மகேஷ் குமார்.மெயின் ரோட்டின் நடுவில் இருக்கும் அந்த கிளிப்பச்சைக் கதவுகள் வைத்த கடை யார் கண்ணிலிருந்தும் தப்பமுடியாது. நல்ல விசாலமான கடை. நான்கு பெரிய மரக்கதவுகள். வாசலில் 3 அடி அகல சாக்கடையின் மீது 4 வேலிக்கால் கற்களைப் படுக்கவைத்து பாலம் அமைக்கப்பட்டிருக்கும். கடந்து சிறியபடி ஏறி உள்ளே போகலாம்..அது ஒரு 15க்கு 15 அறை. அறையின் மையத்தில் ஒரு பெரிய மேசையும், அதற்குப் பின்னால் ஒரு நாற்காலியும். மேசை மீது ஒரு பொருள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். சாலையைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து, கைகளைக் கோர்த்து மேசைமேல் வைத்து, கால்கள் இரண்டையும் ஆட்டியபடியே அமர்ந்திருப்பார் நாயுடு. நல்ல பெரிய ஆகிருதி. எப்போதும் கருப்பு பேண்ட்டும் வெள்ளை அரைக்கை சட்டையும்தான். கெட்டியான பட்டை பிரேம் மூக்குக்கண்ணாடி. அகல நெற்றியில் மத்தியில் மஞ்சள் நிறத்தில் மெல்லிய ஒற்றைக்கோடு. சதா சிரித்தபடியே இருப்பார். மென்மையான வசீகரமான குரல். நிறுத்தி நிதானமாகப் பேசுவார். இன்று வரை அப்பாவின் ஆப்த நண்பர். பெரிய சொத்துள்ள குடும்பத்தில் வந்தவர். ஊருக்குள் அமைப்பாக தோட்டத்துடன் கூடிய பெரிய வீடும் உண்டு. கடையெல்லாம் சும்மா 'உத்யோகம் புருஷ லட்சணம்'னு ஒரு ஒப்புக்காக. அல்லது ரேடியோ மீதுள்ள தீராத காதலால் என்றும் சொல்லலாம்..கடைக்குள்ளே சுவர்களை ஒட்டி 'ப' மாதிரி 4 அடுக்கு அலமாரிகள். ஒவ்வொரு தட்டிலும் விதம் விதமான ரேடியோக்களும் டிரான்ஸிஸ்டர்களும் கொலு பொம்மைகள் போல வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். ஒரு மூலையில் சன்னலுக்கு அருகில் ஒரு பெரிய மேசை. அதன் மீது அன்றைக்கு கேஸ் ஷீட் போடப்பட்டிருக்கும் நோயாளி போல ஏதாவது ஒரு ரேடியோ பாகங்கள் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றப்பட்டு மல்லாந்து கிடக்கும். பெரும்பாலும் அது ஒரு பழைய வால்வு ரேடியோவாக இருக்கும். பக்கத்தில் 2 அலமாரி தட்டுகளில் பெரிய, சிறிய வால்வுகள், ஏரியல்கள், ஸ்டேஷன் டயல் செய்யும் சக்கரங்கள் என்று நம்பர் போட்டு வைத்திருப்பார்..தனது பச்சை லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் வந்து ஓரமாக நிறுத்திவிட்டு காலை கடை திறந்து முறைவாசல் சடங்குகள் முடிந்ததும் கடைக்குள் ஒரு மூலையில் பச்சைப் பட்டுத்துணி போர்த்தியிருக்கும் HMV கிராமபோனில் LP தட்டு போட்டு, ஊசியை மெதுவாக அதன்மேல் வைத்தால் 'வினாயகனே வெவ்வினையை வேறறுக்க வல்லான்…' என்று சீர்காழி உச்சஸ்தாயியில் முழங்குவார். அன்றைய தினம் இனிதே துவங்கும். சன்னல் வழியே இரண்டு பெரிய ஏரியல்களை நீட்டி வைப்பார். ரிப்பேர் ஆன ரேடியோக்களை சோதனை செய்ய அது முக்கியம்..