0,00 INR

No products in the cart.

இலக்கியத்தின் வாசல்கள்

– வாதூலன்

 

“இலக்கியங்களுக்கு எது வாசல்?” என்ற கேள்விக்கு முன் எழும் கேள்வி
“எது இலக்கியம்?” என்பதே. படைப்பிலக்கியங்களின் போக்கும் பார்வையும்  காலங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கிறது. சில படைப்புகள்  வெளியான பின்னர் காணாமல் போகின்றன. சில காலம் கடந்தும் நிற்கின்றன.  அப்படியானால் அப்படி நிற்பவைதான் இலக்கியமா? என்று தோன்றுகிறதல்லவா?

அண்மையில் இன்னொரு புத்தகக் கண்காட்சி  நடந்து முடிந்தது. இந்த ஆண்டும் வழக்கம் போல், ஆன்மீக நூல்கள்தான் விற்பனையில் முதலிடம் பெற்றனவாம். இயந்திரமயமான, சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையில், அதுவும் கோவிட் தொற்று கொஞ்சம் அடங்கியிருக்கும் தருணத்தில்,
இறைப்பற்று உள்ள நூல்கள் மனதுக்கு ஓர் ஆறுதலை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

எழுத்தாளர்களுள் நிறைய விற்பனை ஆகின என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வேறு ஒரு நாளேட்டில் பிரசுரகர்த்தர் ஒருவர், ‘கல்கிக்கு இணையாக, புதுமைப்பித்தன் நூல்களும் விற்பனை ஆனது நல்ல அறிகுறி’ என்று பெருமிதப்படுகிறார்.

கல்கி நவசக்தியில் சேர்ந்து, விகடனில் பணியாற்றி, பின்னர் சொந்தப் பத்திரிகை துவங்கி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார். அவர் மறைந்தது 1954ம் ஆண்டு. கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கு மேலான பின்னரும் அவர் படைப்புகளுக்கு ஏன் இந்தளவுக்கு வரவேற்பு?

அவர் வரலாற்றை எழுதின சுந்தர் குறிப்பிடுகிறார்:- பேச்சு தமிழில் காணும் சுருக்கங்களைச் சீராக்கி பிசிறுகளைக் களைந்து, நயங்களை துலக்கியதோடு, தமது கற்பனை எழிலுடனும் இதய ஒலியுடனும் கலந்து விளம்பினார். (1960 விகடனில் கல்கி சிறப்பிதழ்).

‘சிவகாமியின் சபதத்துக்’காக அவர் அஜந்தா, எல்லோரா இடங்களுக்குச் சென்று சிற்பங்களைக் கவனித்தார், ‘அலை ஓசை’க்காக’ டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற இடங்களுக்கு போய் தகவல்களை திரட்டினாராம். அவருடைய இயற்கையான நடையும், அபாரக் கற்பனையும் சேர்ந்துதான் நாவல் உருவாகி, இப்போதும் வாசகர்களை ஈர்க்கின்றன.

சாண்டில்யன் சில பத்திரிகைகளில் பணிபுரிந்ததுடன், திரை உலகிலும் ஆரம்பக் காலத்தில் தொடர்பு கொண்டவர் என்றாலும், சரித்திர நவினங்களால்தான் அவர் புகழ் பெற்றார். விறுவிறுப்பான சம்பவங்கள், ஓரளவு கிளுகிளுப்பான வர்ணனை, இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து எழுதி பல வாசகர்களைப் பெற்றார். அவரும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்துத்தான் எழுதினார். (உம்: ஜலதீபம்)

புதுமைப் பித்தன்  நவீனத் தமிழ், குறிப்பாகச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி என்றே கூறலாம்.  ‘சாப விமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘சித்தி’ (உறவு முறைச் சொல் அல்ல) போன்ற புதுமையான கதைகளை அந்த நாளிலேயே எழுதியுள்ளார். ஒருவிதமான எள்ளலும், கிண்டலும் அவரது நடையில் தென்படும்.

ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் சொல்லுகிறார்:- “பாரதி ஒரு கடல், புதுமைப்பித்தன் ஒரு அலை, நான் ஒரு துளி.” அதே பேட்டியில் “நான் சொல்லுகிறேன், நான்தான் கங்கா, நான்தான் கல்யாண கதைகளில் வரும் பாத்திரங்கள், யாவும் அனேகமாக நான்தான். அதுவே என் சிறப்பும் கூட” பெருமிதம் கொள்கிறார்.

