேட்டால்தான் ஷாக் அடிக்கிறது!

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

 ? லண்டனில் பென்னிகுக்குக்கு சிலை வைக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருக்கிறாரே?
– சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
! வரவேற்கவேண்டிய விஷயம். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள் என்பதை உலகுக்குச் சொல்லப்போகும் விஷயம்.

கடந்த சில ஆண்டுகளாகவே இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்  லண்டனில்  வசிக்கும் திரு சந்தன பீர் ஒலி என்ற உத்தம பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்.   லண்டனில் பென்னிகுக்கின் கல்லறையைத் தேடிப் போனபோது  கிடைத்த தகவல்களால் அதிர்ச்சி அடைந்தார்.  அணையை கட்டுவதற்காக வாங்கிய கடன்களுக்காக தன் சொத்துக்களை விற்றதால் பணி ஓய்வுக்குப்பின் இங்கிலாந்தில் அரசு முதியோருக்கு ஒதுக்கிய தொகுப்பு வீட்டில் ஏழையாக வாழ்ந்து இறந்திருக்கிறார். இங்கிலாந்து அரசும் சுதந்திர இந்திய அரசும் அவருக்கு எந்த கெளரவத்தையும் அளிக்கவில்லை. அவர் கல்லறையைக் கண்டுபிடித்து அதைச் சீராக்கிச் செப்பனிட்டு அங்கு அவருக்கு மார்பளவில் சிலை அமைத்திருப்பவர்.  பென்னிகுக்கின்  வழித்தோன்றல்களைத் தமிழ்நாட்டுக்குத் தன் செலவில் அழைத்து வந்து இங்கு  நம் மக்கள் எப்படி பென்னிக்குக்கை பொங்கல் நாளில்  கொண்டாடுகிறார்கள் என்று காட்டிய நல்ல மனிதர். இவரது பேட்டியை முதலில் வெளியிட்ட பத்திரிகை கல்கி.  இவர் எண்ணத்தில் எழுந்த விதைதான்  இப்போது செயலாகப்போகிறது.

? தனுஷ் – ஐஸ்வர்யா பிரிந்துவிட்டார்களே அது குறித்து தராசாரின் பார்வை?
– விஸ்வநாதன், புதுக்கோட்டை
! ரஜினியின் திரைப்படங்களை விமர்சிக்கலாம்… அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கலாம்… அவர் வீட்டு தனிப்பட்ட விவகாரங்களை பொதுவில் விமர்சிக்காமல் செய்தியாக வாசித்துக் கடப்பது என்பதே  முதிர்ச்சியான பார்வை.

? பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிகளின் காரணத்தை அறிய உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அறிவித்திருக்கிறார்களே?
– மகாலட்சுமி, சென்னை
! காலக்கெடு நிர்ணயம் செய்யாமல் இம்மாதிரி குழுக்களை அறிவிப்பதில் எந்தப் பலனும் இல்லை.  காலதாமதத்தால் மக்கள் மனதில் மறைந்து போன பல குழுக்களில் இதுவும் ஒன்றாகிவிடும்

பஞ்சாப் சம்பவத்தில்,  “அது அம்மாநிலத்தின் தவறு என்று மாநில முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் அவருடைய  பாதுகாப்பு ஆலோசகர் என்று ஒரு பதவி இருக்கிறது.  முக்கியமான வேலையே பாதுகாப்பு குறித்து பிரதமருக்குத் தெரிவிப்பது, ஆலோசனை வழங்குவது. உள்நாட்டு / வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து, பாதுகாப்பு குறித்து பிரதமருக்குத் தெரிவிப்பதும் அவரே. நேரடியாகப் பிரதமருக்கு மட்டுமே அவர் பதிலளிப்பார். பிரதமரின் பயணத் திட்டத்தை நெறிமுறைப்படுத்துவது, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்வது எல்லாம் அதில் அடங்கும். மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி இது. கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி. மோடி பிரதமரான பிறகு, இப்பதவிக்கான அதிகாரம் இன்னும் விரிவாக்கப்பட்டது. ரா, ஐபி, என்ஐஏ, டிஃபன்ஸ் இன்டலிஜன்ஸ், மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என எல்லாமே இவருக்குக்கீழே கொண்டுவரப்பட்டன. எல்லாமே தமது தகவல்களை இவருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். இந்தப் பதவியில் இரண்டாம் முறையாகப் பதவி நீடிக்கப்பட்டு தற்போது இந்த பதவியில் இருப்பவர் – அஜித் தோவல். இவரைப் பற்றி இதுவரை ஊடகங்கள் பேசவில்லை;  இந்த கமிட்டியாவது  விசாரிக்குமா?