மே மாத பள்ளி விடுமுறை நாட்கள் சிலவற்றில் அவர் கடையில்தான் குடித்தனம். நீர்மோர், நன்னாரி சர்பத், டீ, பொரி கடலை, இலந்தப்பழம் என்று ஏதாவது அவரும் தின்றுகொண்டும் குடித்துக்கொண்டும் இருப்பார். கூடவே நமக்கும்…ஹி..ஹி..."மகேஸ்… இங்க வாப்பா. இந்த ஸ்பீக்கரைப் புடி. இந்த கார்ட்போர்ட் நைஞ்சு போய் இனிமே ஆகாது. புது போர்டுல அவுட்லைன் போட்டு கட் பண்ணணும். எப்படின்னு சொல்லித்தரேன் வா" என்பார். பழைய மர்ஃபி ரேடியோவின் ஸ்பீக்கர் 1 அடி விட்டம் இருக்கும். காயிலும் காந்தமுமே ½ கிலோ கனம்.."இந்தா… இப்பிடி ஓரமாப் பிடிச்சு நாசுக்கா தூக்கணும். இல்லாட்டி டயஃப்ரம் ஓட்டையாயிரும். அல்லாதபோனா கிழிஞ்சுரும். பார்த்து…. பத்தரம்.. பத்தரம்…" என்று அவர் மென்மையாகச் சொல்லும்போதே அது எவ்வளவு நாசுக்கான வேலை என்பது புரிந்துவிடும்.."இதெல்லாம் எப்பிடி ரிப்பேர் பண்றீங்க? எங்க கத்துக்கிட்டீங்க?"."எல்லாம் உங்கப்பா கிட்டத்தான். உங்கப்பா மிலிட்டரில இதவிடப் பெரிய பெரிய ரேடியோவெல்லாம் ரிப்பேர் பண்ணுவாரு. எனக்கு ரேடியோல பாட்டு கேக்கறதுன்னா ரொம்பப் புடிக்கும். புது மாடல் ரேடியோ வந்தா உடனே வாங்கிடுவேன். இங்க இருக்கற ரேடியோல பெரும்பாலும் என்னுதுதான். அப்பல்லாம் எதாவது திடீர்னு ரிப்பேராகிப் போனா உங்க அப்பாவைத்தான் கூப்புடுவேன். அப்பறம் நானே மெள்ள மெள்ள கத்துக்கிட்டேன். அத்தனை சர்க்யூட் டிராயிங் புக்கும் இருக்கு. கோயம்புத்தூர் போனா பார்ட்ஸ் கிடைக்குது. அவ்வளவுதான்".இதற்குள் யாராவது வாடிக்கையாளர் வந்துவிடுவார். சைக்கிளின் பின்பக்கம் ஏதாவது ஒரு பெரிய ரேடியோ சைக்கிள் ட்யூப் வைத்து, பக்கங்களில் அட்டை அல்லது பேப்பர் சுருட்டி வைத்து இறுக்கிக்கட்டி கொண்டுவந்திருப்பார்.."மெள்ள…. மெள்ள…. ஒண்ணும் அவசரமில்ல… நிதானமா இறக்கிக் கொண்டு வாங்க… " என்று சொன்னபடியே இவரும் இறங்கிப் போய் இருவருமாகத் தூக்கிக்கொண்டு வருவார்கள். அதை பூப்போல நடு மேசையில் வைத்து கொஞ்சம் தள்ளி நின்று அதை ரசித்துப் பார்ப்பார்.."ம்ம்ம்… நல்ல க்ரண்டிக் செட்டு. ஜெர்மனி. என்ன… ஒரு 5 வருசம் இருக்குமா? என்ன ஆச்சு?"."அதென்னமோங்க.. நல்லாத்தான் பாடீட்டு இருந்துச்சு. ஊட்லதான் என்னமோ கைவேலை பண்ணீருக்காங்க. கேட்டா இல்லவே இல்லைன்னு சாதிக்கிறாங்க. இப்ப கோயமுத்தூரு, திருச்சி எதுவுமெ வரமாட்டீங்குது. உய்ய்..உய்ய்னு சத்தந்தான் வருது"."