0,00 INR

No products in the cart.

“என்று தணியும் இந்த வெறி”

கவர் ஸ்டோரி

– ஆதித்தியா

 

அது ஒரு தொடர்கதை

ந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தொடரும் ஒரு தொடர் பிரச்னை. காஷ்மீர் ஒன்றிய அரசில் புதிய கட்சிகள் கூட்டணிகள் என்று ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சி அங்குத் தொடரும் தீவிரவாதம்தான்.

இரண்டாண்டுகளுக்கு முன் அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த
தனி உரிமைகள் பறிக்கப்பட்டது. இந்திய வரலாற்றின் திருப்புமுனை என வர்ணிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பின் காஷ்மீர் மாநிலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இனி அமைதி நிலவும், மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருப்பார்கள் என ஒன்றிய அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகள் இது ஜனநாயகப் படுகொலை என வர்ணித்தன. “செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள் இந்த ஆண்டுத் தொடக்கம் வரை மாநிலத்துக்குள் நுழையத் தடை” என்ற நிலையில் அந்த மாநிலத்தின் உண்மை நிலை என்ன என்று தெரியாதிருந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுயாட்சியை நீக்கி, அரசியலமைப்பின் 370வது பிரிவை 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்யப்பட்ட அறிவிப்பில், “காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரச் செழிப்பைக் கொண்டுவருவதற்கும் இந்த நடவடிக்கை அவசியம்” என்று பிரதமர் சொல்லியிருந்தார். “பாலும் தேனும் ஆறாக ஓடாவிட்டாலும் ஒரு பதற்றமில்லாத வாழ்க்கையாவது அமையும்” என
எதிர்பார்த்த காஷ்மீர் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது. மேலும் இன்னமும் உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி இழுக்கப்படுவதாகவும் அதைத்தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றிய பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும், ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவும் காஷ்மீர் அரசியல் தலைவர்களை முதல் முறையாக ஜனவரியில் பிரதமர் சந்தித்தார். காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் நால்வர் உள்ளிட்ட 14 முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இந்தச் சந்திப்பில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரிந்தது.

ஆனால், சில வாரங்களிலேயே அந்த நம்பிக்கை வலுவிழந்தது. காரணம் மீண்டெழுந்த தீவிரவாதம். பல ஆண்டுகளாக, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் பதற்றத்தைத் தூண்ட ஆயிரக்கணக்கான போராளிகளை எல்லை தாண்டி ஊடுருவச் செய்துவரும் பாகிஸ்தான், அதைத் தொடர ஆரம்பித்திருக்கிறது என்று பரவலாக அறியப்பட்டாலும் உண்மை நிலை மாறாக இருக்கிறது.

ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி பிபிசி நிருபரிடம் பேசும்போது, “தற்போது செயல்படும் 200 தீவிரவாதிகளில், 80 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 120க்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள்” என்ற செய்தி, “இப்போது எழுந்திருக்கும் தீவிரவாதம் அந்நிய நாட்டின் உதவிகள் இல்லாமல் உள்ளூரிலேயே எழுந்தது” என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், 76 காஷ்மீரிகள் ஆயுதங்களை எடுத்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. “காஷ்மீரில் இந்த ஆண்டுத் தீவிர தீவிரவாதிகள் பட்டியலில் புதிய வெளிநாட்டுத் தீவிரவாதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை என்றும், ஆனால் உள்ளூர் மக்களின் பெயர்கள் ஒவ்வொரு நாளும் சேர்க்கப்படுகின்றன” என்றும் அவர் கூறுகிறார்.

முன்பு தீவிரவாதிகளின் இலக்கு, இந்திய அரசின் அலுவலகங்கள், ராணுவ அலுவலகங்கள், தங்களைக் காட்டிக்கொடுத்தாக அடையாளம் காட்டப்பட்ட காஷ்மீரிகள் என்றிருந்தது. ஆனால் இன்று தீவிரவாதத்தின் முகம் மாறியிருக்கிறது. தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் உள்ளூர் அப்பாவி மக்கள். இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து, காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன. ஏறக்குறைய அனைவரும் உள்ளூர் வாசிகள் என்றும் 14 வயது சிறுவர்களும் இதில் அடக்கம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்கள் காஷ்மீரில் வசிக்கும் மதச்சிறுபான்மையினர்களான இந்துக்களும் சீக்கியர்களும் அதுவும் குறிப்பாக வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளும்தான். ஈவு இரக்கமில்லாமல் இவர்கள் தீவரவாதிகளால் பகிரங்கமாகப் பகல் நேரங்களில் பொது இடங்களில் சுடப்படுகிறார்கள். கடந்த 17 நாட்களில் இதுபோல் 20 பேர் கொல்ல பட்டிருக்கிறார்கள்