?  மௌனம் வலிமையா? வலியா?
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான் குளம் .
! அது அதைக் காக்கிறவரின் வலிமை. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு வலி.

? மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் ரிஷப் பந்த் எடுத்த சதம்  உபயோகப் படவில்லையே..!
– வாசுதேவன், பெங்களூரு
! அதனால் என்ன? ஒரு நல்ல திறமையான பேட்ஸ்மேனை அடையாளம் காணமுடிந்ததே!

? ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார்களே ஓ.பி.எஸ்?
– கே.கே. வெங்கடேசன்,  செங்கல்பட்டு
! கவனியுங்கள்… அவர்  இ.பி.எஸ். ஆட்சி என்று சொல்லவில்லை!

? இன்றைய பத்திரிகை உலகம் எப்படியிருக்கிறது?
– நெல்லை குரலோன்
! டி.வி. சானல்கள், ஓடிடி.யின் மாயவலையில் சிக்கி பத்திரிகைகள் படிப்பதையே மறந்துபோன வாசகர்கள்,  வாட்ஸாப், முகநூல் வாசகர்களை தங்களின் பத்திரிகைகளுக்கு இழுக்கப் போராடும் டிஜிட்டல் பத்திரிகைகள், அச்சு இதழ்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டாத விற்பனையாளர்கள், அச்சு ஊடகங்களுக்கு விளம்பரம் தந்து ஆதரிக்கத் தயங்கும் வணிக நிறுவனங்கள்  இவர்களிடையே சிக்கித் தவிக்கிறது.

இந்த சூழலிலும்  வாரந்தோறும் நஷ்டத்தைச் சந்தித்தாலும்  மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன்  தொடர்ந்து வெளியீட்டுப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பாரம்பரிய இதழ்களும் இருப்பது தமிழ் வாசகர்களின் அதிர்ஷ்டம்

? நயன்தாரா எப்படி இத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறார்?
– ரஞ்சனிப்பிரியன், ஈரோடு
! கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று நிற்காமல் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்கள் அமைந்த கதைகளைத் தேர்வு செய்து, அதை இயக்க இளைஞரணிகளுடன்  இணைந்து செயல்படுகிறார். தமிழ் தவிர பிறமொழிப் படங்களிலும் ஒரே நேரத்தில்  நடிக்கச் சிறந்த நேரமேலாண்மைத்திறன் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது.

? ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசளித்திருக்கிறார்களே?
– எஸ் ராமதாஸ், சேலம்
! “தமிழர்களின் வீர விளையாட்டு” என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் இந்த விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் இந்தப் பரிசை அறிவித்திருக்கிறார்.

விளையாட்டு விதிகளையும், போட்டி நடக்குமிடங்களின்  கட்டமைப்புகளையும் செம்மைப்படுத்த வேண்டும்.  மாடுகளுக்கும் வீரர்களுக்கும் முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு. பாதுகாப்பான பெரிய ஸ்டேடியங்களில் நடத்தப்பட வேண்டும். ஒரு குறுகிய வாசலின் வழியே  வரும் ஒற்றை மாட்டினைப் பிடிக்கப் பலர் ஒரே நேரத்தில் அதன் மீது பாயும்போது  சில மாடுகள் மிரண்டு போய் நிற்கிறது. அதை முதலில் பிடித்தவர் (தொட்டவர்!) வீரராக அறிவிக்கப்படுகிறார். ஒரு சில மாடுகள் மிரண்டுபோய் இவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என வெளியே ஓடுகின்றன. “மாடு பிடிபடவில்லை”  அதன் உரிமையாளர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்கள்.  அந்தப் போட்டிகளிலேயே, “முடிந்தால் பிடித்துப்பார்” என்று மிரட்டும் மாடுகளையும் அதைச் சமாளிக்கும் வீரர்களையும் பார்க்கிறோம். இது  ஒரு சம வாய்ப்பில்லாத  போட்டி என்ற எண்ணம் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை

? மின்சார ஸ்கூட்டர்  வசதியானது தானே?
– ஆர். கோவிந்தசாமி, சி.என். பாளையம்
! ஒவ்வொரு நாளும் உயர்ந்துக் கொண்டே போகும் பெட்ரோல் விலையைப் பார்க்கும் போது, “மின் ஸ்கூட்டர்களை வீடுகளுக்கான கட்டண விகிதத்திலேயே சார்ஜ் செய்துகொள்ளலாம்” என்ற  அறிவிப்பு வசதியானது தான். ஆனால் விலையைக்கேட்டால்தான் ஷாக் அடிக்கிறது

