0,00 INR

No products in the cart.

அமெரிக்காவில் மக்களுக்கான அறிவியல் இயக்கம் தொடங்கியது.

உலகக் குடிமகன் –  17

– நா.கண்ணன்

 

ங்கிலம் தமிழைவிட உயர்வானது என மெல்ல நமக்குக் கற்பிக்கப்படுகிறது. பள்ளி முடிக்கும் வரை அவ்வுணர்வில்லை. மேலும் கழகங்கள் தலையெடுக்கும் காலம் என்பதால் தமிழுணர்வு கூடுதலாக இருந்தது. நான் திருப்பூவணத்தில் படித்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. சுவரெல்லாம் இந்தி அரக்கி ஒழிக! என எழுதப்பட்டிருந்தது. தற்காப்பாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. காரணம் இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் தீவிரமாக இருந்தனர். நாங்களும் விதி விலக்கல்ல. ஒரு நாள் இரகசியமாக சேதி வந்தது, பள்ளிக்கு வருமாறு. முன் கேட்டு மூடப்பட்டு இருந்ததால் பின் சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே வந்தோம். உள்ளே இருந்து கொண்டே “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!” என கோஷமிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று ரிசர்வ் போலிஸ் வண்டியொன்று புதூர் பக்கமிருந்து வந்தது. மடமடவென சட்டி போலிஸ் இறங்கி எங்களைத் தாக்கத் தொடங்கினர். பல மாணவர்களைத் தரதரவென பிடித்து போலிஸ் வண்டியில் ஏற்றினர். அதில் என் ஒன்றுவிட்ட அண்ணன் சேதுவும் இருந்தான். நானும் போய் விட்டால் வீட்டில் சொல்ல ஆளிருக்காதே என நான் பின் பக்கம் ஓடத்துவங்கினேன்.  நான் சரியாக சுவர் ஏறிக் குதிக்கவும் என்னை நோக்கி வந்த ஒரு லத்திக் கம்பு சுவரில் பட்டு எம்பி விழவும் சரியாக இருந்தது. ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்று வீட்டை நோக்கி ஓடத்துவங்கினேன். இளம் மாணவர்கள் என்றறிந்தும் காவல் வன்முறையில் இறங்கியது பீதியைக் கிளப்பியது. அன்று நான் தாக்கப் பட்டிருந்தால் ஊனமுற்று இருப்பேன். அப்படியொரு வெறித்தனமான தாக்குதல்.

பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் சிறப்பாக தமிழ் உணர்வை வளர்த்தனர். எல்லோருக்கும் ஓர் பெரிய எதிர்பார்ப்பு. தமிழ் இனிமேல் ஆளுமென்று. ஆனால் நான் அமெரிக்கன் கல்லூரியில் நுழைந்தவுடன் நடப்பு வேறு மாதிரி இருந்தது. நான் ஒருவன்தான் பாலகனாக அரைக்கால் டவுசரோடு அங்கு பதிவு செய்ய வந்திருந்தேன். எல்லோரும் ஜீன்ஸ், பேண்ட் என்று இருந்தார்கள். சரளமாக ஆங்கிலம் பேசினர். எனக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது. பல்கலைக் கழகம் வந்தபின் தமிழ் ஓர் புறம்போக்கு மொழி என்பது போல் தவிர்க்கப்பட்டது. தமிழில் சிந்தித்து, தமிழனாக நடந்து கொள்வோர் இரண்டாம் பிரஜைகள் ஆயினர். நான் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாலும் என் தமிழுணர்வு குறையவில்லை. எனக்கு தமிழ்த்துறை தொடர்பு ஏற்பட்டது. அப்போது, இளம் விரிவுரையாளராக அங்கு சேர்ந்திருந்த டாக்டர் எம்.இராமசாமி “நிஜ நாடக இயக்கம்” என்றொரு கலை வடிவை சோதனையாக நடத்திக் கொண்டிருந்தார். என் தமிழுணர்வு உந்த அதில் சேர்ந்து நான் நடிக்கத் தொடங்கினேன். அது எனக்கொரு பெரும் உந்துதலைத் தந்தது. அதே போன்ற சோதனை நாடகங்களை நான் உயிரியல் பள்ளியில் நடத்தினேன். எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் சோமு. அவனுக்கு வேடிக்கைப் பேச்சு இயல்பு. எனவே, நகைச்சுவை நாடகங்கள் போடுவோம். மேடையெல்லாம் கிடையாது. சுதந்திரமாக எங்கள் ஆசான்களைக் கிண்டல் செய்வோம். ஒரு நாடகத்தில் ஆர்.ஜே. கூட நடித்திருக்கிறார்.

