0,00 INR

No products in the cart.

இரண்டாம் உலகப்போர்தான் சாதாரண மக்களுக்கு உலகைத் திறந்து காட்டியது.

உலகக் குடிமகன் – 29

 

– நா.கண்ணன்

 

ப்பானிலிருந்து கீல் நகரத்துக்கு எப்படிப் போகலாமென யோசித்தோம். கீல் நகரம் ஒரு துறைமுகம். பலநாட்டுக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருக்கும்.  பெருந்துறையான ஹேம்பர்க் அதிக தூரமில்லைதான். ஆனால், கப்பலில் போவது எப்போதும் ரசிக்கத்தக்கதாய் அமைவதில்லை. நான் ஆய்வு நிமித்தம் அமெரிக்கத் துறைமுகமான சியாட்டலிலிருந்து ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவிற்கு பேரிங் ஜலசந்தி வழியாக ஒரு மாத காலம் ஆய்வுக் கப்பலில் தலைமை விஞ்ஞானியாகப் பயணப்பட்டிருக்கிறேன். பசிபிக் மகா சமுத்திரம் அமைதியற்ற கடல். பெரும் திரை கிளப்புவது. வயிற்றைப் புரட்டி எடுத்துவிடும். எனவே, கடலில் போக வேண்டாம் எனத் தீர்மானித்தோம். ரஷ்யாவின் கிழக்கு முகம் ஜப்பானுக்கு அருகில். விளாடிவாஸ்டாக் வழியாக மாஸ்கோ வரை ஒரு ரயில் போகிறது. ஒரு வார காலம் எடுக்குமாம். போய் பார்த்தால் என்ன? என விசாரித்தோம். போகலாம்தான் ஆனால், சுகாதார வசதிகள் அவ்வளவாக இல்லாத ரயிலில் கைக்குழந்தையோடு பயணிப்பது உசிதமல்ல என எல்லோரும் சொல்லிவிட்டதால் அந்த முடிவையும் விட்டோம். வேறு வழி? விமானம்தான். விமானப் பயணம் துரிதமானது. விமானத்திலும் சில நேரம் புரட்டும். ஆனால், நான் கடலில் வாந்தி எடுத்தது போல் விமானத்தில் எடுத்தது கிடையாது.

நாங்கள் ஹேம்பர்க் நகர விமான நிலையத்தில் இறங்கியபோது அது சின்ன நிலையமாக இருந்தது. 10 நிமிஷத்தில் எல்லாம் முடித்து வெளியே வந்துவிட்டோம். மட்சுயாமா விமான நிலையத்தையும் விடச் சிறியது. ஆனால், இப்போது போய் பாருங்கள்! நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள். ஒரு காலத்தில் வாழ்வு எளிமையாய் இருந்தது. அப்போது கீல் நகருக்கு பிராங்போர்டிலிருந்து விமானப் போக்குவரத்து கூட இருந்தது. ஹேம்பர்க் நிலையம் விரிவாக்கப்பட்ட போது கீல் நிலையம் மூடப்பட்டது. அப்போதெல்லாம் இப்போது போன்ற விரிவான சுங்கப் பரிசோதனை கிடையாது. எங்களிடம் இந்திய பாஸ்போர்ட்தான் இருந்தது. இந்திய பாஸ்போர்ட்டுக்கு பெரிய மதிப்பு ஏதும் கிடையாது. மேலும் கீழும் பார்ப்பார்கள், நம்மைப் பார்ப்பார்கள். மீண்டும் பாஸ்போர்ட்டைப் பார்ப்பார்கள். கூசும்! ஏதோ கிரிமினலைப் பார்ப்பது போன்ற பார்வை. ஜெர்மன் வரும் முன் எகிப்து போய் வந்தோம். கைரோ ஏர்போர்ட்டில் இந்திய பாஸ்போர்ட் என்று நிற்க வைத்துவிட்டார்கள். என்ன காரணமென்று இன்றளவும் தெரியவில்லை. இதேபோல்தான் ஹாங்காங் விமான நிலையத்திலும். எனது ஜப்பானிய சகாக்கள் சட், சட்டென போய்விட இந்தியர்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் தாமதப்படுத்தினர். உன் மதிப்பு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் போல இருந்தது. அன்றுதான் புரிந்தது உலகப் பயணம் அதிகம் மேற்கொள்ள வேண்டுமெனில் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது என்று! நினைத்தாவாறே 8 வருடங்களில் ஜெர்மன் பாஸ்போர்ட்டுக்கு மாறிவிட்டேன். அதன்பின்தான் உலகத்தாவல் எளிதாக இருந்தது! ஆயினும் 9/11க்குப் பிறகு அமெரிக்காவில் பாஸ்போர்ட்டை நம்பாமல் ஆளின் நிறத்தை வைத்து எடைபோடும் கொடுமையையும் அனுபவித்து இருக்கிறேன். அது பின்னால்!