ஏன் இந்தக் கோபம்?

“இந்தத் தீவிரவாதச் செயல்களில் அந்நிய நாடுகளில் பயிற்சிப்பெற்ற இயக்கங்களின் சாயல் இல்லை. இது முழுக்க முழுக்க உள்ளூர் இளைஞர்களின் செயல்” என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர். இது 1960களில் எழுந்த எழுச்சியின் மறுபிறப்பு என்கிறார் இவர். அப்போது “காஷ்மீரிகள் அல்லாதவர்கள், அதுவும் குறிப்பாக இந்துக்கள் வெளியேறிவிட வேண்டும்” என்ற இலக்கில் அவர்களைத் தாக்கினார்கள். ”இப்போது அந்த இலக்குக் காஷ்மீரிகள் அல்லாதவர்கள் அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் வெளியேறிவிட வேண்டும்” என ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெளிமாநிலத்தவரைக் காஷ்மீரிலிருந்து விரட்டும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள். ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வெளிமாநில தொழிலாளர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஜம்மு – காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தீவிரவாத தாக்குதலுக்குப் பயந்துகொண்டு, சொந்த ஊர்களுக்குக் குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர்…“பிழைப்பு தேடி குழந்தைகளுடன் வந்து இங்குத் தங்கியிருந்தோம்… இப்போது எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம்” என்கிறார்கள், இங்கிருந்து கடந்த வாரம் கிளம்பிய 20 ராஜஸ்தானிய குடும்பங்கள்.

உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களின் இந்தக் கோபத்துக்குக் காரணம், 2019 முதல் அரசாங்கம் உள்ளூர் மக்களின் சொத்து உரிமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதுதான். இது மக்களிடையே பரவலான சந்தேகத்தை எழுப்பியது என்கிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள். “இந்தப் புதிய சட்டங்கள், இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமான காஷ்மீரின் மக்கள்தொகை தன்மையை மாற்றும்” என்று உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.

அந்நிய நாட்டின் சதிச்செயலோ, உள்ளூர் மதப்பற்று இளைஞர்களின் செயலோ, இந்தத் தீவிரவாதங்களால் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அப்பாவி மக்கள் என்பதுதான் சுடும் உண்மை.

கட்சிக்கொள்கைகள் அரசியல் பார்வைகள் எதுவாக இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு இந்தக் கொடூரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கடமை இருக்கிறது.  “என்று தணியும் இந்தக் கொலைவெறி” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

1 COMMENT

  1. காஷ்மீர் பிரச்சினை நீண்ட கால பிரச்சினை. ஒரிரு சட்டங்களால் தீர்வு காண முடியாது என்று ஏற்கனவே கல்கி ஒரு தலையங்கம் தீட்டியுள்ளதே! மக்களின் நம்பிக்கையை
    ஒன்றிய அரசு ஏனோ பெற தவறிவிட்டது?
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

எது தமிழகத்தின் எதிர்கட்சி ?

2
கவர் ஸ்டோரி - ஆதித்யா   தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க....

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

0
 நேர்காணல் - ஆதித்யா   “தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி” என்ற  எண்ணம் எப்படி எழுந்தது? ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப்...

“அந்தப் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது.”

                           தமிழக  நாடகக் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் திருமதி. லாவண்யா வேணுகோபால்.  இவர் அடிப்படையில்...

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

1
கவர் ஸ்டோரி ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்? - எஸ். சந்திரமௌலி   1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா? “சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு...

ரன் அவுட் ஆன இம்ரான் கான்!

1
- எஸ். சந்திரமௌலி   நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம்  342...