0,00 INR

No products in the cart.

பாலியல் ராட்சசர்களிடமிருந்து நம் குழந்தைகளைக் காப்போம்

தலையங்கம்

 

ண்மையில் பள்ளிகளில் மாணவியர் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்து  வெளியாகிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பொதுக் கவனத்துக்கு வரும்போது எல்லாம் நமது சிந்தனைகளும் கோபங்களும் அந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடுகின்றன. “நடந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும்” என்று ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து குரல்கொடுப்பதும், சமூக வலைத்தளங்களால் உருவாக்கப்படும் உணர்ச்சிவசப்படும் நமது மனநிலைக்கு ஆயுள் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே. அதற்குப் பிறகு “இப்படிப்பட்ட சம்பவங்களே நடப்பதில்லை” என்று தீர்க்கமாக நம்பிக்கொண்டு அடுத்த பிரச்னைக்குக் குரல்கொடுக்கக் கிளம்பிவிடுவோம். ஆனால், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் அரிதானவை அல்ல, எங்கேயோ ஒரு பள்ளியில் மட்டுமே நடப்பதில்லை.

இந்தியாவில், ஒரு நாளுக்கு 109 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் பல சம்பவங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், கட்டப் பஞ்சாயத்து மூலமும் வெளிச்சத்துக்கு வராமலேயே போவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. இவற்றில் பல பள்ளி வளாகங்களில் நிகழ்ந்தவை என்பது அதிர்ச்சியை அதிகமாக்கும் தகவல்.

ஒரு பள்ளியின் மேன்மை என்பது, அதன் கல்வித்தரம், மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடங்களைப் பெறும் மாணவர்களை உற்பத்தி செய்வது மட்டுமில்லை. குழந்தைகள் விழித்திருக்கும் போது தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளியில்தான் செலவிடுகின்றனர். தங்களது அடையாளத்தை, சுதந்திரத்தை அவர்கள் பள்ளி வழியாகவே அடைகிறார்கள். அந்தப் பள்ளி அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பது என்பது கற்பிக்கப்படும் கல்வியைவிட மேலானது.

அதைவிட முக்கியமானது, பள்ளிகளில் குழந்தைகளின் மீதான அத்துமீறல்கள் நடக்கும்போது, பள்ளி நிர்வாகம் யார் பக்கம் நிற்கிறது என்பதுதான்.
வேறு எதையும்விடக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பள்ளி அதிகக் கவனத்தைக் கொடுக்க வேண்டும். இதை அரசின் கல்வித்துறை கண்காணிக்கவேண்டும். மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்த தரப்பட்டியலை வெளியிடவேண்டும்.

‘இது பெண் குழந்தைக்குத்தான் நடக்கும்’ என்பது தவறு. இந்தியாவில் பாலியல் குற்றங்களை 30 சதவீத ஆண்பிள்ளைகளும் எதிர்கொள்கின்றனர் என்கிறது ஒரு சமூக நல அமைப்பின் அறிக்கை.

சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டுமே குறைத்துவிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த உணர்வுகளை, சிந்தனையை, விழிப்புணர்வை சமூக வலைத்தள சூழலில் பிணைந்திருக்கும் நம் மக்களிடம் அதன் மூலம் எளிதாக எழுப்ப முடியும்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள், பள்ளி முதல்வர்கள், பெற்றோர்கள் பொது வெளியில் தொடர்ந்து பேசவும் எழுதவும் வேண்டும்.

ஒரு பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது தெரியவந்தால் அதைப் பெற்றோர்கள் ஏற்காது ஒதுக்கும் நிலை வரவேண்டும்.

இவற்றைத்  தவிர, பாலியல் குறித்த கல்வி முறைகளைப் பாடத்திட்டம் மூலமாகவும் பெற்றோர் வழியாகவும் குழந்தைகளுக்குப் புகட்டினால்தான், பாலியல் ராட்சசர்களிடம் இருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.

2 COMMENTS

  1. பாலியல் அத்துமீறல் குறித்து நாளிதழில் தினமும் செய்திகள் வந்து நம்மை வேதனைப் படுத்தும் வேளையில் , தலையங்கத்தில் அதை சுட்டிக் காட்டி அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது கல்கி . கல்வி என்பதை விட குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என்பதை பள்ளி நிர்வாகம் உணர வேண்டும் என்பதை வலியுறுத்தி , கல்கி சமூகத்தின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாப்போம், நல்ல சமூகத்தை உருவாக்குவோம்; குழந்தைகளையும் அதற்கு தயார் செய்வோம்.

  2. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி. குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளோரும் குழந்தைகளுக்கு ‌‌ஒழுக்கம் இறையன்பு
    போன்ற பண்புகளை போதிக்க வேண்டும்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வேண்டாமே! இந்த அக்னிப் பரீட்சை

1
தலையங்கம்   ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’  என்றொரு திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவச் சேவையில் சேர்வதற்கு தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஒன்றிய அரசு...

காலத்தின் கட்டாயம் -சாட்டையைச்  சுழற்றுங்கள்

1
தலையங்கம்   இன்றைய நாகரிக உலகில் தொழில்நுட்பமானது பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். வளர்ச்சி ஒருபுறம் பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் பல...

ஆபத்தான பீஹார் மாடல்

1
தலையங்கம்   இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு...

பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகள் அல்ல!

தலையங்கம்   பல்கலைகழங்கங்களின் பட்டமளிப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் நிகழ்த்தப்படும் உரைகள் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தகுந்தவையாக இருந்த காலம் ஒன்று உண்டு. நேரு, இராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள், தங்கள் பணிகளுக்கிடையே இந்த உரைகளை...

வருமுன் காக்க

தலையங்கம்   வருமுன்னர்க் காதாவான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும். அரசன் மக்களை நாட்டிற்கு வரும் கேடுகளிலிருந்து  அவை வரும்முன் காக்க வேண்டும். அதுவே சிறந்த ஆட்சி என்கிறான் தெய்வப்புலவன். அப்படிக் காத்துக்கொள்ள வேண்டிய ஒரு...