ஜெர்மனியில் வேலை கிடைத்தாலும் ஜெர்மன் விசா கிடைப்பது கஷ்டம். 1980களில் ஜெர்மன் குடி பெயர்வுத்துறை மிகக் கடுமையாக செயல்பட்டது. நிறைய கிழக்கு ஐரோப்பியர்கள் தில்லுமுல்லு சான்றிதழ்களோடு வந்த வண்ணமிருந்தனர். எனவே, நமது ஆவணங்கள் கடுமையாக சோதிக்கப்பட்டன. புதிய ஆவணங்கள் கேட்கப்பட்டன. எனவே, எப்போது அங்கு போனாலும் வயிற்றில் புளி கரைக்கும். நாம் உலகப்புகழ் விஞ்ஞானியாக இருக்கலாம். ஆனால் மிஸ்டர் பிரவுன் போன்ற அதிகாரிகளுக்கு நாமெல்லாம் கிரிமினல்ஸ். அவர் பார்க்கும் பார்வை, கேட்கும் கேள்வி நம்மை ஏதோ குற்றவாளிக் கூட்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். மேலும், ஜெர்மானியர் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். ‘டாய்ச்சு’ எனும் ஜெர்மன் மொழியிலேயே அதட்டிக் கேட்கும் போது விழி பிதுங்கும். எங்கள் ஆய்வக நிர்வாகத்துறை அதிகாரி இன்னொரு பிரவுன். அவர் எனக்கு டாய்ச்சு தெரியுமா? தெரியாதா? என சிந்திக்கவே மாட்டாமல் அவர் பாட்டுக்குப் பேசுவார். இதுவெல்லாம் ஒரு அகங்காரம்.

வேடிக்கை என்னவெனில் ஜெர்மன் கற்றுக் கொள்ளும் போதும் இதே டார்ச்சர்தான். ஆங்கிலம் கலக்காத தூய டாய்ச்சில்தான் பாடம் நடத்துவர். கேட்டால் இதுதான் சரியான வழிமுறை. குழந்தை தன் தாய்மொழி கற்றுக் கொள்ளும்போது இன்னொரு மொழியில் அர்த்தம் சொல்லித்தான் புரிந்து கொள்வேன் எனச் சொல்வதில்லை. அதுபாட்டிற்குப் பேசப்பேச புரிந்து கொள்ளும் என்பர். இது தெரியாமல் முதல் நாள் என் மனைவி பக்கத்து வீட்டு அம்மாவிடம் நட்பாக குட்மார்னிங் சொல்லப் போய், அவள் இவளைப் பார்த்து, “நீ இருப்பது ஜெர்மனி! அதை நினைவில் வைத்துக்கொள்” என்றாளாம். எப்படி இருக்கும்? இன்றும் ஜெர்மனிக்கு மேற்படிப்பு என வருவோர் இம்மொழியை அறிந்திருப்பது மிகவும் அவசியம். நம்மவூரில் “வெள்ளையாய் இருப்பவனெல்லாம் ஆங்கிலம் பேசுவான்” என்று நினைப்போம். அது எவ்வளவு முட்டாள்தனம் என்பது ஐரோப்பா வந்தால்தான் தெரியும். வட ஐரோப்பாவின் முக்கிய மொழி ஜெர்மன். ஆனால், அருகிலிருக்கும் நெதர்லாந்திற்குப் போனால் செல்லுபடியாகாது. தெற்கே பிரான்சு வந்தால்! சுத்தம். ஒரு வார்த்தை ஆங்கிலமோ ஜெர்மனியோ கூடாது. பிரெஞ்ச் மட்டும். இத்தாலி இதற்கு மேல். ஸ்பானிஷ் சொல்லவே வேண்டாம்.