தன்னுடைய சொந்தக் கருத்துக்களை கதாபாத்திரங்களில் புகுத்துவது, எல்லா பிரபல எழுத்தாளர்களும் கையாளும் உத்திதான். அலை ஓசையில், சூர்யா, கல்கியின் சோஷலிசக் கருத்துக்களை உதிர்ப்பான். முருக பக்தரான தேவன் வடபழனி ஆண்டவனைப் புகழ்ந்து, முதலியார் மூலம் சில நாவல்களில் எழுதியிருக்கிறார். (ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்).

படைப்பிலக்கியங்களின்  தரம்  அது பெரும்  விமர்சனங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் ஒன்ரிருந்தது. ஆனால் தமிழ் இலக்கிய உலகில்  இன்று வரை காணப்படுகிற ஒரு குறை, ஓரம் சார்ந்த விமர்சனம். பிரபல விமர்சகர் என்றே அறியப்பட்ட க.நா.சு. இலக்கிய சாதனையாளர்கள் நூலில் ‘கல்கியை ஒரு பத்திரிகை ஆசிரியர் என்றே மதிப்பிடுகிறார்.’ அந்தக் கட்டுரையில் ‘துமிலன், மாலி, தேவன்’ சிறப்பாகத் தழுவல் காரியத்தை செய்திருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சனத்தில்  குறிப்பிடுகிறார்.

விசித்திர முரண் என்னவெனில், வடுவூர் ஜே.ஆர். ரங்கராஜி போன்றவர்களைச் சாதனையாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்.  ‘பேகர் ஸ்டிரிட்’ என்பதை ரொட்டிக் கடை தெரு என்றே தம் துப்பறியும் நாவலில் எழுதினவர் ரங்கராஜி.

தமிழ்நாட்டில் பிரபலம் என்ற சொல்லும், தொடர்கதை என்பதும் பலருக்கு ஒவ்வாமையாகவே தோற்றமளிக்கின்றன. ஆங்கிலத்தில் புகழ் பெற்ற சார்லஸ் டிக்கன்ஸ் கதையே தொடராக வந்ததுதான், பிரபல பத்திரிகைகளில் சிறுகதையும், நாவலும் எழுதிப் புகழ் பெற்றவர் என்ற காரணத்திலேயே ஜெயகாந்தனை ஒதுக்குகிறவர்கள் இங்க உண்டு.

அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு சனியன்றும் “இலக்கியம் பேசுவோம்” என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அதில் பங்கேற்ற கவிஞர்கள் வாசிப்பு அனுபவத்துக்கு பாரதியையும், கண்ணதாசனையும் குறிப்பிடுகிறார்கள். எழுத்தாளர்களோ, “தமிழ்வாணன், சுஜாதா போன்றவர்கள்தான் தங்களுக்கு ஒரு தூண்டுதல்” என்றே சொல்லுகிறார்கள். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ‘இமையம்’ தீவிர எழுத்தாளர்களை சுட்டிக் காட்டினார்.

படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் எளிய நடையிலும் இருந்தால் அது இலக்கியத் தரமல்ல என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தல்ல. தனி வேகம் இது, அழுத்தமும், சிந்தனையாழமும், கலந்த வேகம் அபூர்வச் சேர்க்கை. படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. “சரளமாக வாசிப்பது கட்டாயம் கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை” என்று அண்மையில் நூற்றாண்டு கண்ட தி. ஜானகிராமன் ஒரு நூலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். ‘கட்டுரையானாலும் சரி, கதையானாலும் சரி, எளிமையான நடைக்கு அசோகமித்திரன் ஒர்  எடுத்துக்காட்டு.’

முத்தாய்பாக ஒன்று சொல்லலாம்:- “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பல வாயில்கள் உண்டு. எந்த வாயில் வழியாகச் சென்றாலும் கோயிலை அடையலாம். அதுபோல் இலக்கியம் என்ற கோயிலுக்குப் பல வாயில்கள் உள்ளன. இதில் எந்த வாயில் உயர்ந்தது, எந்த வாயில் தாழ்ந்தது என்று விவாதம் செய்வது சிறு பிள்ளைத் தனம்.” என்று சாகித்ய அகாடமியும், பிற விருதுகளும் பெற்ற முது பெரும் இந்திரா பார்த்தசாரதி, ஒரு சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்பது விவாதத்துக்குரிய சர்ச்சைதான். ஆனால் பற்பல ஆண்டுகள் கழிந்த பின்னரும், ஒரு சிறுகதையோ, நாவலோ வாசகனின் நினைவில் இருக்கிறது என்றால் அது இலக்கிய வடிவம்தான் என்றே கூறத் தோன்றகிறது.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...