என் தமிழ் ஆர்வம் சிலரை பற்றிக் கொண்டது. அதில் முக்கியமானவர் ஒரு தமிழ் ஆசிரியரின் மகளான ஆனந்தவல்லி. இவரோடு இணைந்து அகில இந்திய வானொலி நிலையத்திற்கு நிறைய நிகழ்ச்சிகள் (நாடகங்கள்) கொடுத்தோம். (இவர் பின்னால் அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தரானார்). எங்கள் அதிர்ஷ்டம், நிலைய இயக்குநர் திரு.திருவேங்கடம், நிகழ்ச்சி அமைப்பாளர் திரு.ஸ்ரீநிவாசராகவன் எங்களுக்கு பெருத்த ஆதரவு தந்தனர். எனக்கு எப்போதும் நான் கற்றதைப் பகிரப் பிடிக்கும். பெரும்பாலான உயிரியல் பள்ளியோருக்கு ஒரு மேட்டுக்குடித்தனம்,
‘தந்த பீட’ வீறாப்பு இருக்கும்போது நான் மக்களிடம் செல்லவே விரும்பினேன். நிஜநாடக இயக்கம் என்பது மக்களோடு மக்களாகக் கலப்பது.

இதே காலக்கட்டத்தில்தான் அமெரிக்காவில் மக்களுக்கான அறிவியல் இயக்கம் தொடங்கியது. விஞ்ஞானிகளின் சமூகப் பொறுப்பு பேசப்பட்டது. எனக்கு அப்பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பினேன். அமெரிக்கன் கல்லூரி என்னைத் தயார் படுத்தி இருந்தது! அப்போது துணை வேந்தராக இருந்த வ.சுப. மாணிக்கம் மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஆய்வைத் தமிழில் சொல்ல “வளரும் அறிவியல்” என்றொரு ஆய்விதழை உருவாக்கினார். உயிரியல் பள்ளி ஓர் முன்னணி ஆய்வகம். அங்கிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வர வேண்டுமென விரும்பினார். ஆனால், நல்ல ஆய்வுகள் என்றாலும் அதைத் தமிழில் சொல்ல எவருக்கும் ஆர்வமில்லை அல்லது தெரியவில்லை. இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எனது ஆதர்ச அமெரிக்க அறிவியல் சஞ்சிகையான “சயிண்டிபிக் அமெரிக்கன்” நோபல் பரிசு விஞ்ஞானிகளைக் கூட எழுத வைத்துக் கொண்டிருந்தனர். “ஒரு சாதாரணனுக்கு தாம் செய்யும் ஆய்வைச் சொல்ல முடியவில்லை எனில் நோபல் பரிசு பெற்று என்ன பயன்” என்பது அவர்கள் கேள்வி. ஆனால், இந்தப் புரிதல், நோக்கு தமிழ் விஞ்ஞானிகளிடமில்லை. அவர்கள் ஓர் அமெரிக்கன் போலவே நடந்து கொண்டனர். தமிழ்ச் சூழலிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்தனர். பள்ளித் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணசாமி என்னை அழைத்து நீங்கள் ஒரு கட்டுரை எழுதித்தர முடியுமா? துணை வேந்தர் எதிர்பார்க்கிறார், என்றார். என் ஆய்வு குறித்த என் முதல் தமிழ்க் கட்டுரை பல்கலைக் கழக வெளியீடாக வந்தது.வ.சுப.மாணிக்கம் தமிழ் ஆசான். எனவே எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றிருந்தார். பல்கலைக் கழகத்தில் ஓர் பூங்கா இருந்தது. அதை அவர், “இளங்கா” என எழுதிப் போட்டிருந்தார். “கா” எனில் சோலை என யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் இளங்கோ என்பதைத்தான் இளங்கா என்று தவறாக எழுதிவிட்டதாக எண்ணி யாரோ தார் வைத்து ஒரு கொக்கி (கோ) போட்டு விட்டனர். துணை வேந்தர் காண்டாகிவிட்டார். எனக்கே தமிழ் கற்றுத்தருகிறார்களா? தற்குறிகள்! என்று புலம்பி இருக்கிறார்.