இந்த ஜெர்மன் பாட்டிகளுக்கு மற்ற நிறத்தவரெல்லாம் முட்டாள்கள் என்று நினைப்பு. குடிவந்து இரண்டாம் நாள் குப்பை கொட்டப் போன போது மேல்மாடியிலிருந்து ஓர் குரல். குப்பையை பார்த்து கொட்டு. எல்லாவற்றையும் பிரித்துப் போடு. சேர்த்து கொட்டிவிடாதே! என்று அறிவுரை நடக்கும். கீல் வளைகுடாவை சிறு கப்பலில் கடக்கும்போது ஒரு பாட்டி சொல்கிறாள். முன்பெல்லாம் வீட்டைத் திறந்து போட்டுக் கொண்டு கிடப்போம். இந்த பாகிஸ்தானியர் வந்த பின் பயமாக இருக்கிறது திறந்து வைக்க! என்றாள். அவளுக்கு இந்தியர் பாகிஸ்தானியர் என்ற வேறுபாடெல்லாம் தெரியாது. மாநிறமாக இருப்பவரெல்லாம் பாக்கிதான். இதைத் தெரிந்துகொண்டு அங்குள்ள பாகிஸ்தானியர் இந்திய உணவகம் நடத்துகின்றனர். யாருக்கு என்ன தெரியப்போகிறது? இந்த மனப்பான்மையை நான் டோக்கியோவில் கண்டேன். அங்கே நாயர் ரெஸ்டாரெண்ட் ரொம்பப் பிரபலம். போய் சாப்பிட்டுப் பார்த்தால் ரசம் ஒரே காரம், சாம்பர் போல். என்ன நாயர் இப்படி? என்று கேட்டால் ஜப்பானியருக்கு என்ன தெரியப்போகிறது? ரசம் எப்படி இருக்குமென்று? என்று சொல்லிவிட்டார்.

அன்று உலகம் இப்படித்தான் கட்டு பெட்டியாக இருந்தது. சர்வதேசப் பழக்கம் கிடையாது. ஆங்கிலப்புழக்கம் குறைவு. நான் ஜப்பானில் இருந்தபோது இதை மாற்ற சர்வதேச இயக்கம் தொடங்கப்பட்டது. முடிந்தவரை யாதும் ஊரே என்று சொல்லுவோம் எனும் முழக்கம். நான் ஜெர்மன் வந்தபோது ஜெர்மனியும் சர்வதேச முகம் கொள்ள முயன்று கொண்டு இருந்தது. அவுஸ்லாண்டர் ஹாஸ் என்பது நாட்சிகள் விட்டுச் சென்ற வெறுப்புவாதம். வெளிநாட்டுக்காரன் மட்டம் என்பது பாடம். எனவே, அவன் மீது வெறுப்புக் கொள் என்பது போதனை. எனவே, அப்போது நிறைய போஸ்டர்கள் ஒட்டுவார்கள். “யார் வெளிநாட்டான், எது வெளிநாட்டுச் சரக்கு?” என்று கேட்டு பதிலாக, நாம் உண்ணும் உருளைக் கிழங்கு தென்னமெரிக்காவிலிருந்து வருகிறது, தக்காளி ஸ்பெயினிலிருந்து, வாழைப்பழம் கொலம்பியாவிலிருந்து, காப்பிக் கொட்டை ஆப்பிரிக்காவிலிருந்து. எனவே, வெளிநாடு இல்லையெனில் ஜெர்மன் வாழ்வில்லை என்று தொடர்ந்து பாடம் எடுக்கப்பட்டது. பள்ளிப் பிள்ளைகளுக்கு நாட்சி வீடியோக்கள் போட்டுக்காண்பிக்கப்பட்டு எது தவறு, எது சரி என்று சொல்லப்பட்டது. அதில் ஜெர்மானியர் கொஞ்சம் தேவலை. இவர்களைவிட அசுரத்தனம் அதிகம் செய்தது ஜப்பான். அதைச் சீனர்களிடமும், கொரியர்களிடமும் கேட்க வேண்டும். ஆனால், பாடப்புத்தகங்களில் ஒரு வார்த்தை இருக்காது. அவர்கள் சௌகர்யமாக தங்கள் பழசை மறந்து விட்டனர்.

இந்த இனவாதம் என்பது உலகெங்கும் இருக்கிறது. ஜப்பானியர் தாங்கள் சூரிய வம்சம் என்று நினைக்கின்றனர். எனவே, தனித்தன்மை கொண்டவர்கள் என நம்புகின்றனர். எனவே, வெளிநாட்டார் எல்லாம் கைஜின். குழந்தைகள் கூட நம்மைப் பார்த்து கை நீட்டி கைஜின் என்று சொல்லும். ஏதோ அதிசய மிருகத்தைக் கண்டது போல். நம்ம நாட்டில் வெள்ளைக்காரனைக் கண்டால் மதிக்கிறோம். அவனுக்கு நிறையத் தெரியும் என நம்புகிறோம். நம் குழந்தைகள் வெளிநாட்டாரிடம் சீண்டி விளையாடும். ஆனால், ‘இவன் அந்நியன்’ என்று சொல்வதில்லை. ‘கைஜின்’ என்றால் ‘அந்நியன்’ என்று பொருள். ‘அவுஸ் லாண்டர்’ எனில் ‘வேற்று மனிதன்’ என்று பொருள். ஜப்பான் சுங்கச் சாவடியில் ஜப்பானியர், மற்றோர் என்று சொல்லாமல், ஏலியன் என்று போட்டிருப்பர். ‘ஏலியன்’ என்றால் வேற்று கிரகவாசி எனும் பொருளுண்டு. அப்படித்தான் உலகில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். ஜப்பானிய வரலாற்றில் மெய்ஜி அரசின் காலத்தில்தான் ஐரோப்பியத் தொடர்பு அனுமதிக்கப்பட்டது. அதுவரை அவர்கள் தனித்து இயங்கினர். ஆனால், அயலகத்தினருக்கு கதவைத் திறந்த பின்தான் ஜப்பான் வேகமாக முன்னேறி இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறியது. ஆனால், கொரியாவில் அது நிகழவில்லை. கொரியாவிற்கு வந்து சேர்ந்த வெள்ளைப் பாதிரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மிகப்பின்னால்தான் இது மாறியது. ஒருவகையில் இரண்டாம் உலகப்போர்தான் சாதாரண மக்களுக்கு உலகைத் திறந்து காட்டியது. எங்கள் ஜெர்மன் ஆய்வக மூத்த விஞ்ஞானி கிளவுஸ் டிடர் சொல்வார், ஜெர்மன் பெண்கள் முதன் முறையாக அமெரிக்க இராணும் அவர்கள் மண்ணில் கால் வைத்தபோதுதான் கருப்பு மனிதர்கள் உண்டு என அறிந்ததாம். அவ்வளவு சின்னதாக உலகம் இருந்தது.

(தொடரும்)

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மொழி‘பெயர்ப்பு’

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ‘ஆலியா பட்’ நடித்த ’டார்லிங்ஸ்’ என்ற திரைப்படத்தை சில நாட்கள் முன் ’ஓடிடி’யில் பார்த்தேன். ஹிந்தி தெரியாத காரணத்தால் என் விருப்பத்தேர்வாக ஆங்கிலத்தில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு...

தினந்தோறும் தேசியக் கொடி

0
  - எஸ். சந்திரமௌலி   இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அமுதத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் நமது மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டது மத்திய...

ஒரு குடும்பமல்ல ஒரு சமூகமே கல்விப் பெற்றதற்கு சமம்

0
முகநூல் பக்கம்   மஹாலட்சுமியின் முகநூல் பக்கத்திலிருந்து (மஹாலட்சுமி ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி கிராமப்  பள்ளி ஆசிரியர்)   "ஒரு குழந்தை Hostel கிடைச்சா மட்டும்தான் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தா உடனே அந்தக் குழந்தையை Hostelல Admission...

மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேரப் படித்துணர வேண்டிய நூல்

0
நூல் அறிமுகம்   1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்", உலகளவில் 9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு, அறிவியல் எழுத்திலும் உலகளவில் பாராட்டிலும் பிரபலத்திலும் ஒரு முக்கிய புத்தகமாகும். ஆல்பர்ட்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ்                                             ...