என்னா செட்டு!! ஹிட்லர் கூட இதுதான் கேப்பாராம். ஸ்டேசன்தானே எடுக்கலை? சரி பண்ணீரலாம்… நாளை கழிச்சு வாங்க. சொல்றேன். பார்ட்ஸ் இருந்தா கையோட கொண்டு போயறலாம். இல்லாட்டி அடுத்த வாரம் மெட்ராஸ் போறேன், ரிச்சி ஸ்டிரீட்ல இல்லாததா?".நாயுடு சொன்னதில் 10 சதவீதம் வந்தவருக்குப் புரிந்தால் அதிகம். "நல்லாப் பாத்துப் பண்ணிக்குடுங்க. நேரத்துக்கு செய்தி கேக்காம காதெல்லாம் விசுக்கு விசுக்குங்குது" என்று சொல்லிவிட்டுச் செல்வார்.."என்ன அழகா இருக்கு பாரு மகேஸ்…. உட்டன் பாடி. சில்க் துணில ஸ்கிரீன். வால்வு சூடாகாம இருக்க நல்ல காத்தோட்டமா பாக்ஸ், இதோட ரிசீவர் ரொம்ப ஸ்பெசல் தெரியுமா? கொஞ்சம் நல்லா டியூன் பண்ணினா நம்ம பக்கம் இருக்கற ஹேம் ரேடியோவெல்லாம் கூட பிக்கப் பண்ணிரும்" என்று ஜோக் போல சிரிப்பார். அந்த பெட்டியை ஆசையாய்த் தடவித் தடவிப் பார்ப்பார். மேலே படிந்திருக்கும் தூசியை மெள்ள ஊதித் துடைப்பார்.."க்ரண்டிக் வந்துருக்கு. வேலை ஆரம்பிக்கணும் மகேஸ். என்ன டெக்னாலஜி !! 2811ல ஆரம்பிச்சு எத்தனை மாடல் வந்துருச்சு !! இப்பல்லாம் பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டர் ரேடியோ சின்னச்சின்னதா வருது. ஏயெம், ஷார்ட்வேவ் 1,2 அப்பிடின்னு 1000 ஸ்டேசன் எடுக்கும்கறான். ஆனா என்ன சொல்லு…. இதுல இருக்கற ஃபிடலிடி வருமா?"."பெடலடின்னா?"."பெடலடி இல்லை. ஃபிடலிடி. அப்பிடியே சில்க் துணில ஒத்தி எடுத்தாப்ல இருக்கணும். எம்.எல்.வி.அம்மா பாடினா நாம அவங்க முன்னால உக்காந்து கேக்கற மாதிரி இருக்கணும். பஸ்ஸ்டாண்ட் வாசல்ல துணி விக்கிறவன் மெகாபோன் மாதிரி இருந்தா அது என்ன ரேடியோ?".அதன் பிறகு அடுத்த 2 நாட்கள் முழுவதும் அதனுடனே சல்லாபித்துக்கொண்டிருப்பார். வருவோர் போவோரிடமெல்லாம் க்ரண்டிக் புராணம் வாசிப்பார். அதை சீக்கிரமே சரி பண்ணிவிட்டாலும் சட்டெனக் கொடுத்துவிடமாட்டார். இன்னும் கொஞ்சம் டியூனிங் பன்ணணும் என்று சொல்லிச்சொல்லி 1 வாரம் வரை அதனோடு குடித்தனம் நடத்திவிட்டு விருப்பமில்லாமல் திருப்பி அனுப்புவார். அடுத்த க்ரண்டிக் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார். அது வரை என்னை மர்ஃபி அல்லது பிலிப்ஸ் ரேடியோக்களை ரிப்பேர் செய்ய துணைக்கு வைத்துக்கொள்வார்..சில வருடங்கள் முன்பு ஊருக்குப் போனபோது அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். மிகவும் வயதாகி இன்னமும் மெள்ள, நிதானமாகப் பேசினார். வீட்டு முன் அறையில் ஒரு பெரிய க்ரண்டிக் ரேடியோ கம்பீரமாக வீற்றிருந்தது..(தொடரும்).ஓவியம்: ராஜன்