நாங்கள் தொடர்ந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வானொலி நிகழ்ச்சிகள் தந்தோம். ஐன்ஸ்டைன் நூற்றாண்டு விழாவிற்காக பெரிய பட்ஜெட்டில் ஓர் நிகழ்ச்சி தந்தோம். அதில் பின்னால் விவேகாநந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்பிரமணியன், பாரதி கல்லூரி பேராசிரியை நா.செல்லம்மாள் போன்றோரைக் கலந்துகொள்ள வைத்தேன். அது அகில இந்திய அளவில் ஆங்கிலத்திலும் வெளியாகியது. அக்காலத்தில் வானொலி என்றொரு இதழ் அங்கிருந்து வரும். நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புடன் பல கட்டுரைகளும் வரும். அதன் பின்பக்கக் கவிதையாக நான் எழுதிய ஓர் சூழலியல் கவிதை வந்தது.

கி.பி. 2025ம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பழம் பாடலொன்று

நிலா, நிலா ஓடிப்போ!
அம்புலிக்கும் அதையடுத்த
அண்டைவீட்டுக் கோள்களுக்கும்
அடுக்கடுக்காய் விண்கலங்கள்
அவசரமாய் அனுப்புவதேன்?
அடுத்த வீட்டுத் தம்பி கேட்டான்.
அவனுக்குத்தான் இந்த பதில்
தொழில் முன்னேற்றம் என்று சொல்லி
தொலைத்து விட்டோம் நம் நதியை
தொழிற்சாலைக்கசடுகளின்
புக்ககம் நம் நதிகள் அன்றோ!
கங்கையென்ன, காவிரியென்ன
காவியம் போற்றும் நதிகளென்ன
அண்டசராசர அழுக்குகளின்
சங்கமமே இவைகளெல்லாம்.
கார்முகில் கசிந்திங்கே
கன மழையைக் கொட்டுமென்ற
காலங்கள் மறைந்தே போய்
கந்தகஅமிலமும், கரியமிலமும்
கலந்திங்கே கொட்டுதடா!
பசுமைப் புரட்சியென்று
பறைசாற்றிவிட்டு இங்கே
பூச்சி மருந்துதனை
நீர் நிலையில் கலந்திட்டோம்
பந்தி இலையிலுள்ள காய்களிலும்,
மீன்களிலும் கலந்தந்த மருந்திங்கே
கலக்கியடிக்குதுடா!
காத்தாட வெளியே போன
காலமெலாம் கதையாகி
கண்ணை எறிக்கும் புகையும்
கார்பன்-டை-ஆக்ஸைடும்தான்
காற்று மண்டல பட்டாதாரர்கள்
என்று சொல்லும் காலமிது.
செவிக்கு உணவில்லாத போதுதான்
இங்கு வயிற்றுக்கும் ஈயுமென்பார்.
செம்மையான செவிகளையும்
செவிடாக்கத்தானோ
கார்களின் உறுமலும்
காரவெல் சீறுதலும்.

பின் குறிப்பு: ஆசிரியர் பெயர் அமில மழையில் அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

பழம் ஓலைச்சுவடி கொடுத்து உதவியவர்: நா.கண்ணன

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...