? குடியரசு தின அணிவகுப்பில் தமிழ அரசின் ஊர்திக்கு அனுமதியில்லையே?
– அ.ச. நாராயணன், பாளையங்கோட்டை
! எல்லா குடியரசு தின அணிவகுப்பில் எல்லா மாநிலங்களின் ஊர்திகளும் பங்கேற்காது.  இதன் முன்னரும் தமிழக ஊர்திகள் பங்கேற்காத  அணிவகுப்புகள் நடைபெற்றிருக்கின்றன.  இந்த ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கென்றே  இந்திய ராணுவத்தின் தேர்வுக்குழு ஒன்றிருக்கிறது. இம்முறை அவர்கள் தமிழக ஊர்தியைத்  தேர்வு செய்யவில்லை. ஆனால் அந்த குழுவின் ஆலோசனைக்கேற்ப மாறுதல்கள் செய்த பின்னர்  மூன்று கட்ட தேர்வுகளிலும் தேர்வான நிலையில்  இறுதிக் கட்டத்தில்   நிராகரிக்கப்பட்டிருப்பதால் ராணுவ குழுவிலும் அரசியல் புகுந்து விட்டதோ என்ற அச்சம் எழுகிறது.  நாடு 75வது சுதந்திர ஆண்டை பெருமையுடன் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களின் ஊர்திகளும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்.

? விதுர நீதி என்றால் என்ன?
– கண்ணன், நெல்லை
! மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாயினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது பகவத்கீதை  தத்துவ விளக்கம் என்றால் விதுர நீதி என்பது அரசியல் நீதிகளுக்கு விளக்கம் சொல்லுகிறது. நமது அரசியல் வாதிகள் பலரும்  திருதராட்டிரனைப் பின்பற்றுகிறார்கள்

?சமீபத்தில் நீங்கள் ரசித்த படம்?
– மாசிலமணி,  திருச்சி
! ஒவியத்தைதானே கேட்கிறீர்கள்? “எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்” என்பதை வலியுடன் சொல்லும்  இந்தப்படம் தான் !

1 COMMENT

  1. ‘ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறாரே ஓபிஎஸ்?’ என்ற கேள்விக்கு தராசார் அளித்த பதில் செம….செம… நினைந்து நினைந்து ரசித்து மகிழ்ந்தது நிஜம்.
    ‘ இன்றைய பத்திரிகை உலகம் எப்படி இருக்கிறது?’
    என்ற கேள்விக்கு அளித்த பதிலில் எதார்த்தம் கலந்த
    கவலையும் இழைந்திருந்தது, தராசாரின் கலப்பட மில்லாத சமூக அக்கறை உணர்வை உன்னதமான முறையில் சித்தரித்திருந்தது. சபாஷ்…சபாஷ்!

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பிரம்மாண்டம் என்பது கோடிகளை கொட்டிப் படம் எடுப்பது அல்ல

0
 காசியிலுள்ள கியான்வாபி மசூதி,  வழக்கு குறித்து  உங்கள் நிலைப்பாடு என்ன ? - இரா. அருண்குமார்,  புதுச்சேரி – 605001 கியான்வாபி மசூதியில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வழக்கறிஞர் குழு ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே அதன் ரிப்போர்ட்...

தொலை நோக்கி கொண்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

1
  ?  "தொலைநோக்கியில் தேடினாலும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார்" என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தக் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? - இரா. அருண்குமார், புதுச்சேரி – 605001 !...

கலைஞர் நினைவிடத்தில் கோபுரச்சின்னம்

0
  கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் வைத்து மரியாதை செலுத்திய இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? - இரா. அமிர்தவர்ஷினி,  புதுச்சேரி - 605001 ! இந்து மத எண்டோன்மெட்...

என் புகழ் பாட அனுமதியில்லை

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? “சட்டமன்றத்தில் என் புகழ் பாட அனுமதியில்லை. அப்படி யாராவது செய்தால் கண்டிக்கப்படுவர்” என்று முதல்வர்  ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே? - வெற்றி செல்வி திருமாறன், திருச்சி ! சட்டமன்றத்தின் முதல்...

விலங்குகளுக்கு தனி மொழி இருக்கிறதா?

2
? விளையாட்டு நகரம் உருவாகப் போவதாக அறிவித்திருக்கிறார்களே ? - சண்முக சுந்தரம், ஈரோடு ! ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான...